Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-11

அத்தியாயம் – 11

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்

 

மற்றவர்களிடமெல்லாம் அதிகம் பேசாமல் இறுக்கமாகத் திரியும் ருத்ரன் அவளிடம் மட்டும் இலகுவாகக் கேலிப் பேசுவதையும் சிரித்து விளையாடுவதையும் மான்விழி மனதிற்குள் ரசித்தாலும் அவளுக்குள் இருந்த கோபமும் குழப்பமும் அதை வெளியே காட்டவிடாமல் தடுக்க, அவனிடம் வெறுப்பை விடாமல் காட்டிக்கொண்டே இருந்தாள்.

 

அப்படித்தான் இன்று விருந்து முடிந்து வீட்டிற்கு வரும் பொழுதும் அவனிடம் முகத்திலடித்தது போல் பேசினாள். ஒவ்வொரு முறையும் அவளுடைய அலட்சியத்தைத் தன்னுடைய சிரிப்பாலும் தேவைப்படும்போது கடுமையாலும் அடக்கிவிடும் ருத்ரன் இன்று பதில் பேசாமல் அமைதியாகிவிட்டது அவளைச் சங்கடமடைய வைத்துவிட்டது.

 

தன்னுடைய விருப்பமோ சம்மதமோ இல்லாமல் தந்தையிடம் எதையோ ஜெயிப்பதற்காகத் தன்னைத் திருமணம் செய்து கொண்டவன்தான் ருத்ரன் என்பதை மறந்துவிட்டு,

 

‘பாவம்… நான் ஒரு வார்த்தச் சொன்ன உடனே வாய மூடிட்டான்… யார்கிட்டயும் இப்படிப் பேச்சு வாங்கியிருந்திருக்க மாட்டான்… அதான் முகமே செத்துப் போச்சு…’ என்று கணவனுக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டே அன்றிரவு உறங்கினாள்.

###

 

அதேநேரம் வயலில் ருத்ரனும் மான்விழியைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தான். தான் என்ன காரணத்திற்காக அவளைத் திருமணம் செய்தோமோ, அது இந்த நிமிடம் வரை நடக்கவில்லையென்றாலும், ‘கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றுவிடாது…’ என்கிற நம்பிக்கையில் அந்தப் பிரச்னையை ஆறப்போட்டிருந்தான்.

 

சந்தர்ப்ப சூழ்நிலையால் அமைந்துவிட்ட திருமண வாழ்க்கை என்றாலும் அதை நிறைவாக வாழ நினைத்து, செயல்படுத்திக் கொண்டிருந்தான். தன்னுடைய முயற்சியில் வெற்றிப் பெற்றுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இன்றுதான் அதில் முதல் அடி விழுந்தது.

 

அத்தை வீட்டிற்குச் சென்று திரும்பியதிலிருந்து மனம் அமைதியை இழந்துவிட்டிருந்தது. காரணம், மான்விழி கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்தான்.

 

‘குடும்பத்தில் உள்ள அனைவரும் இவளைத் தங்கத் தாம்புலத்தில் வைத்துத் தாங்குகிறார்கள்… இவள் என்னடாவென்றால் அவர்கள் யாருமே நல்லவர்கள் இல்லை என்கிறாளே…!’

 

‘நான் இவளிடம் அன்பாகவே நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்துகிறாளே…! எப்பப் பார்த்தாலும் சிடுசிடுவென்று இருக்க நான் என்ன சிடுமூஞ்சியா…? இவளே ஒரு சிடுமூஞ்சிக் கழுதை… இவள் என்னைச் சிடுமூஞ்சிங்கறா… ஊரார் வீட்டில் வஞ்சனையில்லாமல் சிரிப்பவள் சொந்தவீட்டில் சிரிக்கவே மாட்டாளாம்…! கிராதகி…!’

 

தான் சதிச் செய்து அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம். அந்தக் கோபம் அவளுக்கு இருக்கத்தான் செய்யும் என்பதைப் புரிந்துகொள்ளாமல்… அவள் வேண்டுமென்றே சந்தோஷமாக இருக்க மறுக்கிறாள் என்பது போல் குற்றத்தை அவள் பக்கமே திருப்பினான் ருத்ரன்.

 

கோபமோ… ஆசையோ… என்ன காரணத்தினாலோ அவனுடைய எண்ணங்கள் முழுவதும் அவளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன.

 

‘சிரிக்கவில்லை என்றால் போயேன்…! எனக்கென்ன வந்தது…’ என்று உதறிவிட்டு எப்பொழுதும் போல் அவனுடைய வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை ருத்ரனால்.

 

எப்படியாவது அவளைச் சந்தோசப்படுத்திச் சிரிக்க வை என்று கூவி கொண்டேயிருந்த மனதின் இம்சைத் தாங்காமல் ஒரு முடிவுக்கு வந்து, விடிந்ததும் முதல் வேலையாக வீட்டிற்குக் கூடச் செல்லாமல் போர் செட்டிலேயே குளித்து உடை மாற்றிக்கொண்டு டவுனுக்குக் கிளம்பிவிட்டான்.

# # #

 

மான்விழிக்குத் தேவையான துணிமணி நகை இதர சாமான்கள் எல்லாமே வைதேகியும் ராஜியும் திருமணத் தினத்தன்றே இரவோடு இரவாக டவுனுக்குச் சென்று வாங்கிவந்து குவித்திருந்தார்கள். அதனால் ருத்ரன் தனிப்பட்ட முறையில் கைப்பேசியையும் புத்தகங்களையும் தவிரப் பெரிதாக மனைவிக்கு எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை.

 

அதனால் இன்று அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சிக் கொடுக்க முடிவு செய்து டவுனில் உள்ள நகைக்கடை ஒன்றில் நுழைந்து அவளுக்குக் கொடுக்க வேண்டிய பரிசுப்பொருள் எதுவென்று தேடி அவன் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த நேரம், மான்விழியின் தங்கை காவ்யா அவளுக்கு ஒரு துன்ப அதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஹலோ…” காவ்யாவின் குரல் மான்விழியின் கைப்பேசியில் ஒலித்தது.

 

“சொல்லு காவ்யா…”

 

“மானு… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…”

 

“என்ன சொல்லு…”

 

“அத்தான் உன்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு தெரியுமா…?”

 

தங்கை தீவிரமாகக் கேட்க, தமக்கை பரபரப்பானாள். அவள் தந்தையிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயத்தைப் பற்றி இப்பொழுது தங்கை தானாகப் பேச ஆரம்பித்ததும் ஏதோவொரு படபடப்பு…

 

“ஏன் காவ்யா… எனக்குத் தெரியிலையே…”

 

“நம்ம கலியபெருமாள் சித்தப்பாகிட்டையும்… நாராயணமூர்த்திச் சித்தப்பாகிட்டையும் அத்தான் பிரச்சனைப் பண்ணினாரே ஞாபகம் இருக்கா…”

 

“ஆமாம்…”

 



 

“கடசியா அவங்க ரெண்டு பேர்கிட்டயும் மிரட்டி நிலத்த எழுதி வாங்கிட்டாராம் மானு…”

 

“என்னடிச் சொல்ற…?”

 

“நெஜம்தான்… அதுமட்டுமில்ல… கோபாலண்ணன்கிட்டயும் தகராறு பண்ணியிருக்காரு…”

 

“என்னன்னு…?”

 

“அண்ணன் யாரோ ஒரு பொண்ண லவ் பண்ணுதாம்… அதத் தெரிஞ்சுக்கிட்ட அத்தான் திடுதுப்புன்னு போயி அந்தப் பொண்ண நிச்சயம் பண்ணத் தேதிக் குறிச்சுட்டாராம்”

 

“ஐயையோ…”

 

“அப்பறம் அந்தப் பொண்ணு அண்ணனுக்கு போன் பண்ணிப் பேசியிருக்கு… அண்ணன் அத்தான வந்து பார்த்து அவரோட பங்குக்குக் கொஞ்சம் நெலத்த எழுதிக் குடுத்துட்டு நடக்க இருந்த கல்யாணத்த தடுத்துரிச்சாம்…”

 

“அப்பறம்…”

 

“அதுக்கப்பறம் தான் நீ மாட்டிக்கிட்ட…”

 

“என்னடிச் சொல்ற நீ…?” மான்விழி நடுங்கிக் கொண்டே கேட்டாள்.

 

“மானு… அத்தான் நம்ம அப்பாகிட்டயும் நெலத்தக் கேட்டு மெரட்டுறாரு போலருக்கு…”

 

“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்…?”

 

“வீட்லதான் டெய்லிக் கூத்து நடக்குதே… அப்பறம் எப்படித் தெரியாம இருக்கும்…? அப்பா நெலத்த அத்தானுக்குக் குடுக்க மாட்டேங்கிறாரு… அம்மா குடுக்கச் சொல்லுது… நேத்து ஃபுல்லா வீட்டுல ஒரே தகராறு…”

 

“அம்மா எதுக்கு அப்பாகிட்ட சண்டப் போடுது…?”

 

“நெலத்த அத்தானுக்கு எழுதிக் குடுக்கலன்னா உன்ன நல்லா வச்சுக்க மாட்டாங்களோன்னு பயப்படுது… அதோட அத்தானும் நீயும் கல்யாணம் முடிஞ்சதுலேருந்து இங்க வரவே இல்லைல்ல… அதான் அக்கம் பக்கத்துலயெல்லாம் கண்டபடிப் பேசிக்கிறாங்க போல… அதெல்லாம் அம்மா காதுக்கு வந்துருது… அம்மா டென்ஷனாகி அப்பாவக் காச்ச ஆரம்பிச்சுடுது… அவருக் கடுப்பாயி அம்மாவ அடுச்சுப்புடுறாரு…”

 

மான்விழியின் விழிகள் கோபத்தில் சிவந்துவிட்டன.

 

“சரி காவ்யா… நீ கவலைப்படாத… இந்தப் பிரச்சனைய நான் பார்த்துக்கறேன்…” என்று தங்கைக்குச் சமாதானம் சொல்லி கைப்பேசியை அணைத்துவிட்ட மான்விழி… கணவனைக் கடித்துக் குதறிவிடும் வெறியில் அமர்ந்திருந்தாள்.

# # #

 

பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் டவுனிலிருந்து ஊர் திரும்பிய ருத்ரன் பசிக்கும் வயிற்றைப் பொருட்படுத்தாமல் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த துடிக்கும் மனதிற்கு முன்னுரிமைக் கொடுத்து வீட்டிற்குள் நுழையும்பொழுதே திண்ணையில் அமர்ந்திருந்த வள்ளி பாட்டியிடம்…

 

“ஆச்சி… அவ எங்க…?” என்றான்.

 

“யாரப்பா கேக்குற… மானையா…? ”

 

“ஆமாம்… கூப்ட்டு மேல வரச் சொல்லு…” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.

 

சிறிதுநேரத்தில் திரைசீலையை விளக்கிக் கொண்டு அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள் மான்விழி,

 

“என்ன வரச் சொன்னிங்களாம்…?” என்று அலட்சியமான முகபாவனையுடன் கேட்டாள்.

 

“அத அங்க நின்னுக்கிட்டேதான் கேக்கணுமா…? இப்படி வந்து உட்காரு…” என்று கட்டிலில் தனக்கருகில் இடம் ஒதுக்கிக் காட்டினான்.

 

“அதெல்லாம் வேண்டாம்… எனக்குக் கீழ வேலை இருக்கு… எதுக்குக் கூப்டிங்கன்னு சொல்லுங்க…” அவள் வெடுக்கென்று சொல்ல அவன் தனக்குள் எழுந்த எரிச்சலைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு,

 

“சரி… இந்தா… பிடிச்சிருக்கா பாரு..” என்று அவளிடம் ஒரு நகைப்பெட்டியை நீட்டினான்.

 

அதைக் கையில் வாங்காமலே ‘என்னதிது…” என்றாள் முகத்தைச் சுளித்துக் கொண்டு.

 

இப்போது அவனுக்குள் மூண்ட எரிச்சலை அடக்கமுடியாமல்,

 

“ஒரு பொருளக் கொடுத்தா அதைக் கையில வாங்கணும்கற அடிப்படை அறிவுக் கூட இல்லையா உனக்கு…” என்றான் சுள்ளென்று.

 

அவளுக்கும் பயங்கரமாக ஆத்திரம் வந்தது… “யார் எதைக் குடுத்தாலும் வாங்கிட முடியுமா…? என்னன்னு கேட்டா சொல்ல வேண்டியதுதானே…!” என்று கடுகடுத்தவள் அவனுடைய முறைப்பை அலட்சியம் செய்யமுடியாமல் அவன் கையிலிருந்து வெடுகென்று பிடுங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

 

நெக்லஸ், கம்மல், மோதிரம், ப்ரேஸ்லெட் என்று அழகிய நகைசெட் ஒன்று உள்ளேயிருந்து மினுமினுத்தது. அதன் அழகில் கொஞ்சமும் கவரப்படாமல்,

 

“ம்ம்ம்… வாங்கியாச்சு… பார்த்தாச்சு… அடுத்து என்ன…?” என்றாள் வெறுப்புடன்.

 

“ஏன்டி… என்னதான்டி நெனச்சுட்டு இருக்க நீ…? நேத்து என்னவோ அன்பு இல்ல அவரைக்கா இல்லன்னு மூக்கால அழுத……” அவன் பேசி முடிப்பதற்குள் இவள் இடையிட்டாள்.

 

“ஓஹோ… அதனாலதான் உங்க அன்ப நிரூபிக்க இத வாங்கிட்டு வந்திங்களாக்கும்…?” ஏளனம் தெறித்தது அவளுடைய பேச்சில்.

 

அவன் அவளைப் பஸ்பமாக்கிவிடுவது போல் முறைத்தான்.

 

“உம்பேச்சுக்கு மதிப்புக் குடுத்து வேல மெனக்கெட்டு டவுனுக்குப் போயிக் கடைகடையா ஏறி எறங்கி இத வாங்கிட்டு வந்தேன் பாரு… என்ன சொல்லணும்… உன்னையெல்லாம் தட்டி வைக்கலன்னா தலைமேல ஏறி உக்காந்துருவங்கறது சரியாத்தான் இருக்கு… திமிர் புடிச்சக் கழுத…”

 

“ஹலோ… போதும் கொஞ்சம் நிறுத்தறிங்களா…? நா திமிர் பிடிச்சக் கழுதையா…? அப்ப நீங்க யாரு…? திமிரு… அகம்பாவம்… பேராச… எல்லாமே பிடிச்சக் கழுத நீங்கதான்…”

 

அடுத்தநொடி ஜிவ்வென்று எரியும் கன்னத்தைக் கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். கண்களில் பூச்சி பறந்தது. சில கணங்கள் தன்னை நிதானப்படுத்தித் திகைப்பிலிருந்து மீண்டவள் அவன் தன்னை அடித்துவிட்டான் என்கிற ஆத்திரத்தில் பொங்கினாள்.

 

“ஏய்… என்ன அடிக்கிற…? உண்மையச் சொன்னா கை நீட்டுவியா…?” முன்னெச்சரிக்கையாக அவனிடமிருந்து சிறிது விலகி நின்றபடிப் பேசினாள்.

 

“இங்க பாரு… மரியாதையா இதோட வாய மூடிக்க… இல்லன்னா என்ன நடக்குமுன்னு தெரியாது…” அவன் கடுமையான முகபாவனையுடன் எச்சரித்தான்.

 

“என்னய்யா நடக்கும்… அடிப்பியா…? எங்க இன்னொரு தடவ அடி பார்க்கலாம்… கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம ஊர்ல இருக்கவன் சொத்தையெல்லாம் மெரட்டி ஓசில எழுதி வாங்குற உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா… நேர்மையா நடந்துக்கற எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்…?”

 

“ஏய்… எவன்ட்டடி நான் ஓசில சொத்த எழுதி வாங்கினேன்… விஷயம் தெரியாம உளர்ன… கொன்னே போட்டுடுவேன்…” என்று பாய்ந்து வந்து அவள் கழுத்தைப் பிடித்துவிட்டான்.

 

அப்போதும் அவள் அசரவில்லை. “கிழிச்ச… என்ன கொன்னுப் போட்டுட்டு எங்க அப்பாகிட்ட எப்படி நெலத்த எழுதி வாங்குவ…? செ… செத்தாலும் அந்த நில….த்த உனக்குக் கிடை….க்கவே விடமா…ட்…டே…ன்…” அவள் பேசப்பேச அவனுடைய பிடி இறுகியது.

 

காலையிலிருந்து பட்டினியாக இருந்த வயிறும், வெயிலில் அலைந்த களைப்பும்… அவள் பேசிய துடுக்கான வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்ள விடாமல் அவனுடைய கோபத்தைக் கிளறிவிட நொடியில் மிருகமாக மாறி அவளைத் தாக்கிவிட்டான்.

 

ஒருகட்டத்தில் அவளுக்கு மூச்சுவிட முடியாமல் தொண்டையடைக்க இருமலும் கண்ணீருமாக அவள் பயந்து போய் மிரண்டு விழித்தாள்.

 

அரண்டுப்போயிருந்த அவளுடைய தோற்றம் அவனை இளக்க “என்ன கொலைகாரனாக்காத… போய்டு…” என்று அவளைக் கட்டிலில் தள்ளி விட்டுவிட்டு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

 

ருத்ரன் கோபமாக வெளியேறிய பிறகு, உடல்வலியை மீறி அவன் தன்னைக் கைநீட்டி அடித்துவிட்டான் என்கிற ரோஷத்தைத் தாங்கமுடியாமல் அழுதுத் தீர்த்தாள் மான்விழி. அரை மணிநேரம் கழிந்திருக்கும்… அறை வாசலிலிருந்து வேலைக்காரப் பெண்ணின் குரல் கேட்டது…

 

“அக்கா… மானக்கா… யக்கோவ்… பெரியாத்தா உங்களக் கூட்டியாரச் சொன்னிச்சுக்கா…”

 

“ம்ம்ம்…. வர்றேன்…” கம்மிப் போன குரலில் பதில் கொடுத்துவிட்டு எழுந்து சென்று கண்ணாடியைப் பார்த்தாள்.

 

கன்னத்திலும் கழுத்திலும் கைவிரல் பதிந்திருந்தது… கண்கள் அழுததால் சிவந்து வீங்கியிருந்தது.

 

அவள் எதையும் திருத்தி மறைக்க விரும்பவில்லை.

 

ஈக்குத் தலையில் விஷம், தேளுக்குக் கொடுக்கில் விஷம்உங்க பேரனுக்கு உடம்பெல்லாம் விஷம் பாருங்க உங்க அருமைப் பேரனோட லட்சணத்தை…’ என்று சொல்லாமல் சொல்லி பாட்டியின் முன் அவனைக் குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்கிற வேகத்தில், முகத்தைக் கூடக் கழுவாமல் அப்படியே படியிறங்கிக் கீழே வந்தாள். வந்தவள் அதிர்ந்து போய் மானசீகமாகத் தலையில் கைவைத்துக் கொண்டாள்.




Comments are closed here.

You cannot copy content of this page