Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 13

அத்தியாயம் – 13

குற்ற உணர்ச்சியும் கவலையும் பாரமாகி பிரகாஷின் மனதை அழுத்த பிரகாஷ் தனிமையை தேடி தனியறைக்குள் தஞ்சம் புகுந்தான். அவனுடைய சிந்தனைகள் முழுவதும் ஜீவனையே சுற்றி சுற்றி வந்தது…

 

திருமணத்திற்கு முதல் நாள்வரை ஆர்வமாக திருமண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன் திருமணம் நடந்த நாளிலிருந்து தலைகீழாக மாறிப் போன காரணம் என்ன என்று யோசித்தான். மணிக்கணக்கில் யோசித்தவனுக்கு கடைசியாக ஒன்றுதான் தோன்றியது.

 

‘விழாவிற்கு வந்திருந்த யாரோ அண்ணனுக்கு முன் தம்பிக்கு திருமணம் நடக்கிறது என்று அவன் மனம் புண்படும்படி எதையோ சொல்லிவிட்டார்கள். அதனால்தான் ஜீவா இப்படி நடந்துகொள்கிறான்….’ என்று முடிவு செய்தான். பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி எது என்று ஊகித்துவிட்டதால் அதை எப்படி சரி செய்வது என்பதையும் சுலபமாக கண்டுபிடித்துவிட்டான்.

 

சரியாக இரண்டு மணிநேரம் கழித்து அவன் அந்த அறையிலிருந்து வெளியே வரும் பொழுது வீடே மயான அமைதியில் மூழ்கியிருந்தது. சிவகாமி ஹாலில் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தாள். பாட்டி வாசல் பக்கம் சென்று தனியாக அமர்ந்திருந்தார்கள். ஜீவன் அவனுடைய அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான். புனிதா அவள் இருந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை. பிரகாஷ் அந்த அறையின் கதவை திறக்கும் பொழுது கட்டிலின் ஒரு மூலையில் கால்களை கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

 

இவன் அவளை நெருங்கி அருகில் அமர்ந்து அவள் தலையை கோதி “என்ன ஆச்சு…? ஏன் இப்படி உக்கார்ந்திருக்க…?” என்று அக்கறையுடன் கேட்டதற்கு, ‘எதுவும் இல்லை’ என்று தலையை அசைத்தாள்.

 

அவள் ஜீவனுடைய அறையில் நடந்த பிரச்சனைகளை கவனித்திருக்கிறாள் என்று ஊகித்தவன் “பயந்துட்டியா…?” என்றான்.

புனிதா முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களில் கண்களில் கண்ணீர் நிறைந்து கன்னங்களில் உருண்டது.

 

“புனிதா ப்ளீஸ்… இன்னும் நான்கு நாள்தான்… கொஞ்சம் பொறுத்துக்கோ…” என்று கெஞ்சினான் பிரகாஷ்.

 

அவன் அப்படி கெஞ்சுவதை அவளால் பொறுக்க முடியவில்லை. பிரச்சனைக்கு மூலக்காரணமே அவள்தான் என்பதை உணராமல் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறானே என்று தவிப்பாக இருந்தது. குற்ற உணர்ச்சி நெஞ்சை குத்தியது. எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்று ஒரு எண்ணம் எழுந்தது. ஆனால் அதன்பிறகு வீசக்கூடிய புயலை சமாளிக்கும் சக்தி தனக்கு இருக்கிறதா என்பதை நினைக்கையில் பயத்தில் உடல் நடுங்கியது.

 

அவளுடைய நடுக்கத்தை குறைக்க அவன் அவளை அனைத்துக் கொண்டான். ஆறுதலை தேடி அவளும் அவனோடு ஒண்டிக் கொண்டாள். அவளுடைய நடுக்கம் குறைந்ததும் அவளை விளக்கி நிறுத்தி புன்னகைத்துவிட்டு…

 

“இன்னிக்கு உன்னோட சமையல்தான்… அம்மா படுத்துட்டாங்க… நீ அசத்து…” என்று சொல்லி கண் சிமிட்டினான்.

 

அவளும் முயன்று தன் மனநிலையை மாற்றிக் கொண்டு பாட்டியின் உதவியுடன் முதலில் பால்பாயாசம் செய்து சாமிக்கு படைத்துவிட்டு… சாம்பார் மற்றும் உருளைகிழங்கு வறுவல் என்று மாமியார் வீட்டில் முதல் முறையாக சமையல் செய்தாள்.

###

மாலை ஆறு மணிக்கு ஜீவன் உறக்கத்திலிருந்து கண்விழித்தான். அதுவரை சிவகாமி படுத்திருந்த இடத்திலிருந்து எழவே இல்லை. இளைய மகன்… மருமகள்… தாய் என்று அனைவருடைய வற்புறுத்தலையும் ஒதுக்கி தள்ளிவிட்டு பட்டினியாக படுத்திருந்தவள் மூத்த மகன் எழும் அரவரம் கேட்டதும் அவசரமாக எழுந்து ஓடி…

 

“என்னப்பா வேணும்…?” என்று கேட்டாள்.

ஆனால் ஜீவனோ தாயிடம் முகம் கொடுத்து பேசாமல் “ம்ஹும்…” என்று முனுமுனுத்து எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அரைமணி நேரத்தில் வெளியே செல்வதற்கு தயாராகி வந்தவனை சிவகாமி பதட்டத்துடன் தடுத்தாள்.

 

“தம்பி… வேண்டாம்ப்பா… சொன்னா கேளு… ரெண்டு நாளா ஒன்னும் சாப்பிடல… இப்படியே வெளியில போனா நல்லது இல்லடா ஜீவா… உள்ள போய் படு… இல்லன்னா இப்படி உட்க்கார்ந்து டிவி பாரு… கொஞ்சம் பால் சாப்பிடறியா…?” என்று பதறும் தாயை ஒரு பொருட்டாக கருதாமல் வேகமாக வெளியேறினான்.

 

இவர்களின் பேச்சு குரல் கேட்டு அவனுடைய அறையிலிருந்து வெளிப்பட்ட பிரகாஷ் அண்ணனின் கையை பிடித்து தடுத்தான்.

“ஜீவா… உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்… பத்து நிமிஷம் ப்ளீஸ்…”

 

ஜீவன் நின்றுவிட்டான். ஆனால் தம்பியின் முகத்தையும் பார்க்கவில்லை… என்ன விஷயம் என்று வாய் திறந்தும் கேட்கவில்லை.

 

போதையில் இருந்தாலும் காலையில் நடந்த விஷயங்கள் அவனுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட பிரகாஷ் “தனியா பேசணும்… மாடிக்கு போகலாமா…?” என்றான்.

 

அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் மாடிப்படிகளில் ஏறிய ஜீவனை பின் தொடர்ந்தான் இளையவன்.

 

மொட்டை மாடியில் பக்கவாட்டு சுவரில் கையை ஊன்றியபடி வானத்தை வெறித்துக் கொண்டு நின்ற ஜீவனை மனவலியுடன் நோக்கி,

“ஜீவா… என்ன மன்னிச்சுடுடா…” என்று உண்மையான வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டான் பிரகாஷ்.

ஜீவன் திரும்பி பார்க்காமல் அதே நிலையில் நின்றான்.

 

“என்னுடைய கல்யாணம் உன்னை இந்த அளவு பாதிக்கும் என்று நான் நினைக்கல ஜீவா…” பிரகாஷின் உருக்கமான குரலில் அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்த ஜீவனின் உடல் விறைத்தது.

 

முக மாற்றத்தை கவனிக்க முடியவில்லை என்றாலும் விறைத்து நிமிரும் அண்ணனின் முதுகை பிரகாஷ் கவனித்தான். அவன் சந்தேகப்பட்டது சரிதான் என்று முடிவு செய்து மேலும் பேசினான்.

 

“முதல் நாள் வரைக்கும் நல்லா இருந்தவனுக்கு கல்யாணம் நடந்த அன்றிலிருந்து பிரச்சனைன்னா கல்யாணத்துலதான் ஏதோ நடந்திருக்கணும்… சொல்லு… என்ன ஆச்சு…?”

 

ஜீவனிடம் அசைவே இல்லை.

“எவனாவது ஏதாவது சொன்னானா…? சொல்லு… நீ படிக்கல… வேலை பார்க்கல… சம்பாதிக்கல… அப்படியிப்படின்னு எவனாவது…” என்று படபடப்பாக பிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும் போதே “போதும் நிறுத்துடா…” என்று ஆக்ரோஷத்துடன் திரும்பிய ஜீவன் தம்பியின் முகத்தை கண்டு திகைத்தான்.

 

எரிமலையின் தீப்பிழம்பை முகத்தில் தாங்கியது போல் சிவந்த முகத்துடன் ஜீவனைவிட பலமடங்கு ஆக்ரோஷமாக நின்றான் பிரகாஷ்.

 

தம்பியின் கோபத்தை கண்டு வாயடைத்துபோய் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் ஜீவன் நிற்க… பிரகாஷ் தொடர்ந்தான்.

 

“சொல்லு… யார் உன்னை பற்றி தப்பா பேசினது…? சொல்லுடா ஜீவா… அது யாரா இருந்தாலும் இப்போவே ஒரு வழி பண்ணிடறேன்…” என்று உடன் பிறந்தவனுக்காக பொங்கினான்.

 

தம்பியின் அக்கரையில் ஜீவன் நெகிழ்ந்தான். மூன்று நாட்களாக தனிமை உணர்வால் அவன் அனுபவித்த வேதனைக்கு அருமருந்தாக இருந்தது சகோதரணனின் பாசத்தில் விளைந்த கோபம்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல விடு…” என்று சமாதானமாக பேசினான் ஜீவன்.

“‘இல்ல… நீ எதையோ என்கிட்ட மறைக்கிற… என்னன்னு சொல்லு… என்னோட கல்யாணத்தன்று என்ன நடந்தது…?” என்று துருவினான்.

 

பிரகாஷ் எவ்வளவோ வற்ப்புறுத்தி கேட்டும் ஜீவன் உண்மையை சொல்லவில்லை.

 

“நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காத… உன்னோட கல்யாணத்துக்கு பசங்க ட்ரீட் கேட்டாங்க… குடுத்தேன்… எனக்கு கொஞ்சம் அதிகமாகி போச்சு. அவ்வளவுதான்… விடு…” என்று சொல்லிவிட்டு கீழே இறங்க முற்ப்பட்டான்.

 

அவனை வழிமறித்து “என்கிட்ட உண்மையை சொல்ல மாட்டேங்கிற… சரி விடு… ஆனா ஒரு விஷயத்த நீ நல்லா ஞாபகம் வச்சுக்கோ… நீயும் நானும் வேறவேற இல்ல… ரெண்டு பெரும் ஒன்னுதான். நீ படிக்கல… சம்பாதிக்கலன்னு எந்த வருத்தமும் வச்சுக்காத… இந்த வீடு… நமக்கு இருக்க பூர்வீக நிலம் எல்லாம் உனக்குத்தான். எனக்கு படிப்பு இருக்கு… அது போதும். இப்போதைக்கு நம்ப குடும்பத்துக்கு தேவையான பணத்தை நான் சம்பாதிக்கிறேன். நீயும் சம்பாதிக்க நானே வழி பண்ணுவேன். எவனாவது ஏதாவது சொன்னான்னு உன்னை நீயே தரம் தாழ்த்திக்காத… கொஞ்சம் பொறுமையா இரு… இன்னும் ஆறே மாசத்துல ஒரு அருமையான அண்ணியை எனக்கு கொண்டு வந்துடறேன்..” என்று சொல்லி அண்ணனை கட்டிக் கொண்டான்.

 

ஜீவனுக்கு எதுவுமே புரியவில்லை. சிறுவயதிலிருந்து தன்னை விட பிரகாஷ் பொறுப்பாக இருப்பான் என்பது தெரிந்திருந்தாலும் இந்த அளவு பொறுப்புடனும் பாசத்துடனும் அவன் இருப்பது அவனை ஆச்சர்யப்பட வைத்தது.

 

காதல் தோல்வி… ஏமாற்றம்… சோகம்… போதை… என்று மூழ்கிக் கொண்டிருந்தவனுக்கு தம்பியின் பாசம் ஒரு மாறுதல் மட்டும் அல்லாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. கூடவே ஒரு பயமும் வந்தது.

 

‘நம் மீது இவ்வளவு பாசமாக இருப்பவனுக்கு புனிதா செய்த துரோகம் தெரிந்தால் என்ன ஆகும்…! அவளுடைய வாழ்க்கையோடு சேர்த்து இவன் தன் வாழ்க்கையையும் அல்லவா அழித்துக் கொள்வான்… ஏற்கனவே டிப்ரஷன் அது… இது… என்று ஏதேதோ சொல்கிறான்… இதில் இந்த சிக்கலெல்லாம் அவனுக்கு தெரிந்தால் எல்லாம் நாசமாகிவிடும்…’ என்கிற பயம்தான் இப்போது ஜீவனின் மனதில் மேலோங்கி நின்றது. ‘தன் சோகம் தன்னோடு… தன்னால் தம்பியின் வாழ்க்கையில் எந்த துன்பமும் வந்துவிடக் கூடாது…’ என்று உறுதியாக நினைத்தான்.

 

நீண்ட நேரம் தம்பியுடன் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த ஜீவன் அதற்கு பிறகு வெளியே செல்லவில்லை. பயமும் குழப்பமும் சோர்வுமாக கட்டிலில் வந்து சாய்ந்துவிட்டான்.

 




Comments are closed here.

You cannot copy content of this page