உனக்குள் நான்-15
3988
0
அத்தியாயம் – 15
“சார்… மேடம் வந்துட்டாங்களான்னு எதுக்கும் ஒரு தடவ ரூம்லப் போய்ப் பாருங்க… நான் மேனஜரைப் பார்த்து விஷயத்தைச் சொல்லிட்டு வர்றேன்”
“ம்ம்ம்…” என்று முணுமுணுத்துவிட்டு உறங்கும் குழந்தையைத் தோளில் சுமந்து கொண்டு… கலைந்த கேசமும்… சோர்ந்த முகமுமாக காரிலிருந்து இறங்கிய கார்முகிலன் அறைக்குச் சென்றான்.
அவள் அறையில் இருக்க வேண்டுமே என்கிற தவிப்பில் இதயம் படபடத்தது. நடுங்கும் விரல்களால் மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்தவனுக்கு ‘இதை யார் சாத்தினார்கள்…’ என்று சிந்திக்கக்கூட முடியாத அளவுக்கு மூளை மரத்துப் போய்விட்டது.
‘இங்க தான் இருப்பா… வெளியே எங்கேயும் போயிருக்க மாட்டா…’ என்று தனக்குத்தானே தைரியம் சொல்லியபடி பயத்துடன் அறைக்குள் நுழைந்தவன்… அங்கே அவளைக் காணாவில்லை என்றதும் ஒரு நொடி சோர்ந்து, பின் பரபரப்புடன் குளியலறை மற்றும் பால்கனி கதவுகளைத் திறந்து பார்த்துவிட்டு முற்றிலும் சோர்ந்தான்.
‘ஓ’வென்று கதறியழ வேண்டும் போலிருந்தது… ‘மதி… மதி… எங்கடி இருக்க..? மதி… வந்துடுடி… உனக்கு எதுவும்…. இல்ல… மதி… வந்துடு… வந்துடு…’ – அரற்றும் மனதை அடக்கும் வழி தெரியாமல் குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்தவன், மகளுக்கு அருகிலேயே தலையைக் கைகளில் தாங்கியபடி அமர்ந்தான். அவனை மீறி கண்களில் கண்ணீர் கசிந்தது. கொடிய வினாடிகள்…! ஒவ்வொரு கணமும் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
முதலில் மனைவியைத் தேட ஆரம்பித்தபோது அவனுக்குள் எழுந்த, ‘எங்க போய்த் தொலைஞ்சா…!’ என்கிற எரிச்சல் இப்போது சுத்தமாக இல்லை.
அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதே என்கிற தவிப்பும்… அவள் பத்திரமாகத் தன்னிடம் வந்து சேர்ந்துவிட வேண்டுமே என்கிற துடிப்பும் தான் அவனை ஆட்டிப் படைத்தது.
###
“மேடம்…! நீங்க இங்கேயா இருக்கீங்க…!” – பரபரப்போடு மேனஜரைப் பார்ப்பதற்காக உள்ளே நுழைந்த டிரைவர் டேனியல், ரிசப்ஷனில் நின்று ஏதோ விசாரித்துக் கொண்டிருந்த மதுமதியைக் கவனித்துவிட்டு ஆச்சர்யத்துடன் சத்தமாகக் கேட்டார்.
பதட்டமான குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்த மதுமதி “என்னையா கேட்டீங்க?” என்றாள் புரியாமல்.
“நல்லாக் கேட்டீங்க போங்க… உங்களைத் தேடித்தானே நாங்க இவ்வளவு நேரமும் அலைஞ்சிட்டு வர்றோம்…”
‘என்ன இவர்…! என்னென்னவோ சொல்றார்…’ குழப்பத்துடன் புருவம் சுருக்கியவள் “நீங்க எதுக்கு என்னைத் தேடினிங்க?” என்றாள்.
“என்னம்மா இப்படிச் சொல்றீங்க? உங்களைக் காணாம சார் ரொம்பப் பயந்துட்டார்… நான் தான் உங்களைத் தேடுறதுக்காக அவரை வெளியே கூட்டிட்டுப் போனேன்…”
“நான் வெளியில போனேன்னு யாருங்க சொன்னது..? நான் இங்க தானே இருந்தேன்!”
“அட என்னம்மா நீங்க..? சாயங்காலம் நாலு… நாலரை மணிக்கு வெளியே போனீங்களா இல்லையா?” அவ்வளவு நேரமும் கார்முகிலனின் அவஸ்தையை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர் தன்னைமீறி அவளிடம் கேள்வி கேட்டார்.
அதிகாரமான அவருடைய கேள்விக்குப் பதில் சொல்லவே மதுமதிக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவருடைய வயதுக்கு மதிப்புக் கொடுத்து “ப்ச்… நான் எங்க சார் வெளியே போனேன்..? என்ட்ரன்ஸ் வரை போயிட்டு வந்துட்டேன்…” என்றாள் எரிச்சல் கலந்த குரலில்.
“ஐயோ… அது தெரியாம நான்தான் மேடம் நீங்க வெளியே போயிட்டீங்கன்னு சொன்னேன். பாவம்… சின்னக் குழந்தையை வச்சுக்கிட்டு… ரொம்பப் பயந்துட்டார்… குழந்தை வேற அழுதுகிட்டே இருந்துச்சு… இப்பதான் ரூமுக்குப் போனாரு. சீக்கிரம் போய்ப் பாருங்க..” – பரபரத்தார்.
அவர் பேசப்பேச அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ‘எல்லாம் தெரிஞ்ச மாதிரிச் சொல்லி இப்படி அலைய விட்டுட்டாரே…! பத்தாததுக்குக் குழந்தையை வேற தூக்கிக்கிட்டு அலஞ்சிருக்காங்க… இவரு தான் சொன்னாருன்னா அவருக்கு எங்க போச்சு புத்தி..?’ டிரைவர் மீது மூண்ட கோபம், கணவனின் பக்கம் திரும்பியது.
‘இந்த நேரத்துல அப்படி நான் எங்க போய்த் தொலஞ்சுடுவேன்னு… குழந்தையைத் தூக்கிக்கிட்டு ஊரெல்லாம் சுத்திட்டு வந்திருக்கார்…’ கோபத்தோடு நிலம் அதிர ரிசப்ஷனிலிருந்து நடந்து வந்தவள், படாரென்று அறை கதவைத் திறந்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த கார்முகிலன், மனைவி உள்ளே நுழைவதைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்து சட்டென்று எழுந்து நின்றான். அவள் பத்திரமாகக் கிடைத்துவிட்டாள் என்கிற உண்மையை உணர்ந்து அவன் மனம் முழுமையாக அமைதியடைவதற்கு முன் அவளுடைய சுடுசொற்கள் அவனைத் தாக்கின.
இறுக்கமான முகத்துடன் அவனை நெருங்கி வந்தவள், அழுத்தமாக அவன் கண்களை நோக்கினாள்… “இன்னும் என்னென்ன டிராமா பண்ணலாம்னு இருக்கீங்க? உங்களுக்கு எம்மேல அக்கறை இருக்குன்னு காட்ட எதுக்கு என் குழந்தையைப் போட்டு அலக்கழிக்கிறீங்க? இந்த நடிப்பையெல்லாம் நம்பறதுக்கு என்னை என்ன பழைய மதுமதின்னு நெனச்சிங்களா..?” – கடுமையாக வந்து விழுந்தன அவள் வார்த்தைகள்.
அவ்வளவு தான்…! அவனுக்கு எங்கிருந்து தான் வந்ததோ அந்தக் கோபம்… கண்மண் தெரியாத கோபம்… சட்டென்று பாய்ந்து அவளை நெருங்கி ‘பளீளீளீர்’ என ஓங்கி அவள் கன்னத்தில் ஓர் அறைவிட்டான். ‘ஆஆஆ…’ என்கிற சத்தத்துடன் பொறிகலங்கிப் போய்க் கட்டிலில் விழுந்தாள். தீக்காயம் பட்டது போல் எரியும் கன்னத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக்கொண்டு… துடிக்கும் இதழ்களைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டு… மிரட்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது. அவளுடைய அந்தப் பரிதாபத்தோற்றம் அவனுடைய சினத்தைச் சிறிதும் மட்டுப்படுத்தவில்லை.
கோபத்தால் கோவைப்பழம் போல் சிவந்த விழிகளால் அவளை உறுத்து நோக்கி “என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க உன் மனசுல? என்ன பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு..? கேனப்பய மாதிரி இருக்கா..?” – நெற்றி நரம்பு புடைக்கக் கர்ஜித்தவனின் ஆக்ரோஷத்தில் அவள் ஸ்தம்பித்துவிட்டாள்.
“சொல்…லு…டி…” – இடி போல் முழங்கினான்.
அவனுடைய ரௌத்திரத்தில் வெடவெடவென்று உடல் நடுங்கிப் போய்க் கிடந்தவளுக்குப் பதில் பேச முடியாமல் தொண்டை வறண்டு நாவொட்டியது. இவ்வளவு நாளும் அவளைத் தாங்கிக் கொண்டிருந்தவன் ஒரே நாளில் இப்படிச் சீறிக்கொண்டு வருவான் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
“பச்சக் குழந்தையைக் கைல வச்சுக்கிட்டு… உன்ன காணோமேன்னு தவிச்சுப் போய்… காடு மேடெல்லாம் தேடி அலைஞ்சுட்டு வந்து நிக்கிறேன்… நடிக்கிறேன்னு சொல்ற? எப்படிடி முடிஞ்சுது உன்னால?” – கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் கத்தினான்.
“காணாமப் போறதுக்கு நான் என்ன சின்னக் கு…” ஏதோ சொல்லத் துவங்கினாள்…. கொதித்துப் போயிருந்தவன் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் “பே…சாதடி…!” என்று ஆவேசத்துடன் கையை முறுக்கி அருகிலிருந்த ஷோகேசில் குத்திவிட… கண்ணாடி ‘சிலீரெ’ன்று உடைந்து தரையில் விழுந்து நொறுங்கியது. அவன் கையிலிருந்து வழிந்த இரத்தம் நொடியில் தரையை நனைத்தது.
அவனுடைய அந்த வெறிச்செயலை சற்றும் எதிர்பார்த்திராத மதுமதி ஆடிப் போய்விட்டாள். “ஐயோ…! கை… ரத்தம்…” என்று பதறித் துடித்தபடி கட்டிலிலிருந்து கீழே இறங்க தாவினாள்.
அந்த நேரத்திலும் “ஏய்… உக்காருடி மேலேயே…” என்று அவளை மீண்டும் கட்டிலில் தள்ளிவிட்டவன்… தரையில் கிடந்த உடைந்த கண்ணாடித் துண்டுகளை மிதித்துவிடாமல் அறையின் மறு பக்கத்திற்கு வந்தான். அவன் செல்லுமிடமெல்லாம் கையிலிருந்து வழிந்த இரத்தம் தரையில் புள்ளிக் கோலமிட்டது.
அவன் வேகமாகத் தள்ளிவிட்டதில் மீண்டும் கட்டிலில் ‘பொத்தென்று’ விழுந்தவள்… வாய்விட்டு ‘ஓ’வென்று கதறியழுதபடி உருண்டு, கட்டிலின் மறுபக்கம் இறங்கி கணவனிடம் பாய்ந்தோடினாள்.
அவ்வளவு கலவரத்திலும்… கோபத்திலும் தரையில் கிடக்கும் கண்ணாடித் துண்டுகள் தன்னுடைய காலில் குத்திவிடக் கூடாது என்பதில் அனிச்சையாகக் கவனம் செலுத்திய கணவனின் செயல் அவள் மனதைப் பிழிந்தது.
அவர்கள் போட்ட சத்தத்தில் கண்விழித்து அழ ஆரம்பித்த குழந்தையைக் கூடக் கவனிக்காமல், தவிப்பும் பதற்றமுமாக “இப்படிப் பண்ணிட்டீங்களே…! ஐயோ…! எவ்வளவு ரத்தம்…” என்றபடி கணவனிடம் ஓடி அவன் கையை உயர்த்திப் பிடித்தாள்.
“ச்சீ… விடுடி கையை…” – அவளிடமிருந்து சரட்டென்று கையை உருவி கொண்டான்.
“நான் பேசினது தப்பு தான்… மன்னிச்சிடுங்க… இப்படி ரத்ததோட நிக்காதீங்க… வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்…” – கெஞ்சினாள்.
“எதுக்குடி பதற? நான் தான் நடிகனாச்சே! இந்த ரத்தம் கூட நடிப்பு தான்… நீ போய் உன் வேலையைப் பாரு…” பிடிவாதத்துடன் மருத்துவமனைக்கும் செல்லாமல், அடிபட்ட கைக்கு முதலுதவியும் செய்யாமல் சேரில் அமர்ந்தான்.
குழந்தையின் அழுகை அதிகமானது. கீழே இறங்க முயன்று தரையில் சிதறிக் கிடக்கும் கண்ணாடியில் விழுந்தாலும் விழுந்துவிடும் என்பதால் ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து “அப்படியெல்லாம் பேசாதீங்க… ப்ளீஸ்… என் மேலக் கோபம்னா அதை என்கிட்ட காட்டுங்க… எதுக்கு உங்களை வருத்திக்கிறீங்க… ப்ளீஸ் வாங்க… ப்ளீஸ்… ப்ளீஸ்…” அவன் காலடியில் அமர்ந்து கேவினாள்.
இவ்வளவு தூரம் அழுது… துடித்து… பதறும் போதும் அவள் வாயிலிருந்து ‘மாமா’ என்கிற வார்த்தை மட்டும் வரவே இல்லை என்பதை வேதனையுடன் கவனித்தான். ‘ஹா… என்னோட உணர்வுகளையெல்லாம் நடிப்புன்னு சொன்னவ ‘மாமா’ன்னு எப்படிச் சொல்லுவா…! பழிகாரி…!’ – அவன் கையிலிருந்து கசியும் குருதியை விட அதிகமாக இதயத்திலிருந்து கசிந்தது.
அந்த நேரம் டிரைவர் டேனியல், தன்னுடைய காரில் தவறுதலாக கார்முகிலன் விட்டுச் சென்ற அவனுடைய கார் சாவியை ஒப்படைப்பதற்காக அவனைத் தேடி அறைக்கு வந்தார்.
திறந்து கிடந்த அறையில் அவன் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்தவர் “ஐயையோ… என்ன சார்… ஆச்சு..?” என்று பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தார்.
அவன் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். ஆனால் மதுமதிக்கு அவருடைய வருகை பெரும் பலமாக இருந்தது. “அண்ணா… என்மேல இருக்கற கோபத்துல… கையை ஷோகேஸ்ல அடிச்சிட்டாருன்னா… ஹாஸ்பிட்டல் வரமாட்டேங்கிறார்…” என்று அழுது கொண்டே கூற… “ம்மா… நீங்க போய் ஒரு டவலைத் தண்ணில நெனச்சுக் கொண்டு வாங்கம்மா… சீக்கிரம்…” – துரிதமாகக் கட்டளையிட்டவர், கார்முகிலனிடம் திரும்பி,
“என்ன சார் இது..? சின்னப் பையன் மாதிரி… முதல்ல எழுந்திறீங்க சார்…” என்று அவனுடைய தோள்பட்டையைப் பிடித்துத் தூக்கினார்.
“இல்லல்ல விடுங்க… எனக்கு ஒண்ணும் இல்ல…” – மறுத்தான்.
அதற்குள் மின்னல் வேகத்தில் உள்ளே ஓடிய மதுமதி நொடியில் ஈரத் துணியைக் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தாள். அதை வாங்கி அவன் கையில் பரபரவென்று சுத்திக்கொண்டே “படிச்ச நீங்களே இப்படி முரட்டுத்தனமா நடந்துகறீங்களே சார்…” என்றார்.
அவனோ அவரிடம் கையைக் கொடுத்துவிட்டு அசையாமல் இரும்பு சிலை போல் அமர்ந்திருந்தான்.
“சந்தோசமா ஊர் சுத்திப் பார்க்க வந்துட்டு… இப்படிச் சண்டை போட்டுக்கிட்டு இருக்கலாமா… பாருங்க… மேடம் எப்படி அழறாங்கன்னு… எழுந்து வாங்க சார்…” – வற்புறுத்தினார்.
அவன் அவள் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. ஆனால் அந்த டிரைவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு எழுந்தான்.
“நானும் வர்றேன்…” – என்றபடி மதுமதியும் உடன் கிளம்ப, சட்டென்று அவள் பக்கம் திரும்பியவன் உக்கிரமாக முறைத்தான். அவனுடைய அனல்பார்வை அவளைச் சுட்டுப் பொசுக்கினாலும்… அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்… குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு காலணியை அணிந்து அவர்களோடு மருத்துவமனைக்குச் செல்ல தயாரானாள்.
“வேண்டாம் மேடம்… குழந்தை ரொம்ப டயர்டா இருக்கும்… நீங்க ரிசப்ஷனுக்கு போன் பண்ணி ரூம் மாத்திக் கொடுக்கச் சொல்லுங்க… ஹாஸ்பிட்டல் இங்கதான் இருக்கு… நான் சாரைக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தடறேன்…” – இடைபுகுந்து கூறிய டிரைவர் கார்முகிலனோடு அறையிலிருந்து வெளியேறினார்.
Comments are closed here.