விடிவெள்ளி – 14
2715
0
அத்தியாயம் – 14
பெரும்பாலான ஆண்கள் ஒரு பெண் தன்னை உதறிவிட்டால் தாங்கள் எதற்கும் லாயக்கிலாதவர்கள் என்று கற்பனை செய்துகொண்டு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வார்கள் என்பதற்கு சான்றாக ஜீவன் இருந்தான்.
தம்பி கொடுத்த தைரியமும் ஆறுதலும் ஓர் இரவுதான் தாங்கியது ஜீவனுக்கு. மறுநாள் விழித்தெழும் பொழுதே அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மனக்காயங்களும் சேர்ந்தே விழித்துக் கொண்டன. புனிதா தனக்கு கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தைவிட அவள் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்கிற ஆத்திரமும்… தோற்றுவிட்டோம் என்கிற வேதனையும்தான் அவனை அதிகமாக வாட்டியது.
பல ஆண்டுகளாக காதலித்தவள் சில நாட்களில் அவனை உதறிவிட்டதும் அல்லாமல் அவனுடைய தம்பியையே திருமணம் செய்து கொண்டதை பெருத்த அவமானமாக நினைத்தான். இனி இந்த உலகத்தில் வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம் என்கிற விரகத்தி சூழ்ந்துகொள்ள உள்ளுக்குள் புழுங்கினான்.
தூக்கம் களைந்து எழுந்தவன் வெளியே வந்து யாருடைய முகத்தையும் பார்க்க பிடிக்காமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.
‘நம்ப வச்சு கழுத்த அறுத்துட்டாளே…’ என்று மீண்டும் அவனுடைய சிந்தனைகள் புனிதா வைத்த கரும் புள்ளியையே சுற்ற ஆரம்பித்தது.
‘ஏன் இப்படி ஒரு துரோகத்தை செய்தாள்…?’ என்று சிந்திக்க ஆரம்பித்து… பல வருடங்களுக்கு பிறகு தன்னை தானே சுய அலசல் செய்து பார்த்தான். தன்னிடம் உள்ள நிறை குறைகள் என்னென்ன என்று எண்ணி பார்த்தான். படிப்பு இல்லை… திறமை இல்லை… சம்பாத்தியம் இல்லை… ஒழுக்கம் இல்லை… என்கிற குறைகளோடு ஆணழகன்… நல்லவன்… என்கிற நிறைகளையும் கண்டான்.
நிறைகளை முழு மனதோடு ஏற்றுக் கொண்டவனுக்கு குறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தன்னுடைய அனைத்து குறைகளுக்கும் சப்பைக்கட்டு கட்டினான்.
‘தந்தை சம்பாதித்த நிலம் இருக்கிறது… தம்பி கட்டி கொடுத்த வீடு இருக்கிறது… தாய்க்கு வரும் பென்ஷன் இருக்கிறது… இவ்வளவும் இருக்கும் பொழுது தனக்கு என்ன குறை…? இந்த காலத்தில் யார்தான் குடிக்கவில்லை… பெண்களே புகைபிடிக்கும் காலமல்லவா இது…! இதெல்லாம் ஒரு ஒழுக்கக் கேடா…!” என்று தன்னை தானே ஏமாற்றிக் கொண்டவனுக்கு நிறைவும் நிம்மதியும் மட்டும் துளியும் இல்லை.
எப்படி இருக்கும்…? அவனிடம் இருக்கும் எதுவும் அவனுடைய சுய உழைப்பில் கிடைத்தது அல்லவே. உறவுகள் அவனை தூக்கி நிறுத்தினாலும் அவன் சொந்த காலில் நிற்காதபோது நிறைவு எப்படி கிடைக்கும். குடி… புகை… போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அற்ப சந்தோஷங்களை அனுபவித்து பழகியவனுக்கு உண்மையான நிம்மதி எப்படி கிடைக்கும்… போதை தெளிந்தவுடன் மீண்டும் மனம் அலைபாயத்தான் செய்யும்.
அவனுடைய வாழ்க்கையை எந்த இடத்தில் தொலைத்தான் என்பதை ஆழ்ந்து நோக்காமல்… புனிதா என்கிற பெண் அவனை பிரிந்துவிட்டதால்தான் அவனுடைய வாழ்க்கை சூன்யமாகிவிட்டது என்று குருட்டுத் தனமாக நம்பினான். தவறான அந்த நம்பிக்கை அவனுக்கு கட்டுக்கடங்காத கோபத்தையும் வெறுப்பையும் ஏற்ப்படுத்தியது. தன் மீது அளவற்ற பாசம் கொண்டுள்ள தம்பியின் வாழ்க்கை தன்னால் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்து மிகவும் சிரமப்பட்டு தன் கோப உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டான்.
ஒரே வீட்டில் இருந்தாலும் ஜீவன் அன்று ஒரு நாள் புனிதாவை வீட்டில் பார்த்ததோடு சரி… அதற்க்கு பிறகு இவன் அவளை பார்க்கவே இல்லை. காரணம்…. இவனும் வீட்டில் இருக்கும் நேரத்தை வெகுவாக குறைத்துவிட்டான்… அவளும் இவன் நடமாட்டம் தெரிந்தால் அறையை விட்டுவெளியே வரவே மாட்டாள்.
தம்பிக்கு முன் ஜீவன் திறமையாக தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டதால் அவனுடைய மனதில் புகைந்து கொண்டிருக்கும் எரிமலையை பற்றி பிரகாஷ் நூல் முனை அளவு கூட அறிந்திருக்கவில்லை. ஒரு வாரம் பிரச்சனைகள் வெளியே தெரியாமல் கழிந்துவிட பிரகாஷ் மனைவியை அழைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பறந்துவிட்டான்.
###
அது ஒரு டாஸ் மார்க் பார்… மது கோப்பைகள்… முட்டை ஒம்லெட்… சிப்ஸ்… ஊறுகாய்… என்று மேஜை நிறைந்திருக்க… அதை சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நண்பர்கள் நால்வருடன் ஐந்தாம் நபராக ஜீவன் அமர்ந்திருந்தான்.
“டேய்… மச்சான்… மூணு வருஷமா நான் லவ் பண்ணின பொண்ணுடா… நேத்து சவாரிக்கு போயிட்டு வர்றப்ப பாக்குறேன்… அந்த போட்டோ ஸ்டுடியோ ஆனந்தோட வண்டில போறாடா… மடக்கி பிடிச்சு என்னடின்னு இவள கேட்டா அவன் முறைக்கிறான்…” கனகராஜ் ஆதங்கத்துடன் சொன்னான்.
“என்னடா மச்சான் சொல்ற..? உன்ன முறைச்சானா? இதை ஏண்டா நீ நேத்தே சொல்லல…?” துரை துள்ளினான்.
மற்ற நண்பர்களும் கொதித்து போனார்கள். ஆனால் ஜீவன் மட்டும் மது கோப்பையிலேயே கவனமாக இருந்தான். வெறி பிடித்த மிருகம் ஒன்று அவனுக்குள்ளே உறுமிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாத நண்பர்கள் அவர்களுக்குள்ளே அந்த ஆனந்தை என்ன செய்யலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
தேவையான அளவு போதை ஏறியதும் ஜீவன் எழுந்தான்.
“இருடா மாப்ள… என்ன அவசரம்…? உட்காரு போகலாம்…” என்றான் துரை.
“கிளம்பு வேலை இருக்கு…” என்றான் ஜீவன்.
“ஏய்… இருடா… இன்னும் ரெண்டு ரௌண்டு போட்டுட்டு போகலாம்…” கனகராஜ் ஜீவனின் கையை பிடித்து இழுத்து அமர சொன்னான்.
அவனிடமிருந்து கையை சரட்டென்று உருவியவன் பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று கொடுத்தான். மற்றவர்கள் ஜீவனை அதிர்ந்துபோய் பார்த்தார்கள்.
அடிவிழுந்த கன்னத்தை வலது கையில் தாங்கியிருந்த கனகராஜ் கடுப்பாகி “எதுக்குடா அடிச்ச…?” என்று முறைத்தான்.
பெரிய ராசாபமாக போகிறது என்று நினைத்த நண்பர்கள் “விடுடா மச்சான்… விடு… விடு…” என்று கனகராஜ்ஜை சமாதானம் செய்ததுடன் ஜீவனிடமும் “என்னடா…?” என்று கடிந்து கொண்டார்கள்.
“நீ லவ் பண்ற பொண்ண இன்னொருத்தன் கரெக்ட் பண்ணுறான்னு தெரிஞ்சும் இங்க என்னடா உனக்கு குடி வேண்டியிருக்கு… வாடா… யாருடா அவன்…? காட்டு மொதல்ல…” என்றான் கர்ஜனையாக.
அந்த நொடி வரை ஜீவன் மீது கடுப்புடன் இருந்த கனகராஜ்ஜிற்கு திடீரென பாசம் பற்றிக் கொண்டது. அதுவரை அவனிடமிருந்த எரிச்சல் மறைந்து ஒருவித மகிழ்ச்சியும் விறுவிறுப்பும் வந்தது. அந்த கூட்டத்தில் இருந்த அனைவரயும் பரபரப்பும் புத்துணர்ச்சியும் தொற்றிக்கொள்ள அவர்கள் தங்களை ஒரு மாவீரனாக உணர்ந்தார்கள். ஒற்றுமையே பலம்…! நட்பே சொத்து…! நண்பனே உயிர்…! என்கிற மௌன முழக்கத்தோடு தங்களின் ஒற்றை எதிரியான ஆனந்தை கவனிக்கும் நோக்கில் அங்கிருந்து புறப்பட்டார்கள்.
குறிப்பிட்ட அந்த ஸ்டுடியோவிற்குள் அவர்கள் அத்துமீறி நுழையும் பொழுது அங்கிருந்த அனைவரும் பதறினார்கள்.
“யாருப்பா… நீங்கல்லாம்…? என்ன வேணும்…?” என்று விசாரிக்க முயன்றார்கள்.
எதிர்ப்பட்டவர்களை தாக்கியதுடன் “எங்கடா அந்த ஆனந்து…?” என்று இவர்கள் பதிலுக்கு கேள்விகேட்டபடி ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு அறையிலிருந்து கழுத்தில் மாட்டியிருந்த கேமிராவுடன் ஆனந்த் வெளியே வந்தான். அவனை பார்த்ததும் “இவன்தான்டா மாப்ள…” என்று கனகராஜ் குரல் கொடுத்தான்.
மின்னல் வேகத்தில் ஜீவன் அவன் மீது பாய்ந்தான். வெறி பிடித்த வேங்கையாக மாறி அவனை குதறினான். அவனை தடுக்க முயன்றவர்களுக்கு சமதர்ம முறையில் தானதர்மங்களை வழங்கினார்கள் அவனுடைய கூட்டாளிகள். குருதியில் குளித்து… தன்னிலை மறந்து மயங்கி சரியும் வரை விடாமல் ஆனந்தை நார்நாராக கிழித்தான் ஜீவன். அப்போதுகூட அவனுடைய வெறி அடங்கவில்லை.
பயம்… இரக்கம்… மனிதாபிமானம் போன்ற உணர்வுகளை முற்றிலும் துறந்தவனாக சிலிர்த்துக் கொண்டு நின்ற ஜீவனிடம் நெருங்கும் துணிவு இல்லாமல்… ஸ்டுடியோவின் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு நின்ற ஒருசிலர் அந்த கூட்டத்திடம் அடிவாங்காமல் தப்பி பிழைத்தாகள். அவர்களில் யாரோதான் காவல் நிலையத்திற்கு விஷயத்தை சொல்லியிருக்க வேண்டும்.
பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அதிரடியாக உள்ளே நுழைந்த மூன்று காவலர்கள் ஜீவனையும் அவன் நண்பர்களையும் தடியடி கொடுத்து காவல் நிலையத்திற்கு அள்ளிக் கொண்டு போனார்கள்.
விஷயத்தை கேள்விப்பட்ட சிவகாமி பதறியடித்துக் கொண்டு உறவினர்களில் இரண்டு ஆட்களோடு காவல் நிலையத்திற்கு வரும் பொழுது… ஜீவன் மீது வழக்கு பதிவு செய்து அவனை ரிமாண்ட் செய்திருந்தார்கள் காவலர்கள்.
“நாளைக்கு கோர்ட்க்கு கூட்டிட்டு வருவோம்… அங்க வந்து ஜாமின்ல எடுத்துக்கோங்க…” என்று ஆய்வாளர் சொல்லிவிட்டதை அடுத்து வேறுவழியின்றி சிவகாமி அழுகையுடன் வீடு வந்து சேர்ந்தாள். அதுதான் ஜீவன் மீது போடப்பட்ட முதல் வழக்கு…
Comments are closed here.