Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 9

அத்தியாயம் – 9

அந்த வீட்டின் கூடம் நிறைந்திருந்தது. பிரகாஷ் தன் தாய் மற்றும் பெரியம்மா பெரியப்பாவுடன் ஒரு பக்கம் சோபாவில் அமர்ந்திருந்தான். புனிதாவின் தந்தை சுந்தரமும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரும் மறுபக்கம் அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பூ… பழம்… குங்குமம்… நிறைந்த மங்கள தாம்பூலங்கள் அவர்களுக்கு நடுவில் அடுக்கப்பட்டிருந்தது.

 

“பொண்ண வர சொல்லுங்க பார்த்துடலாம்…” என்று பிரகாஷின் பெரியம்மா குரல் கொடுக்க பட்டுப்புடவை கட்டி மிதமான அலங்காரத்தில் அழகு பதுமையாக புனிதா அவளுடைய அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

 

பெண்ணை எதிர்பார்த்து காத்திருந்த அனைவரின் முகமும் மலர்ந்தது… பிரகாஷுடைய தாயின் முகம் மட்டும் இருண்டது… அவள் அதிர்ந்து போய் பெண்ணை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“தம்பி… என்னப்பா பொண்ண புடிச்சிருக்கா… தட்டை மாத்திக்கலாமா…?” என்று அவனுடைய பெரியப்பா ரகசியமாக கேட்டார்.

 

“பிடிச்சிருக்கு பெரியப்பா…” அவன் அவளை பார்த்துக் கொண்டே பெரியப்பாவிடம் பதில் சொன்னான்.

 

“தம்பிக்கு பொண்ண புடிச்சிரிச்சு… நீ என்னம்மா சொல்ற…? நல்ல நேரம் முடியிறதுக்குள்ள தட்ட மாத்திடலாம்…” என்று அவனுடைய தாயிடம் கேட்டார் பெரியவர்.

 

அவருடைய கேள்வியை கவனிக்காதது போல் “பொண்ணுகிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்…” என்றாள் பிரகாஷின் தாய்.

 

“அதுக்கென்ன… தாராளமா பேசுங்க…” என்று பெண்ணின் பெற்றோர் அனுமதித்தார்கள்.

 

தனியறையில் புனிதா குழப்பத்துடன் அந்த பெண்மணியின் முகத்தை பார்த்தாள். அவ்வளவு கோபம் அந்த முகத்தில்…

“என்ன ஆன்டி…?”

 

“ஜீவனை உனக்கு தெரியுமா..?”

 

அந்த பெண்ணின் திடீர் தாக்குதில் புனிதாவிற்கு ஆட்டம் கண்டுவிட்டது. பதில் சொல்ல தெரியாமல் மௌனத்தை கவசமாக்கிக் கொண்டாள்.

 

“சொல்லும்மா… உன்னைத்தான் கேக்குறேன்.. ஜீவனை தெரியுமா தெரியாதா…?”

 

“தெரியம் ஆன்டி…”

 

“அவனை காதலிச்சியா…?”

 

“ஆமாம்… ஆனா அது புரியாத வயசுல…” சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் தயங்கினாள்.

 

“பிரகாஷ் யாருன்னு தெரியுமா…?”

 

“யாரு..?” பயத்துடன் கேட்டாள் புனிதா.

 

“ஜீவாவோட தம்பி…”

 

“ஜி… ஜீவாவோட… தம்பியா…!” உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

 

“என்னம்மா ஆச்சு…? எதுக்கும்மா என்னோட மூத்த பையனை உதறிட்ட…? இப்போ என் ரெண்டாவது பையனோட வாழ்க்கையில நுழைய பார்க்குறியே…!”

 

“ஆன்டி…! பிரகாஷ் ஜீவாவோட தம்பின்னு எனக்கு தெரியாது…”

 

“அப்படி பார்த்தாலும்… நீ ஜீவாவ இப்படி கைகழுவினது ஞாயமா…?”

 

“இல்ல… இது நானும் ஜீவாவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்… அவரே எங்க ரெண்டு பேருக்கும் சரிவராதுன்னு பிரிவை சொல்லிட்டார்… எனக்கும் அதுதான் சரின்னு படுது…”

 

“இல்ல… நீ பொய் சொல்ற… அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னப்ப… எனக்கும் புனிதாவுக்கும் ஒரு சின்ன பிரச்சனை… ஒரு மாசத்துல சரி பண்ணிடறேன். அதுக்கப்புறம் எங்க கல்யாணத்த பத்தி பேசலாம்… இப்போ தம்பி அமெரிக்காவுக்கு போறதுக்குள்ள அவனுக்கு கல்யாணத்த பண்ணி குடும்பத்தோட அனுப்பனும் என்று சந்தோஷமா சொன்னானே…! ” என்றாள் சிவகாமி கண்ணீருடன்.

 

புனிதாவிற்கும் மனம் வலித்தது. ஜீவனை நினைத்தால் பாவமாக இருந்தது. ஆனால் புதைகுழிக்குள் மூழ்கிக் கொண்டிருப்பவனை பார்த்து பாவப்பட்டு அவளும் அந்த குழிக்குள் விழுந்து சாகவா முடியும்…!

 

“ஆன்டி… உங்களுக்கு உங்க பையனை பற்றி நல்லா தெரியும். நாங்க ஸ்கூல் படிக்கும் போது லவ் பண்ண ஆரம்பிச்சோம். அதெல்லாம் லவ்வே கிடையாது… ஜஸ்ட் ஒரு இனக்கவர்ச்சி… அவ்வளவுதான். அது புரியாம நாங்க பழகிட்டு இருந்துட்டோம். எனக்கு புரிஞ்ச நேரத்துல கமிட் பண்ணிட்டோமேன்னு நானும் எவ்வளவோ அவர் கூட சேர்ந்து வாழக் கூடிய சூழலை உருவாக்க முயற்சி பண்ணினேன். ஆனா உங்க பையன் எதுக்கும் ஒத்துழைக்கல.”

 

“அதுக்காக…” என்று ஆரம்பித்த சிவகாமியை கையை உயர்த்திக் காட்டி தடுத்து…

 

“நான் முடிச்சுடறேன் ஆன்டி…” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தாள்.

 

“பொறுப்பு இல்ல… படிப்பு இல்ல… வேலை இல்ல… ஒரு ரூபாய் சுய சம்பார்த்தியம் இல்ல…  பற்றாக்குறைக்கு தண்ணி… சிகரெட்…  இந்த மாதிரி ஒரு ஆளோட என்னால எப்படி வாழ முடியும்….? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா இந்த மாதிரி பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பிங்களா…? என்னதான் அவ வருஷகணக்கா லவ் பண்ணியிருந்தாலும்… ‘புத்தியில்லாம படுகுழியில விழிந்துடாத மகளே…’ என்று தடுக்க மாட்டிங்க…? பெற்றவங்க பொண்ணுங்களுக்காக யோசிச்சு எடுக்கற முடிவை நானே எனக்காக யோசிச்சுகிட்டேன்… இதுல என்ன தப்பிருக்கு…?” புனிதா கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் கேள்வி கேட்டாள்.

 

“அப்போ என் பையனோட கதி என்னம்மா ஆகிறது…?”

 

“அதை பற்றி கவலைபட்டா என்னோட கதி என்ன ஆகும் ஆன்டி…?” புனிதா சளைக்காமல் பதில் கேள்வி கேட்டாள்.

 

“நீ தானேம்மா அவனை காதலிச்ச…?”

 

“நான் மட்டும் காதலிக்கல ஆன்டி… உங்க பையனும்தான் காதலிச்சாரு… நான் என்னோட கடமையை சரியா செஞ்சேன்… அவர் அவருடைய கடமையை சரியா செய்யல… கல்யாணத்துக்கு பிறகு கூட கணவனோ இல்ல மனைவியோ அவங்களுடைய கடமையை சரியா செய்யலன்னா இன்னொருத்தருக்கு அந்த உறவுலேருந்து பிரிஞ்சு போறதுக்கு உரிமை இருக்கு. அப்படி இருக்கும் போது எனக்கு உங்க பையன்கிட்டேயிருந்து விலகுறதுக்கு உரிமை இல்லன்னு நீங்க எப்படி சொல்லுவிங்க ஆன்டி…?”

 

சிவகாமி நொந்து போய்விட்டாள். தன்னுடைய மகனுடைய வண்டவாளங்களை தெரிந்தவள் என்பதால் அந்த பெண்ணை எதிர்த்து வாதாடவில்லை.

 

“நான் எதுவும் சொல்லலம்மா… நல்லா யோசிச்சு நிதானமா பேசுற… இப்ப யோசிச்ச நீ… இன்னும் கொஞ்சம் வருஷங்களுக்கு முன்னாடியே யோசிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். அவன் தலைவிதி என்னவோ அப்படியே நடக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

 

“ஆன்டி… ஒரு நிமிசம்..” என்று சிவகாமியை தடுத்தாள் புனிதா.

 

“பிரகாஷ் ஜீவாவோட தம்பின்னு தெரிஞ்சதுக்கு பிறகு நான் அவரை கல்யாணம் செய்து கொண்டால் எல்லாருக்குமே பிரச்சனை. முடிந்தால் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க…”

 

“ம்ம்ம்…” என்று முனகிவிட்டு வெளியேறினாள் சிவகாமி.

 

அதற்குள் பிரகாஷ் தாயிடம் நெருங்கி அவளை தனியே அழைத்து சென்று “என்னம்மா… உன் மருமகளோட பேசி முடிச்சிட்டியா…?” என்று சிரிப்புடன் கேட்டான். அவன் இருந்த மனநிலையில் தாயின் முகமாற்றம் அவன் கண்ணில் படவே இல்லை.

 

“பிரகாஷ்… இந்த பொண்ணு…”

 

“அம்மா… ப்ளீஸ்… நெகட்டிவா எதுவும் சொல்லிடாத… அண்ணனுக்கு கல்யாணம் செய்யாம எனக்கு முடிக்கிரதுல உனக்கு சுத்தமா விருப்பம் இல்லைன்னு எனக்கு தெரியம். அதுக்காக பொண்ணுகிட்ட அது குறை இது குறைன்னு சொல்லி தட்டி கழிச்சிடாத…”

 

“என்னடா சொல்ற நீ…?” சிவகாமி அழுவது போல் கேட்டாள்.

 

“அம்மா… எனக்கு இந்த பொண்ண சின்ன வயசுலேருந்து தெரியும். கல்யாணம் செய்யணும்ன்னு முடிவு பண்ணினதும் முதல்ல இந்த பொண்ணுதான் என் ஞாபகத்துல வந்தா… இவளை கல்யாணம் பண்ணினா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன்ம்மா… எல்லாம் நல்லபடியா முடியிற நேரத்துல நீ எதையாவது சொல்லி குழப்பிடாதம்மா… ப்ளீஸ்…” என்று கெஞ்சினான் மகன்.

 

“பிரகாஷ்…! ஆனா ஜீவா…”

 

“ஜீவாவை நினைத்தால் எனக்கும் சங்கடமாத்தான் இருக்கும்மா. அவனுக்கும் சீக்கிரம் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணத்தை முடிக்கனும்… அப்போதான் அவனும் உருப்படுவான். ஆனா அவனுக்காக வெயிட் பண்ணுற நிலைமைல இப்போ நான் இல்லம்மா… புரிஞ்சுக்கோ… இந்த வருஷமும் நான் குடும்பம் இல்லாம யூஎஸ் போனா கண்டிப்பா டிப்ரஷனோடதான் திரும்பி வருவேன். அப்புறம் நீ உன் மகனை பைத்தியகாரனாத்தான் பார்க்க முடியும்…” என்று உண்மை நிலவரத்தை சொல்லி மிரட்டினான்.

 

உண்மையில் அவனால் அங்கு தனிமையில் இருக்க முடியவில்லை. ஆனால் தாய் மற்றும் அண்ணனின் விருப்பத்திற்காக  மாளிகை போல் ஒரு வீட்டை கட்டிவிட்டானே….! அதற்க்கு வாங்கிய லோனை அடைப்பதற்கும் மேலும் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி… அண்ணனுக்கு ஒரு தொழில் ஏற்படுத்திக் கொடுத்து அவன் வாழ்க்கைக்கு வழி செய்யவும் பிரகாஷ் அமெரிக்கா சென்றே ஆகவேண்டும். அதனால்தான் திருமணத்திற்கு அவசரப்படுகிறான். அவனுடைய நிலையும் மிகவும் சிக்கலுக்கு உரியதுதான்.

 

இந்த பெண்ணை விட்டுவிட்டால் அவன் ஊருக்கு போவதற்குள் வேறு பெண்ணை பார்த்து… பேசி… திருமணத்தை முடிப்பது சாத்தியமே இல்லை. புனிதாவும் தவறான பெண் இல்லை. வயது கோளாறில் தடுமாறியவள்  இப்போது சுதாரித்துவிட்டாள். அதை எப்படி தவறென்று சொல்ல முடியும்… ஆனாலும் இந்த திருமணம் சரியாக வருமா…! ஏன் வராது…? திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் பிரகாஷும் அவனுடைய  மனைவியும் அமெரிக்கா சென்று விடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் எந்த குழப்பமும் வர வாய்ப்பில்ல.

 

ஆனால் ஜீவா…! அவனுடைய வாழ்க்கை…? அவனுக்கு ஏற்றார் போல் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்க வேண்டியதுதான்… ஒத்துக்கொள்வானா…? ஏன் மாட்டான்…? இளம் வயதில் ஏற்ப்பட்ட இனக்கவர்ச்சிக்கு என்ன பெரிதாக ஆயுள் இருக்க போகிறது…? எல்லாம் மாறிவிடுவான். ஒருவேளை மாறவில்லை என்றால்…?

 

சிவகாமிக்கு மண்டை குழம்பியது… இரண்டு மகன்களின் மோசமான நிலைக்கு நடுவில் நின்றுகொண்டு யாருக்கு கைகொடுப்பது என்று புரியாமல் தவித்தாள் அந்த தாய்…

 

குடும்பத்திற்காக உழைக்கும் மகனுக்கு கைகொடுப்பதா… அல்லது பொறுப்பிலாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் மகனுக்கு கைகொடுப்பதா… பிள்ளை உழைப்பாளியாக இருந்தாலும் ஊதாரியாக இருந்தாலும் தாயின் பாசத்திற்கு அளவுகோல் ஏது…!

 

சிவகாமியால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. எடுக்கவும் வேண்டாம்… எதற்கு நாம் முடிவெடுக்க வேண்டும்… எல்லாம் விதிப்படி நடக்கட்டும்… என்று நினைத்து “நீ உன் விருப்பப்படி செய்…” என்று இளைய மகனிடம் ஜீவனில்லாத சிரிப்பை உதிர்த்தாள்.

 




Comments are closed here.

You cannot copy content of this page