Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 15

அத்தியாயம் – 15

ஜீவன் ஜாமீனில் வந்து இரண்டு வாரங்கள் முழுதாக முடிந்துவிட்ட நிலையில்… வீட்டு கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் பிரதிபலிக்கும் பலவிதமான உணர்வுகளை கவனித்தபடி அவன் தாய் சிவகாமியும் பாட்டியும் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.

 

பாட்டி சிவகாமியிடம் கண்ணை காட்டி “போய் பேசு…” என்று சொன்னார்கள். அவள் எழுந்து மகனை நெருங்கி அவன் தலையை கோதி “பிரகாஷ் என்னப்பா சொன்னான்…?” என்று தெரியாதது போல் கேட்டாள்.

 

அவன் தாயை நிமிர்ந்து பார்த்தான். கோபமுகத்துடன் “என்ன… தெரியாத மாதிரி கேக்கற…?” என்றான்.

 

சிவகாமி புன்னகைத்தபடி “என்னன்னு சொன்னாதானேப்பா எனக்கு தெரியும்…?” என்றாள்.

 

“எல்லாருமா சேர்ந்துதான் என் வாழ்க்கையை மொத்தமா பாழாக்கிட்டிங்களே…! இன்னும் எதுக்கு கல்யாணம் கன்றாவின்னு என் உயிரை எடுக்கரிங்க…?” என்று எரிந்து விழுந்தான்.

 

மூன்று மாதமாக சிவகாமி அவனுடைய திருமணத்தை பற்றி பேசும் பொழுதெல்லாம் அனல் பார்வையை மட்டும் பதிலாக கொடுத்துக் கொண்டிருந்தவன், இன்று தம்பியின் பேச்சை மீற முடியாமல்… அந்த கோபத்தையும் தாயிடமே காட்டினான்.

 

“இப்படியே எத்தனை நாள்தான் ஜீவா இருக்க முடியும்…? உனக்குன்னு ஒரு…” சிவகாமி முடிப்பதற்குள் ஜீவன் சீறினான்.

 

“போதும் நிறுத்தறியா உன் புராணத்த…? அதான் எனக்குன்னு இருந்தவளை…” என்று ஆரம்பித்தவன் பின் தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு “வேண்டாம்… நான் எதையும் பேச கூடாதுன்னு நினைக்கிறேன்… என்னை இப்படியே விட்டுடுங்க…” என்றான்.

 

உடனே பாட்டி சிவகாமியை அதட்டினார்கள். “உனக்கு புத்தியே கிடையாது சிவகாமி… நொந்து போயி இருக்க பிள்ளைகிட்ட இப்படியா பேசுறது…? இப்படி வா நா பேசிக்கிறேன் என் பேரன்கிட்ட…” என்று சொல்லிவிட்டு சிவகாமியை நகர சொல்லிவிட்டு பேரனை நெருங்கினார்கள்.

 

“ஜீவா… உன்னோட மனசு எனக்கு புரியுதுப்பா… ஆனா நீ வாழ்க்க முழுக்க இப்படியே இருந்துட முடியாதுடா…”

 

“என்ன பாட்டி நீயும் இப்படி சொல்ற…? எனக்கு எதுக்கு பாட்டி கல்யாணம்…?”

 

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுப்பா… தெரிஞ்சோ தெரியாமலோ அவ உன் தம்பிக்கு மனைவியாயிட்டா… இனி அவளை நீ உன் மனசுல கூட நினைக்கக் கூடாது”

 

“அதெல்லாம் இல்ல பாட்டி… நான் அவளை நினைக்கிறதே இல்ல…”

 

“அப்புறம் எதுக்குடா கல்யாணம் வேண்டாம்கற…? நீ இப்படி தனிமரமா நின்னா பிரகாஷு நிம்மதியா இருப்பானா… ”

 

“எனக்கு பிடிக்கவே இல்ல பாட்டி… பொண்ணுங்களை நினச்சாலே வெறுப்பா இருக்கு…”

 

“எதுக்கு வெறுக்கணும்…? எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரியா இருக்காங்க…? அது மட்டும் இல்ல… உன்னை வேண்டான்னுட்டு போனவளுக்கு முன்னாடி நீ தலை நிமிர்ந்து வாழ வேண்டாமா…? நீ ஆம்பள சிங்கம்டா… பொம்பள அவளே உன்ன உதறிட்டு உன் தம்பியை கல்யாணம் பண்ணிகிட்டா… நீ எதுக்குப்பா அவளை நெனச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்கற…? நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லு… அந்த புனிதாவே உன்னை பார்த்து பொறாமை படர அளவுக்கு உனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து நான் கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்…” என்று பாட்டி வீராவேசமாக பேசினார்கள்.

 

அவர்களுடைய குறி தப்பவில்லை. ‘அந்த புனிதாவே உன்னை பார்த்து பொறாமை படர அளவுக்கு…’ என்கிற வார்த்தைகளில் ஜீவனின் மனம் அசைந்தது… அவனுடைய கண்கள் கலங்கின.

 

“நிஜமாதான் சொல்றியா பாட்டி…” என்றான்.

“ஆமாப்பா… நெசமாத்தான் சொல்றேன்…”

 

“பாட்டி… அவளை விட நல்… நல்லா படிச்ச பொண்ணா பாரு பாட்டி… நல்லா அழகா இருக்கணும்… அவளை விட கலரா இருக்கணும்… அந்த கன்னம் கூட… அ… அழகா… பாட்டி… பம்கின் மாதிரி… ” என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் அமர்ந்திருந்த நிலையிலேயே பாட்டியின் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை கட்டிக் கொண்டு கதறி அழுதுவிட்டான்.

 

மகனின் அலறலை கேட்ட சிவகாமியும் பெருங்குரலெடுத்து அழ… பாட்டியும் தன் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீர் விட்டார்கள்.

###

ஜீவன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த மூன்று மாதங்களில் அவனுக்கு சுமாராகக் கூட ஒரு பெண் கிடைக்கவில்லை. காரணம்… இதுவரை அவன்  பெயரில் பதிமூன்று வழக்குகள் பதிவாகிவிட்டன. எல்லாம் வீண் வம்பு வழக்குகள்தான்.

 

ஒரு நாள் இவன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக குறுக்கே வந்துவிட்ட ஒரு மனிதனை நைய புடைத்துவிட்டான். இன்னொருநாள் பக்கத்து வீட்டுகாரன் தவறுதலாக இவன் வண்டியை நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டார் என்று அவரை வீடு புகுந்து பிரித்து மேய்ந்துவிட்டான். ஒரு நாள் மதுபான கடையில் ரகளை… இன்னொருநாள் தெரு மூலையில் இருக்கும் மளிகை கடையில் பிரச்சனை… என்று நாளுக்கொரு வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தான்.

 

பாட்டியும் சிவகாமியும் எவ்வளவு வேகமாக அவனுக்கு பெண் தேடினார்களோ அதைவிட வேகமாக அவனுடைய லீலைகள் ஊரில் தீ போல பரவிவிட்டதால் அவனுக்கு பெண் கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது.

 

சுமாரான பெண்ணே கிடைக்கவில்லை… இவனோ  புனிதாவைவிட எல்லா விதத்திலும் சிறந்த பெண்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான். ஆறு மாதகாலம் ஊரில் உள்ள பெண்களையெல்லாம் சல்லடை போட்டு சலித்தும் ஒரு பெண்ணும் சிக்காத நிலையில் கடைசியாக ஒருத்தி அவனுக்கு பொருத்தமாக கிடைத்தாள்.

 

ஜீவன் பவித்ராவின் புகைப்படத்தை பார்த்தான். சிறு வயது பெண்ணாக இருந்தாள். அவன் எதிர்பார்த்த அளவு அழகாக இல்லை என்றாலும் பெற்றோர் இல்லாத பெண் என்பதால் மனமிரங்கி பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டான். பெண் பார்த்தல்… நிச்சயதார்த்தம் போன்ற எந்தவிதமான முன் சடங்குகளும் இல்லாமல் நேரடியாக திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

 

ஜீவன் ஆர்வமே இல்லாமல் கடமைக்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்ததால் அவன் திருமண வேலைகள் எதிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல் எப்பொழுதும் போல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

 

பிரகாஷ் வெளிநாட்டில் இருந்தபடியே ஆட்களை ஏற்ப்பாடு செய்து  ஆக வேண்டிய வேலைகளை சிறப்பாக கவனித்தான். திருமண நாளும் நெருங்கியது. அவன் அண்ணனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டான்.

 

பிரகாஷும் புனிதாவும் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்களுக்கு பிறகுதான் அவன் புனிதாவை நேருக்கு நேர் சந்தித்தான். முன்பு போல் அவளை பார்த்ததும் அவன் ஆத்திரப்பட்டு கத்தவில்லை… கோபப்பட்டு முறைக்கவில்லை…  என்னை உதறிவிட்டாயே… என்று ஏங்கவில்லை. மாறாக ஏளனமாக  சிரித்தான்.

 

‘நீ ஒருத்திதான் பெண்ணா…! உன்னைவிட எல்லாவிதத்திலும் சிறந்த ஒருத்தி நாளை எனக்கு மனைவியாக போகிறாள்… பார்த்துக்கொள்…’ என்று அலட்சிய பார்வையை அவள் பக்கம் வீசினான்.

 

புனிதா அவனுடைய பார்வையை தவிர்க்க முயன்று சமையலறைக்குள் நுழைந்தாள். ஆனால் ஜீவன் விடுவதாக இல்லை…

“அம்மா… பவித்ரா நல்லா படிச்ச பொண்ணு இல்லம்மா….” என்று சமையலறை வாசலில் வந்து நின்று கொண்டு தாயிடம் பேச்சு கொடுத்தான்.

 

புனிதா வேலை செய்வது போல் சங்கடத்துடன் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். மகன் இளைய மருமகளை சீண்டுகிறான் என்பது சிவகாமிக்கு புரிந்துவிட்டது. இதை உடனடியாக தடுக்கவில்லை என்றாள் பிரச்சனை முற்றிவிடும் என்று நினைத்து…

 

“ஆமாப்பா… நீ போயி ஹால்ல உக்காரு நான் உனக்கு காபி கொண்டு வர்றேன்…” என்றாள்.

 

ஆனால் ஜீவன் நகரவே இல்லை. புனிதா வசமாக சமையலறையில் மாட்டிக் கொண்டாள். மாமியார் உடன் இருந்தாலும் அவளுக்கு அந்த சூழ்நிலை மிகவும் கடினமானதாக இருந்தது. அதை கவனித்த ஜீவன் இன்னும் குஷியாக பேச்சை ஆரம்பித்தான்.

 

“இரும்மா… என்ன அவசரம்…? எதுக்கு இப்ப என்னை விரட்டுற? பவி… நல்ல அழகு இல்லம்மா….!”

“ஆமாப்பா…” என்று சிவகாமியும் சூழ்நிலையை மற்ற முடியாமல் கைதி போல் மாட்டிக் கொண்டு தவித்தாள்.

 

“எதுக்கும்மா இப்படி முழிக்கிற..?” என்று புனிதாவை பார்த்தபடியே கேட்டுவிட்டு… தாயிடம் பார்வையை திருப்பி…”எவ்வளவு படிப்பு இருந்தாலும்… அழகு இருந்தாலும் பவிக்கு கொஞ்சம் கூட திமிரோ அகம்பாவமோ இல்லவே இல்லைம்மா…” என்று சிலாகித்தான்.

 

மகன் ஒரு முறை கூட அந்த பவித்ராவை பார்த்ததோ பேசியதோ இல்லை என்பதை அறிந்திருந்த சிவகாமி “ஆமாப்பா… நீ போயி பாட்டிய வர சொல்லு….” என்று பேச்சை மாற்ற முயன்றாள்.

 

“அட இரும்மா… நீவேற என்னை துரத்திகிட்டே இருக்க… இப்ப இருக்க பொண்ணுங்க எல்லாம் ரொம்ப விபரமா இருக்காளுங்கம்மா… படிச்ச மாப்பிள்ளைதான் வேணும்… சம்பாரிக்கிற மெஷின்தான் வேணும்… சொகுசான வாழ்க்கைதான் வேணும்… இதெல்லாம் கிடைக்கனுகரதுக்காக என்னென்ன தகிடுதத்தம் வேலையெல்லாம் செய்ராளுங்க… அப்பப்பா… நான் கூட அப்படி ஒரு பேய்கிட்ட மாட்டியிருப்பேன்ம்மா… நல்லவேளை தப்பிச்சேன்… அந்த வாழ்க்கை மட்டும் எனக்கு அமஞ்சிருந்தா…! ஐயையோ…! நினைக்கவே அருவருப்பா இருக்கு… ச்சீச்சி…” என்று முகத்தை சுளித்தான்.

 

அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் புனிதாவிற்கு சாட்டையடியாக இருந்தது. ஆனால் அவளால் பதில் பேச முடியவில்லை. தணல் மீது நிர்ப்பவள் போல் தவித்துக் கொண்டிருந்தாள். பிரகாஷ் வருவதற்குள் இவன் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது அவளுக்கு.

 

அவளுடைய தவிப்பை ரசித்தபடி ஜீவன் மேலும் பேசினான் “ஆனா நம்ம பவி தங்கம்மா… அவளுக்கு இந்த பணம்… படிப்பு… பந்தா… இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை… அவ மனசுக்கு மதிப்பு கொடுக்கறவ… இல்லம்மா…” என்று  அந்த பவித்ராவை புகழ்ந்து தள்ளினான்.

 

அவனை அந்த இடத்திலிருந்து நகர்த்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாமியாரையும் மருமகளையும் காப்பாற்ற பாட்டி வந்து சேர்ந்தார்கள். அங்கு இருந்தவர்களின் முகத்தை பார்த்தே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்கள் “டேய்… என்னடா பொம்பள மாதிரி சமையலரையில நிக்கிற…?” என்று ஒரு போடு போட்டார்கள்.

 

புனிதாவிற்கு முன் பாட்டி அவனை அவமதித்துவிட்டதில் எரிச்சலானவன் பாட்டியை முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.




Comments are closed here.

You cannot copy content of this page