மயக்கும் மான்விழி-13
4906
0
அத்தியாயம் – 13
“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது…”
ருத்ரனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று வெறியாக இருந்த மான்விழிக்கு அவனைத் தீவிரமாக வதைக்க ஒருவழியும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரும் அவனைக் கேள்விக் கேட்கும்படி செய்ய ஒரு திட்டம் தீட்டிச் செயல்படுத்தினாள்.
அன்று மதிய உணவு முடிந்ததும் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வாசலில் மற்றும் மரத்தடியில் நிற்பது போல் நின்று பொடிநடையாகத் தாய்வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டில் காவ்யா மட்டும்தான் இருந்தாள். அவளைச் சுலபமாகச் சமாளித்துவிட்டுப் பெற்றோரின் வரவுக்காகக் காத்திருந்தாள்.
ருத்ரனின் வீட்டில் எல்லோரும் மான்விழி மாடியில் அவர்களுடைய அறையில் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு அவரவர் வேலையில் கவனமாக இருந்தார்கள். மாலைப் பத்திரப்பதிவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த ருத்ரன் திண்ணையில் அமர்ந்து வேலையாட்களுடன் சேர்ந்து கடலை உடைத்துக் கொண்டிருத்த தாயிடம்,
“அம்மா… மான்விழிய மேல வரச் சொல்லு…” என்றபடி வீட்டிற்குள் சென்றான்.
“மானு மேலதாம்பா இருக்கு…” என்று சொல்லிவிட்டு வைதேகி தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினாள்.
“சரிம்மா…” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்ற ருத்ரன் உடனே கீழே வந்து “அவ அங்க இல்லம்மா… உள்ள இருக்காளா பாரு…” என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து டிவியைப் போட்டான். சற்றுநேரத்தில் அந்த வீடே மான்விழியைக் காணாமல் கதிகலங்கியது.
வீட்டிலும் வீட்டைச் சுற்றி உள்ள தோட்டத்திலும் எங்குத் தேடியும் மான்விழி கிடைக்கவில்லை.
“வீட்டுல இத்தனை பேரு இருக்கீங்க… வீட்டுல இருக்க ஒரு பொண்ணு எங்க போனான்னு தெரியல… என்ன பண்ணிக்கிட்டு இருப்பிங்க அப்படி…? டிவியப் பாக்குறதும், ஊரு கதையை அளக்கறதும் தான் வீட்டுல இருக்க பொம்பளைங்களோட வேலையா… வீட்ல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு கவனிக்கிறது இல்லையா…?” என்று பாட்டி, தாய், அண்ணி என்று யாரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளிவிட்டு போனை எடுத்து மான்விழியின் கைப்பேசிக்கு அழைத்தான். ரிங் போய்க் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை.
பிறகு சிதம்பரத்திற்குத் தொடர்பு கொண்டான். அவர் இப்போதுதான் டவுனிலிருந்து பஸ்ஸில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகத் தகவல் சொன்னார்.
‘நாம வண்டியில வந்ததால சீக்கிரம் வந்துட்டோம்…’ என்று நினைத்தபடி அவரிடம் மான்விழியைப பற்றி எதுவும் சொல்லாமல் ‘வீட்டுக்கு வந்துட்டிங்களான்னு கேக்கதான் போன் பண்ணினேன்…’ என்று சொல்லிச் சமாளித்துவிட்டு போனை வைத்தான்.
“மத்தியானம் நாங்க ரெண்டுபேரும் தான் தம்பி சாப்பிட்டோம்… இங்கதான் நின்னுச்சு… அதுக்குள்ள எங்க போனிச்சோ தெரியலையே…!” ராஜி கையைப் பிசைந்தாள்.
“மத்தியானம் மாட்டுக் கொட்டாயிக்குப் போயிட்டு வரயில பாத்தேன் ராசு… மரத்தடியில நின்னிச்சு… சரி… காத்துக்காவ நிக்கிது போலருக்குன்னு நா உள்ள வந்துட்டேன்… வந்தவ அப்புடியே செத்தக் கண்ணசந்துட்டேன்… பாவிமக எங்க போனாளோ தெரியலையே…!” வைதேகி பீதியுடன் புலம்பினாள்.
“அட என்னாத்துக்கு எல்லாரும் இப்புடிப் பதறிய…? அது என்னா ஒன்னுந்தெரியாத பச்சப்புள்ளையா…? இங்குட்டுதான் எங்கையாவுது நிக்கும்… ஊரக் கூட்டிச் சேதி சொல்லாம… காதுங்காதும் வச்சமாரித் தேடிப்பாருங்க பொண்டுவளா(பெண்களே)…”
“ஆச்சி… என்ன சாதாரணமா சொல்ற…? நீதானே திண்ணையிலப் படுத்துருந்த… அண்ணி வெளியே போகும்போது பாத்தியா இல்லையா…?” தேவன் அதட்ட,
“ஆமாடாப்பா… எல்லாரையும் உலுக்கிப்புட்டு இப்ப என்ன புடிக்க வந்துட்டியா…? காலம் போன கடசில கண்ணுத் தெரியாம கெடக்குறவளுகிட்ட விசாரணப் பண்ணாம பெருமா கோயிலுப் பக்கம் போயித் தேடிப் பாருடா…” பாட்டி சாமர்த்தியமாகப் பேசித் தப்பித்துக்கொள்ளப் பார்க்க பேரன் விடாக்கண்டனாக அதற்கும் ஒரு பதிலடி கொடுத்தான்.
“ம்ம்ம்… இத்துனூண்டு டிவி பொட்டிலப் படத்தப் பாக்கும்போது மட்டும் நல்லா கண்ணுத் தெரியும்… அம்மாம்பெரிய உருவம் வெளியப் போகும் போது கண்ணுத் தெரியாமப் போய்டும்… பலே ஆளுதான் ஆச்சி நீ…”
“ப்ச்… தேவா… ஆச்சிக்கிட்டச் சண்டப் போடற நேரமா இது…? பெருமாள் கோயில்ல இருக்காளான்னு போயிப் பாத்துட்டு வா…” என்று தம்பியை அனுப்பி வைத்த ருத்ரன் சிந்தனையுடன் சோபாவில் அமர்ந்தான்.
வீட்டில் நடக்கும் இவ்வளவு நாடகத்தையும் திண்ணையில் அமர்ந்துக் கடலை உடைத்துக் கொண்டிருந்த பெண்களும் கவனித்தார்கள். விஷயம் வெளியாட்களையும் சலசலக்க வைத்தது.
அவர்களின் சலசலப்பு அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த ஒரு வேலைக்காரனின் காதிலும் விழ, அவன் விஷயத்தைக் கூர்ந்துக் கவனித்துவிட்டுத் திடீரெனச் சொன்னான்,
“அட… அண்ணி அங்க தெக்கித்தெருவுலல்ல இருக்காங்க… அந்தப் பக்கம் நடராசண்ணே வீட்டுக்கு வேலைக்குப் போன நா… இப்பதான் அங்கேருந்து வாரேன்… “.
சட்டெனத் திண்ணைப் பக்கம் தலையைத் திருப்பிய ருத்ரன் “சின்னப்பா… இங்க வா…” என்றான்.
முதல்முறையாக அந்த வீட்டுக்குள் நுழையும் சின்னப்பன் தயங்கித் தயங்கி கூச்சத்துடன் உள்ளே நுழைந்தான்.
“எங்க… யாரப் பார்த்த…?”
“நம்ப அண்ணியதாண்ணே பாத்தேன்… சிதம்பரத்தையா வீட்டுக் கொல்லையில நின்னுகிட்டு இருந்தாங்க… நா இந்தப் பக்கம் நடராசண்ணே கொல்லையில வேலப் பாத்துகிட்டு இருந்தேண்ணே…”
“சரி நீ போ…” என்று அவனை அனுப்பினான்.
மான்விழி யாரிடமும் சொல்லாமல் தனியாகத் தாய்வீட்டிற்குச் சென்றிருக்கிறாள் என்கிற கோபம் எக்கச்சக்கமாக எழுந்தபோதும் அவள் பத்திரமாக இருக்கிறாள் என்கிற நிம்மதி அவனைக் கொஞ்சம் அமைதிப்படுத்தியது.
“இது என்னடாப்பா கூத்தா இருக்குது… கல்யாணம் முடிஞ்சு மொதமொதல்ல அம்மா வீட்டுக்குப் போறப்ப புருசனும் பொண்டாட்டியும் சேந்துப் போவாம… நீ வடக்கப் போ… நா தெக்கப் போறேன்னு… ரெண்டுபேரும் ரெண்டு தெசையிலப் போயி நிக்கிறிய…?” பாட்டி ருத்ரனைக் குற்றம் சொல்ல…
அவனோ, “இப்ப அதுனால என்ன கொறஞ்சுப் போயிட்டு… வேலையப் பாரு…” என்று முறைத்தான்.
“சரி விடுப்பா… அம்மா அப்பாவப் பாக்கணுமுன்னு தோணியிருக்கும்… இங்கதானே வீடு இருக்குன்னு போயிட்டுப் போலருக்கு… நீ போயி அழைச்சுக்கிட்டு வந்துரு…” என்று வைதேகி இலகுவாகப் பேச, அதற்கும் எரிந்து விழுந்தான்.
“பாக்கத்தானே போயிருக்கா… பாத்துட்டு வருவா…”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கைப்பேசி அலறியது.
“ஹலோ”
“மாப்ள… மானு இங்க வந்துருக்கு மாப்ள…”
“………………………….” அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க மாப்ள… நா இப்பதான் இங்க வந்து சேர்ந்தேன். மானு வீட்டுக்கு வந்துருக்குன்னு சின்னப்புள்ள சொன்னிச்சு… ஒடனே உங்களுக்கு போனப் போட்டுட்டேன். மொதமொதல்ல பொண்ணும் மாப்ளையும் சேர்ந்துதான் வீட்டுக்கு வரணும்… மானு வெவரம் புரியாம அவசரப்பட்டு வந்துட்டு…”
“பரவால்ல மாமா…. அதுனால ஒன்னும் இல்ல… விடுங்க…” என்று அவன் சமாதானம் சொன்னதும்,
“சரி மாப்ள…” என்று எதையும் உடைத்துப் பேசாமல் பூசி மெழுகிப் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் சிதம்பரம்.
‘அப்பன் வீட்டுக்குப் போயிருக்கியா…? போடி… போ… நான் பனங்காட்டு நரிடி… உன் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன்…‘ என்று நினைத்துக் கொண்டான் ருத்ரன்.
# # #
“மானு… நீ செஞ்சது கொஞ்சம் கூடச் சரியில்லடி… பெரியவங்க அத்தனை பேரு வீட்டுல இருக்கும்போது நீ எப்படி யாருகிட்டயும் சொல்லாம வந்த…? எங்கேருந்து வந்துச்சு உனக்கு இந்தத் துணிச்சல்…?” மான்விழியின் தாய் அவளைக் கண்டித்ததற்கு அவள் தயங்காமல் பதில் கொடுத்தாள்.
“நீங்க செஞ்சது மட்டும் சரியா… யாரக் கேட்டு நீங்க அந்தாளு பேர்ல நெலத்த எழுதிக் குடுத்திங்க…?”
“அந்த ஆளா…! என்னடிப் பேச்சல்லாம் ஒரு மாதிரி இருக்கு…?”
“சும்மா பேச்ச மாத்தாதம்மா… எதுக்கு நெலத்த அவருக்கு எழுதிக் குடுத்துட்டு வந்துருக்கிங்க…?”
மகளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத தாய் கணவனைத் துணைக்கு அழைத்தாள்.
“என்னங்க நீங்க பேசாம நிக்கிறிங்க…? மாப்ளைக்குத்தானே குடுத்தோம். அதுக்கு எதுக்கு இவ இந்தக் குதிகுதிக்கிறா…?” என்று கணவனிடம் முறையிட்டுவிட்டு “பொம்பளப் புள்ளைக்கு இவ்வளவு கோவம் ஆகாதுடியம்மா… பாத்துக் கொஞ்சம் அடங்கிப் போ…” என்று மகளிடம் முடித்தாள்.
அவ்வளவுதான்… மான்விழிக்கு வந்ததே கோபம்… கண்களை உருட்டித் தாயை எரித்துவிடுவது போல் முறைத்து,
“ஓஹோ… பொம்பளைன்னா ஆம்பள என்ன செஞ்சாலும் அடங்கிப் போகணுமா…? அதுனாலத்தான் அன்னிக்கு அந்தாளு என்ன அடிச்சு மூஞ்சி முகரையெல்லாம் பேத்து வச்சிருந்தப்பவும்… அடங்கிப் போடி மகளேன்னு பேசாம வந்துட்டியா…?” என்றாள்.
“அடிப்பாவி… பேசாம வந்துட்டனா…! பேசாமலாடி வந்துட்டேன்…? எத்தன தடவக் கேட்டேன்… என்ன ஆச்சு… என்ன ஆச்சுன்னு… வாயத் தொறந்தியாடி நீ…?” தாய் பதற… மகள் சீறினாள்,
“ஆமா… அப்ப நா எதுவும் சொல்லலைதான்… ஆனா இப்பச் சொல்றேன். அந்தாளு என்ன அடிச்சுக் கொல்லப் பாத்தாரு… என்னோட கழுத்தப் பிடிச்சு நெரிச்சாரு… இதுக்கெலாம் ஞாயம் கெடச்சாதான் நான் அந்த வீட்டுக்குத் திரும்பப் போவேன்… இல்லன்னா போகவே மாட்டேன்… அதுமட்டும் இல்ல… இன்னிக்கு நீங்க அந்த ஆளுக்கு எழுதிக் குடுத்துருக்க நெலத்த என்னோட பேருக்கு மாத்தறதுக்கும் வழி பண்ணுங்க…” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள்.
“என்னங்க இப்படிப் பேசிப்புட்டுப் போறா…? அங்க இவளக் காணமேன்னு தேட மாட்டாங்களா..?”
“நா மாப்ளைக்கு போன் பண்ணிப் பேசிட்டேன்… விடு…”
“என்னத்த விடு… இப்படிப் பேசிட்டுப் போறவள நீங்க கண்டிக்கக் கூடாதா…?”
“அது சொல்றதுலயும் ஞாயம் இருக்குல்ல… அவரும் பொண்டாட்டிய கை நீட்டியிருக்கக் கூடாது தானே…”
“ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன், பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்… பொண்டாட்டிக்கிட்ட கைநீட்டாம இருக்க வக்குல்ல… இதுல மகளுக்கு ஞாயம் கேக்க வந்திட்டிங்களாக்கும்…? எல்லா ஜென்மமும் ஒரே குட்டையில ஊறின மட்டை தானே… நீங்க என்னத்த அவருகிட்டப் போயிக் கேக்கப் போறீங்க…”
சரியான நேரத்தில் மனைவி போட்டுத் தாக்கிவிட்டதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,
“அதெல்லாம் கேட்டுட்டேன் புள்ள… அவரு பண்ணினது தப்புதான்னு ஒத்துகிட்டாரு…”
“பரவால்ல… அந்த விதத்துல உங்களமாதிரி இல்லாம செஞ்சத் தப்ப ஒத்துக்கிட்டாரே… நல்ல மனுஷன்தான்…”
“சரி… சரி… பொலம்பாம நீ போயிப் படு… காலையிலப் பேசிக்கலாம்…” என்று அதட்டலாகவே பேசி மனைவியை அடக்கிவிட்டுப் படுக்கைக்குச் சென்றார் சிதம்பரம்.
# # #
“ந்தா வைதேயி… இப்புடி வா…” வேலைக்காரர்களுக்கு மாலை டீயை விநியோகித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மருமகளைத் தடுத்துத் தன்னிடம் அழைத்தார் திண்ணையில் அமர்ந்திருந்த வள்ளி பாட்டி.
“என்னத்த…?”
“நீ பாட்டுக்கு இங்குட்டும் அங்குட்டும் போயிக்கிட்டு இருக்கியே… வீட்டுக்கு வந்த மருமவ அப்பமூட்டுக்குப் போயித் தங்கிப்புட்டாளே… அந்த வெசனமே இல்லையா ஒனக்கு…?”
“நேத்துதானத்த போனா… தம்பிதான் அவளா வரட்டுமுன்னு சொல்லிப்புட்டே… நாம என்ன பண்ணுறது…?”
“அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்… அடிக் கூறுகெட்டவளே…! புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏதோ மனக்கசப்புடி… அதான் ரெண்டுபேரும் ஆளுக்கு ஒரு பக்கமா இழுத்துக்கிட்டு நிக்கிதுங்க… இது புரியாம ரெண்டுங்கெட்டானா இருக்கியே… நீயெல்லாம் என்னடி பெரிய மனுஷி…?”
“நாம என்னத்த பண்ண முடியும்…?”
“அப்புடிக் கேளு…”
“சொல்லுங்க…”
“நீ கெளம்பிப் போயி அந்தப் பொண்ணக் கூட்டியாந்துரு… நீ கூப்பிட்டா அவளுக்கும் வரமாட்டேன்னு சொல்ல முடியாது… இவனும் அவள எதுக்கு இங்க வந்தேன்னு கேக்க முடியாது…”
“அது சரியா வருமாத்த… தம்பிக்குத் தெரியாம நா அங்க போனா சத்தம் போட போறான்…”
“போட்டா வாங்கிக்க… என்னா பண்ணுறது… குடும்ப மரியாதையக் காப்பாத்தணுமுன்னா எல்லாத்தையும்தான் சமாளிக்கணும்…”
“சரித்த… நா கெளம்புறேன்… நீங்க டிரைவரைக் கூப்பிட்டு காரைக் கொண்டுவரச் சொல்லுங்க…”
“டிரைவரு பய எதுக்கு… அவனக் கூப்பிட்டுக்கிட்டுப் போக வேண்டாம்… நீ நம்ம தேவன வரச் சொல்லி அழைச்சுகிட்டுப் போ…” என்று மருமகளுக்குப் புத்திச் சொல்லி பேரனின் மனைவியை வீட்டிற்குக் கொண்டு வர வழிச் செய்தார் பாட்டி.
Comments are closed here.