Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 17

அத்தியாயம் – 17

மிதமான அலங்காரத்தில் தனிமையின் துணையுடன் ஜீவனுடைய அறையில் அமர்ந்திருந்த பவித்ராவின் முகத்தில் புது மணபெண்ணுக்கான மகிழ்ச்சியும் நாணமும் சிறிதும் இல்லாமல் குழப்ப ரேகைகள் குடியேறியிருந்தன. அவள் பள்ளி படிப்பின் இறுதியாண்டில் இருந்த பொழுது பெற்றோரை அடுத்தடுத்து இழந்துவிட்டு உடன் பிறந்த ஒரே அண்ணனுக்கு பாரமானாள். அந்த  ஒரு காரணத்தினாலேயே அண்ணியின் வெறுப்புக்கு ஆளானாள்.

 

பெற்றோர்… படிப்பு… சுதந்திரம் என்று அனைத்தையும் இழந்துவிட்டு வீட்டு சிறையில் அடைபட்டு அண்ணனின் குடும்பத்திற்கு வேலைக்காரியாக இரண்டாண்டுகள் பதவி வகித்தாள். உயிரை உருக்கி உழைத்தும் குடும்பத் தலைவியிடம் நற்பெயர் எடுக்க முடியாமல் தினம் தினம் போராட்டங்களுடன் விளையாடினாள்.

 

‘எத்தனை துன்பம் வந்தாலும் எதிர்த்து நின்று தகர்த்தெறிவேன்…’ என்னும் மனஉறுதி கொண்ட பவித்ரா  போராட்டங்களை வீரவிளையாட்டாக கருதும் அசாத்திய பெண். சிலகாலம் பிறந்த வீடு அவளுடைய விளையாட்டு மைதானமானது போல்… புகுந்த வீடும் இன்னொரு மைதானமாகிவிட்டதோ என்கிற சந்தேகம் முதல் நாளே அவளுக்கு முளைத்துவிட்டது. காரணம் ஜீவனின் நடவடிக்கைகள்…

 

தாலிகட்டும் நேரத்தில் அவள் முகத்தை பார்த்துவிட்டு அவன் தயங்கியதை அவள் கவனித்தாள். அதன் பிறகு திருமண சடங்குகள் எதிலும் அவன் ஒட்டவில்லை. அவனோடு மணமகள் சேர்ந்து நிற்கிறாளா… சேர்ந்து நடக்கிறாளா… என்கிற அக்கறை எதுவும் இல்லாமல் அவிழ்த்துவிட்ட காளை போல் திருமண மண்டபத்தில் அவன் அங்கும் இங்கும் சென்றதையும்… அவனுடைய தம்பி பிடித்துக் கொண்டு வந்து வலுக்கட்டாயமாக நிறுத்தி வைத்திருந்ததையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

 

காரணத்தை அவளால் ஊகிக்க முடிந்தது. திருமணத்திற்கு முன் ஜீவன் அவளை பார்த்ததில்லை. புகைப்படத்தை மட்டும் பார்த்து சம்மதம் சொல்லிவிட்டான். புகைப்படத்தில் இருந்த அவளுடைய தோற்றத்திற்கும் இப்போது இருக்கும் தோற்றத்திற்கும் ஏகப்பட்ட மாற்றங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

 

‘இந்த இரண்டு ஆண்டுகளில் அவ்வளவு மோசமாகவா  மாறிவிட்டோம்…’ என்று நினைத்தவள் எழுந்து சென்று டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தாள்.

 

பல நாட்கள் பசியில் வாடிய வயிறு தன் கோபத்தை ஒட்டிபோய் குழிவிழுந்திருந்த கன்னங்களில் காட்டியிருந்தது. பல நாட்கள் உறக்கத்தை மறந்திருந்த கண்களில் கருவளையம் படர்ந்திருந்தது. ஓயாத உழைப்பால் உடல் ஒடிந்து விழுவது போல் மெலிந்து கிடந்தது… இந்த உருவத்தை யாருக்குத்தான் பிடிக்கும் என்று நினைத்தவளுக்கு தன் நிலையை நினைத்தே சிரிப்பு வந்தது. அடக்க நினைக்காமல் சிரித்துவிட்டாள். சிரித்து கொண்டே கண்ணாடியை பார்த்தவள் அசந்து போனாள். தன் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை பார்த்தாள்.

 

‘ஆகா… எத்தனை அழகு அந்த முகத்தில்…! பவித்ராதானா அது…! சிரித்தால் அவள் முகம் இவ்வளவு அழகா…! சின்ன சிரிப்பு இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்துமா…!’ இத்தனை நாளும் சிரிப்பை தொலைத்துவிட்டு வாழ்ந்தவளுக்கு தன் முகமே மறந்துவிட்டது. சில மணி நேரங்களுக்கு முன் இருந்த அவளுடைய அவநம்பிக்கை இப்போது முற்றிலும் தகர்ந்து… புதிய நம்பிக்கை பிறந்தது… புன்னகை மாறாத முகத்துடன் கணவனின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் ஜீவன் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டான். கர்ணகொடூரமாக இருந்த அவன் முகம் பவித்ராவுக்கு பீதியை உண்டாக்க அவள் தானாக எழுந்து நின்றாள். ஜீவன் அவளை நெருங்கி நிதானமாக தலை முதல் கால்வரை ஒரு முறை பார்த்தான். பிறகு இடுப்பில் செருகியிருந்த மதுபான பாட்டிலை எடுத்து டீப்பாயின் மீது வைத்துவிட்டு… செம்பில் இருந்த பாலை எடுத்து சென்று பாத்ரூம் சிக்கில் கொட்டிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான். அவனுடைய செய்கைகளில் பவித்ரா அதிர்ந்து விழித்தாள்.

 



 
 

அவளுடைய அதிர்ந்த முகத்தை திருப்தியுடன் கண்டவன்… பால் அருந்துவதற்காக வைத்திருந்த வெள்ளி டம்ளரில் மதுவை நிரப்பி அருந்தினான். ஓரளவு போதை ஏறியதும் அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டான். தாறுமாறாக படுத்திருந்தவனை பார்க்கும் பொழுது பவித்ராவிற்கு ‘நம் வாழ்க்கையும் இனி இப்படி தாறுமாறாகத்தான் இருக்க போகிறது…’ என்று தோன்றியது.

 

அவன் கண்களை மூடி படுத்திருந்தான். உறங்கிவிட்டானா என்பது தெரியவில்லை. பவித்ரா டீப்பாயை சுத்தம் செய்துவிட்டு அவன் மது அருந்திய டம்ளரை கழுவி வைத்தாள். பிறகு ஒரு போர்வையும் தலையணையும் தரையில் எடுத்துக் கொண்டு படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து கட்டிலை நெருங்கினாள். அவன் முழு கட்டிலையும் அடைத்துக் படுத்திருந்த விதத்தில் அங்கிருந்து அவளால் எதையும் எடுக்க முடியவில்லை.

 

தன்னுடைய பெட்டியை திறந்து அதிலிருந்து ஒரு டர்க்கி டவலை எடுத்து தரையில் விரித்து படுத்துக் கொண்டாள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். பயங்கர குளிர் உடலை துளைத்தது. சேலை முந்தியை இழுத்து போர்த்திக் கொண்டு குறுகி படுத்திருந்தாள். பலனே இல்லை. சிறிது நேரத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. எழுந்து முழங்கால்களை மடக்கி கைகளால் கட்டிக் கொண்டு அமர்ந்து ஜீவனை பார்த்தாள். அவன் போர்வைக்குள் புதைந்து கிடந்தான். எப்படி திடீரெண்டு இவ்வளவு குளிர் எடுக்கிறது என்று அறையை சுற்றி சுற்றி பார்த்தாள். ஏசியின் குளிர் மிகவும் அதிகப்படுத்தப் படுத்தப்பட்டிருந்தது.

 

முதலில் குளிரை குறைக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் அவனுக்கு இந்த குளிர் தேவைபடுகிறதோ என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டாள். அவளால் இதற்க்கு மேல் அந்த அறையில் தாக்குபிடிக்க முடியாது என்று தெரிந்த உடன் எழுந்து பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்று அங்கு கிடந்த பிரம்பு நாற்காலியில் சரிந்து அமர்ந்தாள். அந்த இடம் குளிரில்லாமல் இதமாக இருக்க… கண்ணயர்ந்து நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலேயே உறங்கிவிட்டாள்.

 

அதிகாலை இறை தேடி புறப்பட்ட பட்சிகளின் சத்தத்தில் கண்விழித்து எழுந்தவள் உள்ளே செல்லலாம் என்று நினைத்து பால்கனி கதவில் கைவைத்து திறக்க முயன்றாள். முடியவில்லை… இன்னும் வேகமாக தள்ளி பார்த்தாள்… ம்ஹும்… பலன் இல்லை… கதவு உள்ளே தாளிடப்பட்டிருந்தது. அதிர்ந்தாள் பவித்ரா…

 

இவள் வெளியே இருப்பது தெரிந்தே கதவை தாளிட்டிருக்கிறான். இன்னும் சொல்ல போனால் இவளை வெளியே அனுப்புவதற்காகவே ஏசியின் குளிரை அதிகப்படுத்தி நினைத்ததை சாதித்திருக்கிறான். தான் அவனோடு ஒரே அறையில் இருப்பதை கூட அவனால் சகிக்க முடியவில்லையா…! பவித்ரா அவமானத்தில் கூனி குறுகினாள். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி மீண்டும் நாற்காலியில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டாள்.

 

பொழுது பளபளவென்று விடிய ஆரம்பித்துவிட்டது. வெளியே தோட்டத்தில் ஆட்கள் நடமாடும் ஆரவரம் கூட கேட்ட ஆரம்பித்துவிட்டது. யாராவது இவளுடைய அறை பக்கம் வந்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். தலைகுப்புற விழுந்தாலும் கூட பரவாயில்லை. அதை யாரும் பார்த்துவிடக் கூடாதே என்கிற மனநிலையில்தான் இப்போது  இருந்தாள் பவித்ரா. அவளை ஜீவன் அவமானப் படுத்தியதை கூட அவளால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் அது வெளிய யாருக்கும் தெரிந்தால் அந்த அவமானத்தை அவளால் சகிக்கவே முடியாது.

 

‘ஐயோ… கடவுளே… கதவை திறக்க மாட்டேன் என்கிறானே…!’ என்று தவிப்புடன் காத்திருந்தாள். ஜீவன் நல்ல உறக்கத்தில் இருந்தான் போலும். அவனுக்கு பொழுது விடிந்தது கூட தெரிந்திருக்காது. பவித்ராவின் பதட்டம் அதிகமானது. தயக்கத்தை விட்டுவிட்டு கதவை படபடவென்று தட்டினாள்.

 

 

சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு சீற்றத்துடன் வெளிப்பட்டவன் “ஏய்… எதுக்கு இப்படி காலையிலேயே கதவ தட்டற…?” என்று அதட்டினான்.

 

 

“நான் வெளியில இருக்கேன்னு தெரிஞ்சுதானே தாள் போட்டிங்க… அப்போ தெரியாதா நான் காலைல கதவை தட்டுவேன்னு…” இருந்த கோபத்தில் சுள்ளென்று பாய்ந்தாள்.

 

அவள் பேசி முடிப்பதற்குள் சிறிதும் தயக்கமின்றி அவள் கன்னத்தில் பட்டென்று அறைந்தான் அவன். ரோஷத்தில் விழிகள் சிவக்க… சிலிர்த்து நிமிர்ந்த பவித்ரா “எதுக்கு இப்ப அடிச்சிங்க…?” என்றாள் ஆத்திரத்துடன்.

 

“என்னடி  கத்தர…? என் முன்னாடி நிற்க கூட உனக்கு தகுதி இல்ல… எந்த தைரியத்துலடி நீ என் பக்கத்துல வந்து மணவரைல உட்க்கார்ந்த…” என்று சொன்னவன் அவள் கையை பிடித்து தரதரவென்று இழுத்து சென்று டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் முன் நிறுத்தினான்.

 

“பாருடி உன் மூஞ்சிய… ஒரு நிமிஷத்துக்கு மேல உன்னாலையே தொடர்ந்து பார்க்க முடியாது… இந்த மூஞ்சியோடு எப்படிடி நான் காலம் முழுக்க வாழ்க்கையை ஓட்டறது…?”

 

“என் உருவத்துக்கும்… உயரத்துக்கும்… கலருக்கும்… எப்படிடி…? எப்படி உனக்கு மனசு வந்தது…! பேராசைக்கும் ஒரு அளவு வேண்டாமா…? என் வாழ்க்கையையே நாசமாக்கிட்டியேடி பிசாசே…!” என்று விஷத்தை கக்கிவிட்டு அவளை பிடித்து பின்னுக்கு தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.

 

அவன் தள்ளிவிட்டதில் தடுமாறி கட்டிலில் விழுந்த பவித்ரா செயலிழந்து கிடந்தாள். அவனுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் பவித்ராவின் செவிகளின் வழியே திராவகமாக இறங்கி அவள் இதயத்தை பொசுக்கிவிட்டது.

 

அவளுடைய அண்ணன் வீட்டில் அவள் வேலைகாரி போல்தான் நடத்தப்பட்டாள் என்றாலும் அவளுடைய தோற்றத்தை யாரும் இந்த அளவு கேவலப்படுத்தி பேசியதில்லை. அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளை அவள் சரியாக செய்துவிட்டு எதிலும் தலையிடாமல் இருந்தால் பெரிதாக எந்த பிரச்சனையும் முளைக்காது. ஆனால் இங்கு…!

 

‘இவன் என்ன இப்படி நடந்துகொள்கிறான்…! என் உருவத்தை பிடிக்கவில்லை என்றால் புகைப்படத்தை பார்த்த பொழுதே சொல்லியிருக்கலாமே…! இப்பொழுது ஏன் இப்படி வெடிக்கிறான்…! அந்த படத்தில் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் ஓரளவு வித்தியாசம் இருக்கிறதுதான் என்றாலும் வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் நாம் அசிங்கமாக மாறிவிடவில்லையே…! நேற்று கூட கண்ணாடியில் நம் உருவத்தை பார்த்த பொழுது அழகாகதானே இருந்தது…!’ என்று பலவாறு குழம்பியவள்,

 

‘இல்லை… நான் அழகுதான்… இவனுக்குத்தான் என் அழகு கண்ணில் படவில்லை… ஒரு நாள் கட்டாயம் இவனுடைய பார்வை மாறும். அப்போது இவனுடைய குணமும் மாறும்… பொறுத்திருப்போம்…’ என்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு எழுந்தாள்.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Good pavi… But jeeva Romba Thappu pannura

You cannot copy content of this page