குற்றப்பரிகாரம் – 3
1287
1
அத்தியாயம் – 3
அயிகிரி (ர்ர்ர்..) நந்தினி நந்தித மேதினி (ர்ர்)
விஷ்வ வினோதினி(ர்ர்)
நந்தனுதே…. கிரிவர
“ம்மா நாங்கிளம்பறேன்”
சுலோகம் சொல்லியபடியே மிக்ஸியில் எதையோ அரைத்துக் கொண்டிருந்த கோமளத்திற்கு அந்த சத்தத்திலும் உஷாவின் கத்தல் தெளிவாய்க் கேட்டது….
“டீ… அப்பா என்னமோ சொல்லனும்னார்… என்னனு சித்த கேட்டுட்டு போ”
“ஆமா… உன் புருஷனுக்கு நான் காலம்பற கிளம்புவேன்னு தெரியாதா? நேத்தே சொல்றதுக்கென்ன! காலேஜ் பஸ் போய்டும்மா”
“மணி ஆர்றதான் ஆறது ஏழேகாலுக்குத்தான் பஸ். ரெண்டு நிமிஷம் கேட்டுட்டு போப்படாதா”
“ஏம்மா படுத்தற!”
“என்னடி படுத்தறேன்! வர வர நீ சொல்பேச்சே கேக்கறதில்ல. அரை இட்லிய சாப்ட்டுட்டு ஒன்ற இட்லிய, அத்துனூண்டு டப்பால கொண்டு போற! அது மூக்ல ஏத்திக்கக் கூட பத்தாது”
“பின்ன, உன்ன மாதிரி பீப்பாவா ஆகச் சொல்றியா!”
“சொல்லுவடி அம்மா! சொல்லுவ! எல்லாம் அந்த மனுஷன் கொடுக்கறச் செல்லம். ஒரே பொண்ணு ஒரே பொண்ணுனு, தலையில தூக்கி வச்சுண்டு ஆடறாரில்லையோ! நீ இதுவும்….
” அய்ய்யோ காலங்காத்தால உன் புராணத்த ஆரம்பிக்காத. இப்ப என்ன உன் புருஷன பாத்துட்டு போகனும்! அவ்வளவுதான! பாத்துட்டே போறேன்! புலம்பாத… ஷர்மி வேற காத்துண்டுருப்பா”
ஷர்மி என்றதும், அவளுடன் இனி சேரக்கூடாது என்று நேற்றுதான் முடிவெடுத்தது ஞாபகம் வந்தது. சனியன்! அவ பாய் பிரண்ட்கிட்ட கேட்டுண்டு வந்து, தப்பு தப்பான ஜோக்ஸா சொல்றா. ஆனாலும் ஒருபக்கம், சுவாரஸ்யமாத்தான் இருக்கு… இருந்தாலும் தப்பில்லையோ! மொதல்ல கேக்கத்தோனும்… அப்புறம் நாமளே பாய் பிரண்ட் வச்சுண்டா என்னனு தோணும்! பாவம் அப்பா! நம்ம மேல எவ்ளோ உசுரா இருக்கார்! இத்தனை எண்ணியவளின் கால்கள், அப்பாவை நோக்கி தன்னால் நகர்ந்தது.
“ஹாய் டாட்” ஸ்ரீராம் & கோ கேஸ் ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த ச்சாரி மகளின் குரல் கேட்டதும் டக்கென நிமிர்ந்தார்.
“வாடிம்மா கோந்தை”
“ஷட்டப் டாட்., கோந்தை.. கோந்து, கம்மு, ஃபெவிகால்னுலாம் கூப்பிடாதீங்கனு எத்தனை தடவ சொல்லிருக்கேன்!”
அவளின் கோபத்தை சட்டையே செய்யாமல் ச்சாரி கொஞ்சினார்…
“நீ எனக்கு என்னிக்குமே கோந்தைதான்னு நானும் அத்தனை தடவையும் சொல்லிட்டேனே”
“உங்ககிட்ட ஆர்க்யூ பண்ண இப்போ எனக்கு டைம் இல்ல! பாக்கனும்னு சொன்னீங்களாமே! அம்மா சொன்னா!”
“நீ எப்போ வேணா ஆர்க்யூமெண்டுக்கு வா! நானே லாயர்…. சாரி லீடிங் விட்டுட்டேன்… லீடிங் லாயர் ச்சாரி”
“ஷெபா… அறுக்காதப்பா! என்னனு சொல்லு டைமாச்சு”
“இல்லடியம்மா கோ… சரீஈஈ மொறைக்காத ம்மா உஷாக்கன்னு… ஒரு கேஸ் விஷயமா ஸ்டேஷன் போக வேண்டி இருந்தது. அங்க ஒரு பேச்சு ஓடிண்டுருந்தது., எவனோ வயசு பொண்ணுங்களாப் பாத்து ஏமாத்திண்ருக்கானாம். பின்னாலையே வந்து தொல்லப் பன்றானாம். சிலதெல்லாம்
பேப்பர்லையே வர்றது இல்லை… எவனாவது பெரிய அரசியல் கழிசடையோட புள்ளையா இருக்கும். நமக்கெதுக்கு அந்த பொல்லாப்பு… நீ ஜாக்ரதையா இருடியம்மா! எனக்கு இருக்கறதே ஒரே ஒரு கொழுந்து நீதான்”
“ஓ…… இதச் சொல்லத்தான் புருசனும் பொண்டாட்டியும் பில்டப் கொடுத்தீங்களாக்கும்! ரெண்டு கொழுந்து இருந்திருந்தா என்ன போனா போகுனு விட்டுருவியாக்கும்.
சே… டைம் வேஸ்ட், நான் வரேன்…”
“இல்லம்மா…” அப்பாவின் சொல்லைக் காதில் வாங்காமலே துள்ளிக் கொண்டு ஓடினால் உஷா. வரும் விபரீதம் புரியாமல்…
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Nice ud sir