Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 11

அத்தியாயம் – 11

இளைய மகனின் திருமணம் முடிந்ததும் அரக்க பறக்க மூத்த மகனை தேடி அவன் எப்பொழுதும் வரும் ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தாள் சிவகாமி.

 

“வாங்கம்மா… என்ன இந்த நேரத்துல நீங்களும் இங்க வந்துட்டிங்க..?”

 

“துரையோடு ஜீவா வந்ததை பார்த்தேன். அதான் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன். எங்கப்பா போனாங்க…?”

 

“ஜீவா இப்ப துரை வீட்டுலதான் இருக்கான்ம்மா… தூங்கறான்…”

 

“தூங்குறானா…? என்னப்பா இந்த நேரத்துல?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா…”

 

“எதையும் மறைக்காம சொல்லுப்பா… என் மகனுக்கு ஒன்னும் இல்லையே…!” தாய் பதறினாள்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… அவன் கொஞ்சம் அப்ஸ்சட்டா இருந்தான்… அதான் கொஞ்சம்… வந்து…”

“சொல்லுப்பா… என்ன…?”

 

“கொஞ்சம் தண்ணி சாப்பிட்டுவிட்டு படுத்திருக்கான்ம்மா… இப்போ துரை அவன் கூடத்தான் இருக்கான்…” என்று தயக்கத்துடன் சொன்னான்.

 

‘உங்களால்தான்டா பாவிகளா இன்று என் மகன் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டான்…’ என்று நினைத்துக் கொண்டு “சரிப்பா… துரையோட போன் நம்பர் இருந்தா கொடு…” என்று கேட்டு வாங்கி அவனுக்கு போன் செய்து பேசினாள்.

 

தன் மகனை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவனை தனியாக எங்கும் விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுவிட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்றாள்.

 

அதற்கு பிறகு மூத்த மகனை பற்றி நினைக்கக் கூட நேரமில்லாமல் திருமண வேலைகள் சிவகாமியின் கழுத்தை நெறித்தன. மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக துரைக்கு போன் செய்து மகனை பற்றி விசாரித்தாள்.

 

“ஹலோ… தம்பி… ஜீவா எப்படி இருக்கான்…? எழுந்துட்டானா…?”

 

“இல்லம்மா… இப்ப ஜீவா என்.எம் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கான். நைட் எல்லாம் பயங்கர காச்சல்.” என்று விபரம் சொன்னான் துரை.

சிவகாமிக்கு பதட்டம் பற்றிக் கொண்டது. மணமக்களை கவனித்து சம்மந்தி வீட்டிற்கு விருந்துக்கு அனுப்பி வைத்துவிட்டு… மூத்த மகனை தேடி ஓடினாள்.

 

மருத்துவமனையில் ஜீவன் தலையில் பெரிய கட்டுடன் மயக்கத்தில் கண் மூடி சோர்வாக படுத்திருந்தான். ஒரே நாளில் ஆள் உருமாறி போயிருந்தான். பெற்றவளின் வயிறு எரிந்தது. வேதனையுடன் “மகனே…!” என்று அவன் காலடியில் அமர்ந்து கதறி கண்ணீர் விட்டாள்.

 

துரைதான் சிவகாமியை சமாதானம் செய்து ஆறுதல் படுத்தினான். ஜீவனுக்கு எப்படி அடிபட்டது… என்ன நடந்தது என்று எல்லா விபரங்களையும் சொன்னான். பிரகாஷ் மற்றும் புனிதாவின் திருமணம் நடந்த பின்னணியையும் கேட்டு தெரிந்து கொண்டான். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜீவன் கண் விழித்தான்.

 

“தம்பி… ஜீவா… அம்மாவ பாருப்பா…” சிவகாமி மகனை நெருங்கி கண்ணீருடன்  குரல் கொடுத்தாள்.

 

ஜீவன் தாயின் முகத்தை பார்த்தான். “நீ கூட எனக்கு துரோகம் பண்ணிட்டியேம்மா… பெற்றவங்களுக்கு கூட பணம்படைத்த பிள்ளையைத்தான் பிடிக்கும்ன்னு காட்டிட்டியேம்மா…” வெறுப்புடன் சொன்னான்.

 

“ஐயோ ஜீவா… அப்படி சொல்லாதடா… அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தற சக்தி எனக்கு இல்லைடா மகனே…! எல்லாம் என்னை மீறி நடந்து முடிஞ்சிடிச்சு… ரெண்டு பிள்ளைகளுக்கு நடுவுல நின்னுகிட்டு நான் என்னடா செய்வேன்… மன்னிச்சுடுடா ஜீவா… என்னை மன்னிச்சுடு…” என்று கண்ணீர் விட்டாள்.

 

“அவளை பற்றி பிரகாஷ்க்கு தெரியுமா…?” சோர்வுடன் கேட்டான் ஜீவன்.

 

“தெரியாதுப்பா… அவன் என்னை பேசவே விடலடா… அவனே எல்லா முடிவையும் எடுத்துட்டான். நான் என்னடா செய்வேன் ஜீவா… அம்மாவ மன்னிச்சுடுடா…” என்று புலம்பி அழுதாள்.

 

தாயின் புலம்பலுக்கும் அழுகைக்கும் மௌனத்தையே பதிலாக கொடுத்துவிட்டு மகன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். மூடிய விழிகளின் வழியே கண்ணீர் கசிந்தது.

 

# # #

 

அன்று முழுக்க ஜீவன் மருத்துவமனையில்தான் இருந்தான். மாலை ரௌண்ட்ஸ் வந்த மருத்துவர் ஜீவனை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று சொல்லிவிட்டதால் சிவகாமி கட்டாயப்படுத்தி மகனை வீட்டிற்கு அழைத்து சென்றாள். அன்று புனிதா கணவனுடன் தாய் வீட்டில் தங்கிவிட்டதால் ஜீவன் அவளை சந்திக்கவில்லை. ஆனாலும் அவனுடைய உடலும் மனமும் பற்றி எரிந்து கொண்டுதான் இருந்தது.

 

‘பாவி… ராட்சசி… எனக்கு துரோகம் பண்ணிட்டு என் வீட்டுக்கே மருமகளா வந்துட்டியேடி…! உன்னை கொலையே பண்ணினாலும் என் மனசு ஆராதுடி கிராதகி…’

 

‘உருகி உருகி பேசுவியேடி…! உரிமை கொண்டாடுவியே…! வாய் தவறி கூட வேற பொண்ணுங்களை பற்றி பேச விடமாட்டியே…! எல்லாமே நடிப்பா…! எவ்வளவு தத்ரூபமா நடிச்சு என்னை ஏமாத்திட்டடி நீ…! இத்தனை நாளும் என்கிட்டே நடிச்சுட்டு இனி என் தம்பிகிட்ட நடிக்க போறியா…?’

 

‘ஐயோ… என்னை மாதிரியே என் தம்பியும் உன்கிட்ட ஏமாந்துட்டானே…! எல்லாம் உன்னாலதான்டி… உன்னை கொள்ளாம விடமாட்டேன்டி… மோசக்காரி…’

 

அவன் மனம் இடைவிடாமல் அவள் நினைவுகளையே அசைபோட்டது. அவனால் நொடி பொழுது கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. துரையை கைபேசியில் அழைத்து வீட்டிற்கு வர சொன்னான். வரும் பொழுதே அவனுக்கு தேவையானதையும் வாங்கிக் கொண்டு வர சொன்னான்.

 

துரை வீட்டிற்கு வந்துவிட்டு சென்ற பிறகு இரவு ஒன்பது மணிக்கு மகனுக்கு பால் கொண்டு சென்ற சிவகாமிக்கு வித்தியாசம் தெரிந்தது. அவனுடைய விழிகள் சிவந்திருந்தன. அவன் பேசும் பொழுது மதுவின் நெடி நாசியை துளைத்தது.

 

ஜீவன் இதுவரை எத்தனையோ முறை போதையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறான். ஆனால் ஒருமுறை கூட வீட்டிற்குள் மதுவை கொண்டு வந்ததில்லை. இன்று அதுவும் நடந்துவிட்டது.

 

அதிர்ந்து போய் கையில் பால் தம்ளருடன் நின்று கொண்டிருந்த தாயிடம் கத்தினான்….

 

“ன்ன…? பால் கொண்டு வந்தியா…? ச…ரிதான்… உம்மொவன் நே…த்தே செத்துட்டான். நீ… இன்னைக்கு பால் ஊ…த்திட்டு போ… ஆ…” என்று போதையில் குளறி பேசியபடி வாயை திறந்து காட்டினான்.

 

எப்பொழுதும் குடித்துவிட்டு வந்தால் அலம்பல் செய்யாமல் படுத்து உறங்கிவிடுவான். ஆனால் இன்று அவனுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. சிவகாமி பயந்து போய் “ஜீவா… அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா… இந்தா கைல வாங்கி குடி” என்று சமாதானமாக பேச முயன்றாள்.

 

“யாய்…! கைய விடு… கைய விடு மொதல்ல… நேத்தே எம் மனச கொன்னுட்ட… இப்ப… என்னை முழுசா கொன்னுட முடிவு பண்ணிட்டியா…? என்ன யா…ருன்னு நெனச்ச…? ஜீவா… அவ்வளவு சீக்கிரம் ஏமாற மாட்டேன்… சொல்லு… இதுல என்ன கலந்துருக்க…? வெஷம் கலந்துருக்கியா… சொல்லு… சொல்லுங்கறேன்ல…” என்று சிவகாமியின் கையிலிருந்த டம்ளரை தட்டிவிட்டான்.

 

“ஜீவா… நான் உன்னோட அம்மாடா… பெத்த தாய்கிட்ட பேசுற மாதிரியா நீ பேசுற? என்னடா ஆச்சு உனக்கு…?”

 

“தாயா…? ஹா… ஹா… பே…ய்…! நீ என்ன பெத்த பேய்…! பணப்…பேய்… பெத்த மகனுக்கே துரோகம் பண்ணிட்டியே… நீயெல்லாம் ஒரு தாயா…? எங்க அவ…? புனீனீனீனீனீ….தா….! எனக்கு துரோகம் பண்ணிட்டு இந்த வீட்டுல வாழ்ந்துடுவாளா…?” என்று ஆவேசமாக கத்திக் கொண்டு கூடத்திற்கு வந்து பிரகாஷின் அறைக்குள் தள்ளாட்டத்துடன் நுழைந்தான்.

 

“டேய்… டேய்… டேய்… நில்லுடா… அவ இங்க இல்லடா… வெளியே வா ஜீவா…” என்று அவனை அந்த அறையிலிருந்து சிவகாமி வெளியே தள்ளிக் கொண்டு வர பாட்டி அவசரமாக வாசல் கதவை சாத்தி தாழ் போட்டுவிட்டு வந்தார்கள்.

 

வீட்டில் இருந்த சில உறவினர்கள் “என்ன இது…? ஜீவா என்ன சொல்றான்…?” என்று முனுமுனுக்க ஆரம்பிக்க “அவன் போதையில உளர்றான். நீங்க எல்லாரும் போயி படுங்க… இல்லன்னா உங்களுகிட்ட சண்டைக்கு மண்டிடுவான்…” என்று சொல்லி அனைவரையும் பாட்டி அவரவர் அறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

 

“பெரிய வீடா கட்டினதுக்கு ஒரு புண்ணியம் கெடச்சு போயிட்டு…” என்று புலம்பிக் கொண்டே வந்து பேரனிடம் அதட்டினார்கள்.

“டேய்… என்னடா இது நாடகம்…? பேசாம ஒன்னோட ரூமுக்கு போ…”

 

“பாட்டி… பாட்டி… நா என்ன பாவம் பண்ணே(ன்) பாட்டி… அவ என்ன ஏமாத்திட்டா பாட்டி…” என்று உளறிக் கொண்டே அழுதான். வியர்வையும் கண்ணீரும் அவன் சட்டையை நனைத்தது.

 

அவனை அதட்டி இழுத்து சென்று அவனுடைய அறையில் படுக்க வைத்துவிட்டு வந்து மகளிடம் விபரம் கேட்டார் பாட்டி. சிவகாமியால் எதையும் மறைக்க முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க திணறிப் போய் ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டு தாயிடம் ஆதி முதல் அனைத்தையும் கொட்டிவிட்டாள்.

 

“பெரியவனுக்கும் அந்த பொண்ணுக்கும் பொருத்தமே இல்லம்மா… காதலிச்சதெல்லாம் வயசு கோளாறுன்னு தெளிவா சொல்லுறா… அதோடு அவ படிச்சவ… இவனை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டா… சின்னவனுக்கும் இந்த வருஷம் கல்யாணம் செய்யாம அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது… அவனும் இவளை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… சரி… அண்ணனுக்குதான் நெனச்ச வாழ்க்கை அமையல… தம்பியாவது வாழ்ந்துட்டு போறானேன்னு நான் அமைதியா இருந்துட்டேன்…”

 

“ஒரு குடும்பத்துக்குள்ள ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துகிட்டு எப்படிடி இதுங்க ரெண்டுக்கும் பழச நெனைக்காம இருக்க முடியும்…! இதுங்க சமாச்சாரம் சின்னவனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் யோசிச்சியா…?” பாட்டி கவலையுடன் கேட்டார்.

 

“கல்யாணம் முடிஞ்ச கையோட சின்னவன் வெளிநாட்டுக்கு போயிடுவானேன்னு நெனச்சேன்ம்மா… இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவே இல்லையே… என்ன செய்ய போறேன்னு தெரியலையே…!” என்று சிவகாமி தாயிடம் புலம்பினாள்.

 

மகள் பெரிய சிக்கலை குடும்பத்திற்குள் நுழைய விட்டுவிட்டாள் என்பதை புரிந்து கொண்ட அந்த மூதாட்டியின் மனமும் கலங்கியது.




Comments are closed here.

You cannot copy content of this page