மயக்கும் மான்விழி-9
4472
0
அத்தியாயம் – 9
“அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால்
அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்“
அன்று காலை ருத்ரன் அவனுடைய அறையிலிருந்து கீழே வரும் பொழுது சிதம்பரம் மற்றும் அவரது பங்காளிகள் நான்கு பேரும் அவர்கள் குடும்பத்திலிருந்து மான்விழியின் தாயுடன் சேர்த்து மூன்று பெண்களும் வந்திருந்தார்கள்.
அவர்களை வரவேற்று முகமன் விசாரித்தான். பெண்கள் மூவரும் வைதேகியுடன் மான்விழியைத் தேடி உள்ளே சென்றுவிட, ஹாலில் அமர்ந்திருந்த ஆண்களை “வாங்க… சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்…” என்று அழைத்தான்.
“அதுக்கென்ன மாப்ள… இது நம்ம வீடு… எப்ப வேணுமுன்னாலும் சாப்டலாம்… ஆனா இன்னைக்கு உங்கள மறுவீட்டு விருந்துக்கு அழைக்க வந்திருக்கோம். உங்களுக்கும் மானுக்கும் இன்னைக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு…” சிதம்பரம் கூறினார்.
“அப்டியா…? என்னுகிட்டே யாரும் இதப் பத்திச் சொல்லவே இல்லையே…” அவன் வியப்பாகக் கேட்டான்.
“நேத்தே பெரியாத்தாட்ட சொல்லிட்டுப் போனேனே…!” சிதம்பரம் விளக்கம் கொடுத்தார்.
“என்ன ஆச்சி இதெல்லாம்…” பாட்டியைப் பார்த்துக் கடுப்படித்தான்.
“அட ஆமா ராசா… நாந்தான் சொல்ல மறந்துட்டேன்… சரி அதுனால என்ன… மானு கெளம்பித்தான் இருக்கு… நீயும் கெளம்பு…” இலகுவாகச் சொன்னார்கள்.
“ப்ச்… என்ன கேக்காம எதுக்கு இந்த ஏற்பாடெல்லாம் செய்றிங்க…?” அவன் கோபத்துடன் முறைத்தான்.
“என்ன ராசா இது…? கல்யாணம்னா மறுவீட்டு விருந்து இருக்கத்தானே செய்யும்… இதுல என்னாத்த நாங்க புதுசா ஏற்பாடு செஞ்சுப்புட்டோம்…” என்று அதட்டினார்.
அவன் பாட்டியை முறைத்துப் பார்த்துவிட்டு வேகமாக டைனிங் ஹாலுக்குள் சென்றான். வந்திருந்தவர்கள் குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த போது பாட்டி பதட்டத்துடன் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
“சாப்பாடு எடுத்து வைம்மா…” அவன் டைனிங் டேபிளில் அமர்ந்தபடித் தாயிடம் சொன்னான்.
“தம்பி… பெரியவங்க சொல்றதக் கொஞ்சம் கேளுப்பா…” என்று வைதேகி ஆரம்பிக்க அவன்,
“மான்விழி…” என்று சத்தமாக அழைத்தான்.
உள்ளறையில் தாய் மற்றும் சித்திகளுடன் பேசிக் கொண்டிருந்த மான்விழி ருத்ரனின் அழைப்பைக் கவனித்தும் அலட்சியமாக அமர்ந்திருந்தாள்.
“மானு… மாப்ள உன்ன கூப்பிட்றாரு… போயி என்னன்னு கேளும்மா…” என்கிற தாயின் சொல்லைத் தட்ட முடியாமல் எழுந்து வந்தாள்.
“சாப்பாடு எடுத்து வை…” என்றான் அதிகாரமாக. மான்விழி மறு பேச்சின்றி அவனுக்கு உணவைப் பரிமாறினாள். வைதேகி கையைப் பிசைந்தபடி மாமியாரைப் பார்த்தாள்.
“எதுக்குச் சாமி இம்புட்டுக் கோவம்…? பாட்டி சமாதானம் செய்ய முயன்றார்.
“என்னைக் கேக்காம எது செஞ்சாலும் நா இப்படித்தான் நடந்துக்குவேன்…”
உணவு பரிமாறியபடி இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மான்விழிக்குக் காதில் புகையே வந்தது. ‘எவ்வளவு திமிர்… இவனைக் கேட்காமல் ஒன்றும் செய்யக் கூடாதாம்… அதுவே இவன் மட்டும் ஒரு பெண்ணுக்கு அவளுடைய சம்மதமே இல்லாமல் தாலியே கட்டுவானாம்…! எந்த ஊர் ஞாயம் இது….?’ அவள் கருவி கொண்டிருக்கும் போதே இவன் நிதானமாகக் காலை உணவை முடித்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றான்.
சிதம்பரம், பாட்டி சொல்லும் சமாதானத்தில் திருப்தியடையாமல் வாதாடிக் கொண்டிருந்தார். பீமனும் தேவனும் அந்த விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிதம்பரத்துடன் வந்தவர்கள் தங்களுக்குள் எதையோ பேசியபடி அமர்ந்திருந்தார்கள். அனைவரையும் நிதானமாகப் பார்வையால் ஒரு வட்டமடித்தவன் கடைசியாக சிதம்பரத்தைப் பார்த்து,
“மாமா… மேல வாங்க… பேசலாம்…” சொல்லிவிட்டு மாடியை நோக்கி நடந்தான். அவரும் அவன் பின்னால் சென்றார்.
# # #
“பாருங்க மாமா… நா சுத்தி வளச்சுப் பேச விரும்பல…. நான் எதுக்கு மான்விழியக் கல்யாணம் பண்ணினேனோ அது இன்னும் நடக்கல… அதுவரைக்கும் நீங்க என்னுகிட்டேருந்து எதிர்பார்க்கிறது எதுவும் நடக்காது… சீர்வரிச எதுவும் இங்க வரக்கூடாதுன்னு சொன்னப்பவே புரிஞ்சுக்கிட்டிருப்பிங்கன்னு நெனச்சேன்… வெளிப்படையா சொல்ல வச்சுட்டிங்க…” என்றான் தெளிவாக.
அவனுடைய பேச்சில் ஒருகணம் திகைத்தவர் உடனே சமாளித்துக் கொண்டு, “எனக்கு இருந்த சந்தேகத்த உறுதிப்படுத்தினதுக்குச் சந்தோஷம் மாப்ள… உங்ககிட்ட இனி நா எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்க மாட்டேன்… வாரேன்…” என்று சொல்லிவிட்டுத் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.
எதற்காக மணமக்கள் மறுவீட்டு விருந்துக்கு வரவில்லை என்பதை விளக்கிச் சொல்லாமலே தன்னுடன் வந்திருந்தவர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
விபரம் கேட்ட மனைவிக்குக் கோபத்தையே பதிலாகக் கொடுத்தார். ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து மற்றவர்களும் எதுவும் கேட்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.
ஆனால் மான்விழியின் தாய் கணவனுடைய கோவத்திற்குப் பயந்து ஒதுங்காமல் வீட்டிற்குச் சென்றதும் அவரைத் தனியாக அழைத்து விபரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
“அந்த நெலத்த மாப்ளைக்கு எழுதிக் கொடுத்துடுங்க… நமக்கு எதுக்கு இனிமே நெலம்… நம்ம புள்ளைங்க நல்லாருந்தா பத்தாதா…?” என்று எடுத்துச் சொன்னார்.
“நீ ஒன்னோட சோலியப் பாத்துக்கிட்டுப் போடி எனக்குத் தெரியும்…” என்று சிதம்பரம் எரிந்து விழுந்தார்.
“ஆமா… அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தா அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபமாம்… இந்தக் கோவத்தக் கொண்டு போய் உங்க மாப்பிள்ளைகிட்ட காட்ட வேண்டியது தானே…” என்று நொடித்துக் கொண்டு உள்ளே செல்லும் மனைவியின் முதுகை வெறித்தபடி,
“எம் பொண்ணக் கல்யாணம் பண்ணிட்டா என்னோட நெலத்தப் புடிங்கிடலாமுன்னு நெனச்சுட்டான். அதுமட்டும் நடக்கவே நடக்காது…” என்றார் சிதம்பரம் உறுதியாக.
அதன்பிறகு தினம் தினம் திருமணமான மகளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து சீராட்ட முடியவில்லை என்று மனைவி புலம்புவதையும் அழுவதையும் சண்டையிடுவதையும் பொறுத்துக் கொண்டு அமைதிக் காத்தார்.
# # #
ஏற்கனவே தன்னுடைய சம்மதம் இல்லாமல் தன்னைக் கடத்திக் கொண்டு வந்து திருமணம் செய்ததால் ருத்ரனின் மீது கோபத்தில் இருந்த மான்விழி, இப்போது விருந்துக்கு அழைக்க வந்த தன் பெற்றோரை அவன் அவமதித்துவிட்டான் என்கிற கொலைவெறியும் சேர்ந்துகொள்ள அவனை எந்த விதத்திலாவது பழிவாங்கிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாள். அடுத்த இரண்டாவது நாள் அவளுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
ருத்ரன் வயலில் மீன்குளம் வெட்டுவதற்கு ஆட்களை வரச் சொல்லியிருந்தான். அன்று பூஜைப் போட்டு அவர்களுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்து குளம் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். காலை பதினொரு மணிக்கு வயலில் பூஜை. வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்துவிட்டு பால்கனியிலிருந்து அறைக்குள் நுழைந்த ருத்ரன் மேஜைமீது எதையோ தேடினான். கிடைக்கவில்லை என்றதும் கொஞ்சம் படபடப்பாகி பீரோவைத் திறந்து தேடினான். கிடைக்கவில்லை…
“மான்விழி… இங்க பாஸ்புக் வச்சிருந்தேனே பாத்தியா…?”
“இல்ல…” அவள் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அவனை வெறுப்பேற்றுவது போல் தன்னுடைய மேக்கப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
“இங்கதானே வச்சுட்டுப் போனேன்… அதுக்குள்ள எங்க போச்சு…?” அவன் கோபமாகக் கத்தினான்.
“என்ன கேட்டா… எனக்கென்ன தெரியும்…? வச்ச எடத்துல நல்லா தேடிப் பாருங்க…”
அவன் டென்ஷனாகிவிட்டான். சொட்டும் வியர்வையுடன் அறை முழுவதும் தேடியும்… பீரோவை மூன்றுமுறை சலித்தும் கிடைக்கவே இல்லை.
மான்விழிக்குத் திருப்தியாக இருந்தது… “பாஸ் புக்குக்கு இப்ப அப்படி என்ன அவசரம்… இங்கதான் இருக்கும் தேடிக்கலாம் விடுங்க…” என்றாள் அசிரத்தையாக.
“குளம்வெட்ட வந்திருக்கவங்களுக்கு இன்னைக்கு அட்வான்ஸ் குடுத்தாகணும்… பெரிய அமௌன்ட்டு… ATM -லையும் எடுக்க முடியாது… என்ன செய்றது…” என்று தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவன்… ஏதோ தோன்ற சட்டென மனைவியை நிமிர்ந்து பார்த்தான்.
அதை எதிர்பார்க்காதவள் உதட்டில் தோன்றியிருந்த புன்னகையை நொடியில் மறைக்க முயன்றாள்.
‘கவனிச்சிட்டானோ…!’ என்று பயந்துப் போனாள்.
ஆனால் ருத்ரன் அவள் முகத்தைக் கூர்மையாகப் பார்த்ததோடு வேறெதுவும் சொல்லாமல்…
“சரி மான்விழி… நா டவுனுக்குப் போயிட்டு வயலுக்கு வந்தடறேன்… நீ மத்தவங்களோட கார்ல வந்துடு…” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
‘என்ன ரியாக்க்ஷனே குடுக்காமப் போறான்…! நம்மளக் கண்டுப்பிடிச்சானா இல்லையா…!’ குழப்பத்துடன் அவளும் கீழே சென்றாள்.
மான்விழி எதிர்பார்த்தபடிக் குளம் வெட்டுவதற்கு அட்வான்ஸ் கொடுப்பதோ பூஜையோ தடைப்படவில்லை. எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்து குளம்வெட்ட ஆரம்பித்தாயிற்று. ஆனால் மறுநாள் விடிந்ததிலிருந்து அவள் எதிர்பார்க்காத விஷயங்களெல்லாம் நடந்து கொண்டிருந்தன.
# # #
அன்று காலை, தூக்கம் களைந்து சோம்பல் முறித்தபடி எழுந்து மணி பார்க்க கைப்பேசியைத் தேடினாள் மான்விழி. காணவில்லை…
‘எங்க வச்சோம்…’ என்று யோசித்துக் கொண்டே சுவர்கடிகாரத்தைப் பார்த்து மணியைத் தெரிந்து கொண்டு எழுந்து பாத்ரூம் நோக்கிச் சென்றாள்.
அதன்பிறகு கைப்பேசியை மறந்துவிட்டவள் காலை உணவு முடிந்தபின் தங்களுடைய அறைக்கு வந்து, பொழுதுபோக்கிற்காகத் தினமும் படிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைத் தேடினாள். காணவில்லை. அப்போதுதான் அவள் மண்டைக்குள் மணியடித்தது.
“ஆஹா… வச்சுட்டான்டா ஆப்பு…” என்று சொல்லிக் கொண்டே வேகமாகக் கீழே இறங்கி ஓடினாள்.
வாசலில் ருத்ரன் புல்லட்டில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். மனைவி ஓட்டமும் நடையுமாகத் தன்னை நோக்கி வருவதைக் கவனித்துவிட்டு சாவியைத் திருகி வண்டியை அணைத்தான். முகத்தில் புன்னகையுடன் கேட்டான்… “என்ன மா…ன்…விழி…?”
அவன் போட்ட ராகத்தில் எரிச்சலானவள் “என்னோட செல்போன் எங்க…?” என்றாள்.
“என்ன கேட்டா…?”
“பொன்னியின் செல்வன் புக்கு எங்க…?”
“எனக்கு எப்படித் தெரியும்..?” அவள் நேற்று சொன்னதை அப்படியே திரும்பச் சொன்னான்.
“பொய் சொல்லாதிங்க… அந்த ரூம்ல நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம்… எனக்கு நல்லா தெரியும்… உங்களைத் தவிர அதை வேறயாரும் எடுத்திருக்க முடியாது…”
“உனக்கு அது மட்டுந்தான் தெரியுமா இல்ல என்னோட பாஸ்புக்கு எங்க இருக்குன்னும் தெரியுமா…?” அவன் நக்கலாகக் கேட்க இவள் திருதிருவென விழித்தாள்.
அவன் கடகடவெனச் சிரித்துவிட்டுச் சொன்னான். “சரி போ… அந்த செல்போனுக்கும் புத்தகத்துக்கும் இப்ப அப்படி என்ன அவசரம்… இங்கதான் இருக்கும் தேடிக்கலாம்…” என்றான்.
இதுவும் அவள் சொன்னதுதான். ‘வார்த்தையைக் கூட மாத்தாம என்னமா ரிபீட்டு அடிக்கிறான்… சதிகாரா…’ என்று நினைத்துக் கொண்டே
“ஹாங்… அது இல்லாம எப்படி…? எனக்கு இந்த வீட்டுல அது ஒன்னுதான் பொழுதுபோக்கு…” என்றாள் அதிர்ந்து போய்.
அவன் அவளுடைய இரண்டு கைகளையும் தன்னுடைய இரண்டு கைகளிலும் எடுத்து விரல்களோடு விரல்களைப் பின்னிக் கொண்டு,
“இந்தக் கைல என்னோட பாஸ்புக்கு… அந்தக் கைல உன்னோட பொழுதுபோக்கு… என்ன சொல்ற…?” என்றான்.
அவனிடம் தன்னுடைய கை சிக்கியிருக்கிறது என்பதையே கவனிக்காமல் ‘மடக்கிட்டானே… பாவி…’ என்று கருவி கொண்டே…
“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று முனகினாள்.
“சரி சீக்கிரம் போய் பாஸ்புக்க எடுத்துட்டு வா…” என்றான்.
அவள் கொண்டுவந்து கொடுத்ததும் அதை வாங்கிப் பத்திரப்படுத்திவிட்டு… “அண்ணி என்ன பண்ணிக்கிட்டு இருக்க…?” என்றான் தூரத்தில் மரத்தடியில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்த ராஜியைப் பார்த்து…
“புள்ளைங்களுக்கு மருதாணி வச்சுகிட்டு இருக்கேன் தம்பி…”
“மான்விழிக்கு பொழுது போகலையாம்… அதை இவகிட்ட குடுங்க… அழகா வச்சுவிடுவா…” என்றான்.
இவள் முறைப்புடன் அவனிடம் குரலைத் தாழ்த்தி “நா சொன்னேனா… எனக்கு மருதாணி கிருதாணியெல்லாம் வைக்கத் தெரியாது… என்னோட செல்லையும் புக்கையும் குடுங்க…” என்றாள் கடுப்பாக.
“உன்னோட பொழுதுபோக்கு இன்னிக்கு அந்தப் புள்ளைங்கதான் கண்ணு… பத்தரமா பாத்துக்க… வரட்டுமா…” என்று அனல்கக்கும் அவளுடைய விழிகளைக் காதலுடன் நோக்கி மொழிந்துவிட்டு,
“அண்ணி… பார்த்துக்கங்க…” என்று மான்விழியைக் கண்ணால் ஜாடைக் காட்டி ராஜியிடம் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
# # #
அன்றிரவு ருத்ரன் படுக்கையறைக்குள் நுழையும்பொழுது அவனுடன் வந்த ஒரு எலக்ட்ரீஷியன் பையன் புது டிவியும், டிவிடி பிளேயரையும் கொண்டுவந்து செட் பண்ணி வைத்துவிட்டுச் சென்றான்.
ருத்ரன் கடுகடுப்பான முகத்துடன் அமர்ந்திருந்த மான்விழியை நெருங்கி அவள் கையில் ரிமோட்டைத் திணித்து “பொழுதுபோக்கு பிடிச்சிருக்கா…” என்று டிவியைக் காட்டிக் கேட்டான்.
அவள் அவனைப் பஸ்பமாக்கிவிடுவது போல் பார்த்தாள்.
அவளுடைய பார்வையில் சத்தமாகச் சிரித்தவன் “பிடிக்கல போலருக்கு…” என்று தனக்குள்ளே சொல்வது போல் சத்தமாகவே சொல்லியபடி அவளிடம் ஒரு கவரை நீட்டினான். அவள் முறைப்புடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். அவளுடைய கைப்பேசியுடன் புது மாடல் கைப்பேசி ஒன்றும்… பொன்னியின் செல்வன் நாவலோடு இன்னும் சில புத்தகங்களும் இருந்தன.
‘ரொம்பத்தான் கரிசனம்…’ என்று முணுமுணுத்தாலும் அவன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டாள். ஏதாவது சொன்னால் ஹிட்லர் கொடுத்ததைப் பிடிங்கிக் கொண்டு போய்விடுவானோ என்று பயம். எத்தனை பேர் இருந்தாலும் அவளால் நாவல் படிக்காமலும் கைப்பேசி இல்லாமலும் இருக்கமுடியாது.
“இதுதான் முதல் முறைங்கறதுனால இதோட விட்டுட்டேன்… இனிமேலும் இதுமாதிரி சின்னப்புள்ளத்தனமா ஏதாவது பண்ணினா அப்புறம் நீதான் கஷ்டப்படுவ…” என்று புன்னைகை மாறாத முகத்துடன் சொல்லிவிட்டு “சரி வா… வந்து சாப்பாடு எடுத்து வை…” என்றபடி கீழே சென்றான்.
“பெரிய இவரு… வந்துட்டாரு கண்டிஷன் பண்ண.. அதுவும் சிரிச்சுக்கிட்டே… ஆளையும் மூஞ்சியும் பாரு…” என்று திட்டிக் கொண்டே அவளும் கீழே சென்றாள்.
Comments are closed here.