Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-7

அத்தியாயம் – 7

எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்;

இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்!”

தாலிக்கட்டி முடிக்கும்வரை ருத்ரனிடம் இருந்த படபடப்பு இப்போது சிறிதும் இல்லை. அவன் அமர்த்தலாக நடுவீட்டில் சோபாவில் அமர்ந்து அம்மா கலந்துக் கொடுத்த டீயைச் சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிரில் வெள்ளையும் சொள்ளையுமாக அவனுடைய பங்காளிகள் பத்துபேர் பயங்கர டென்ஷனாக அமர்ந்திருந்தார்கள்.

 

திடீர்க் கல்யாணம் என்றதும் காதல் கல்யாணம் என்று நினைத்த அவனுடைய குடும்பத்தார் நடந்து முடிந்திருந்த கடத்தல் கல்யாணத்தால் கதிகலங்கிப் போயிருந்தார்கள்.

 

“அந்தப் பொண்ணப் புடிச்சிருக்குன்னு சொல்லியிருந்தா… மொறையா கேட்டுப் பாத்து, கட்டிக்கிட்டு வந்திருக்கலாம்… நம்ம குடும்பத்துக்குப் பொண்ணுக் குடுக்கமாட்டேன்னு எவன் சொல்லுவான்… இப்புடி அவசரப்பட்டிருக்க வேண்…” பொரிந்து கொண்டிருந்த பீமனின் வாய் ருத்ரனின் ஒற்றைப் பார்வையில் தானாக மூடிக்கொண்டது.

 

ருத்ரனிடம் காட்ட முடியாத கோபத்தை அவனுக்கு உதவிச் செய்த வைத்தியைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போய் அவனிடம் காட்டினார்கள் அனைவரும்.

 

“ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சிப் போச்சாம் மண்டங்கற கதையா எல்லாரும் என் தலையப் போட்டு உருட்டுங்க…” என்று முணுமுணுத்தான் வைத்தி.

 

இவ்வளவு நாள் குடும்பத்தாரிடமும்… ஊர் மக்களிடமும் தான் சம்பாதித்து வைத்திருந்த பயம் கலந்த மரியாதையில் இன்று பெரிய பள்ளம் விழுந்துவிட்டதை ருத்ரன் உணர்ந்தான்.

 

“தம்பி… அடுத்து என்னப்பா செய்றது… தெக்கித்தெரு ஆளுங்களையெல்லாம் சிதம்பரம் தெரட்டிக்கிட்டு இருக்காராம். இன்னும் கொஞ்சநேரத்துல அவனுங்க எல்லாரும் இங்க வந்துடுவானுங்க…” பெரியவர் ஒருவர் பேச்சை ஆரம்பித்தார்.

 

“வரட்டும் பெரியப்பா… நானும் அதுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்…” என்றான் நிதானமாக. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வீச்சரிவாளும் வேல்கம்புமாக ருத்ரனின் வீட்டுவாசலில் படையாகத் திரண்டு வந்து நின்றார்கள் சிதம்பரத்தின் பங்காளிகள்.

 

“யார்ரா வீட்டுக்குள்ள… வெளிய வாங்கடா…” என்கிற கட்டைக்குரல் வீட்டிற்குள் அமர்ந்திருந்தவர்களை விறைத்து எழ வைத்தது.

 

“எவன்டா அவன்… வீட்டுவாசல்ல வந்து நின்னுகிட்டுக் கத்துறது…?” என்றபடி பீமன் குதித்துக்கொண்டு வெளியே செல்ல

 

“பீமா…” என்று அதட்டி அண்ணனை அடக்கினான் ருத்ரன். பின் அனைவரையும் முந்திக்கொண்டு வேகமாக வாசலுக்குச் சென்றான்.

 

கணுக்காலில் சிக்கிய பட்டுவேட்டியை ஒற்றைக்காலைப் பின்னால் மடக்கி, ஒருபக்க வேட்டியை கையால் பிடித்து லாவகமாக மடித்துக் கட்டிக்கொண்டு வேக நடையுடன் கம்பீரமாக வெளியே வந்தவனைப் பார்த்ததும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் வாசலில் நின்றிருந்த வீச்சருவாள் கூட்டம் ஒரு நொடி அமைதியானது.

 

“என்ன சத்தம் இங்க…?” என்று அழுத்தமாக ஓர் அதட்டல் போட்டான்.

 

“எங்கத் தெருப் பொண்ணத் தூக்கிட்டு வந்துட்டு என்னய்யா சவுடாலா பேசுற…?” எதிர்த்துக் கேள்விக் கேட்டான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

 

“கல்யாணம் முடிஞ்சுப் போச்சு… பிரச்சனயைப் பேசித் தீர்த்துக்கலாம்… எல்லாரும் அருவா கம்பெல்லாம் கீழப் போடுங்கப்பா…” என்றார் வீட்டிற்குள்ளிருந்து வந்த மீசைக்கார பெரியவர் ஒருவர்.

 

அதன்பிறகு ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசினார்கள். கடைசியில் கிராமப் பஞ்சாயத்து… பெண்ணின் வாழ்க்கை… தாலி செண்டிமெண்ட்… போன்ற மந்திர வார்த்தைகளினால் பெண்வீட்டார் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்கள்.

 

கூட்டமாக வந்திருந்த இருபத்தைந்து ஆண்களில் எண்ணி மூன்றுபேரை மட்டுமே வீட்டிற்குள் அனுமதித்தான் ருத்ரன்.

 

“இங்க பாருங்க… இது உங்களுக்கும் எனக்குமானப் பிரச்சனை… நாம ரெண்டுபேர் மட்டும் பேசித் தீர்த்துக்கலாம். உங்களுக்கு சப்போட்டுக்கு ஆளு வேணுமுன்னா உங்க அண்ணன் தம்பிகள்ள ரெண்டுபேர மட்டும் நிறுத்திக்கிட்டு மத்தவங்களையெல்லாம் திருப்பி அனுப்பிட்டு உள்ள வாங்க…” என்று சிதம்பரத்தைப் பார்த்து ருத்ரன் தெளிவாகச் சொன்னதையடுத்து… அவர் வேறு வழியின்றித் தன்னுடைய தம்பிகள் இருவரையும் தன்னோடு இருக்கச் சொல்லிவிட்டு மற்ற அனைவரையும்  அனுப்பிவிட்டார்.

 

ருத்ரனின் வீட்டுக்கூடம் நிறைந்திருந்தது. வைதேகி அம்மா மற்றும் ராஜேஸ்வரி இருவரும் ஒரு பக்கம் ஒதுங்கி நின்றார்கள். பாட்டி ஒரு தூணில் சாய்ந்தபடிக் கால்களை நீட்டி அமர்ந்து வெற்றிலைப்பாக்கை மடித்துக் கொண்டிருந்தார்.

 

தேவன் மாடிப்படியில் அமர்ந்திருக்க, பீமன் ஒரு தூணில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான்.

 

ருத்ரனின் பங்காளி வீட்டு ஆட்கள் சோபாவிலும் நாற்காலிகளிலும் நிறைந்திருக்க… அவர்களுக்கு எதிரில் சிதம்பரமும் அவருடைய தம்பிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

 

ருத்ரன் திண்ணையில் வைத்திக்கு ஏதோ வேலைச் சொல்லி அவனை வெளியே அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

 

அவனைப் பார்த்ததும் “எம்பொண்ணு எங்க…?” என்றார் சிதம்பரம்.

 

“மாடில தூங்குது…” என்றாள் ருத்ரனின் தாய் வைதேகி முந்திக்கொண்டு.

 

“அம்மா… இவங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா….” என்று தாயின் பேச்சில் இடையிட்டான் ருத்ரன்.

 

வைதேகி கொண்டு வந்த பழச்சாற்றை மறுத்துவிட்ட சிதம்பரம் “எம்பொண்ண நான் பாக்கணும்…” என்றார்.

 

“அதான் சொன்னாங்களே… எம்பொண்டாட்டி மேலத் தூங்கிக்கிட்டு இருக்கா… எழுந்தோன்ன பாக்கலாம்… இப்ப ஜூச எடுத்துக்கங்க…” என்றான் ருத்ரன் அலட்சியமாக. சற்றுநேரத்திற்கு முன்வாசலில் அவர் காட்டுத்தனமாகக் கத்திக் கூச்சல் போட்டதன் விளைவால் அவனுடைய கோபம் பெருகியிருந்தது.

 

ஏற்கனவே கடுகடுவென இருந்த சிதம்பரத்தின் முகம் ருத்ரன் காட்டிய அலட்சியத்தில் பயங்கரமாக மாறியது.

 

“காலேசுக்குப் போன பொண்ண, கார்ல தூக்கிட்டு வந்து தாலியக் கட்டிப்புட்டு… பொண்டாட்டி கிண்டாட்டின்னு உரிமைக் கொண்டாறியளோ… யாருக்குய்யா வேணும் உங்க ஜூசு… எம்பொண்ணு நல்லா இருக்காளான்னு பாத்த பொறவுதான் மத்ததெல்லாம்…” கத்தினார் சிதம்பரம்.

 

“சிதம்பரம்… பொறுமையாப் பேசுப்பா…” என்று மற்றவர்கள் அவரைச் சமாதானம் செய்தார்கள்.தான் செய்திருப்பது மிகப்பெரிய அத்துமீறல் என்பது புரிந்தாலும் அதை அலட்சியம் செய்து,

 

“தூக்கிக்கிட்டு வந்தாலும் தாலிக் கட்டிட்டேன்… இனி அவ எம்பொண்டாட்டி தான்… என்ன மீறி யாரும் அவகிட்ட நெருங்க முடியாது…” என்று எகிறினான் ருத்ரன்.

 

“என்னய்யா நீ… அவரு பொண்ணப் பாக்கணும்குற ஆசையிலப் பேசுறாரு… நீயும் சரிக்குச்சரி பேசிக்கிட்டு நிக்கிற…” என்று பாட்டி பேரனை அதட்டியதோடு,

 

“சரி… நீ போயி ஒம்பொண்டாட்டி முழிச்சிரிச்சா பாரு… இல்லன்னா எழுப்பு…” என்று பேரனை மாடிக்கு அனுப்பி வைத்தார்.

 

அவன் மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது… “ந்தா… செதம்பரம்… கம்மங்கருதக் கண்டா கை சும்மா இருக்குமா? இல்ல, மாமன் மகளக் கண்டா வாய் சும்மா இருக்குமா?? ஏதோ எம்பேரன் மாமன் மகளாச்சேன்னு ஆசைப்பட்டு உம்மக கழுத்துல தாலிக் கட்டிப்புட்டான். இனி அவ எங்கவீட்டு மருமவ… நாங்க எல்லாரும் அவள எங்க கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்குறோம்… இனி நடக்கவேண்டியதப் பேசுவோம்… நீ என்ன சொல்லுற…?” என்று அவர் சிதம்பரத்திடம் பேசுவது கேட்டது.

# # #

 

ருத்ரன் தன்னுடைய அறைக்கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழையும் பொழுதே இதுநாள் வரை அவனுடைய அறையில் அவன் நுகர்ந்தறியாத ஒரு புதுமணம் அவன் நாசியை வருடியது. இதமான அந்த மணம் அவனுடைய இறுக்கமான மனநிலையை நொடியில் இலகுவாக மாற்றியது. அதிக அலங்காரம் இல்லாமல் சிகப்புநிற பட்டுப்புடவையில் தந்தத்தில் செய்யப்பட்ட சிலை ஒன்று ஒருக்களித்துப் படுத்திருந்தது அவனுடைய படுக்கையில். அந்தச் சிலையின் அழகில் அவன் மலைத்துப் போய் நின்றான்.

 

‘சிதம்பரத்தோட பொண்ணு இவ்வளவு அழகா….!’

 

கழுத்திலிருந்து சரிந்துப் படுக்கையில் தவழ்ந்து கொண்டிருந்த கொத்தான தங்கநகைகளை விட அடர்த்தியான புது மஞ்சள்கயிறு அவள் கழுத்தை வசீகரமாக்கியது.

 

திருமணச் சடங்கின் போது அவன் அவளுடைய நெற்றியிலும் வகிட்டிலும் இட்டுவிட்ட குங்குமம் இப்போது லேசாகக் கலைந்திருந்தது. அதுகூட அவளுடைய அழகை அதிகமாக்குவது போல் தோன்றியது. அவளுடைய பின்னந்தலையிலிருந்து சரிந்துத் தோளில் விழுந்த மல்லிகைச் சரத்தில் உள்ள மலர்களைவிட அவள் முகம் அழகானதென்று அவன் எண்ணினான்.

 

இதுவரை இருந்த பரபரப்பில் அவளுடைய முகத்தைச் சரியாகக்கூடப் பார்க்க முடியாதவன் இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கட்டிலுக்கு அருகே ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமர்ந்து அவளுடைய அழகை இஞ்ச் பை இஞ்ச்சாக ரசித்தான். அப்போதுதான் இன்னொன்றையும் உணர்ந்தான்.

 

அந்த முகம் அவனுக்குப் புதிதல்ல… ஏற்கனவே பரிச்சயமானது போல் ஒரு உணர்வு… ‘எங்கே…! எப்போது…!’ அவனுக்குப் புலப்படவில்லை.

 

அவன் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் போது சுவர்கடிகாரம் சத்தமிட்டது. நிமிர்ந்து மணியைப் பார்த்தான். பிற்பகல் இரண்டு.

 

‘காலை பத்துமணிக்குக் கொடுத்த மயக்கமருந்து…. முழுதாக நான்கு மணிநேரம் முடிந்துவிட்டது. இன்னும் ஏன் இவள் விழிக்கவில்லை…! இந்த நான்கு மணிநேரத்தில் அவளுடைய வாழ்க்கையே தடம் மாறிவிட்டது… இதை எப்படி எடுத்துக் கொள்வாள்…? கூச்சலிடுவாளோ…! அழுதுப் புலம்புவாளோ…!’ அவனுடைய சிந்தனை ஓட்டத்தைக் கலைப்பது போல் அவளிடம் அசைவு தெரிந்தது.

# # #

 

அதேநேரம் கீழே சிதம்பரம் அமைதியாக இருந்தார். பத்து பதினைந்து பேர் ஒரே பக்கமாகச் சேர்ந்துகொண்டு நடந்து முடிந்தத் திருமணத்தை நியாயப்படுத்திப் பேசி சிதம்பரம் சகோதரர்களின் சுயச்சிந்தனையை மழுங்கடித்து விட்டிருந்தார்கள். அவரின் தம்பிகளோ கூட்டத்தாரின் போதனையில் மனதளவில் அந்தத் திருமணத்தை ஏற்று கொண்டுவிட்டார்கள்.

 

நடந்து முடிந்தப் பேச்சுவார்த்தையில் அந்தத் திருமணத்திற்கான ருத்ரனின் உள்நோக்கம் சிறிதும் வெளிப்படவில்லை. எல்லோரும் ‘அவன் அந்தப் பெண்ணின் மீது விருப்பப்பட்டுவிட்டான். அதனால் அவசரப்பட்டுவிட்டான்…’ என்பதையே உண்மை என்று நம்பி… அதைச் சொல்லியே பெண்ணின் தகப்பனைச் சமாதானம் செய்தார்கள். சிதம்பரம் முழுவதுமாகக் குழம்பிப் போய் அமர்ந்திருந்தார்.

 

“என்னண்ணா யோசிக்குற…?” சிதம்பரத்தின் தம்பி கேட்டார்.

 

“மானு என்ன சொல்லுவான்னு தெரியலையே…! அவளுக்கு இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியாம நாம என்னடா பேசுறது…?”

 

“அவ சின்னப் பொண்ணுண்ணே… அவளுக்கு என்ன தெரியும்.. நல்லது கெட்டத நாமதான் எடுத்துச் சொல்லணும்…”

 

“சொன்னா ஒத்துக்குவாளா…?”

 

“அவ நம்ம பொண்ணுண்ணே… நாம கிழிக்கிற கோட்டத் தாண்டமாட்டா… உம்முடிவ சொல்லு…” என்று சொன்னார் சிதம்பரத்தின் தம்பி.

 

அப்போதும் சிதம்பரம் வாயைத் திறக்கவில்லை.

 

“அண்ணே… இப்புடி வா…” என்று அண்ணனைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போய்த் தம்பிகள் இருவரும் பேசினார்கள்.

 

“நாம எட்டு ஊருக்குப் போய்த் தேடினாலும் இந்தமாதிரி சம்மந்தம் கெடைக்காது… எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்கணும்இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்கணுமுன்னு அந்தக் காலத்துல சும்மாவா சொன்னாங்க… ஏதோ நடந்தது நடந்து போச்சு… ஒத்துக்கண்ணே…” என்று ஒருவர் சொல்ல

 

“இனி கட்டுனத் தாலிய அறுத்துப்புட்டு மறுதாலியா கட்டமுடியும்… அப்புடியே கட்டுனாலும் அது மதிப்பா இருக்குமா…? பேசாம இந்தக் கல்யாணத்த ஒத்துக்கண்ணே…” என்று மற்றொருவர் உபதேசம் செய்தார்.

 

அவர்களுடைய பத்தாம்பசலித்தனமான பேச்சு அந்தக் கிராமத்து மனிதருக்குச் சரியாகப்பட்டது. மகளின் மனநிலை என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமலே அந்தக் கல்யாணத்தை ஆதரித்துவிட்டார்.

 

“சரி… நடந்தது நடந்து போச்சு… நாங்க மொறப்படிச் செய்றதச் செய்றோம்…” என்றார் வள்ளி பாட்டியிடம்.

 

அவருடைய பேச்சு அங்கிருந்த அனைவரையும் நிம்மதியடைய வைத்தது.

# # #

 

மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்து கொண்டிருந்த மான்விழி கண்களைத் திறக்க முயன்றாள். எதிரில் ஓர் ஆண் உருவம் மங்கலாகத் தெரிந்தது. தலை பாரமாக இருந்தது… மீண்டும் கண்களை மூடி மழுங்கிப்போயிருந்த நினைவுகள் மீட்டெடுக்க முயன்றாள். சிலநிமிட போராட்டத்திற்குப் பிறகு அவள் கடத்தப்பட்டிருக்கிறாள் என்கிற விஷயம் அவள் மூளையில் உரைத்தது.

 

மனதின் வேகம் உடலுக்குத் தெம்பைக் கொடுக்க, சட்டெனப் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள். ஒரு கையால் தலையைத் தாங்கிப் பிடித்தபடி எதிரில் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

 

“நீ… நீ… அன்னிக்குப் பாலத்துல, என்னுகிட்ட வம்பிழுத்தது நீதானே…!” என்று சோர்வானக் குரலில் முயன்று உறுதியைக் கொண்டுவந்து கேட்டாள்.

 

‘ஓஹோ… அந்தச் சுண்டெலிதானா நீ… அன்னிக்கு சுடிதார்ல சின்னப்பொண்ணா தெரிஞ்ச… இன்னிக்குப் புடவைல பெரிய பொண்ணாதான் இருக்க…’ அவன் புன்சிரிப்புடன் அவளைப் பார்வையால் அளவெடுத்தான்.

 

அவனுடைய பார்வையைத் தவறாகப் புரிந்துக் கொண்டவள் “ஏய்… யார்டா… நீ…? எதுக்கு என்ன இங்க தூக்கிட்டு வந்துருக்க…?” என்று கடுப்பாகக் கேட்டாள்.

 

அவன் முகம் சட்டென சிரிப்பைத் தொலைத்து இறுகியது… எடுத்த எடுப்பில் ‘டா….’ போட்டு அவள் அழைத்ததில் இளகியிருந்த அவன் மனம் மீண்டும் முறுக்கிக் கொண்டது. பல்லைக் கடித்தபடி அவள் கழுத்தைச் சுட்டிக்காட்டி… “உனக்குத் தாலிக் கட்டின புருஷன்…” என்றான் அழுத்தம்திருத்தமாக.

 

அவள் பதறியடித்துக் கொண்டு தன்னை ஆராய்ந்தாள். பட்டுப்புடவை… நகைகள்… பூ… இது எல்லாவற்றிற்கும் மேலாக இந்த மஞ்சள்கயிறு…

 

“ஆ… ஐயோ… ஐயையோ… நீ… நீ ஏன்டா என் கழுத்துல தாலிக் கட்டின… பாவி… படுபாவி…” கட்டிலிலிருந்து எழுந்து ஆத்திரத்துடன் கத்தினாள்.

 

“ம்ம்ம்… எல்லாரும் எதுக்குத் தாலிக் கட்டுவாங்க… கல்யாணம் பண்ணிக்கிட்டுக் குடும்பம் நடத்தத்தான்…”

 

“ஹாங்… குடு… குடும்…பமா… அடப்பாவி… ராட்சசா… அரக்கா… உன்ன கொல்லாம விடமாட்டேன்டா…” என்றபடி ஆவேசத்துடன் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவன் மீது வீசியடித்தாள்.

 

அதையெல்லாம் அலட்சியமாக ஒதுக்கியவன் அவளை நெருங்கினான். அவள் பின்னால் தள்ளாடியபடி நகர்ந்தாள். இவன் இரண்டே எட்டில் அவளிடம் நெருங்கி அவளுடைய இரு புஜங்களையும் உறுதியாகப் பிடித்து உலுக்கி,

 

“ஏய்… எதுக்குடி இப்ப கத்துற…?” என்று அடிக்குரலில் சீறினான்.

 

“ச்சி… கையை எடுடா… என்ன தொட்ட உன்ன கொன்னே போட்டுடுவேன்… பொறுக்கி… கைய விடு… விடுடா…” என்று அவள் கத்தக் கத்த அவனுடைய பிடி இறுகியது.

 

அவளுக்கு வலித்தது… தன்மானம் அதை வெளியே சொல்லவிடாமல் தடுக்க, வேதனையில் கண்களில் நீர் துளிர்த்தது… வார்த்தைகளும் அடங்கின.

 

அவளுடைய வேதனையை உணர்ந்தவனின் பிடி மெல்ல இளகியது…

 

“இங்க பாரு… ஒம்பேரு என்ன…? ம்ம்ம்… மான்விழி… மான்விழிதானே…! ஆமாம்… மான்விழிதான்…! இங்க பாரு மான்விழி… நான் சொல்றத நல்லா கேட்டுக்க… நா ஒன்னும் உன்ன பாத்து மயங்கி… உன் அழகுல உருகி… உனக்குத் தாலிக் கட்டல… ஊர வாழவிடாம பண்ணிக்கிட்டு இருக்க உங்கப்பனை வழிக்குக் கொண்டு வரத்தான் உங்கழுத்துல நாந்தாலிக் கட்டவேண்டியதாப் போச்சு… கட்டிட்டேன்… கட்டின கடமைக்காக உன்ன காலம்பூரா வச்சுக் காப்பாத்தவும் போறேன்… ஒழுங்கா… பொண்டாட்டியா லட்சணமா, நான் சொல்றதக் கேட்டு நட… இல்ல…” என்று சொல்ல வந்ததை முடிக்காமல் அவளைப் பார்வையால் மிரட்டினான்.

 

அவனுடைய மிரட்டலுக்கு அவள் பெரிதாகப் பயந்துவிடவில்லை என்றாலும் உடலின் சோர்வுக் காரணமாகவோ என்னவோ… அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டாள்.

 

“கீழ வா… உங்கப்பா வந்திருக்காரு… வந்து பாரு…” என்று அவளைக் கையோடு அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page