Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 10

அத்தியாயம் – 10

மத்தியான உச்சி வெயிலில் சொட்டும் வியர்வையுடன் வீட்டிற்குள் நுழைந்தான் ஜீவன்.

 

“அம்மா…” ஹாலில் நின்றபடி அம்மாவை அழைத்தான்.

 

“என்னப்பா…” என்றபடி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் சிவகாமி.

 

“பத்திரிகை வந்துடுச்சும்மா… இந்தா பாரு…” என்று ஒரு பத்திரிக்கையை எடுத்து தாயிடம் நீட்டினான்.

 

“நல்லா இருக்குப்பா…”

 

“அம்மா… ஒன்னு கவனிச்சியா…? உனக்கு வரப்போற ரெண்டு மருமகள்களுக்குமே புனிதாதான் பேரு… ஹா… ஹா…” சந்தோஷமாக சிரித்தான்.

 

சிவகாமியின் கண்கள் கலங்கின. தவிப்புடன் மகனை பார்த்தாள். “ஜீவா…” என்று அவன் கேசத்தை அன்புடன் கோதினாள்.

 

“ம்மா… எதுக்குமா அழற…? தம்பிக்கு முதல்ல கல்யாணம் ஆனா என்ன குடியா முழுகிட போகுது… இந்த மாசம் அவனுக்கு கல்யாணம். இன்னும் ஆறு மாசமோ இல்ல ஒரு வருஷமோ… அடுத்து எனக்குதானே… அப்புறம் எதுக்கு இப்படி எப்ப பார்த்தாலும் கண்ணீர வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க… போயி வேலைய பாரும்மா…” தனக்கு முன் தம்பிக்கு திருமணம் நடப்பதால்தான் அம்மா இப்படி அடிக்கடி கண்கலங்குகிறாள் என்று நினைத்து தாயை ஆறுதல் படுத்திவிட்டு… பேச்சை மாற்றுவதற்காக “எங்க பாட்டிய காணும்…?” என்று கேட்டான்.

 

அவனுடைய முயற்ச்சியை புரிந்துகொண்டவள் வருத்தத்துடன் மகனை பார்த்துவிட்டு பத்திரிகை கட்டை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

 

ஜீவன் தம்பியின் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான். இரண்டு வாரங்கள் இரண்டு நாட்கள் போல் கழிந்து போய் திருமண நாளும் வந்தது…

 

# # #

 

பட்டாடை உடுத்திய பகட்டான மக்கள் கூட்டம் குழுமியிருந்த அந்த திருமண மண்டபத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. சந்தனம் மற்றும் ரோஜாவின் கலவையான வாசம் சபையெங்கும் நிறைந்திருக்க மணமகன் மணவறையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிர் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஐயர் மணமக்களின் புதிய வாழ்க்கை அத்தியாயம் சுபீட்சமாக அமைய இறைவனை வேண்டி மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.

 

“பொண்ண அழச்சுண்டு வாங்கோ…” ஐயர் குரல் கொடுத்தார். மாமன் மனைவியின் கையை பிடித்தபடி மணமகள் அறையிலிருந்து வெளிப்பட்டு மணவரையை நோக்கி வந்தாள் புனிதா.

 

திருமணம் முடியும் வரை மூத்த மகனின் கண்ணில் மணப்பெண்ணின் பு3கைப்படம் பட்டுவிடக் கூடாது என்று சிவகாமி கவனமாக இருந்ததால் கடைசிவரை ஜீவனுக்கு தம்பிக்கு வரப்போகும் மனைவியின் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாது. அவனுக்கும் அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இல்லை…

 

பரபரப்புடன் திருமண மண்டபத்தில் சுழன்று கொண்டிருந்த ஜீவன் எதார்த்தமாக மணவரை பக்கம் திரும்பும் பொழுது மணமகளாக புனிதா… அவன் தம்பிக்கு அருகில் அமர்ந்தாள்.

 

முதலில் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. ‘பம்கின் என்ன இங்க இருக்கா…!’ என்று குழம்பியவன் முழுதாக ஒரு நிமிடத்திற்கு பிறகுதான் அவள் மணமகள் அலங்காரத்தில் இருப்பதையும்… தன் தம்பிக்கு அருகில் மணவறையில் அமர்வதையும் உணர்ந்தான்.

 

உண்மை நிலவரத்தை உணர்ந்த நொடி… அதிர்ச்சி என்றால் சாதாரண அதிர்ச்சி அல்ல… வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரதிர்ச்சி அவனை தாக்கியது. இதயம் வெடித்து அந்த நொடியே அவன் உயிர் பிரிந்திருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

 

மிகக் கோரமான அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று தெரியாமல்… அடுத்து என்ன என்று யோசிக்க முடியாமல்… மூளை மரத்துபோய்… விழிகள் நிலைகுத்தி… திறந்த வாய் மூடாமல்… பித்தனை போல் நின்று கொண்டிருந்தவனை இரு கரங்கள் அனைத்து கைத்தாங்கலாக மண்டபத்திற்கு வெளியே அழைத்து சென்றது…

 

என்ன ஏது என்று புரியாமல் உடன் வருபவரின் இழுப்புக்கு கட்டுப்பட்டு பைக்கில் ஏறி அமர்ந்தான் ஜீவன். சிறிது நேரத்தில் அவர்கள் வந்த வண்டி ஆட்டோ ஸ்டாண்டை அடைந்தது. அவன் அனிச்சையாக பைக்கிலிருந்து இறங்கி சுற்றி சுற்றி பார்த்தான்.

 

அவனை அங்கு அழைத்துக் கொண்டு வந்த ஆட்டோகார நண்பன் துரை “என்னடா மாப்ள இது…?” என்றான்.

 

“மச்சான்… அங்க… அங்க… பம்கினாடா அது…? இல்லல்ல…” என்றான் ஜீவன் குழம்பி போய்.

 

“விடுடா மாப்ள… இந்த உலகத்துல அவ ஒருத்திதான் பொண்ணா…?”

 

என்ன நடந்தது… எப்படி நடந்தது… என்கிற எந்த விபரமும் தெரியாமல் நண்பனின் முகத்தை வைத்தே அவனுடைய மனநிலையை ஊகித்து அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான் துரை.

 

நண்பனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ஜீவனின் உடல் விறைத்தது… முஷ்ட்டி இறுகியது… முகம் சிவந்தது… நாசி விடைத்தது… கண்கள் கலங்கின… சிவந்திருந்த கண்களை இருக்க மூடி திறந்தான். இப்போது மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆட்டோவிற்கு அருகில் இருந்த கருங்கல்லில் சென்று அமர்ந்தான்.

 

அதே நேரம் திருமண மண்டபத்திலிருந்து இவர்கள் வெளியேறுவதை கவனித்துக் கொண்டிருந்த மற்ற ஆட்டோ ஓட்டுனர்களும் அவர்களை தொடர்ந்து வந்து ஆட்டோ ஸ்டாண்டை அடைந்தார்கள்.

 

“என்ன சொல்றான்…?” என்று புதிதாக அங்கு வந்த நண்பன் முந்தையவனை சைகையில் கேட்டான்.

 

“எதுவும் சொல்லவில்லை…” என்று அவனும் தலையை குறுக்காக ஆட்டி  சைகை காட்டினான்.

 

உடனே இன்னொருவன் தலை குனிந்து அமர்ந்திர்ந்த ஜீவனின் தோளை தொட்டான்.

 

சட்டென நிமிர்ந்த ஜீவன் “ஏண்டா இப்படி பண்ணினா…? எப்படிடா மனசு வந்தது அவளுக்கு…? இதுக்கு அவ என்னை கொன்னே போட்டிருக்கலாமே…! இல்லன்னா சாவுடான்னு சொல்லியிருந்தா நானே செத்து போயிருப்பேனே… எதுக்குடா இப்படி ஒரு துரோகத்தை செஞ்சா…?” என்று மூச்சுவிடாமல் பொரிந்தான்.

 

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வந்து என்று புரியாமல் நண்பர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது அவன் மீண்டும் தன் நெஞ்சை தட்டி காட்டி சொன்னான்…

 

“அவள இங்க வச்சிருந்தேன்டா… குத்திட்டாளே…! என் முதுகுல நல்லா ஆழமா குத்திட்டாளேடா…! வலிக்குதுடா… இங்க வலிக்குது…” என்று பெண்ணை போல் கதறி அழுதான்.

 

“ஏமாந்துட்டேன்டா… ஒரு பொண்ண நம்பி படுகேவலமா ஏமாந்துட்டேன்… என் வாழ்க்கையையே தோத்துட்டேன்டா…” என்று புலம்பினான்.

 

“பத்திரிகை அடிக்கிரதுலேருந்து பந்தி பரிமாறுற வேலை வரைக்கும் எல்லா வேலையும் அவ கல்யாணத்துல நானே பார்த்திருக்கேன் பாரேன்…! ஹா… ஹா… எவ்வளவு பெரிய முட்டாள்டா நானு…” என்று விரக்தியில் சிரித்தான்.

 

“ஒன்பது வருஷம் அவ பின்னாடியே சுத்தினேன்டா… அவளும் சிரிச்சாளே…! அப்புறம் எதுக்குடா மாறுனா…? பணம்… பணத்துக்காகவா… எதுக்குடா…?” என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான்.

 

“டேய்… நீ சம்பாரிக்கல…? டெய்லி ஐநூறு ரூபா சம்பாரிக்கிரியேடா… நான் அந்த காச சம்பாரிக்க மாட்டேனா…? ஓஹோ… அது அமெரிக்கா காசு இல்லைல்ல… மறந்துட்டேன்… நான் ஒரு பைத்தியம்டா… மெண்ட்டல்…  நான்னெல்லாம் எதுக்குடா உயிரோட வாழனும்… செத்து தொலையனும்டா…” என்று ஆவேசமாக பேசிக் கொண்டு எழுந்தவன் சுற்றியிருந்தவர்கள் சமாளிப்பதற்குள், அருகில் இருந்த மரத்தில் மடார் மடார் என்று தலையை மோதிக் கொண்டான்.

 

“ஏய்… ஏய்… என்னடா பண்ற…? வாடா… பிடி… பிடி…” என்று நண்பர்கள் நால்வரும் சத்தம் போட்டுக் கொண்டே அவனை தடுக்க முயன்றார்கள்.

 

அதற்குள் அவன் நான்கைந்து முறை பலமாக மோதிவிட்டான். நெற்றி பிளந்து முகத்தில் ரெத்தம் கசிந்தது…

 

“பயிதியமாடா நீ… முட்டா பயலே…”

 

“அறிவு கெட்டவனே… ஒரு பொண்ணுக்காக இப்படி மண்டைய ஓடச்சுக்கறியே… மூளையை வித்துட்டியாடா…?” என்று ஆளாளுக்கு திட்டியபடி கைக்குட்டையை நீரில் நனைத்து ரெத்தத்தை துடைத்து கட்டு போட்டார்கள்.

 

“வாடா… ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்…”

 

“இல்ல… நா வரல விடு…” என்று கையை பிடித்து இழுத்த நண்பனை உதறினான்.

 

“ஏய்… ரெத்தம் வந்திருக்குடா… ஒரு ஊசி போட்டா வலி இருக்காது… வாடா…” என்று அழைத்தான்.

 

நெற்றியில் கசிவதை விட  அதிகமாக இதயத்தில் ரெத்தம் கசிகிறது… அதை யாரால் எப்படி சரி செய்ய முடியும்…? உடலைவிட உள்ளம் அதிகமாக வலிக்கிறது. அதற்கு எந்த மருத்துவரால் மருந்து கொடுக்க முடியும்…?

 

ஜீவன் தலை நிமிராமல் அமர்ந்திருந்தான். நண்பர்கள் விடாமல் அவனை கட்டாயப்படுத்தினார்கள். சட்டென கோபமாக எழுந்து வேகமாக நடந்தான். மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தார்கள். “நில்லுடா… எங்கடா போற…?” என்று தடுத்தார்கள். ஜீவன் கேட்கவில்லை. வேகமாக நடந்து சென்று அந்த சாலையின் முனையில் இருக்கும் ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தான். “இங்கதானா… சரக்கு வேணும்ன்னு சொல்லியிருக்கக் கூடாதாடா…” என்று நிம்மதி பெருமூச்சுடன் நண்பர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

 

ஜீவன் தன்னோடு சேர்த்து தன் துக்கத்தையும் மறக்கும் வரை தொடர்ந்து குடித்தான். அவனை அளவுக்கு மேல் குடிக்க கூடாது என்று தடுத்த நண்பர்களின் முயற்சி எடுபடவில்லை. ஒரு கட்டத்தில் சுயநினைவிழந்து மேஜையின் மீது கவிழ்ந்தான்

 




Comments are closed here.

You cannot copy content of this page