Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-9

அத்தியாயம் – 9

அடிக்கிற காற்றில்… மழைச்சாரல் கோவில் முன் மண்டபத்தைப் பாதிவரை நனைத்துவிட்டது. மீதியிருந்த இடத்தைப் பிச்சைக்காரர்கள் ஒருபக்கம் ஆக்கிரமித்திருக்க, மறுபக்கத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அங்கே ஒரு மூலையில், ஊதக்காற்று குழந்தையைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகச் சேலைத்தலைப்பை இழுத்துக் குழந்தையை மூடி, தன்னோடு சேர்த்தணைத்துக் குளிரில் நடுங்கியபடி நின்று கொண்டிருந்தாள் மதுமதி.

 

‘தேனியிலிருந்து அப்பா வருவதற்கு… குறைந்தது இன்னும் ஒரு மணிநேரமாவது ஆகும்’ என்று நினைத்தபடி நின்று கொண்டிருந்தவளின் தோளில் அழுத்தமாக ஒரு கை படிந்ததும், அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தாள். கார்முகிலன் தான்…

 

கணவனைக் கண்டதும் அவள் முகத்தில் படர்ந்த நிம்மதி அவனுடைய கடுமையான முகத்தினால் நொடியில் மறைந்தது. “நீங்க… இங்க… எப்படி..?” கோர்வையாகப் பேச முடியாமல் தடுமாறினாள்.

 

அவளுடைய தடுமாற்றத்தைச் சட்டை செய்யாமல், தரையில் இருந்த பூஜைக்கூடையைக் கையிலெடுத்துக் கொண்டவன்… ஒரு குடையை விரித்து அவள் கையில் கொடுத்து “வெளியே வண்டி நிக்குது… வந்து ஏறு…” என்று சொல்லிவிட்டு இன்னொரு குடையை விரித்துக் கொண்டு விறுவிறுவென்று முன்னே நடந்தான். கவனமாக அடியெடுத்து வைத்து அவனைப் பின்தொடர்ந்தாள் மதுமதி.

 

கார் கதவைத் திறந்து அவள் அமர்வதற்கு உதவி செய்தவன், கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு… மறுபக்கம் வந்து அமர்ந்து வண்டியைக் கிளப்பினான். அவன் சாத்திய வேகத்தில் கதவு உடையாமல் இருந்ததே அதிசயம் என்று நினைத்தவள், மெல்ல அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

 

நெரிந்த புருவங்களும்… விடைத்த நாசியுமாக ரோட்டில் பதிந்திருந்த பார்வையைச் சிறிதும் விலக்காமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்க்கவே மதுமதிக்கு அச்சமாக இருந்தது.

 

‘என்னாச்சு..? எதுக்கு இவ்வளவு கோபமா இருக்கான்… நாம இங்க இருக்கது எப்படித் தெரிஞ்சுது..? அப்பாவுக்கு போன் பண்ணினா இவன் எப்படி வந்தான்..?’ என்று மனதில் பல கேள்விகள் குழப்பத்தோடு தோன்றினாலும்… அவனிடம் வாய்விட்டு எதையும் கேட்க முடியாமல் மௌனமாகவே பயணத்தைத் தொடர்ந்தாள்.

 

சிறிதுதூரம் சென்றதுமே பசியோ… தூக்கமோ… குளிரோ… குழந்தை அலறியழ ஆரம்பித்தது. மதுமதி குழந்தையைச் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள். கார்முகிலனுக்குக் கோபத்தில் தாடை இறுகியது. ஆக்ஸிலேட்டரை மிதித்து வண்டியின் வேகத்தை அதிகப்படுத்த… கார் சாலையில் சீறிப் பாய்ந்தது.

 

மாலை ஆறு மணி நள்ளிரவு போல் இருட்டியிருக்க… மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. கணவனுடைய வேகம் மதுமதியை பீதிக்குள்ளாக்கியது.

 

“ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா போங்களேன்…” நடுங்கிக்கொண்டே சொன்னாள். விட்டால் அவளும் குழந்தையோடு சேர்ந்து அழுதுவிடுவாள் போலத் தோன்றியது.

 

அவன் காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு “டையாப்பர் ஈரமா இருக்கான்னு செக் பண்ணு…” என்றான் அதிகாரமாக.

 

குழந்தையைச் சமாதானம் செய்ய வேண்டுமே என்கிற தவிப்பில் அவனுடைய அதிகாரத்தைக் கூட அவள் கண்டுகொள்ளவில்லை. அவசரமாகக் குழந்தையைச் சரி பார்த்தாள். ஈரமாகத்தான் இருந்தது. அதைக் கழட்டிவிட்டு… தாய்ப்பால் புகட்டியதும் அமைதியாகப் பசியாறியபடி கண்ணுறங்கியது. அதன்பிறகு அவன் காரை ஸ்டார்ட் செய்தான். அவர்கள் ஊரைச் சுற்றிக்கொண்டு வீடு வந்து சேர இரவு ஏழு மணியாகிவிட்டது.

 

கார்முகிலனின் கார் மதில்சுவர் கேட்டுக்குள் நுழையும் பொழுதே வீரராகவன் தம்பதியும், தர்மராஜும் போர்டிகோவிலேயே காத்துக் கொண்டிருந்தார்கள். பெற்றோரைப் பார்த்ததும் மதுமதியிடம் ஒரு புத்துணர்ச்சி வந்தது. கணவன் எப்படித் தன்னைத் தேடிச் சரியாக விசாலாட்சியம்மன் கோவிலுக்கு வந்தான் என்பதும் புரிந்துவிட்டது.

 

“அப்பா…” என்றபடியே இறங்கியவள், “தாத்தா… நீங்க எப்ப வந்தீங்க..? ம்மா… எப்படிம்மா இருக்கீங்க?” என்று மகிழ்ச்சியோடு எல்லோரிடமும் சிரித்துப் பேசினாள்.

 

“நாங்கல்லாம் சாயங்காலமே வந்துட்டோம்… நீ எங்க போன இந்த மழையில… அதுவும் குழந்தையை வேற தூக்கிக்கிட்டுப் போயிருக்க?” கௌசல்யா மகளைக் கடிந்து கொண்டு, அவள் கையிலிருந்த பேத்தியை வாங்கினாள்.

 

“கோவிலுக்குப் போனேம்மா… போகும்போது வானம் நல்லாத்தான் இருந்தது… அதுக்குப் பிறகுதான் மழை அடிச்சு ஊத்த ஆரம்பிச்சிடுச்சு…”

 

“சரி சரி…. சாரல்லேயே நிக்காம உள்ள கூட்டிட்டுப் போம்மா…” – தர்மராஜ் அக்கறையோடு அதட்டினார்.

 

கௌசல்யா மகளையும் பேத்தியையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, தர்மராஜ் அவர்களைப் பின்தொடர்ந்தார். மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி மதுமதியை அசத்தியது. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட மேஜையின் மீது கேக் ஒன்று வீற்றிருந்தது.

 

இந்த ஏற்பாடுகளெல்லாம் பெற்றோருடையதாக இருக்கும் என்று நினைத்தவள் “என்னம்மா இதெல்லாம்..?” என்று மகிழ்ச்சி பொங்க சிரித்துக்கொண்டே கேட்டாள்.

 

“முகிலன் தான் உனக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்கணுமென்று சொல்லி எங்களையெல்லாம் வரச் சொன்னான். வந்து பார்த்தா… வீட்ட பூட்டி வச்சு நீ எங்களுக்கு சர்ப்பரைஸ் கொடுத்துட்ட…” – தர்மராஜ் பதில் சொல்லியபடி சோபாவில் அமர்ந்தார்.

 

மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் கணவனின் செயலுக்கான காரணத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய அறிவு அவளுடைய மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடையாக நின்றது. ‘காலையில் வாழ்த்துச் சொல்ல கூட மறந்துவிட்டுச் சென்றவன்… மாலை பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறானே…! என்ன காரணமாக இருக்கும்…!’ என்கிற சிந்தனையில் அவளுடைய சிரிப்பு உதட்டிலேயே உறைந்தது.

 

“நீ போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு டிரஸ் பண்ணிக்கிட்டு வா மது…” என்று சொல்லிவிட்டு கௌசல்யா உறங்கும் குழந்தையைப் படுக்க வைக்க ஹாலை ஒட்டியிருக்கும் படுக்கையறைக்குள் நுழைய… மதுமதி கணவனைத் திரும்பிப் பார்த்தாள். சிரிப்பில்லாத முகத்துடன் வெளியே நின்று மாமனாருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

 

கோபமோ… மகிழ்ச்சியோ… ஆசையோ… தாபமோ… எதுவாக இருந்தாலும் தயங்காமல் வெளிப்படையாகக் கொட்டிவிடும் கணவன் இன்று இவ்வளவு நேரம் அமைதியாகவும் இறுக்கமாகவும் இருப்பது அவளை உறுத்தியது. ‘என்னாச்சு இன்னிக்கு…! எதுக்கு இவ்வளவு கோபமா இருக்கான்…!’ என்கிற சிந்தனையுடனே படியேறி மாடிக்குச் சென்றாள்.

 

படுக்கையறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் ஒரு கவர் இருப்பது தெரிந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அழகிய புடவை ஒன்று உள்ளேயிருந்து நழுவியது. அதை யார் அங்கே வைத்திருக்கக் கூடும் என்று சுலபமாக ஊகித்தவளுக்கு அவன்மீது அன்பு பொங்கியது… ததும்பும் உள்ளத்தோடு கையிலிருந்த சேலையை விரல்களால் வருடினாள். கண்களில் கண்ணீர் நிறைந்ததோடு ‘இதையெல்லாம் நீ காதலோடு தான் செய்கிறாயா..?’ என்கிற கேள்வியும் கூடவே எழுந்தது. கையிலிருந்த சேலையை கவரில் போட்டு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுக் குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

‘பிங்க்’ நிறத்தில் ஒரு சில்க் காட்டன் சேலை உடுத்தி மிதமான அலங்காரத்துடன் மதுமதி கீழே இறங்கி வரும்பொழுது, ஊதா நிற ஜீன்சும்… உடம்பை இறுக்கிப் பிடித்த டைட் டீ-ஷர்ட்டும் அணிந்து கம்பீரமாக நின்று தர்மராஜுடன் பேசிக் கொண்டிருந்தான் கார்முகிலன். அவள் மனம் கணவனின் கம்பீரத்தை ரகசியமாக ரசித்தது.

 

“இதோ… மது கூட வந்துட்டாளே…!” – கௌசல்யாவின் குரலில்… சிரித்த முகமாக மாடிப்படியைத் திரும்பி பார்த்த கார்முகிலனின் முகத்தில் நொடியில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

 

“மது… மாமாவோட சேர்ந்து போய் சாமி கும்பிட்டுட்டு வாம்மா…” – கௌசல்யா கூறினாள்.

 

“சரிம்மா…” என்று தாயிடம் சொன்னவள் கணவனிடம் திரும்பி “வாங்க…” என்று அழைத்தாள்.

 

ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று கொடுத்து ‘நீ போயி புடவையை மாத்திக்கிட்டு வாடி…’ என்று சொல்ல வேண்டும் போல் கட்டுக்கடங்காமல் கிளர்ந்தெழுந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலைக் கைதியாகிவிட்டவன்… அமைதியாக அவளைப் பின்தொடர்ந்தான்.

 

மதுமதி விளக்கேற்றி… கற்பூரம் ஏற்றி சாமிக்குத் தீபாராதனை செய்துவிட்டுக் கணவனுக்குக் காட்டினாள். அவன் தீபத்தை வணங்கி திருநீர் இட்டுக் கொண்ட பிறகு, அவளும் வணங்கிவிட்டுத் திருநீர் குங்குமம் இட்டுக்கொள்ள… இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.

 

“ரெண்டு பேரும் சேர்ந்தே கேக்கை கட் பண்ணுங்க…” – வீரராகவன் சொன்னார்.

 

“இல்லல்ல… மதி… நீயே கட் பண்ணு…” கார்முகிலன் உறுதியாகச் சொன்னான். பிறகு அவள் தான் கேக்கை வெட்டி எல்லோருக்கும் விநியோகித்தாள். குழந்தை விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக உறங்குகிற குழந்தையையும் கொண்டு வந்து மதுமதியின் கையில் கொடுத்த கார்முகிலன்… தானியங்கி கேமராவின் மூலம் எல்லோரோடும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

 

பிறகு இரவு உணவுக்குத் தயார் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் மதுமதி சமையலறைப் பக்கம் செல்லும்பொழுது டைனிங் டேபிளில், ஹோட்டலிலிருந்து வாங்கி வந்திருந்த பதார்த்தங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க… அவள் ஆச்சர்யத்துடன் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள்.

 

“என்ன மது பார்க்கற..? எல்லாம் முகிலன் வரும்போதே வாங்கிட்டு வந்துட்டான்… கொஞ்சம் சூடு பண்ணினா மட்டும் போதும்…” கௌசல்யா பெருமையோடு சொன்னாள்.

 

தன்னுடைய வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துக் கணவன் செயல்பட்டிருப்பது மதுமதியை ஈர்த்தது. மீண்டும் ஒருமுறை கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் இவளைக் கவனிக்காமல் கேமராவில் புகைப்படங்கள் சரியாக வந்திருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

 

அந்த நொடி அவள் மனதில் கணவன் மீது காதல் பொங்கியது. ஆனால் அவனிடம் காதல் துளியும் இல்லையே…! எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வான்… உருகி உருகி உரிமை பாராட்டுவான்… உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்… கடைசியில் நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிடுவான்… பழைய சம்பவங்கள் எல்லாம் சரம் சரமாய் நினைவுக்கு வந்துவிட மதுமதியின் உள்ளம் கசந்தது. நிலையில்லா பாசம் கொண்ட தன் கணவனை எண்ணி அழுதது. தண்ணீரைக் குடித்து அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

மனைவியின் மனப்போராட்டத்தைப் புரிந்து கொள்ளாத கார்முகிலனோ… முன்பு செய்த தவறை மனதில் வைத்துக்கொண்டு தன்னிடமிருந்து விலகிக்கொண்டே இருக்கிறாள் என்று நினைத்தான். விலகிச் செல்கிறவளைத் தடுத்து நிறுத்தி பரிசு கொடுக்க அவன் விரும்பவில்லை. வாங்கி வந்த மோதிரம் சட்டைப் பையிலேயே பத்திரமாக இருக்க… அவன் மனம் கனத்துப் போனது… குடும்பத்தாருக்கு இன்பமாகக் கழிந்த திருமணநாள் விழா, தம்பதியருக்கு உறுத்தலும் நெருடலுமாகவே கழிந்தது.

 

 




Comments are closed here.

You cannot copy content of this page