Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-12

அத்தியாயம் – 12

அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுதுத் தொலைக்கவேண்டும்.”

 

உள்ளூரில்தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். அவளும் பிறந்த வீட்டிற்கு வருவதில்லை. நாமும் அவளைச் சென்று பார்ப்பதில்லை. இப்படியே எத்தனை நாட்களுக்கு இருக்கமுடியும் என்று நினைத்து மான்விழியைப் பார்க்க வந்திருந்தார்கள் சிதம்பரம் தம்பதியர்.

 

வேலைக்காரப் பெண் ஆச்சி கூப்பிட்டதாகச் சொன்னதால் அலங்கோலமான தோற்றத்துடனேயே மாடியிலிருந்து இறங்கிய மான்விழி ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோரைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டாள்.

 

மகளின் கோலத்தைக் கண்டு “மானு… என்னடி அச்சு…?” என்று தாய் பதற்றத்துடன் எழுந்து ஓடி அவளை ஆராய… தந்தை திகைப்பு நீங்காமல் விதிர்த்துப் போய் நின்றார்.

 

ருத்ரனின் குடும்பத்திற்கும் அதிர்ச்சிதான். “என்ன தாயி ஆச்சு… ஏ(ன்) இப்புடி இருக்க…?” என்று பாட்டி விசாரிக்க… மாமியார் ஓரகத்தி எனப் பெண்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்துவிட்டார்கள்.

 

மான்விழிக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. அவர்களுடைய அன்பில் நெகிழ்ந்தவள் அழுதுவிட்டாள்.

 

“என்ன ஆச்சு…? எதுக்கு அழுவுற…? சொல்லு…?” என்று பிடிவாதமாகக் கேட்டப் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.

 

“ஒன்னுல்ல… ரொம்ப நாள் கழிச்சு உங்களப் பார்த்ததும் அழுதுட்டேன்…” என்று பெற்றோரிடம் சொல்லிச் சமாளித்தாள்.

 

ஒருவர் கூட அதை நம்பவில்லை. பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் மான்விழிக்கு ஏனோ அந்த ராட்சசனை அவர்களிடம் விட்டுக் கொடுக்க முடியவில்லை. அவனுடைய குடும்பத்தின் முன் அவனைக் குற்றவாளியாக நிற்க வைக்கத் துணிந்தவளுக்கு, அவளுடைய பெற்றோருக்கு முன் அவனைக் குற்றவாளியாக நிறுத்த மனம் வரவில்லை. அதற்காகத் தன்னைத் தானே நொந்து கொண்டு,

 

“எங்க ரெண்டுபேருக்கும் ஒரு சின்னச் சண்டைம்மா… அவர் அடிச்சிட்டார்… நானும் நாலு போடு போட்டேன்… வாங்கிக்கிட்டு மனுஷன் ஓடிட்டார்…” என்று தாயிடம் தனியாகச் சிரித்துக் கொண்டே சொல்லிச் சமாளித்தாள்.

 

பெற்றவளுக்கு மகளின் சிரிப்புக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் அவள் சொல்வதை முழுவதும் நம்ப முடியவில்லை. முகத்திலும் கழுத்திலும் பதிந்திருந்த விரல்தடங்கள் அந்தத் தாய்க்கு ஆயிரம் கதைகளைக் கற்பனைச் செய்துகொள்ள வழிவகுத்தது.

 

மகிழ்ச்சியும் உற்சாகமுமாக மகளைப் பார்க்க வந்தவர்கள் சோர்ந்துப் போய் வீடு திரும்பினார்கள்.

###

 

அன்றிரவு வயலிலிருந்து வந்து வாசலில் வண்டியை நிறுத்திய ருத்ரன் நேராகக் கிணற்றங்கரைக்குச் சென்று கைகால் கழுவிவிட்டு உணவுக்கூடத்திற்குள் நுழைந்தான். காலையிலிருந்து சாப்பிடாததால் சரியான பசி அவனுக்கு.

 

“சாப்பாடு எடுத்து வைம்மா…” அம்மாவிடம் சொல்லிவிட்டு டைனிங் டேபிளுக்கு முன் அமர்ந்தவன் “மான்விழி சாப்பிட்டாளாம்மா…?” என்று விசாரித்தான்.

 

“ம்ம்ம்…” என்று முனகலாகப் பதில் சொல்லிவிட்டு வைதிகி உம்மென்ற முகத்துடன் உணவுப் பரிமாறினாள்.

 



 

பீமன் வீட்டில் இல்லை. தேவன் மாடியில் அவனுடைய அறையில் இருக்கிறானோ என்னவோ… ஆளையே காணும். அண்ணி கூடச் சமையலறையிலிருந்து வெளியே வரவில்லை. பாட்டி வெற்றிலையை மென்றபடி டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

எப்பொழுதுமே அவனிடம் அனைவரும் அளவோடுதான் பேசுவார்கள் என்றாலும் இன்று ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான். அந்த அமைதியைக் கலைக்க எண்ணி,

 

“பிள்ளைங்க எங்கம்மா…?” என்று சாப்பிட்டுக் கொண்டே அண்ணனின் குழந்தைகளைப் பற்றி விசாரித்தான்.

 

“தூங்கிருச்சுங்க…” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மீண்டும் வாயை மூடிக்கொண்ட தாயை யோசனையுடன் பார்த்தான் மகன்.

 

அதே நேரம் டிவி சீரியல் கதாநாயகியை நாயகன் கன்னத்தில் அறைந்தான்.

 

அறிஞ்சறிஞ்சு செய்ற பாவத்தை அழுதழுது தொலைக்கணும்டா பாவிப் பயலே…! பொட்டப் புள்ளைய அடிக்கிறியே… தேவலாமாடா இது…? (பெண்ணை அடிக்கிறாயே… முறையா இது…?) உங்கப்ப(ன்)… ஆத்தா நல்ல புத்திச் சொல்லி உன்ன வளக்கலையோ…” என்று பாட்டி டிவியைப் பார்த்துப் பொரிந்து கொண்டிருக்க, இங்கே ருத்ரனுக்குப் புரையேறிவிட்டது…

 

தலையில் தட்டிக்கொண்டு மடமடவெனத் தண்ணீரைக் குடித்தவன், பாட்டியை எரிச்சலுடன் பார்த்து…

 

“ஆச்சி… என்ன அங்க பொலம்பிக்கிட்டு இருக்க… நீ பேசுறது அங்க டிவில இருக்கவனுக்குக் கேக்குமுன்னு நெனச்சியா…?” என்று சீறினான்.

 

“அட என்ன ராசு நீ… அவனுக்குக் கேக்கலன்னா கெடந்துட்டுப் போவுது… நா எம்மன சாந்திக்குப் பேசிகிட்டுருந்துட்டுப் போறேன் விடு…”

“……………………..”

 

“கட்டிக்கிட்டு வந்த பொண்ணக் கை நீட்டி அடிக்கிறவனெல்லாம் ஒரு ஆம்பளையா நீயே சொல்லு…? நல்ல குடும்பத்துலப் பொறந்த எவனாச்சும் கட்டுன பொண்டாட்டிகிட்ட கை நீட்டுவானா…? அட அவ்வளவு எதுக்கு ராசா… நீயுந்தான் கல்யாணமானவன்… குடும்பஸ்தன்… ஆயிரம் பிரச்சனையோட அல்லாடிக்கிட்டு இருக்க… இருந்தாலும், உம் பொண்டாட்டிய ஒரு வார்த்தப் பேசியிருப்பியா… இல்ல அடிச்சிருப்பியா…?” பாட்டி ஏற்றிய வாழைப்பழ ஊசியில் அவனுக்கு உணவுத் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டது.

 

‘ஆச்சிக்குத் தெரிஞ்சிருக்குமோ…! இல்ல எதார்த்தமாத்தான் பேசுதா…? தெரிஞ்சிருந்தா நேரடியா கேட்டுருக்குமே…!’ என்று பலவிதமாகச் சிந்தித்துக் கொண்டே அவசரமாக வயிற்ரை நிரப்பிக்கொண்டு மாடியேறித் தன்னுடைய அறைக்கு ஓடினான்.

###

 

மான்விழி நல்ல உறக்கத்தில் இருந்தாள். குழந்தை போல் சுருண்டு படுத்திருந்தவளின் முகத்தில் இப்போது அடிவாங்கிய தடம் எதுவுமில்லை என்றாலும் லேசாக வீங்கியிருந்த அவளுடைய முகம் அவனுடைய குற்றவுணர்ச்சியை அதிகப்படுத்தியது.

 

‘ச்ச… கை நீட்டிட்டேனே…’ என்று நினைக்கையில் சுருக்கென்ற வலி அவன் மனதைத் தைத்தது.

 

‘அவ்வளவு வேகமா அடிச்சிருக்கக் கூடாது… ரொம்ப வலிச்சிருக்கும்… பாவம்… எப்படித்தான் தாங்கினாளோ…’ என்று அவளுக்கருகில் அமர்ந்துக் கன்னத்தை வருடினான்.

 

‘ஒரு சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டான்னா… நமக்கு அப்படி என்ன கோவம்…’ என்று தன்னைத் தானே சாடிக் கொண்டான்.

 

‘மன்னிச்சுடு மான்விழி… நான் மனுஷனே இல்ல… உன்ன போய் அடிச்சுட்டேனே…!’ என்று கலைந்துக் கிடந்த அவளுடைய கேசத்தை காதோரம் ஒதுக்கியவன் நெற்றியில் காதலுடன் இதழ்பதித்துப் பின் விலகி தன்னுடைய படுக்கையைத் தரையில் விரித்துப் படுத்துக்கொண்டான். மனைவியைக் காயப்படுத்திவிட்ட வருத்தத்துடனேயே அன்றைய இரவைக் கழித்தான்.

###

 

அன்று சிதம்பரம் மருமகனைச் சந்திக்க மீன்குளத்திற்கு வந்திருந்தார். மீன் குஞ்சுகளுக்குத் தீனிப் போட்டுக் கொண்டிருந்த ருத்ரன் மாமனாரைப் பார்த்ததும்,

 

“வாங்க மாமா… என்ன இந்தப் பக்கம்… வீட்டுக்கு வந்திருக்கலாமே…” என்று வரவேற்றான்.

 

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… அதான் இங்க வந்தேன்”

 

அவருக்கு ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைக் காட்டி அமரச் சொல்லிவிட்டு வாய்க்காலில் கைகாலைக் கழுவிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து “சொல்லுங்க மாமா…” என்றான்.

 

“நாலாங்கர நெலத்த உங்க பேர்ல மாத்திக் குடுத்துடலாமுன்னு முடிவு பண்ணியிருக்கேன்…” என்றார்.

 

“என்ன திடீர்ன்னு…?”

 

“முந்தா நேத்து உங்க வீட்டுக்கு வந்திருந்தேன்…” என்று சொல்லிவிட்டுத் தயங்கினார்.

 

ருத்ரன் புருவம் சுருக்கி அவரைப் பார்த்தான். ‘என்ன சொல்றாரு இந்த மனுஷன்… முந்தா நேத்துன்னா…’ அவன் மேலே யோசிப்பதற்குள் அவர் குறுக்கிட்டார்.

 

“எம்பொண்ணு பச்சப்புள்ள மாப்ள… எம்மேல இருக்கக் கோவத்த அதுங்கிட்டக் காட்டாதிங்க…”

 

ருத்ரனுக்குச் சட்டென விபரம் விளங்கிவிட்டது. ‘அப்படின்னா… எனக்கும் மானுக்கும் நடந்த பிரச்சனை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு… ஆச்சி கூட ஒன்னும் தெரியாதமாரி என்னமா ஜாடப் பேசினிச்சு…’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“நா இதுவரைக்கும் சம்பாதிச்சது… இனி சம்பாதிக்கப் போறது எல்லாமே எம் மகளுகளுக்குத்தான். அதுங்களுக்கு நிம்மதி குடுக்காத அந்த நெலம் எனக்கெதுக்கு… உங்களுக்கே எழுதிக் கொடுத்தடறேன்… எம்பொண்ண மட்டும் கண்கலங்க வச்சுடாதிங்க…” அவர் உருக்கமாகப் பேச ருத்ரன் அவசரமாக இடையிட்டான்.

 

“நீங்க தப்பா நெனச்சுட்டிங்க. அன்னிக்கு எனக்கும் மான்விழிக்கும் நடந்த பிரச்சனைக்கு இந்த நிலம் காரணமில்ல… இந்த நெலத்தக் காரணம் கட்டி உங்க பொண்ண நான் கஷ்டப்படுத்துவேன்னு நீங்க பயப்படவேண்டாம். கெளம்புங்க…”

 

“இல்ல… அன்னிக்கு என்ன பிரச்சனை நடந்திருந்தாலும் எம்பொண்ணு மேல நீங்க கை வச்சிருக்கக் கூடாது…”

 

“தப்புதான்…”

 

“இல்ல மாப்ள… உங்களுக்கு எம்மேல இருக்கக் கோவத்த உங்கள மீறி மானுகிட்டக் காட்டிடுவிங்க… அதுக்காகத்தான்…”

 

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது… நீங்க கவலைப்படாதிங்க… அந்த நிலத்துக்காகத்தான் உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணினேன். ஆனா அது தப்போன்னு இப்பத் தோணுது…”

 

பிரச்சனை நடந்த நாளிலிருந்து மான்விழி ருத்ரனிடம் சுத்தமாகப் பேசுவதே இல்லை. அவனாக ஏதாவது கேட்டாலும் பதில் சொல்வதில்லை. அவள் அவனை ஒதுக்குவது அவன் மனதிற்குக் கஷ்டமாக இருந்தாலும் அவனால் ஓரளவுக்கு மேல் இறங்கிப் பேச முடியவில்லை.

 

அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று அவன் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் சிதம்பரம் நிலத்தை எழுதித் தருகிறேன் என்று வந்து நிற்கிறார்.

 

ஏற்கனவே நம் மீது பயங்கரக் கோபத்தில் இருக்கிறாள். ‘செத்தாலும் அந்த நிலத்தை உனக்குக் கிடைக்கவே விடமாட்டேன்’ என்று சபதம் வேறு செய்திருக்கிறாள். இந்த நேரத்தில் அவளுடைய சபதத்தைத் தவிடுப் பொடியாக்கிவிட்டு ‘நிலத்தைக் கைப் பற்றிவிட்டேன்…’ என்ற வெற்றியோடு அவள் முன் சென்று நின்றால் என்னாகுமோ… என்று மான்விழியின் கோபத்தை எண்ணி ஆளானப்பட்ட ருத்ரனே பயந்துபோய் நிலத்தை வேண்டாமென்று மறுத்தான்.

 

“மாப்ள…!” சிதம்பரம் ஆச்சர்யப்பட்டார்.

 

“அந்த நெலம் கட்டாயம் எனக்கு வேணும்தான்… ஆனா மான பணயமா வச்சு அத உங்ககிட்டேருந்து நான் வாங்க மாட்டேன்… நீங்க கெளம்புங்க…”

 

“இல்ல மாப்ள… இந்த நெலத்தால எனக்கும் வீட்டுல நிம்மதி இல்ல… உங்க மாமியாருக்கும் எனக்கும் தெனமும் சண்டைதான். இத உங்ககிட்ட ஒப்படைச்சா தான் எனக்கு நிம்மதி… மறுக்காம வாங்கிக்கங்க…” அவர் இறங்கி வந்து பேசினார்.

 

அவர் இவ்வளவு தூரம் சொன்னதற்குப் பிறகும் மனைவியின் கோபத்திற்குப் பயந்தால், நூறு குடும்பத்திற்கு நல்லது செய்ய முடியாது என்று மனதைத் தேற்றிக் கொண்டு எல்லாக் கோபத்தையும் ஒன்றாகச் சேர்த்து வைத்துச் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று நினைத்து நிலத்தை விலைப் பேசினான்.

 

“நெலத்துக்கான பணத்த வாங்கிக்கிட்டு எழுதிக் குடுங்க…” என்று ஒத்துக் கொண்டான்.

 

மாப்பிள்ளையிடம் நிலத்திற்கு ஈடாகப் பணம் வாங்க விருப்பமில்லை என்றாலும் அவனுடைய வார்த்தையை மதித்து ஒத்துக்கொண்டார் சிதம்பரம்.

 

நாளைக்கே பத்திரப்பதிவை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.

 

# # #

மான்விழி அவளுடைய தாய்வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்தாள். காவ்யாதான் எடுத்தாள்.

 

“காவ்யா… நல்லா இருக்கியா…?”

 

“நல்லா இருக்கேன் மானு… நீ எப்படி இருக்க?”

 

“ம்ம்ம்… அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க…? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே…?”

 

“அதெல்லாம் ஒன்னுமில்ல மானு… நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். இனி உனக்கும் பிரச்சனை இருக்காது…” காவ்யா மகிழ்ச்சியாகச் சொன்னாள்.

 

அவள் ஏதோ சொல்கிறாள் என்று “ம்ம்ம்” போட்டுவிட்டு “அம்மாவக் கூப்பிடு…” என்றாள் மான்விழி.

 

“அம்மாவா… அம்மாவும் அப்பாவும் டவுனுக்குப் போயிருக்காங்களே… உனக்குத் தெரியாதா…?”

 

“எனக்கு எப்படிடி தெரியும்?”

 

“அத்தானும் தானே போயிருக்காரு. இன்னிக்கு நம்ப நாலாங்கர நெலம் அத்தான் பேருல பதிவாகுது. அத்தான் சொல்லலையா உன்கிட்ட?” தங்கை ஆச்சர்யமாகக் கேட்க,

 

“என்னது…!” என்று அதிர்ந்தாள் அக்கா.

 

“மானு… என்ன ஆச்சு…?”

 

“யாரு… யாருடி அந்தாளுக்கு நெலத்தக் குடுக்கச் சொன்னது…?”

 

“தெரியலையே மானு… அப்பாவும் அம்மாவும் சேர்ந்துதான் குடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க போல… ரெண்டு பேருமே சந்தோஷமாத்தான் கெளம்பிப் போனாங்க… நீ எதுக்குடி இப்படிக் கத்துற…? அத்தான வேற அந்தாளு இந்தாளுங்கற?” தங்கையின் பேச்சில் எரிச்சலடைந்தவள்,

 

“ப்ச்… வைடி போனை முதல்ல…” கடுப்படித்துவிட்டு போனை அணைத்துவிட்டாள்.

 

அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு அவளுடைய கழுத்தைப் பிடித்து நெரித்தவன் இன்று அவளுடைய தந்தையிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றிவிட்டான்.

 

‘அவ்வளவு பெரிய சண்டியராடா நீ… இப்படிச் சண்டித்தனம் பண்ணித்தான் இவ்வளவு சொத்தையும் சேர்த்து வச்சிருக்கியா… உன்ன சும்மா விடமாட்டேன்டா…’ என்று கருவினாள்.




Comments are closed here.

You cannot copy content of this page