Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-14

அத்தியாயம் – 14

 

மகளைக் கையில் சுமந்து கொண்டு, தேயிலை தோட்டங்களுக்கும் காட்டு மரங்களுக்கும் இடையில் போடப்பட்டிருந்த சாலையில் இறங்கி நடந்தான் கார்முகிலன். வண்ணப் பூக்கள்… குட்டி அருவிகள் என்று மகளுக்கு வேடிக்கைக் காட்டியபடி மெல்ல நடந்து செல்வது மனதிற்கு இதமாக இருந்ததால் நேரம் தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்.

 

ஆரம்பத்தில் அனைத்தையும் உற்சாகமாகப் பார்த்து ரசித்துச் சிரித்த குழந்தை… நேரமாக ஆகச் சோர்ந்து ஒரு கட்டத்தில், “ப்பா… ம்மா… ப்பா… ம்மா…” என்று அவன் முகத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி… தாயைக் கேட்டுச் சிணுங்க ஆரம்பித்தது. அப்போது தான் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டும் என்கிற நினைவே வந்தது அவனுக்கு.

 

அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சேரும்போது லேசாக இருட்டத் துவங்கியிருந்தது. மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். ஐந்து மணி கூட ஆகவில்லை.

 

‘இவ்வளவு சீக்கிரம் இருட்டிடுச்சே…’ – என்றபடி அறைவாசலை அடைந்தவன், கதவு மூடியிருந்ததால் அழைப்புமணியை அழுத்தினான். மதுமதி கதவைத் திறக்கவில்லை. ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கா…!’ என்று நினைத்து மீண்டும் அழுத்தினான். உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

 

பாக்கெட்டில் இருந்த சாவியைத் துழாவி எடுத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். ஹாலில் மதுமதியைக் காணவில்லை. ‘தூங்கிட்டா போலருக்கு…’ என்று நினைத்தபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அங்கும் அவளைக் காணாது பால்கனி மற்றும் குளியலறைக் கதவுகளையும் வேகமாகத் திறந்து பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட்டன.

 

‘தோட்டத்துல இருப்பாளோ…!’ – அதற்குமேல் யோசிக்க விடாமல் குழந்தை வேறு “ம்மா… ம்மா…” என்று அம்மாவைக் கேட்டு அழ ஆரம்பித்தது.

 

“ஒண்ணும் இல்லடா பொம்மு… அம்மா இப்போ வந்திடுவா… அழாதீங்கடா செல்லம்…” என்று மகளைச் சமாதானம் செய்ய முயன்றவன் குழந்தையோடு வெளியே வந்து தோட்டத்திற்குள் நுழைந்து அங்குமிங்கும் மனைவியைத் தேடினான். எங்குமே அவள் இல்லை… குழந்தையின் அழுகை அதிகமாக ஆரம்பிக்க அவன் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தான்.

 

‘எங்க போய்த் தொலைச்சா…!’ என்று பயங்கர எரிச்சலோடு நினைத்தவன் ரிசப்ஷன் பக்கம் சென்று பார்க்கலாம் என்று வந்தான்.

 

வாசலில் நின்று கொண்டிருந்த ஹோட்டல் கார் டிரைவர் டேனியல் “என்னாச்சு சார்..? குழந்தை ஏன் இப்படி அழுகுது..?” என்றார் தமிழில். இடுக்கி மாவட்டத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்களில் அவரும் ஒருவர். கார்முகிலன் அந்த ஹோட்டலுக்கு வந்த முதல் நாளே அவருடன் ஒருமுறை பேசியிருக்கிறான். அந்தப் பழக்கத்தில் தான் அவர் அவனிடம் இயல்பாகக் கேட்டார்.

 

“அவ அம்மாவைப் பார்க்கணும்னு அழறா…”

 

“மேடம் இந்தப் பக்கம் போனாங்க சார்…” – என்று வாசல்பக்கம் கை காட்டினார்.

 



 

“இந்தப் பக்கமா…!” அவன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.

 

“ஆமாம் சார்… இந்தப் பக்கம் தான்…” அவர் உறுதியாகச் சொன்னார்.

 

“நான் இப்போ தானே வெளியே இருந்து வந்தேன்… அவளை எதிர்ல பார்க்கலையே…! எப்போ போனா..?” – படபடப்புடன் கேட்டான்.

 

‘இருட்டற நேரத்துல எதுக்கு வெளியே போனா…!’ – ஏனோ அவன் உள்ளம் பதறியது.

 

“ஒரு பத்து நிமிஷம் இருக்கும் சார்… நீங்க எந்தப் பக்கம் போயிருந்தீங்க..?”

 

ஹோட்டல் வளாகத்திலிருந்து வெளியே வந்தால்… இரண்டு பக்கங்களிலும் சாலை போகும். கார்முகிலன் குழந்தையுடன் வலதுபக்க சாலையில் நடந்துவிட்டு வந்தான். அதனால் “இந்தப் பக்கம் போயிருந்தேன்…” என்று அவன் வந்த திசையைக் கைகாட்டினான்.

 

“அப்போ மேடம்… இந்தப் பக்கம் போயிருப்பாங்கன்னு நெனைக்கிறேன் சார்…”

 

“நல்லா பார்த்தீங்களா..? என் மனைவியை உங்களுக்கு நல்லா தெரியுமா?”

 

“இந்தப் பாப்பாவோட அம்மா தானே சார்… எனக்கு நல்லா தெரியும். கண்டிப்பா அவங்க வெளியே போனதைப் பார்த்தேன். ஆனா லெஃப்ட் சைடு போனாங்களா… இல்ல ரைட் சைடு போனங்கலான்னு கவனிக்கல…” – உறுதியுடன் சொன்னார்.

 

அவனுடைய பதட்டம் அதிகமானது. “தேங்க் யு… நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்…” – அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி, வேக நடையுடன் வெளிப்பக்கம் சென்றான்.

 

“பயப்படாம போங்க சார்… லெஃப்ட் சைடுலேயே போய்ப் பாருங்க… வந்துகிட்டுத் தான் இருப்பாங்க…” டிரைவருடைய குரல் தூரத்தில் கேட்டது.

 

மூச்சு வாங்க வேகமாக நடக்கும் தந்தையின் இறுகிய அணைப்பிற்குள் சிக்கிக்கொண்ட குழந்தை பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தது.

 

“பொம்மு இன்னும் கொஞ்சநேரம் தான்டா… அம்மாவைப் பார்த்திடலாம்… செல்லம் இல்ல… அழாதடா…” மகள் தாயைத் தேடித்தான் அழுகிறாள் என்கிற எண்ணத்தில் பதட்டத்தோடு குழதையிடம் பேசிக்கொண்டே வேக வேகமாக நடந்தான்.

 

சாலையில் தெருவிளக்குகள் இல்லாததாலும்… அடர்ந்த மரங்களாலும் இருள் அதிகமாகச் சூழ்ந்துவிட்டது. குழந்தை அழுவது ஒரு பக்கமும்… மனைவியைக் காணாதது இன்னொரு பக்கமும் அவனைப் போட்டு அழுத்த இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வேகமாகத் துடித்தது.

 

‘இதுக்கு மேல நடந்து போய்த் தேடுறது முட்டாள்தனம்… எங்க போய்ச் சிக்கிக்கிட்டாளோ தெரியல… முதல்லயே காரை எடுத்துட்டு வந்திருக்கணும்… தப்புப் பண்ணிட்டேன்…’ என்று நினைத்துத் திரும்ப ஹோட்டல் பக்கம் திரும்பி நடந்தான்.

 

கீழே இறங்க இறங்க மரங்களின் அடர்த்திக் குறைவாக இருந்ததால் ஓரளவு வெளிச்சமாக இருந்தது. ஓட்டமும் நடையுமாக ஐந்தே நிமிடத்தில் ஹோட்டல் வாசலை அடைந்தான்.

 

“என்ன சார்… காணமா?” – டிரைவரே பதட்டத்தோடு கேட்டார்.

 

“இங்க வரலையா?” – அவன் திரும்பக் கேட்டான்.

 

“இல்லையே சார்… நீங்க அந்தப்பக்கம் போனதிலிருந்து நான் இங்கேதான் நிக்கறேன்…”

 

“ஒருவேள ரூம்ல இருந்தாலும் இருக்கலாம்… நான் போய்ப் பார்க்கறேன்….” – அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்காமல் அறையை நோக்கி ஓடினான்.

 

குழந்தை அழுத்தழுது களைத்துப் போய் அவன் தோளில் விசும்பிக் கொண்டே சாய்ந்துவிட்டது.

 

‘மனைவி அறையில் இருக்க வேண்டுமே…’ என்ற வேண்டுதலோடு அறையை அடைந்தவன் பூட்டிய கதவைக்கண்டு நொந்து போனான். பயத்தில் உடல் நடுங்கியது. தொண்டை உலர்ந்தது. யோசிக்க நேரமில்லை… அவளைத் தேடி ஓட வேண்டும் என்கிற பரபரப்பில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன், கதவைப் பூட்ட கூடத் தோன்றாமல் அப்படியே போட்டுவிட்டு வேகமாக கார் பார்க்கிங் நோக்கி சென்றான்.

 

“கார் எடுக்கப் போறீங்களா சார்…”

 

“ஆமாம்…” – பதட்டத்திலும் நடுக்கத்திலும் கார் கதவு சாவி துவாரத்தில் சாவியைச் சரியாக நுழைக்க முடியாமல் தடுமாறியபடி பதில் சொன்னான்.

 

“டென்ஷன்ல இருக்கீங்க சார்… குழந்தையை வேற வச்சிருக்கீங்க… நான் வேணுன்னா என் காரை எடுக்கறேன் வாங்க….” – தானாக உதவிக்கு வந்தார்.

 

அவரை நன்றியோடு பார்த்தவன் “உங்க பேர்..?” என்று இழுக்க… அவன் முடிப்பதற்குள் “டேனியல்…” என்றார் அவர்.

 

“தேங்க்ஸ் டேனியல்… வண்டியை எடுங்க… சீக்கிரம்…” அவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள இவன் அவருக்கு அருகில் குழந்தையோடு அமர்ந்து கொண்டான். கார் வேகமெடுத்துச் செல்ல… முகிலனின் உயிர் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது.

 

கணவனும், குழந்தையும் வெளியே சென்றதும் ஒத்தையாக இருந்த மதுமதி, கொல்லும் தனிமையை வெல்ல முடியாமல் அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தாள். ‘நாமும் வாக்கிங் போயிருக்கலாம்…’ என்கிற எண்ணம் வந்தது. ‘எந்தப் பக்கம் போயிருக்காங்கன்னுப் போய்ப் பார்க்கலாம்…’ என்று நினைத்தவள் ஹோட்டல் வாசலைக் கடக்கும்பொழுது எதிரில் நின்ற கார் டிரைவரிடம் சிநேகமாகப் புன்னகைத்துவிட்டு வெளிப்புறம் நோக்கி நடந்தாள்.

 

ஹோட்டல் வளாகத்திலிருந்து வெளியேறிச் சாலையை அடைந்தவள்… கணவனும் குழந்தையும் எந்தப் பக்கம் போயிருப்பார்கள் என்று கணிக்க முடியாமல் குழம்பி ஏதோ ஒரு பக்கம் சென்று பார்க்கலாம் என்று நினைத்து வலதுபக்கம் நடந்தாள். சற்றுத் தூரம் சென்றதுமே ஆள் அரவமில்லாமல் வெறிச்சோடியிருந்த சாலை அவளை அச்சுறுத்த… தனியாக இந்தப் பக்கம் போக வேண்டாம் என்று நினைத்து ஹோட்டலுக்கே திரும்பிவிட்டாள்.

 

அப்போது தான் தண்ணீர் பாட்டிலை நிரப்புவதற்காக ஒரேயொரு நிமிடம் மெயின் பில்டிங்கிற்குள் சென்ற டிரைவர் மதுமதி உள்ளே வந்ததைக் கவனிக்கத் தவறிவிட்டார். மெயின் பில்டிங்கை கடந்து அவர்கள் தங்கியிருக்கும் அறை பக்கம் வந்த மதுமதி ‘ஆட்டோமேட்டிக் லாக்’கின் மூலம் கதவைப் பூட்டிவிட்டதையும்… இனி கதவைத் திறக்க வேண்டும் என்றால் கணவன் வந்தாக வேண்டும் என்பதையும் உணர்ந்தாள்.

 

ரிசப்ஷனுக்குச் சென்று மாற்றுச் சாவி வாங்கிக் கதவைத் திறக்கலாம் என்கிற எண்ணம் தோன்றினாலும் ‘இப்போ உள்ளப் போய் என்ன செய்யப் போறோம்… தனியாத்தான் இருக்கணும்… பேசாம இந்தத் தோட்டத்தையாவது வேடிக்கை பார்க்கலாம்…’ என்று நினைத்துத் தோட்டத்திற்குள் நுழைந்தாள். அந்தத் தோட்டத்தின் முன் பகுதியைப் பலமுறை பார்த்திருப்பதால் பின்பகுதிக்குச் சென்றவள் அங்கே வித்தியாசமாக ஒன்றைக் கண்டாள்.

 

அந்த ஊரே மலைச்சரிவில் தான் அமைந்திருக்கிறது என்பதால் சரிவான இடத்தைக் கொஞ்சம் சமன்படுத்தித் தான் கட்டிடங்களை எழுப்பியிருந்தார்கள். அதே போல் அந்தத் தோட்டத்தின் பின்பகுதியில் சரிவான இடத்தில் மண்ணிலேயே மாடிப்படி போல் அமைத்து மேலே ஏற வழி செய்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் அதன்மீது ஏறிப் பார்க்க அவளுக்கு ஆசை வந்தது. ஏறினாள்…

 

மேலே மிகப் பெரிய ஆச்சர்யம் அவளுக்காகக் காத்திருந்தது. கிட்டத்தட்ட முப்பது படிகள் ஏறி மேலே சென்றால் அங்கே தரையைச் சமன்படுத்திப் பெரிய தோட்டம் அமைத்திருந்தார்கள்.

 

மலைப் பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று வருபவர்களுக்கு இது போன்ற தோட்டங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மதுமதிக்கு ஆச்சர்யம் என்றால் ஆச்சர்யம்… பயங்கர ஆச்சர்யம்… என்ன அழகு…! அந்தப் பெரிய தோட்டத்தின் அழகில் தன்னையும் தன் பிரச்சனையையும் மறந்ததோடு நேரத்தையும் மறந்துவிட்டு அங்கே பூத்திருந்த பூக்களிலும்… படர்ந்திருந்த கொடிகளிலும் லயித்திருந்தாள்.

 

இருள் சூழ்ந்ததும் ‘ஐயோ நேரமாச்சே…! இந்நேரம் யாழிக்குட்டி வந்திருப்பாங்க…’ என்று நினைத்து அவசரமாகக் கீழே இறங்கி வந்து அறைக்குச் சென்றவள், கார்முகிலன் கார் சாவியை எடுக்க வந்த போது கதவைப் பதட்டத்தில் சாத்தாமலேயே சென்றுவிட்டதால் திறந்து கிடந்த அறையைப் பார்த்துத் திகைத்தாள்.

 

‘கதவு திறந்து கிடக்கு… ரூம்ல யாரையும் காணும்… யார் வந்திருப்பா…! அவர் வந்திருந்தா கதவை இப்படித் திறந்து போட்டுட்டா போயிருப்பார்…! இன்னும் குழந்தையைத் தூக்கிக்கிட்டு வராம எங்க போனார்..?’ – குழம்பிப் போனவள்… ரிசப்ஷனில் விசாரிக்கலாம் என்று நினைத்து மெயின் பில்டிங்கிற்குச் சென்றாள்.

 

அழுதழுது ஓய்ந்து தேம்பியபடியே உறங்கிவிட்ட குழந்தையை மடியில் வைத்திருந்த கார்முகிலனின் பார்வை மனைவியைத் தேடி கலவரத்துடன் சாலையின் இருபக்கமும் சென்று வந்து கொண்டிருந்தன.

 

“இந்தப் பக்கம் காட்டு யானை… இல்ல வேற மிருகங்கள் ஏதாவது வருமா?” கலக்கத்துடன் கேட்டான்.

 

“அதெல்லாம் வராது சார்…” – பொய் சொன்னார்.

 

“இங்கெல்லாம் பாம்பு… அட்டை பூச்சியெல்லாம் அதிகமா இருக்கும்ல? மதி ரொம்பப் பயப்படுவா…”

 

“அதெல்லாம் செடிகளுக்கு உள்ள தான் சார் இருக்கும். நீங்க பயப்படாதீங்க…” – மறைத்துப் பேசினார்.

 

“ஒருநாள் டீ எஸ்டேட்டுக்கு உள்ளப் போய்ப் பார்க்கணும்னு சொன்னா… உள்ளப் போயிட்டு வெளியே வரத் தெரியாம மாட்டிக்கிட்டாளோ…” – கலக்கத்துடன் கேட்டான்.

 

“அப்படியெல்லாம் போயிருக்க மாட்டாங்க சார்…”

 

“ரொம்பப் பயந்த சுபாவம் சார்… எங்கேயாவது மயங்கி விழுந்தாலும் விழுந்திருப்பா.. கொஞ்சம் மெதுவாவே போங்க… ரோட்டு ஓரத்திலெல்லாம் பார்த்துகிட்டே போகலாம்…” – தொண்டைக் கரகரக்கச் சொன்னான்.

 

“சரி சார்…” – வேகத்தைக் குறைத்தார்.

 

“ஐயோ… இந்நேரம் எங்க இருக்காளோ தெரியலயே…!” – புலம்பினான்.

 

“கெடச்சிடுவாங்க சார்…” -ஆறுதல் சொன்னார்.

 

‘நம்ம மேல இருந்த கோபத்துல எங்காவது போய்ட்டாளோ…!’ – மனதிற்குள் நினைத்தான்.

 

‘என் மேலத்தானே கோபம்… குழந்தையைக் கூட விட்டுட்டுப் போய்டுவாளா..?’

 

‘இது அவ்வளவா சேஃப்டி இல்லாத இடமாச்சே…! என்னைப் பிரியணும்னு நெனச்சா ஊருக்குப் போன பிறகு எதுனாலும் செஞ்சிருக்கலாமே…! பாவி… இங்க வந்து இப்படிப் பண்ணிட்டாளே…’

 

‘ம்ஹும்… அவ மேலத் தப்பு இல்ல… எல்லாம் நாம பண்ணினது தான்… அவளைத் தனியா விட்டுட்டு வெளியே போனது தான் பெரிய தப்பு…’ – பைத்தியம் பிடிப்பது போல் அவனுடைய சிந்தனைகள் கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டு ஓடின.

 

அந்தக் குளிர்பிரதேசத்திலும் வியர்வை முத்துக்களோடு களையிழந்து போய் அமர்ந்திருந்தவனைப் பார்த்து கார் ஓட்டுனருக்கு இரக்கம் சுரந்தது. “நடந்து வந்தவங்க இதுக்குமேல போயிருக்க வாய்ப்பில்ல சார்… எதுக்கும் ஹோட்டலுக்கு ஒரு தடவ போய்ப் பார்ப்போம்… அங்க இல்லன்னா ஆளுங்களை ஏற்பாடு செஞ்சு தேடச் சொல்லுவோம் வாங்க சார்…” காரைத் திருப்பிக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்தார்கள்.




Comments are closed here.

You cannot copy content of this page