Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 14

அத்தியாயம் – 14

“என்னடி சொல்லுற? என் மகன் செத்து பிழச்சிருக்கான். இந்த நேரத்துல அவனுக்கு உதவியா இல்லாம நான் எதுக்கு டெல்லிக்கு போகணும்?” ஆத்திரத்துடன் கேட்டாள் ராஜம்.

 

“அத்தானுக்கும் லட்சுமி அக்காவுக்கும் ஒரு சின்ன பிணக்கு அத்தை. அவங்களுக்கு இப்போ நீங்க தனிமையைக் கொடுத்தா அவங்க உங்களுக்கு சீக்கிரமே ஒரு பேரக் குழந்தையைக் கொடுப்பாங்க. எப்படி வசதி?” கிண்டலாகவே கூறி அத்தையையும் மாமாவையும் ஊர்கடத்தினாள் சிவா.

 

இப்பொழுது மோகனுக்கு எல்லாவற்றிற்கும் லட்சுமிதான் உதவினாள். வெந்நீரால் உடலை துடைப்பது, ட்ரெஸ் போடுவது, நேரத்திற்கு உணவும் மருந்தும் கொடுப்பது என்று அனைத்தையும் அவளே செய்தாள்.

 

மோகனுக்கே அவளுடைய அர்ப்பணிப்பைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. ஸ்ருதியும் இப்படி இருந்திருந்தால் சாரதிக்கு இந்த நிலை வந்திருக்காதே என்று வருந்தினான். ஒரு பக்கம் தன் மனைவியை எண்ணி கர்வம் கொண்டான். யாருக்கும் வாய்க்காத பொக்கிஷம் அவனுக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள் என்றால் கர்வமாகத்தானே இருக்கத் தோன்றும்.

 

மோகனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டில் ரொம்பவும் போர் அடித்தது. எவ்வளவு நேரம் தான் டிவி பார்ப்பது. அதனால் அவனுக்கு நிறைய சரித்திர நாவல்களை படித்துக் காட்டினாள் லட்சுமி. சிவகாமியின் சபதம் அதை தொடர்ந்து பார்த்திபன் கனவு, அழகான காதல் கதைகள் ஒன்றுகொன்று தொடர்புடையவை. காதலுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சிவகாமி மனைவிக்காக காதலை தியாகம் செய்த நரசிமவர்மர். இவர்களிருவரும் தாங்கள் துன்பப்பட நேர்ந்தாலும் சுற்றியிருப்பவர்களை சந்தோஷப் படுத்தினார்கள். இந்த கதை படிக்கும் பொழுது அவள் சில நேரங்களில் அழுதேவிட்டாள். இது கதை தான் என்று அவளுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் வரிகளின் தாக்கம் அழச் செய்துவிட்டது. அந்த மென்மையான பெண்மையைப் பார்த்து ரசித்தான் மோகன். எத்தனை அழகான இதயம் இந்த பெண்ணிற்கு. அதை போய் காயப்படுத்திவிட்டேனே. கல்யாணம் குழந்தையெல்லாம் பிடிக்காது என்று நினைத்திருந்த நான் ஒரு முட்டாள். தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.

 

அடுத்ததாக சிலப்பதிகாரம் படித்தாள். இரு வேறு பெண்களால் உருவானக் கதை. ஒன்று கண்ணகி… மற்றொன்று மாதவி. இருவரும் எதிர்பத குணம். உலகில் அனைத்துப் பெண்களும் ஒரே குணத்தில் இல்லை என்பதற்கு இதை விட சான்று வேறு உண்டா. ஸ்ருதியை மாதவி உருவத்தில் கற்பனை செய்தான். லட்சுமியை கண்ணகியாகக் கண்டான். தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தினான்.

 

ஒரு நாள் சிவா வீட்டிற்கு வந்தாள். லட்சுமி கிச்சனில் பிசியாக இருந்தாள்.

 

“அத்தான் நானா ஒன்று கேட்பேன் தப்பா நினைக்கக் கூடாது”

 

“நினைக்கவே மாட்டேன். இந்த நீண்ட நாள் ஓய்வு என்னை புது மனிதனாக்கியிருக்கு”

 

“லட்சுமி அக்காகிட்ட உங்களுக்கு என்ன கோபம்?”

 

“கோபமெல்லாம் ஒன்னும் இல்லையே”

 

“இல்ல…  நீங்க கணவன் மனைவியா வாழலைன்னு எனக்கு தெரியும்”

 

“என்ன!” அதிர்ந்தான்.

 

“ஆமாம் அத்தான் என்னதான் அவங்க உங்ககிட்ட பேசி  சிரிச்சாலும் அவங்களும் பெண்தானே. உணர்ச்சியே இல்லாத மரமா என்ன? அவங்க கவலையை சொல்லி அழ என்னை தேர்ந்தெடுத்தாங்க. அவங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கலாம். ஆனா உங்க மரியாதை போயிடுமே” நெகிழ்ந்தான்.

 

“இருந்தாலும் என் நிலைமை வேறு. அது உனக்கு தெரியாது”

 

“தெரியும் அத்தான். அந்த சுருதி விவகாரம் தானே?”

 

“உனக்கு…!” இழுத்தான்.

 

“இந்த விஷயம் மிஸ்டர் விஜய் மூலமா அக்காவுக்கு தெரியும். அவங்க தான் எனக்கே சொன்னாங்க”

 

“என்ன லட்சுமிக்கும் இது தெரியுமா?” – ஆச்சர்யமாகக் கேட்டான்.

 

“ம்ம்ம் தெரியும்”

 

“அவளுக்கு தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையே!”

 

“காட்டி என்ன புண்ணியம். உங்க மனசு மாறாதே. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அத்தான். இன்னும் ஒரு மாசத்துல உங்க கல்யாண நாள் வருது. ஒரு வருஷமா ஒரு பெண்ணோட உணர்வுகளை எப்படி உங்களால புரிஞ்சுக்காம இருக்க முடிஞ்சுது”

 

“அது…”

 

“கேட்டா சுருதி ஸ்ருதின்னு பாட்டு பாடுவிங்க. என்னத்தான் நீங்க. ஸ்ருதியும் அக்காவும் ஒண்ணா?”

 

“நிச்சயமா இல்ல சிவா… என் லட்சுமியோட அந்த ஸ்ருதியை ஒப்பிடவே முடியாது. நான் தான் முட்டாளா இருந்துட்டேன். இதை சீக்கிரமே சரி பண்ணிடறேன். எனிவே உன்னுடைய அக்கறைக்கு ரொம்ப நன்றி.. ” புன்னகைத்தான்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இப்போதாவது மோகனுக்கு புத்தி வந்ததே.

    நன்றி

You cannot copy content of this page