உனக்குள் நான்-8
3491
0
அத்தியாயம் – 8
அன்று நவம்பர் பத்து… கார்முகிலன் மதுமதி தம்பதியரின் திருமணநாள். முதல் திருமண நாளன்று நீலவேணி எனும் சூறாவளிக் காற்றால் இருவரும் இருவேறு திசைகளில் சிதறடிக்கப் பட்டிருந்தார்கள். பிரிவு தந்த துயரில் மூழ்கியிருந்தவர்கள், தாங்கள் இணைந்த நாளை நினைக்கக் கூட மறந்துவிட்டார்கள். இது இரண்டாம் ஆண்டு…
வழக்கம் போல் அதிகாலை கண்விழித்த மதுமதி குளித்து… விளக்கேற்றி கடவுளை வணங்கிவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தவள் கூடுதலாக ஓர் இனிப்புடன் சமையலை முடித்தாள்.
காலை உணவுக்காக டைனிங் டேபிளில் அமர்ந்த கார்முகிலனுக்கு மனைவி இனிப்பை பரிமாறும் போது கூட அதற்கான காரணத்தைக் கேட்கத் தோன்றவில்லை. அமைதியாக உணவை முடித்துக்கொண்டு கல்லூரிக்குக் கிளம்பினான்.
நாட்களை நினைவு வைத்துக் கொள்வதில் கார்முகிலன் எப்பொழுதுமே பலகீனமானவன் என்பதால் அன்றைய நாளின் சிறப்பு என்னவென்பதை மறந்துவிட்டான். தானாக வலிய சென்று கணவனுக்கு நினைவுப்படுத்த மதுமதியும் விரும்பவில்லை. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளாமலேயே நேரத்தைக் கடத்திவிட… கார்முகிலன் கல்லூரிக்குப் புறப்பட்டுவிட்டான்.
கார்முகிலன் தேனியை நெருங்கும் பொழுது அவனுடைய கைப்பேசி அழைத்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு எடுத்துக் காதில் வைத்து “ஹலோ…” என்றான்.
“திருமண நாள் வாழ்த்துக்கள்… வாழ்க்கையில எல்லா வளமும் பெற்று நீ சந்தோசமா இருக்கணும்டா தம்பி… மது எங்க..? கூப்பிடு… ” கௌசல்யாவின் குரல் மகிழ்ச்சியோடு ஒலித்தது.
ஒரு கணம் அவனுக்கு எதுவுமே புரியவில்லை… திகைத்து நின்றுவிட்டான்.
“முகிலா… மதிகிட்ட போனைக் குடுடா…” கௌசல்யாவின் குரல் மீண்டும் ஒலித்தது.
அதற்குள் அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். இன்று என்ன தேதி என்பதும் ஞாபகம் வந்துவிட்டது… காலை மனைவி பரிமாறிய இனிப்புக்கான காரணமும் விளங்கிவிட்டது. சிரிப்போடு “வாழ்த்துக்கு நன்றிக்கா… நான் தேனில இருக்கேன். நீ மதிக்குப் பேசணும்னா வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசு…”
“ஓ… அதுக்குள்ள காலேஜ் கிளம்பிட்டியா… சரி.. அத்தான் பேசணுமாம்… பேசு…” என்கிற கௌசல்யாவின் குரலைத் தொடர்ந்து வீரராகவனின் குரல் கேட்டது.
“முகிலா… திருமண நாள் வாழ்த்துக்கள்…”
“தேங்க்ஸ் அத்தான்…”
“என்ன இன்னிக்கு ஸ்பெஷல்… காலேஜ் கிளம்பிட்ட போலருக்கு… லீவ் போட்டிருக்க வேண்டியது தானே..?”
“ஹி… ஹி… முக்கியமான வேலை இருக்குது…த்தான்… அதான் காலேஜ் வந்துட்டேன்.. சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பிடுவேன்…” – தன்னுடைய மறதியைச் சாதூர்யமாக மறைத்து மழுப்பினான்.
“சரிப்பா… நாங்க சாயங்காலம் வீட்டுக்கு வர்றோம்…”
“ஓகே (அ)த்தான்… அப்போ அக்காவையும் கூட்டிட்டு ஒரு அஞ்சு மணி போல வந்திருங்க… நானும் தர்மா சாரை சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுறேன்… மதிக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துடலாம்”
“அடடே…! சர்ப்ரைஸ் பார்ட்டியா… குட்… குட்… அப்போ நாங்க சரியா அஞ்சு மணிக்கு லக்ஷ்மிபுரத்துல இருப்போம். சரியா?”
“ஓகே…த்தான்…… சாயங்காலம் மீட் பண்ணுவோம்” என்று சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைத்தவன், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டமிடல்களோடு கல்லூரியை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
###
மதியம் ஒரு மணிக்கெல்லாம் வானம் நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது. மழை வெளுத்துக்கட்டப் போகிறது என்று எண்ணமிட்டுக் கொண்டே கார்முகிலன் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தர்மராஜ் வீட்டிற்கு வந்தான்.
“வாடா முகிலா… என்ன இந்த நேரத்துல வந்திருக்க? காலேஜ் இல்ல?”
“இருக்கு சார்… லீவ் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்…”
“அடடே… இந்தக் கிழவன் மேல அவ்வளவு பாசமாடா?”
“ப்ச்… விளையாடாதீங்க சார்… கார் சாவி எங்க இருக்கு..?”
“அங்க மாட்டியிருக்குப் பாரு…” என்று அவருடைய கார் சாவி இருக்கும் இடத்தைக் காட்டிவிட்டு, அதன்பிறகு “எதுக்குடா கார்? எங்க போகணும்?” என்று விபரம் கேட்டார்.
“கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். வண்டில போனா எல்லாத்தையும் எடுத்துட்டு வர முடியாது. அதான் காரை எடுக்க வந்தேன்…”
“சரி… பார்த்துப் போ… மழை வர்ற மாதிரி இருக்கு…”
“மூணு மணிக்குத் திரும்ப வந்திடுவேன் சார்… கிளம்பி இருங்க… லக்ஷ்மிபுரம் போகணும்…”
“ஏன்டா..?”
“இன்னிக்கு எங்க கல்யாண நாள். ஒரு சின்ன பார்ட்டி கொடுக்கப் போறேன்… உங்களுக்கு இல்ல… உங்க பேத்திக்கு…” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“ஹா… ஹா… நீ என்னடா எனக்கு பார்ட்டி கொடுக்கறது… கஞ்சப்பயலே… என் பேத்தி தருவாடா…” சத்தமாகச் சிரித்து உற்சாகமாகப் பேசினார்.
முகிலனும் சத்தமாகச் சிரித்தான். “சரி சார்… நான் வர்றேன்…” என்று சொல்லிவிட்டு தர்மராஜின் காரை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு வந்தான். தேனியிலேயே பெரிய ஜவுளிக்கடை ஒன்றில் நுழைந்து மதுமதிக்கு மயில் வண்ண நிறத்தில் அழகிய வேலைப்பாடமைந்த சேலை ஒன்றை வாங்கியவன், பிறகு நகைக்கடையில் நுழைந்து அழகான மோதிரம் ஒன்றை வாங்கினான்.
கூடுதலாகப் பூ, கேக், இனிப்பு வகைகள் மற்றும் இரவு விருந்துக்காக ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு, மீண்டும் தர்மராஜ் வீட்டுக்கு வந்து அவரை அழைத்துக்கொண்டு லக்ஷ்மிபுரம் பக்கம் காரைத் திருப்பினான்.
அவர்களுடைய கார் லக்ஷ்மிபுரத்திற்குள் நுழையும் பொழுது இடியும் மின்னலுமாக மழை வானத்தைக் கிழித்துக்கொண்டு கொட்டியது. சாலையெல்லாம் வெள்ளம் ஆறாக ஓடியது. காற்றுச் சுழன்று அடித்ததில் ஓர் இடத்தில் மரம் சாய்ந்து கிடந்தது.
“மரம் சாஞ்சு கெடக்குப் பாருடா…”
“சைடடிச்சுப் போக முடியுதா பார்க்கலாம் சார்…”
“ம்ஹும்.. கார் போக முடியாதுடா… டூவீலர் தான் போகலாம்…”
“ப்ச்… சுத்தி தான் போகணும்… அத்தானையும் அக்காவையும் வேற வரச் சொல்லியிருக்கேன். எப்படி வரப் போறாங்களோ தெரியல…” கவலையோடு சொன்னவன், காரை ரிவர்ஸ் எடுத்துத் திருப்புவதில் கவனமாக இருந்தான்.
“என்னடா முகிலா…. காத்தும் மழையுமா… வானம் இன்னிக்குன்னு பார்த்து இப்படிப் பிச்சு ஒதறுது…” தர்மராஜ் பேச்சுக் கொடுத்தார்.
“ஆமாம் சார்… காலயில கூட நல்லாத்தான் இருந்தது. திடீர்னு இவ்வளவு மழை பெய்யுது…! இன்னிக்கு மட்டும் வண்டில வந்திருந்தேன்னா ரொம்பக் கஷ்டமாயிருக்கும்…” இருவரும் பேசிக்கொண்டே ஊரைச் சுற்றிக்கொண்டு ஒரு வழியாக நான்கரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தார்கள். பூட்டியிருந்த வீடு அவர்களை வரவேற்றது…
கார்முகிலன் போர்டிகோவில் காரை நிறுத்தியதும்,
“என்னடா… வீடு பூட்டியிருக்கு? இந்த மழையில மது குழந்தையோட எங்க போயிருக்கும்!” என்று கேட்டுக்கொண்டே இறங்கினார் தர்மராஜ்.
“அதானே…! வெளியே எங்கேயும் போறதா என்கிட்டச் சொல்லலையே…!” குழப்பத்தோடு முகிலனும் இறங்கினான். தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து தர்மராஜை அமர சொன்னவன், கைப்பேசியை எடுத்து மதுமதிக்கு முயன்றான். ‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்…’ என்கிற பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டிருந்தது.
‘எங்கே போயிருப்பாள்…!’ என்கிற யோசனையோடு காரில் இருந்த பொருட்களை உள்ளே கொண்டு வந்து வைத்தான்.
வாசலில் இன்னொரு கார் வந்து நின்றது. வெளியே எட்டிப்பார்த்தான். வீரராகவனின் கார்… போர்டிகோவில் இரண்டு கார்களுக்கு மட்டும் தான் இடமிருந்தது என்பதால் அவருடைய கார் வாசலிலேயே நின்றது. குடையை எடுத்துச் சென்று கொடுத்து, அக்காவையும் அத்தானையும் மழையில் நனையாமல் பாதுகாப்போடு வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வந்தான்.
“எங்க மதுவையும் குழந்தையையும் காணோம்?” – கௌசல்யா வீட்டைச் சுற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“அதான்…கா எனக்கும் தெரியல… நாங்க வரும்போதே வீடு பூட்டியிருந்தது. மொபைலுக்கு ட்ரை பண்ணினா லைன் கிடைக்கல… இவ்வளவு மழையில எங்க போனான்னு தெரியல…” – கவலையோடு கூறினான் கார்முகிலன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வீரராகவனின் கைப்பேசி அடித்தது. எடுத்துப் பேசினார்.
“ஹலோ… அப்பா…”
“மது… எங்கம்மா இருக்க?”
“அப்பா… இங்க லக்ஷ்மிபுரத்துல நல்ல மழைப்பா… கோவிலுக்கு வந்தேன். வீட்டுக்குப் போக முடியல. கோவில் வாசல்ல ஆட்டோ கூட எதுவும் இல்ல. யாழியை வேற தூக்கிட்டு வந்துட்டேன். நீங்க கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்கப்பா…” – தேனியில் இருப்பார் என்கிற எண்ணத்தில் பேசினாள்
“எந்தக் கோவில்லம்மா இருக்க? இது யாரு நம்பர்..?”
“விசாலாட்சியம்மன் கோவில்ல இருக்கேன்… என்னோட போன்ல சிக்னல் இல்லப்பா. அதான் பக்கத்துல இருக்கவங்ககிட்ட போன் வாங்கி உங்களுக்கு கால் பண்ணினேன்…”
“சரி… சரி… நீ அங்கேயே இரு… நான் இப்போவே வந்திடுறேன்…” – கைப்பேசியை அணைத்தார்.
மதுமதி மழையில் எங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதும்… உதவிக்குத் தந்தையை அழைக்கிறாள் என்பதும் வீரராகவனுடைய பேச்சிலிருந்தே அனைவருக்கும் புரிந்துவிட்டது. ஆனால் தனக்கொரு பிரச்சனை என்றதும் முதலில் கணவனை அழைக்காமல் எதற்குத் தந்தையை அழைக்கிறாள் என்கிற சந்தேகத்தில், அனைவருடைய பார்வையும் கார்முகிலன் மீது படிந்தது.
அந்தத் தருணம் அவனை மிகவும் சங்கடப்படுத்தியது. நெருங்கிய உறவினர்களே என்றாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடைய ஆராய்ச்சி பார்வைக்கு இலக்காகிவிட்டதே என்கிற அவமானம் அவனைக் குன்றச் செய்தது. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் கைப்பேசியைப் பார்ப்பது போல் தலை கவிழ்ந்தவன்… அந்தச் சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க எண்ணி “ஓ… என் போன்ல சிக்னல் இல்ல…” என்றான் முடிந்த அளவு இயல்பாக.
“அட… அதான் மது உனக்கு போன் பண்ணாம அத்தானுக்குப் பண்ணியிருக்கா… நா வேற என்னவோ ஏதோன்னு நெனச்சுட்டேன்…” – கௌசல்யா நிம்மதி பெருமூச்சு விட… அனைவரும் இறுக்கம் தளர்ந்தார்கள்.
மற்றவர்களுக்கு முன் தன்னை இந்த நிலையில் நிறுத்திவிட்ட மனைவியின் மீது ஆத்திரமாக வந்தது அவனுக்கு. தன் கொதிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் “என்ன சொன்னா..? எங்க இருக்காளாம்?” என்று வீரராகவனிடம் விசாரித்தான்.
“விசாலாட்சியம்மன் கோவில்ல இருக்குதாம். ஆட்டோ கிடைக்கல போலருக்கு…”
“பேய் மழை பெய்யுது… எவன் ஆட்டோவை எடுப்பான்… நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்… நீங்க இருங்க…” என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் இரண்டு குடைகளையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
“திருமணத் தினத்தன்று திருவருள்
வேண்டி ஆலயம் சென்றவள்…
தலைவன் நான் வரக் காத்திருந்து – என்
கைபிடித்துச் செல்லவில்லை…!
ஆதவனை மறைத்த கார்முகிலைக்
கண்டு அச்சம் கொண்டவள் – காதல்
கொண்ட இந்த கார்முகிலனை அபயம்
அளிக்க அழைக்கவில்லை…!
பார் இரண்டாய் பிளந்ததோவென
ஐயம்பட வைத்த இடியொலியால்
இடும்பைக் கொண்ட போதும்
துணைவன் எனைத் துணையிருக்க
நீ அழைக்கவில்லை…!
என் பார்வைக்காக நீ ஏங்கவில்லை
உன் தேவை தீர்க்க நான் தேவையில்லை
என் துன்பம் உன்னைத் தாக்கவில்லை
உன் களிப்பிற்கு என் இன்பம்
காரணமில்லை…! வலிக்குதடி…!
Comments are closed here.