Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-10

அத்தியாயம் – 10

கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை

 

மான்விழி தனக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை விதியே என்று வாழ்ந்துக் கொண்டிருந்தாள். அடாவடித்தனமாகத் திருமணம் செய்து கொண்டாலும் அதன்பிறகு முடிந்த அளவு அனுசரணையாக நடந்து கொண்டான் ருத்ரன். அதேசமயம் அவ்வப்போது மனைவியின் அட்டகாசங்களை அதட்டி அடக்கவும் தயங்கமாட்டான்.

 

அவள் தன் குடும்பத்தாரோடு ஒட்டாமல் இருப்பதைக் கவனித்துத் தாயிடமும் அண்ணியிடமும் சொல்லி அவளைத் தனிமையில் விடாமல் இயல்பாகப் பேசி குடும்பத்தின் சிறு பொறுப்புகளை ஒப்படைக்கச் சொன்னான். அதன்மூலம் அவளையும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக உணர வைத்தான்.

 

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவளைச் சீண்டி விளையாடவும் தவறமாட்டான். அவன் இயல்பாகவும் அவள் வேறுவழியின்றியும் இரவு நேரத்தை ஒரே அறையில் கழித்தார்கள். ஒரு மாதம் கழிந்துவிட்ட பிறகு ஒரு நாள் புதிதாக ஒரு பிரச்சனைக் கிளம்பியது.

 

“மான்விழி… கோவிலூர்ல அப்பாவோட தங்கச்சி இருக்காங்கல்ல… பார்வதி அத்த… அவங்க வீட்டுக்கு நம்மள விருந்துக்குக் கூப்பிட்டுருக்காங்க… நாம போகணும். ரெடியாயிடு…” அன்று காலை உணவின் போது ருத்ரன் மனைவியிடம் சொன்னான்.

 

“கோவிலூருக்கா… நா வரல… நீங்க மட்டும் போயிட்டு வாங்க…”

 

“நம்ம கல்யாணத்துக்கு விருந்து குடுக்கக் கூப்பிட்டுருக்காங்க… நா மட்டும் எப்படிப் போறது…?”

 

“நாந்தான் வரலன்னு சொல்றேன்ல… ”

 

“ப்ச்… நா எது சொன்னாலும் எதிர்ப்புச் சொல்லணுமா…? சும்மா என்ன சீண்டாம ரெடியாயிடு…” அவன் எரிச்சலுடன் சொன்னான்.

 

“முடியாது… முடியாது… முடியாது… நான் எங்கயும் வர மாட்டேன்…”

 

“எதுக்கு வரமாட்டேன்னு சொல்ற…?” அவன் விளக்கம் கேட்டான்.

 

“நீங்க எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரமாட்டேன்னு சொன்னப்ப நான் காரணம் கேட்டேனா…?” அவள் குத்தலாகப் பேசினாள்.

 

“ஓஹோ… அதுதான் விஷயமா… இங்க பாரு… உங்கப்பாவுக்கும் எனக்கும் ஒரு டீலிங் பெண்டிங்ல இருக்கு. அது நல்லபடியா முடிஞ்சபிறகு நாங்க ரெண்டுபேரும் ராசியாயிடுவோம். இதுல நீ குறுக்க வராம இருந்தா உனக்கு நல்லது. அரை மணிநேரத்துலத் திரும்ப வர்றேன். ரெடியா இரு…” என்று உத்தரவிட்டுவிட்டு வெளியேறினான்.

 

‘ஆவுன்னா இந்த மிரட்டலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல… ஆளையும் மூஞ்சியும் பாரு… சரியான கொரங்கு மூஞ்சி… வெவ்வே…’ என்று அவனுக்கு முதுகுக்குப் பின்னால் பழிப்புக் காட்டியவள் ‘ஆமா.. அது என்ன அப்பாவுக்கும் இவனுக்கும் டீலிங்…! கல்யாணத்தன்னைக்குக் கூட இதே மாதிரி ஏதோ சொன்னானே…! அப்பாகிட்ட கேட்டப்ப மழுப்பலா ஏதோ சொன்னாரே…! சாயங்காலம் போன் பண்ணி விபரமா கேட்கணும்…’ என்று திட்டமிட்டுக் கொண்டே கோவிலூருக்குத் தயாரானாள்.

###

 

முதல்முறையாக ருத்ரன் மனைவியைத் தன் புல்லெட்டில் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். காற்றின் வேகத்தில் கலைந்து அவன் பின்னங்கழுத்தை குறுகுறுக்க வைக்கும் அவளுடைய கேசத்தின் வருடல், ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது. புத்தம் புதுப் பட்டுப்புடவையின் வாசமும், தலையில் சூட்டியிருந்த மல்லிகையின் வாசமும் அவன் மூளையைக் கிறங்கடித்தது.

 

தெருவில் சில்லுக்கோடு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் முதல், வாசலில் அமர்ந்து ஊர் கதைப் பேசிக்கொண்டே வெற்றிலைப் பாக்கை மென்று கொண்டிருந்த கிழவிகள் வரை… கிரௌண்டில் கிட்டி பில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தைகள் முதல், ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து அரட்டையடித்தபடி துண்டு பீடியை ஊதிக் கொண்டிருந்த கிழவன்கள் வரை அனைவரும் ஊர்வலத்தை வேடிக்கைப் பார்ப்பதுபோல் தங்களை வேடிக்கைப் பார்த்ததை ருத்ரன் உல்லாசமாக அனுபவிக்க மான்விழியோ அவஸ்த்தையுடன் நெளிந்தாள்.

 

“இது என்ன…! இந்த ஜனங்க இப்படிக் காணாததக் கண்ட மாதிரி வெறிக்குதுங்களே…!” பின் இருக்கையில் அமர்ந்தபடி அவள் முணுமுணுப்பது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

 

“டெய்லி இந்தக் காட்சியக் கண்டா எதுக்கு இப்படிக் காணாததக் கண்ட மாதிரி வெறிக்கப் போறாங்க… உன்ன இன்னிக்கு ஒருநாள் வெளியே கெளப்பிக் கொண்டு வரவே எனக்கு மூச்சுமுட்டிப் போச்சு… இதுல தினமும் எங்கிருந்து கூட்டிட்டு வர்றது…?” அவன் அவளை வம்புக்கிழுத்தான்.

 

“ம்க்கும்… மில்ட்ரி ஆபீசர் மாதிரி எப்பவும் மெரட்டிட்டே இருக்கவரோட தினமும் வெளியே வந்துட்டாலும்… வெளங்கிடும்… கொஞ்சமாவது அன்பு… பாசம்னா என்னன்னு தெரிஞ்சிருக்கணும்…” அவள் நொடித்துக் கொண்டாள்.

 

“ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும்… பாடற மாட்டப் பாடிக் கறக்கணும்… மெரட்டலன்னா உன்கிட்ட வேலைக்காக மாட்டேங்குது… என்ன பண்ணச் சொல்ற…?”

 

“ஒன்னும் பண்ண வேண்டாம்… ரோட்டப் பாத்து வண்டிய ஓட்டுங்க…”

 

“அதெல்லாம் தானா ஓடும்… நீ சும்மா வெடக்கோழி கொழம்புல கொதிக்கிற மாதிரி கொதிக்காம வா…”

 

“வெடக்கோழியா…! என்ன நீங்க… மொதல்ல மாடுன்னிங்க… இப்ப கோழிங்கறிங்க… என்ன நெனச்சுகிட்டு இருக்கீங்க உங்க மனசுல…”

 

“மாட்டையும் நெனக்கல கோழியையும் நெனைக்கல… மானத்தான் நெனச்சுட்டு இருக்கேன்…” அவன் குறும்பாகச் சொல்ல, கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

 

‘என்ன ஆச்சு இவனுக்கு இன்னிக்கு… வசனமெல்லாம் எடுத்து விடறான்…!’ அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு பழையகால மாடிவீட்டின் வாசலில் அவன் வண்டியை நிறுத்தினான்.

###

 

பார்வதி அத்தைக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருந்தார்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகன் பிழைப்புத் தேடி வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதால் வீட்டில் மருமகளும் மாமியாரும் மட்டும் ஒரு வயது குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்று ருத்ரன் மனைவியுடன் விருந்துண்ண வருவது தெரிந்து, மாமியார் வீட்டிலிருந்த பெண்கள் தாய்வீட்டிற்கு வந்திருந்தார்கள் அத்தானையும் அத்தான் மனைவியையும் வரவேற்க.

 

புல்லெட் சத்தம் கேட்டு பின்கட்டிலிருந்து ஓடிவந்த பார்வதி அத்தையின் மகள்களும் குழந்தைகளும்,

 

“வாங்க… வாங்க… வாங்க…” என்று விருந்தாளிகளைப் பலமாக வரவேற்றார்கள். சீட்டு விளையாடிக் கொண்டிருந்த அத்தையின் மருமகன்களும் விளையாட்டை விட்டுவிட்டு வந்திருந்தவர்களை முறையாக வரவேற்றார்கள்.

 

உடல் பருமனால் சிரமப்பட்டு நடந்து வந்த அத்தையும் தம்பதிகளை இன்முகத்துடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். மணமக்கள் வீட்டிற்குள் வந்த பிறகு இடுப்பில் குழந்தையுடன் உள்ளேயிருந்து வெளிப்பட்ட அந்த வீட்டு மருமகள் மரியாதையுடன் வரவேற்றாள்.

 

ருத்ரன் அவர்களுக்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களையும், இனிப்பு மற்றும் பழவகைகளையும் மான்விழி பார்வதி அத்தையிடம் கொடுத்தாள்.

 

“எதுக்கும்மா இதெல்லாம்…” என்று சம்பிரதாயமாகச் சொல்லிவிட்டு பெற்றுக் கொண்டார் அத்தை.

 

அந்த வீட்டுப் பெண்கள் அனைவருக்கும் மான்விழியை மிகவும் பிடித்துப் போயிற்று… அவர்கள் கபடமில்லாமல் பழகுவது இவளுக்கும் எளிதாக இருந்தது.

 

ஹாலில் அமர்ந்து ஆண்களுடன் கதையளந்து கொண்டிருந்த ருத்ரனின் சிந்தனையைக் கலகலவென உள்ளேயிருந்து வரும் பெண்களின் சிரிப்புச் சத்தம் ஈர்த்துக் கொண்டே இருந்தது. லேசாகத் தலையைத் திருப்பி உள்ளே எட்டிப் பார்த்தான். மான்விழி தன் வயதையொத்தப் பெண்களுடன் மலர்ந்த முகத்துடன் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.

 

‘இவ்வளவு அழகா கூட உனக்குச் சிரிக்கத் தெரியுமா…!’ என்று நினைத்தவன், அதன்பிறகு அங்கிருப்பவர்களுக்குத் தெரியாமல் அடிக்கடி மனைவியை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான்.

 

இவ்வளவு நாளும் அவன் கண்ணில்படாத அவளுடைய வசீகரச் சிரிப்பு இன்று அவனைக் கட்டிப்போட்டது.

 

‘அழகிதான்…’ என்று பெருமைபட்டுக் கொண்டான்.

 

அசைவ உணவை வெளுத்து வாங்கினார்கள். பீடாவும் சோடாவும் தேவைப்பட்டவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆண்கள் சீட்டு விளையாடினார்கள். பெண்கள் தோட்டத்தில் பறித்த பூவைத் தொடுத்தபடி ஊர் கதை அளந்தார்கள். பிறகு அனைவரும் அத்தை வீட்டுக் குலதெய்வத்தைக் கும்பிடச் செல்லும்போது தோப்பிற்குச் சென்று இளநீர் குடித்தார்கள்.

 

இன்பமாகக் கழிந்த அந்த நாளில் இன்னொரு முக்கியச் சமாச்சாரம்… புதுமணத் தம்பதிகளை அத்தை மகள்கள் பயங்கரமாகக் கேலி செய்துவிட்டார்கள். மான்விழி நாணத்தால் முகம் சிவக்க, ருத்ரனோ உலகஅதிசயத்தைப் பார்ப்பதுபோல் அவளது முகசிவப்பைப் பார்த்து வைத்தான். அவனுடைய பருகும் பார்வை மேலும் அவளை நாணமடையச் செய்ய, தலைக் கவிழ்ந்துக் கொண்டாள்.

 

‘பார்வையப் பாரு… முழிய நோண்டணும்…’ என்று அவள் உள்ளுக்குள் கருவினாலும்… அவளுடைய சம்மதத்தை எதிர்பார்க்காமல் மனம் அவனுடைய பார்வையை ரசித்துத் தொலைத்தது.

 

பொழுது சாய்ந்ததும் அனைவரிடமும் விடைபெற்று வீடு திரும்பும் பொழுது… “அப்படி என்ன கெக்கபுக்கன்னு சிரிப்பு அங்க…?” விளையாட்டாகக் கேட்டான்.

 

“ஏன் சிரிக்கக் கூடத் தடை உத்தரவா…?” வேண்டுமென்றே எப்பொழுதும் போல் அவனை எதிர்கேள்விக் கேட்டாள்.

 

“கோவிலூர்ல சிரிக்கறதுக்காகவே சோலையூர்ல வாய்ல ஜிப் போட்டு வச்சிருந்தியா…? இங்க சிரிச்ச சிரிப்புலக் கொஞ்சமாவது அங்கையும் சிரிக்கலாம்ல…” ஆவலுடன் கேட்டவனுக்கு நறுக்கென்று பதில் சொன்னாள்.

 

“நல்ல மனுஷங்களப் பார்த்தா சந்தோஷம் வரும்… சந்தோஷம் வந்தா சிரிப்பு தானா வரும்… அங்கதான் ஒன்னுக்கும் வழியில்லையே…”

 

கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை என்பது அவளுக்குப் புரியவில்லை. அவன் அமைதியாகிவிட்டான். இவ்வளவு நேரமும் சிரிப்பைச் சுமந்து கொண்டிருந்த அவன் முகம் சட்டெனச் சிறுத்துவிட்டதை புல்லெட்டின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மான்விழியால் உணரமுடிந்தது.

 

அதன்பிறகு இருவருமே எதுவும் பேசவில்லை. அவன் மான்விழியை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு களத்துக்குப் போவதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அன்றிரவு கூட வயலிலேயே தங்கிவிட்டான்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Hi mam plz upload nxt gud v r expecting a lot

You cannot copy content of this page