விடிவெள்ளி – 16
2516
0
அத்தியாயம் – 16
கருநிற வானில் சிதறிக்கிடந்த நட்சத்திரங்களுக்கிடையில் ஒற்றை அரசியாய் ஒளிர்ந்த பௌர்ணமி நிலவை… மேல்மாடத்தில் நின்று வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவன். நிலவின் அழகும் குளுமையும் ஆர்பரிக்கும் அவன் மனதை அமைதிபடுத்தவில்லை. மாறாக அவனுடைய துன்பத்தை அதிகப்படுத்தியது.
‘எதற்காக என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இத்தனை சூழல்கள்… அவமானங்கள்… ஏமாற்றங்கள்…? இவைகளிலிருந்து எப்படி நான் விடுபட போகிறேன்…! இனி விடுபட என்ன இருக்கிறது… அதுதான் இன்று காலையோடு எல்லாம் முடிந்துவிட்டதே… என் வாழ்க்கையே அஸ்த்தமித்து போய் விட்டதே…!’ அவன் மனதில் வீசிக் கொண்டிருந்த பெரும் புயலினால் எண்ணங்கள் மோதிக் கொண்டன. சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்து புகையை ஆழமாக இழுத்து விட்டான். நினைவுகள் இன்று காலை நடந்து முடிந்த அவனுடைய திருமணத்தை சுற்றி வந்தது.
புனிதாவை காயப்படுத்தி கலங்கடித்துவிட்ட திருப்தியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானத்தின் உதவியின்றி அன்று இரவு ஜீவன் நிம்மதியாக உறங்கி எழுந்தான். ‘ஹா… என்னையாடி வேண்டாம் என்று உதறிட்டு போன…? உன்னைவிட அழகான படித்த பெண் எனக்கு மனைவியா வர போகிறாள்…’ என்று எண்ணியபடி மனமகனுக்கே உரிய உற்சாகத்துடன் லேசாக விசிலடித்தபடி பட்டு வேட்டி சட்டை அணிந்து… தலைவாரி… நெற்றியில் திருநீர் இட்டு நொடியில் தயாரானான். எப்பொழுதும் போல் யாரிடமும் சிடுசிடுக்காமல் சிரித்த முகத்துடன் தாய்மாமன் அணிவித்த மலர்மாலையை கழுத்தில் தாங்கி மணவறையில் வந்து அமர்ந்தான்.
ஐயர் சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை திரும்ப சொல்லியபடி அவர் கொடுக்கும் பொருட்களை கையில் வாங்கி ஹோமத்தில் இட்டுக் கொண்டிருந்தான். மணவறையை சூழ்ந்து நின்ற பெண்களின் பேச்சு குரல்களோடு கலந்து ஒலித்த புனிதாவின் குரல் அவனுடைய கவனத்தை ஈர்த்து அவனை எரிச்சலடைய செய்தது. நேரம் ஆக ஆக திருமண சடங்குகள் ஒவ்வொன்றும் புனிதாவின் திருமணத்தையும் அதற்காக அவன் உழைத்ததையும் நினைவுபடுத்த அவன் இறுகிபோய் அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் மணமகள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள். கடந்தகால சிந்தனைகளில் மூழ்கியிருந்தவனுக்கு வருங்கால மனைவியை பற்றிய ஆர்வம் சிறிதும் இல்லை. ஐயர் தாலியை எடுத்து கொடுத்து “இத பொண்ணு கழுத்துல கட்டுங்கோ…” என்றார்.
கடமைக்காக அதை கையில் வாங்கி பெண்ணின் கழுத்தில் கட்டுவதற்காக அவள் பக்கம் திரும்பியவன் அதிர்ந்தான். புனிதா பிரகாஷிற்கு மனைவியாக போகிறாள் என்கிற சங்கதி தெரிந்த பொழுது எந்த அளவு அதிர்ந்தானோ… அதே அளவு அதிர்ச்சியை இப்பொழுதும் அடைந்தான். காரணம் அவன் பக்கத்தில் மணமகளாக அமர்ந்திருந்த பெண்ணின் தோற்றம்…
அதிர்ச்சி நீங்காமல் அமர்ந்திருந்தவனை “கட்டு ஜீவா…” என்று பிரகாஷ் உந்தினான். ஜீவன் அவசரமாக பாட்டியையும் தாயையும் கண்களால் தேடினான். இருவருமே கைம்பெண் என்கிற பத்தாம்பசலித் தனத்தை காரணமாக கொண்டு ஒதுங்கி நின்றதால் அவன் கண்ணில் படவில்லை.
“ஜீவா… என்னடா பண்ற…? தாலியை கட்டு…” பிரகாஷ் லேசாக அதட்டினான்.
ஜீவன் சூழ்நிலை கைதியாகி… வெறுப்புடன் அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டினான். அதன் பிறகு நடந்த திருமண சடங்குகளிலும் வேண்டா வெறுப்புடன்தான் கலந்து கொண்டான்.
‘ச்ச… மனித எலும்பு கூட்டின் மீது கருப்பு தோலை போர்த்தி… மணப்பெண்ணாக அலங்காரம் செய்து மணவறையில் அமர வைத்ததோடு மட்டுமல்லாமல்… நம் கையால் தாலியும் கட்டவைத்து… நமக்கு மனைவியாகவும் ஆக்கிவிட்டார்களே…!’ என்று ஆத்திரப்பட்டான். நேற்று அப்படி பந்தாவாக பேசிவிட்டு இன்று இப்படி அந்த புனிதாவின் முன்னிலையில் தோற்றுவிட்டோமே என்று புழுங்கினான். அந்த தோல்விக்கு காரணமாக இருந்த அம்மா மற்றும் பாட்டியோடு சேர்த்து பவித்ராவையும் கருவினான்.
பெண்கள் மீதான வெறுப்பில் அவனுடைய முகம் பயங்கரமாக மாறியது. பால்கனியிலிருந்து அறைக்குள் நுழைந்து கைபேசியை எடுத்து சில எண்களை தட்டி “நான் ஜீவா பேசுறேன். அம்மாவை மேல வர சொல்லு…” என்றான்.
அதே நேரம் கீழே சிவகாமி பாட்டியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். “என்னம்மா இது…? பொண்ணு ஜீவனுக்கு பிடிக்கல போலருக்கே… தாலிகட்டும் போது அவன் முகம் எப்படி இருந்ததுன்னு பார்த்தியா…?”
“எல்லாம் பார்த்தேன்… இந்த பொண்ணுக்கு என்னடி கொறச்சல்…?”
“ஒரு குறையும் இல்லம்மா… ஆனா கொஞ்சம் ஒல்லியா… கலர் கம்மியா இருக்காளே…! நாம ஜீவாகிட்ட காட்டின ஃபோட்டோல இன்னும் கொஞ்சம் நல்லா இருந்தாளே…”
“அது பழைய ஃபோட்டோ சிவகாமி… அதோட அந்த ஃபோட்டோ எடுத்தப்ப அந்த பொண்ணு பெத்தவங்க பாதுகாப்புல இருந்தது. ஆனா இப்போ வேண்டாத அண்ணனுக்கு பாரமா மாறி… அண்ணியோட கெடுபிடில மாட்டி அவஸ்த்தபட்டு… தப்பி பொழச்சு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா… நீயும் ஜீவனும் அவளை நல்லவிதமா பார்த்துகிட்டிங்கன்னா… பழையபடி தெளிவா மாறிடுவா… நீ எதுக்கு கவலைப்படற…?”
“அதெல்லாம் அவனுக்கு புரியனுமேம்மா… அதோட படிப்பு இல்லன்னு தெரிஞ்சா என்ன செய்வானோன்னு பயமா இருக்குமா…?”
“என்ன பேசுற நீ…? படிப்பு… படிப்புன்னு அதையே புடிச்சுகிட்டு தொங்கறீங்க அம்மாவும் மகனும்…? நம்ப பயன் படிச்சிருக்கானா…? ஊரு உலகத்துல படிச்சு நல்ல வேலையில இருக்க பையனுங்களுக்கே… பொண்ணு கிடைப்பது குதிரை கொம்பா இருக்கு… இதுல ரௌடிதனம் பண்ணிக்கிட்டு திரியிறவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான்… அவன் கேக்குற மாதிரிதான் பொண்ணு தேடுவேன்னு சொன்னா அவனுக்கு கடைசிவரைக்கும் பொண்ணு தேடிகிட்டே இருக்க வேண்டியதுதான்… கல்யாணம் நடக்காது…”
“என்னம்மா இப்படி பேசுற…? ஜீவனை நினச்சா எனக்கு உதறலெடுக்குது… ஏற்கனவே அவன் வெறி புடிச்சவன் மாதிரி நடந்துக்கறான். இதுல இந்த பொண்ண பத்தி தெரிஞ்சா என்ன ஆகுமோ…!”
“எதுக்கு இப்படி நடுங்குற…? இந்த நடுக்கமெல்லாம் அந்த புனிதாவ இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டுவந்தப்ப இருந்திருக்கணும். இந்த பொண்ணு முகத்த பாரு சிவகாமி… எவ்வளவு பாந்தமா இருக்கு… இந்த பொண்ணுதான் நம்ம ஜீவனோட வாழ்க்கைக்கு விடிவெள்ளி… அதை நீ என்னைக்கும் மறக்காத…” பாட்டி தீர்க்கதரிசி போல சொன்னார்கள். அப்போது கூடத்திலிருந்து பிரகாஷின் குரல் கேட்டது… “அம்மா… உன்ன ஜீவன் மேல வர சொல்றான்… என்னன்னு கேளு…”
சிவகாமி பதட்டமானாள்… “எதுக்கும்மா கூப்பிடறான்…?”
“போயி என்னன்னு கேளு… பவித்ராவோட படிப்ப பத்தி இப்ப எதுவும் அவன்கிட்ட பேச வேண்டாம்… கொஞ்ச நாள் போகட்டும். அதுக்குள்ள அவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒட்டுதல் வந்துடும். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…” என்று ஐடியாவும் கொடுத்து அனுப்பினார்கள்.
###
எரிமலையின் சீற்றத்தை உள்ளடக்கி… அமைதியான குரலில் “இன்னும் எவ்வளவு நேரம் என் கண்ணுல படாம தப்பிக்கலாம் என்று நினச்சுட்டு இருக்க…?” என்று தன் தாயை பார்த்து கேட்டான் ஜீவன்.
“என்ன ஜீவா…? ஏன் இப்படி பேசுற? எதுக்கு வர சொன்ன…?” எதுவும் புரியாதது போல் சாதாரணமாக கேட்டாள் சிவகாமி.
“உனக்கு ஒண்ணுமே தெரியாதுல்ல…?”
“என்னடா பேசுற…? கொஞ்சம் தெளிவா சொல்லு…”
“எதுக்கும்மா என்னோட வாழ்க்கையை இப்படி நாசமாக்கின…? இரண்டாவது முறையா என்னை நம்ப வச்சு கொன்னுட்டியே…! உண்மையாலுமே நீ என்னை பெற்ற தாய்தானா…!”
“ஜீவா…!” சிவகாமி அதிர்ந்து நோக்கினாள் மகனை.
“பேசாத நீ… பொண்ணு மாதிரியா இருக்க இவ…? சுடுகாட்டுலேருந்து எந்திரிச்சு வந்த பிணம் மாதிரி… இவள்லாம் எனக்கு மனைவியா…?” வெறுப்புடன் வார்த்தைகளை கொட்டினான்.
“என்னப்பா இப்படி பேசுற? அந்த பெண்ணுக்கு என்னடா குறை…? நல்லாதானே இருக்கா… நீயும் போட்டோ பார்த்து பிடிச்சிருக்குன்னு தானே சொன்ன…?”
“அந்த போட்டோல இருந்த மாதிரிதான் இருக்காளா இப்போ…?”
“அம்மா அப்பா இறந்து போய்ட்டாங்க என்கிற துக்கத்துல இப்படி மெலிஞ்சு கருத்து போயிட்டாப்பா… கொஞ்ச நாள் நம்ம வீட்டுல சந்தோஷமா இருந்தான்னா பழையபடி மாறிடுவா… நீ கொஞ்சம் பொறுமையா இரு ஜீவா…”
“பொறுமையா இருப்பதா…! ஹா… என்னோட சந்தோசத்தை கெடுத்த உங்களை எல்லாம் நிம்மதியா வாழ விட்டுடுவேன்னு நினைக்கிறிங்களா…? நீ… அந்த கெழவி… அப்புறம் இந்த வீட்டுக்குள்ள புதுசா வந்திருக்காளே… ப…வி…த்ரா… உங்க எல்லாருக்கும் இனிதான் தெரியும் இந்த ஜீவன் யாருன்னு…” கடுங்கோபத்துடன் பேசினான்.
“உனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குது ஜீவா… அம்மா உன் நல்லதுக்குதான்டா எல்லாம் செஞ்சேன்…”
“எது என் நல்லது… இந்த விடியா மூஞ்சியை என் தலையில கட்டி வச்சதா…?”
“அப்படி சொல்லாதடா… அந்த பொண்ணு ரொம்ப நல்ல விதமா நடந்துக்கறா… பார்க்கவும் நீ சொல்ற அளவு மோசமா இல்ல…”
“என்ன சொல்ல வர்ற நீ…? இவ்வளவுதான் உன் தகுதி… இருக்கறதை வச்சு பொழச்சுக்கோன்னு சொல்றியா…? இப்படி ஒருத்தியோடு வாழரதைவிட நான் காலம்பூர கல்யாணம் ஆகாமலே இருந்திருக்கலாம்…” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“ஐயையோ… என்னடா சொல்ற நீ…?” சிவகாமி பயத்துடன் கேட்டாள்.
“ஹா… ஹா… ரொம்ப பயப்படாத… அவளை இன்னிக்கே விரட்டி விட்டுட மாட்டேன். நான் யாருன்னு உங்களுக்கெல்லாம் காட்டனும்ல்ல…” கண்களில் வெறியுடன் சொன்னான்.
மகனின் பேச்சும் தோற்றமும் சிவகாமியை அச்சுறுத்தியது. அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதியுடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள்.
ஜீவன் வர்ணிக்கும் அளவு பவித்ரா அழகில் குறைந்த பெண் இல்லை. ஆனால் அவன் தன் மனைவியை புனிதாவுடன் எல்லா விதத்திலும் ஒப்பிட்டு பார்த்தான். அவனுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை எனும்பொழுது அவனுடைய கோபம் எல்லை கடந்தது. இது நாள் வரை அவன் முழுமனதுடன் நம்பிய… மதித்த தம்பி கூட இன்று அவன் கண்களுக்கு எதிரியாக தெரிந்தான். தன் தம்பி மீது அடி மனதில் ஊற்றெடுக்கும் பொறாமையையும் கோபத்தையும் தடுக்கவும் முடியாமல்… அதை அவனிடம் காட்டவும் முடியாமல் தவித்து அப்பாவியான பவித்ராவை குதரியெடுக்க தயாரானான்.
Comments are closed here.