Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-11

அத்தியாயம் – 11

மூணாறிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில் சாலையிலிருந்து சற்று சரிவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ள ‘ப்ராக்னெல் ஃபாரஸ்ட்’ எனும் நட்சத்திர ஹோட்டலுக்கு முன் சென்று நின்ற காரிலிருந்து கார்முகிலனின் குடும்பம் இறங்கியது.

 

சாலையிலிருந்து பார்த்தால் அப்படி ஒரு கட்டிடம் அந்தப் பகுதியில் இருக்கிறது என்பதே தெரியாது. கட்டிடத்தில் வேயப்பட்டிருந்த ஓடு கூட பச்சை நிறத்தில் இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மதில்சுவர் மீது பெயிண்ட் அடிக்கவே தேவையின்றிப் பச்சையாகப் படர்ந்திருந்த பாசி… ஈர பூமி… விதவிதமான பூக்கள்… சுவற்றில் படர்ந்திருந்த பசுமையான கொடிகள்… காற்றில் கலந்திருந்த ஏதோ ஒரு சொல்லத் தெரியாத வாசனை என்று அனைத்துமே மதுமதியின் மனதைக் கவர்ந்தன.

 

அந்த ஹோட்டலைச் சுற்றி முதல் வளையமாக அமைந்திருந்த சீராகப் பராமரிக்கப்பட்ட சிறிய தோட்டத்தை விட, அடுத்த வளையமாக அமைந்திருந்த அடர்ந்த காட்டு மரங்களை… இருட்டில் அமர்ந்து பேய் கதை கேட்கும் சுவாரஸ்யத்தோடு ரசித்தாள்.

 

‘திடீர்னு இந்தப் பக்கம் யானைக்கூட்டம் வந்துட்டா என்ன பண்ணுறது..? இந்தக் காட்டுல புலி, சிங்கமெல்லாம் இருக்குமா..?’ என்றெல்லாம் அவளுடைய கற்பனைகள் ஏகத்துக்கும் படர்ந்தன.

 

“வா… உள்ள போய் செக்-இன் பண்ணிட்டு, சாவி வாங்கிகிட்டு வரலாம்…” அந்தப் பகுதியைச் சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் சொன்னபடி முன்னே நடந்தான்.

 

தேக்கு மரத்தாலான பெரிய பெரிய தூண்களோடு கூடிய மண்டபத்திற்குள் நுழைந்து வரவேற்பு பகுதிக்குச் சென்ற போது சந்தனப்பொட்டிட்டுக் கொண்டு கத்தை மீசையுடன் மொழுமொழுவென்று வெள்ளையாக இருந்த ஓர் ஆண் மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லிச் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்றான்.

 

இவர்களுடைய பெயர், முகவரி, போன் நம்பர் அனைத்தையும் விசாரித்தவன் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்துப் பூர்த்திச் செய்யச் சொன்னான். பிறகு கார்முகிலனின் புகைப்படத்தோடு கூடிய அடையாள அட்டையை வாங்கி ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்துக் கோப்பில் வைத்தவன், அவன் பூர்த்திச் செய்து கொடுத்த விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கணினியில் பதிவு செய்துவிட்டு அவர்களுக்கான ரூம் சாவியை எடுத்துக் கொடுத்தான்.

 

“தம்பி… சாரோட லக்கேஜ் எல்லாம் கார்ல இருக்கும்… எடுத்துட்டுப் போய் ரூம் நம்பர் 205-ல வைப்பா…” என்று எடுபிடி பையனிடம் மலையாளத்தில் சொன்னவன், “சார்… இவனோட போங்க… வழி காட்டுவான்” என்று ஆங்கிலத்தில் கார்முகிலனிடம் கூறினான்.

 

பையன் அவர்களுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல, கார்முகிலனும் மதுமதியும் அவனைத் தொடர்ந்தார்கள்.

 

வரவேற்பு அறை, பால்கனி மற்றும் குளியலறையுடன் கூடிய பெரிய படுக்கையறை சகல வசதிகளோடு அழகாகவும் சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது. தங்கநிற பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த கரும்பச்சை நிற திரைச்சீலை… தரையும், கூரையும் மரத்தால் இழைக்கப்பட்டிருந்த அந்த அறைக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.

 

குழந்தையைக் கட்டிலில் அமர வைத்துவிட்டு ‘எத்தனையோ பேர் வந்து தங்கிவிட்டுச் சென்ற அறை எப்படி இவ்வளவு புதிது போல் பளபளக்கிறது…!’ என்கிற வியப்புடன் திரைச்சீலையை விலக்கி அறையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தாள்.

 

“டவல் எடுத்துக்கொடு மதி…” என்று கேட்ட கணவனுக்கு டவலோடு சோப்பையும் எடுத்துக் கொடுத்துவிட்டு… குழந்தை போட்டிருந்த ஸ்வெட்டர் போன்ற கனமான ஆடைகளைக் களைந்துவிட்டு, இலகுவான ஆடையை அணிவித்தாள்.

 

கார்முகிலன் குளித்துவிட்டு வரும்பொழுது மதுமதி குழந்தைக்கு ‘செர்லாக்’ ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 

“ஃபுட் ஆர்டர் பண்ணியிருக்க வேண்டியது தானே..?”

 

“உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணினேன்… நீங்களே ஆர்டர் பண்ணிடுங்க… அப்படியே குழந்தையையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க… நான் குளிச்சிட்டு வந்திடுறேன்…” என்று சொல்லியபடி குழந்தையின் வாயைத் துடைத்துவிட்டவள், தனக்குத் தேவையான பொருட்களோடு குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

அவள் குளித்துவிட்டு வந்ததும் மதிய உணவை ஆர்டர் செய்து அறைக்கு வரவழைத்து உண்டவர்கள், மறுநாள் கதகளி நடனம் பார்க்க செல்லவேண்டும் என்பதற்காக போன் மூலம் டிக்கெட் புக் செய்துவிட்டுச் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். மாலை குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சற்றுத் தூரம் நடந்துவிட்டு வந்தார்கள். அன்றைய நாள் இனிதாகக் கழிந்தது.

 

மூணாறில் அவர்களுடைய இரண்டாவது நாளும் உற்சாகத்துடன் துவங்கியது. காலை ஒன்பது மணிக்கெல்லாம் ராஜமலைக்குப் புறப்பட்டுவிட்டார்கள். மலையில் ஏறும் பொழுது வனத்துறையினரின் வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என்பது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்… பாதி வழிக்கு மேல் மனைவி குழந்தையோடு சேர்ந்து நடந்து மலையேறியது கார்முகிலனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேகத்தைத் தொட்டுப் பார்த்து இயற்கையோடு உறவாடியபடி நடப்பது மதுமதிக்கும் உற்சாகமாக இருந்தது.

 

அன்றைக்கு வானிலை நன்றாக இருந்ததால் ‘எக்கோ பாயிண்ட்’ வரை நடந்து சென்றார்கள். மதுமதி சத்தம் போட்டுத் தன்னுடைய குரல் எதிரொலிப்பதைக் கேட்டு மகிழவில்லை என்றாலும் மற்றவர்கள் கத்துவதைச் சுவாரஸ்யமாகப் பார்த்தாள். கார்முகிலன் கூட ஒருமுறை சத்தம் போட்டுக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டினான். கீழே இறங்கும்பொழுது அழிந்து வரும் விலங்கினமான வரையாடுகள் எனப்படும் மலை ஆடுகளைப் பார்த்தார்கள். அவைகளைப் பார்த்ததில் யாழினிக்கு ஏகப்பட்ட குஷி…

 

மதியம் வரை ராஜமலையிலேயே பொழுதைக் கழித்துவிட்டு… குழந்தை லேசாகச் சிணுங்க ஆரம்பித்ததும் காத்திருந்த வனத்துறையினரின் வாகனத்தில் ஏறி கீழே வந்து தங்களுடைய காரை எடுத்துக்கொண்டு ஒரு நல்ல ஹோட்டலுக்குச் சென்று உணவை முடித்தார்கள். பிறகு அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு மாலை கதகளி பார்க்கச் சென்றார்கள்.

 

அரங்கத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. நான்குமணிக்குத் துவங்கிய காட்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த வேளை… திடீரென்று கார்முகிலன் மதுமதியோடு அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் சலசலப்பு ஏற்பட்டது.

 

பதின்ம வயதிலிருந்த ஓர் இளைஞன் சேரிலிருந்து எழுந்து, நிற்க முடியாமல் தள்ளாடினான். என்ன ஏது என்று புரியாமல்… அவன் குழந்தைகள், பெண்கள் என்று யார் மீதாவது விழுந்துவிடப் போகிறான் என்கிற பதட்டத்தில் அருகிலிருந்தவர்கள் “ஏய்… என்னப்பா..? என்னாச்சு?” என்று சத்தம் போடும்பொழுதே அவன் ஒரு பக்கமாகச் சாய்ந்தான்.

 

“ஐயோ…! என்னாச்சு..? பிடி…. பிடி…” என்று பல குரல்களின் கலவையொலி காதைத் துளைக்க, அனைவருடைய பார்வையும் மேடையிலிருந்து சத்தம் வந்த திசைக்குத் திரும்பியதோடு அங்கு ஒரு சிறு கூட்டம் குழுமிவிட்டது.

 

திடீரென்று கேட்ட சத்தத்தில் பயந்து போய், குழந்தை அழ ஆரம்பித்தது. கூட்ட நெரிசலிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பதற்காக இரண்டடி பின்னால் நகர்ந்து வந்து நின்று கொண்டு மகளைச் சமாதானம் செய்தபடி “என்னாச்சு அவருக்கு..?” என்று கேட்டாள் மதுமதி .

 

“குடிச்சிருப்பான்…” – கார்முகிலன் அலட்சியமாகச் சொல்லிவிட்டு அங்கு என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தான். சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தாலும் அவன் உயரமாக இருந்ததால் அங்கே என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.

 

சுற்றியிருப்பவர்கள் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த ஒரு வாலிபனும் மத்திய வயதிலிருந்த ஒருவரும் கீழே சாய்கிறவனைத் தாங்கிப் பிடித்தார்கள். அவர்களுடைய பிடியில் நிலைகொள்ளாமல் துள்ளி தரையில் விழுந்து துடித்து அடங்கினான் அவன்.

 

கார்முகிலனோடு சேர்த்து நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி… போதையில் விழுகிறான்… திமிரெடுத்து வேண்டுமென்றே பெண்கள் மீது விழப் பார்க்கிறான்… அப்படி… இப்படி… என்று கண்டபடி பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒரு நொடி திகைத்தார்கள்.

 

“ஐயோ ரத்தம் வருது…” “என்னன்னு பாருங்க…” “தள்ளுங்க காத்து வரட்டும்…” “நகருங்க… நகருங்க…” “மூச்சு இருக்கான்னு பாருங்க…” “ஹாஸ்பிட்டலுக்குத் தூக்குங்க…” என்று பலரும் மனிதாபிமானத்தோடு தவிக்கும்போது தான் கார்முகிலனுக்கும் ‘இது தண்ணி கேஸ் இல்ல போலருக்கே…’ என்று பொறி தட்டியது.

 

“நீ இங்கேயே இரு…” என்று மனைவியிடம் சொன்னவன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து கீழே விழுந்து கிடந்தவனின் அருகில் சென்று பார்த்தான். கடைவாயில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவனுக்கு என்ன முதலுதவி செய்வது என்று புரியாமல் அங்கிருந்தவர்கள் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது முகிலன், “இங்க யாராவது டாக்டர் இருக்கீங்களா..? ப்ளீஸ் யாராவது இருந்தா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க…” என்று கத்தினான்.

 

யாரும் வரவில்லை. மாறாக இருண்டிருந்த அரங்கம் மின்விளக்கு வெளிச்சத்தால் நிரம்ப… மேடையில் நடந்து கொண்டிருந்த நடன நாடகம் பாதியிலேயே தடைபட்டது.

 

சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த அரங்க ஊழியர்கள் கூட்டத்தை அங்கிருந்து அகற்றியதோடு அவனுக்கு என்னவானது என்றும் சோதனை செய்தார்கள்.

 

அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒதுங்கி நின்ற மதுமதி… மக்கள் கூட்டம் ஓரளவு விலகி நின்றதால் குழந்தையைப் பாதுகாப்பாகக் கைகளுக்குள் வைத்துக்கொண்டு கொஞ்சம் முன்னால் சென்று எட்டிப் பார்த்தாள்.

 

சிறு வயது இளைஞன் ஒருவன் தரையில் கிடந்தான். “உயிர் போயிட்டுப் போலருக்கு… கீழ சாயும் போதே தலை தொங்கிட்டு…” – என்று ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“ஐயோ… எந்த ஊர் பையனோ தெரியல… இங்க வந்து செத்துட்டானே…” இன்னொரு பெண்மணி புலம்பினாள்.

 

“சாகிற வயசா இந்தப் பையனுக்கு….” மத்திய வயது ஆண் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“ஐயோ பாவம்…” இளம்பெண் ஒருத்தி கலங்கிவிட்ட கண்களோடு முணுமுணுத்தாள்.

 

மதுமதியின் மனம் கீழே கிடப்பவனுக்காக வருந்தியது. “சின்னப் பையனா இருக்கான்… கடவுளே…” கனத்த மனதோடு அவள் புலம்பிக் கொண்டிருந்த பொழுது இன்னொரு வசனமும் அவள் காதில் விழுந்தது… “பாய்ஸன் கேஸ் போலருக்கு… பொசுக்குன்னு போய்ட்டான்…”

 

சட்டென்று குரல் வந்த திசையைத் திரும்பிப்பார்த்தாள். ஓர் ஆண் ஒருத்தர் மற்றொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். மீண்டும் கீழே கிடப்பவனைத் திரும்பிப் பார்த்தாள். அங்கே நீலவேணியின் உருவம் கிடப்பது போல் பிரமை தோன்றியது. நீலவேணியின் மரணம் தொடர்பான சம்பவங்கள் அனைத்தும் அலையலையாய் முட்டிமோதி அவள் மனதிற்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி விட வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

தாங்கமுடியாத உணர்ச்சிப் போராட்டம் அவளை ஆட்கொண்டுவிட… உடல் நடுங்கி… கால்கள் வலுவிழந்து தொய்ந்தது… தூரத்தில் வெள்ளை சீருடையில் ஸ்ட்ரெட்சரோடு இரண்டு ஆண்களும், காக்கி உடையில் சிலரும் வருவது தெரிந்தது. காக்கிச் சட்டையைப் பார்த்ததுமே தன்னையறியாமல் அவளுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

தர்மராஜ் வீட்டிலிருந்து முரட்டுத்தனமாக அவளுடைய கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்றாளே ஒரு காக்கிச் சட்டைக்காரி…! காவல் நிலையத்தில் ஒலித்த அலறல் சத்தத்தைக் கேட்க முடியாமல் காதில் கையை வைத்துக்கொண்டு நடுங்கியபடி அமர்ந்திருந்தாளே…! முரட்டு மீசையும், சிவந்த விழிகளுமாகக் கையில் பெரிய லத்தியுடன், லாக்கப்பிற்கு உள்ளேயிருந்த கைதியைக் கவனித்துவிட்டு வந்த போலீஸ்காரர் ஒருவர் “ஏய்… எந்திரி… என்ன கேசு..?” என்று அலட்சியப் பார்வையோடு அவளை நோக்கி கேள்வியை வீசினாரே…! அந்த நிமிடத்தில் அவள் அனுபவித்த பயம்… நடுக்கம்… அவமானம்… என்று அத்தனை நினைவுகளும் பந்து போலத் திரண்டு வந்து நெஞ்சையடைக்க… அனிச்சையாக அவள் பார்வைக் கணவனிடம் பாய்ந்தது. அவன் இவளைக் கவனிக்காமல்… சற்று நேரத்தில் அங்கு நடந்து முடிந்துவிட்ட அசம்பாவிதத்தில் மூழ்கியிருந்தான்.

 

‘இவன் தானே…! இவனைத்தானே நம்பினேன்… என் நம்பிக்கையை நொறுக்கிட்டானே…! தவிக்க விட்டுவிட்டானே…!’ – கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அன்று அனுபவித்த அதே வலியை எள்ளளவும் குறையாமல் இப்போதும் அவள் மனம் அனுபவிக்கிறது. அடிவயிற்றிலிருந்து பொங்கிவரும் உணர்வலைகளைப் பல்லைக் கடித்து உள்ளேயே அழுத்தி அடக்கியபடி கற்சிலைப் போல் சமைந்து நின்றாள்.

 

காவல் அதிகாரிகள் கீழே கிடந்தவனைப் பரிசோதனை செய்த பிறகு, வெள்ளை சீருடையில் இருந்த ஆட்கள் அவனை ஸ்ட்ரெட்சரில் அள்ளிப் போட்டுக்கொண்டு அந்த இடத்திலிருந்து நகரும் பொழுது… ஒரு போலீஸ் அதிகாரி, வெளிறிய முகத்துடன் கையில் குழந்தையோடு நிற்கும் மதுமதியை நோக்கி வந்தார். அவளுடைய இதயத்துடிப்பு பலநூறு மடங்கு அதிகமானது. ஆனால் வெளியில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.

 

“பேர் என்னம்மா..?” ஆங்கிலத்தில் கேட்டார்.

 

அதுவரை சற்றுத்தள்ளி நின்று கொண்டிருந்த கார்முகிலன்… போலீஸ்காரர் தன் மனைவியிடம் வந்து எதையோ கேட்பதைப் பார்த்துவிட்டு, அங்கே பாய்ந்து வந்து “என்ன சார்..?” என்று அவரிடம் கேள்விக் கேட்டான்.

 

“நீங்க யாரு..?”

 

“கார்முகிலன்… இவங்க கணவன்…”

 

“ஓஹோ… எந்த ஊர்… இங்க எங்க தங்கியிருக்கீங்க?” என்று அவர்களை பற்றிய முழு விபரத்தையும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர் “நீ சொல்லும்மா… இங்க என்ன நடந்தது?” என்று மதுமதியிடம் கேட்டார். அவள் என்ன பார்த்தாளோ அதை அப்படியே அவரிடம் ஒப்புவித்தாள்.

 

அவர் விசாரணையை முடித்துக்கொண்டு நகர்ந்து வேறு ஒருவரிடம் விசாரணையை ஆரம்பித்த பிறகும், இறுக்கம் தளராமல் நடுக்கத்தோடு நின்று கொண்டிருந்த மனைவியின் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்ட கார்முகிலன்… அவளைத் தோளோடு அணைத்து “மதி… எதுக்கு இவ்வளவு பயம்..? என்னாச்சு உனக்கு..? ” என்றான்.

 

அவன் பேசி முடிப்பதற்குள் சட்டென்று திரும்பி கண்களை லேசாகச் சுருக்கி அவன் கண்களுக்குள் பார்த்தாள்.

 

‘எனக்கு என்னாச்சுன்னு உனக்குத் தெரியாதா..?’ என்று குற்றம் சாட்டிய அவளின் பார்வை அவன் நெஞ்சில் சாட்டையடியாக விழுந்தது.

 

“மதி…!” – காற்றாய்க் கரைந்தது அவன் குரல்.

 

சிறிதும் வீரியம் குறையாத அவள் பார்வையை அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல், தன் பார்வையை விலக்கிக் கொண்டவன் “கிளம்பலாம் வா…” என்று குழந்தையோடு முன்னே நடந்தான். ஒருநொடி அவன் முதுகை வெறித்தவள் பிறகு அவனைப் பின்தொடர்ந்தாள்.




Comments are closed here.

You cannot copy content of this page