Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-14

அத்தியாயம் – 14

ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளைத் தண்ணீருக்கு இழுக்கிறது!”

அன்று காலை எழுந்ததிலிருந்து மகளை, மாமியார் வீட்டிற்குக் கிளப்ப மான்விழியின் பெற்றோர் படாதபாடு பட்டார்கள். ஆனால் அவளை அசைக்கவே முடியவில்லை. நான் கேட்டது நடந்தால்தான் இங்கிருந்து நகருவேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள். பெற்றவர்கள் செய்வதறியாது விழித்துக் கொண்டிருக்கையில் பெரியவீட்டின் கார் வாசலில் வந்து நின்றது.

 

“என்னங்க… மாப்ள வந்திருக்காரு போலருக்குங்க… ”

 

“சரி வா… போயிப் பாக்கலாம்…” என்றபடி சிதம்பரம் வாசலுக்குச் செல்ல அவர் மனைவி அவரைப் பின்தொடர்ந்தார்.

 

வைதேகியும் தேவனும் காரிலிருந்து இறங்கினார்கள். மாப்பிள்ளையைக் காணாது ஏமாந்த சிதம்பரம் தம்பதியர் அதை முகத்தில் காட்டாமல், “வாங்க… வாங்க… வாங்க சின்ன மாப்ள… வாம்மா தங்கச்சி…” என்று வந்தவர்களைப் பலமாக வரவேற்று அமரச் செய்தார்கள்.

 

பரஸ்பரம் முகமன் விசாரித்த பிறகு “எங்க… மருமகளைக் காணும்…” என்று வைதேகி ஆரம்பிக்க,

 

“உள்ள இருக்கா… நா போயிக் கூட்டியாறேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல எத்தனித்த அவளுடைய தாயைத் தடுத்து… “இல்ல இல்ல… நானே வந்து பார்க்குறேன்…” என்றபடி மருமகளைத் தேடி உள்ளறைக்குச் சென்றாள் வைதேகி.

 

ஏதோ புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ருத்ரனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த மான்விழி அறைக்குள் யாரோ நுழையும் அரவரம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். மாமியாரைக் கண்டதும் பரபரப்பாகி நாவலை ஒரு பக்கம் வைத்துவிட்டு “வாங்கத்த…” என்று எழுந்தாள்.

 

“நல்லா இருக்கியாம்மா…?” என்று வைதேகி சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்ததும் அவளும் இலகுவாகி “ந… நல்லா இருக்கேன்த்த…” என்றாள் தெளிவில்லாமல்.

 

“உக்காருங்க அண்ணி… மானுகிட்டப் பேசிக்கிட்டு இருங்க. நா போயி காபிப் போட்டு எடுத்துட்டு வாரேன்…” என்று மான்விழியின் அன்னை சமயலறைக்குச் சென்றுவிட வைதேகியும் மான்விழியும் தனித்து விடப்பட்டார்கள்.

 

“என்னம்மா இப்புடிப் பண்ணிப்புட்ட… எங்களுகிட்ட ஒரு வார்த்தச் சொல்லிட்டு வந்திருக்கலாம்ல… உன்ன காணாம நாங்க எல்லாரும் தவிச்சுப் போய்ட்டோம்…”

 

“இல்லத்த… வந்து…” என்று மாமியாரின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் மான்விழி சங்கடமாக விழித்தாள்.

 

“தம்பிக்கும் உனக்கும் ஏதோ மனக்கசப்புன்னு தெரியுது. ஆனா எதுவா இருந்தாலும் நீ இப்புடித் திடுதுப்புன்னு கெளம்பி வந்திருக்கக் கூடாது…”

 

மாமியார் தன்னை மட்டும் குற்றம்சாட்டிப் பேசுவது பிடிக்காமல், “தப்பு என்மேல மட்டும் இல்லத்த… நான் அந்த வீட்டுலேருந்து வெளிய வர்ற மாதிரி நடந்துக்கிட்டது உங்க பையன்தான்” என்றாள் வெடுக்கென்று.

 

“தம்பி என்ன செஞ்சிச்சு…?”

 

“எங்கத் தெருவுல நாலு பேருகிட்ட அடாவடித்தனம் பண்ணி நெலத்த எழுதி வாங்கியிருக்காரு. எங்க அப்பாவையும் சேர்த்து… சொல்லப் போனா அந்த நெலத்துக்காகத்தான் எங்கக் கல்யாணமே நடந்திருக்கு…”

 

“மானு…! அப்புடியெல்லாம் இருக்காதும்மா… தம்பி அதுமாரி செய்ற ஆளு இல்ல… நம்மக்கிட்ட இல்லாத நெலமா…? நாம எதுக்கு மத்தவங்க நெலத்துக்கு ஆசைப்படப் போறோம்…”

 

“உங்களுக்குத் தெரியாம இருக்கலாம்த்த… இந்தத் தெரு ஆளுங்கக்கிட்டக் கேட்டுப் பாருங்க… உங்க மகனோட லச்சணத்தப் புட்டுப் புட்டு வைப்பாங்க…”

 

“இல்லம்மா… அப்படியே தம்பி ஏதாவது நெலம் வாங்கியிருந்தாலும் யாருக்கும் அநியாயம் செஞ்சிருக்காது. முழுசா வெவரம் தெரியாம நீ வார்த்தைய விட்டுடாத…”

 

“விபரம் தெரிய வேண்டியது எனக்கு இல்லத்த… உங்களுக்குத்தான்… உங்க பையன்கிட்டையே போயி விசாரிச்சுப் பாருங்க… எல்லாம் புரியும்…”

 

“சரிம்மா… நா விசாரிக்கிறேன்… இப்ப நீ கெளம்பு… நேரமாவுது… ஆச்சிக்கு ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடுக் குடுக்கணும். நா அங்க இல்லன்னா ஒரு வேலையும் நடக்காது…” என்று இயல்பாகப் பேசிக் கொண்டே மருமகளை வீட்டிற்கு அழைத்தாள்.

 

“உங்க பையன் பண்ணிக்கிட்டு இருக்கத் தப்பையெல்லாம் சரி பண்ணாம நா இங்கிருந்து வரமாட்டேன்” அவள் பிடிவாதமாகச் சொன்னாள்.

 

அந்த நேரம் காபியுடன் உள்ளே நுழைந்த மான்விழியின் தாய் மகளின் பேச்சைக் கேட்டுவிட்டு அரண்டுப் போய் “ஏய்… மானு… என்ன பேச்சு இது… அத்த தான் கூப்பிட்றாங்கல்ல… கெளம்பு…” என்றாள் அதட்டலாக.

 

மான்விழி பதில் பேசாமல் தாயை முறைத்தாள். அவர்களின் பேச்சில் இடையிட்ட வைதேகி, “விடுங்கப் பரவால்ல… மானுக்கு மனசுலக் கொழப்பம். அது தெளியாம அங்க வந்தா ரெண்டுபேருக்கும் சச்சரவாத்தான் இருக்கும். நா போயித் தம்பிக்கிட்டப் பேசுறேன். ரெண்டுபேரும் மனசுவிட்டுப் பேசினா எல்லாப் பிரச்சனையும் பனி போல வெலகிடும். அதுவரைக்கும் மருமகளப் பத்தரமா பாத்துக்கங்க…” என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வந்து சிதம்பரத்திடம் பேசிக் கொண்டிருந்த தேவனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

 

இந்த விஷயம் ருத்ரனின் காதுக்குச் சென்றபோது அவன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டான்.

 

“என்ன கேக்காம எதுக்கு என்னோட விஷயத்துல தலையிடுறிங்க…? யாரக் கேட்டு அங்க போனிங்க…?” என்று குதித்தவனைப் பாட்டிதான் சமாதானம் செய்தார்கள்.

 

“என்ன ராசு நீ…? அந்த மானு பொண்ணு என்னாத்துக்கு அப்பமூட்டுக்குப் போனிச்சோ தெரியாது… ஆனா… கல்யாணமாயி ரெண்டு மாசத்துக்குள்ள இப்புடி புருசனும் பொண்டாட்டியும் தனித்தனியா பிரிஞ்சு நின்னா நல்லாவா இருக்கும்… ஊர்ல நாலு பய நம்ப மூஞ்சிக்கு நேரா கைய நீட்டி பேசிப்புடமாட்டான்…?”

 




 

“ஆச்சி… அவளுக்குக் கொழுப்பு ஆச்சி… ஒடம்பு முழுக்கக் கொழுப்பு… ஆரம்பத்துலையே அடக்காம விட்டுட்டேன்… இப்ப ஆடறா…” என்றான் முகத்தில் கோபம் ஜொலிக்க.

 

“அய்யே…! ஒம் பொண்டாட்டிக்குக் கொழுப்பு இல்லன்னாதானே பிரச்சன… அது இல்லன்னா அவ எப்புடி ஒன்னச் சமாளிப்பா… எல்லாம் சாடிக்கு ஏத்த மூடிதான்…” என்று பாட்டி போட்டுத் தாக்க அவன் பதில் பேசாமல் முறைத்தான்.

 

“தம்பி… சொல்றேன்னு கோவப்படாத… மானு சின்னப் பொண்ணு. அதுக்கு விருப்பம் இல்லாம உம்புடிவாதத்துக்கு அந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணியிருக்க. அப்படி இருக்கும்போது அந்தப் பொண்ணுக்கு எந்தக் கொறையும் வராம பாத்துக்க வேண்டியது உன்னோட கடமை…” வைதேகி புத்திச் சொன்னாள்.

 

“இங்க அவளுக்கு என்ன கொறையாம்…?” அவன் எரிச்சலுடன் கேட்டான்.

 

“நீ செய்ற எல்லாக் காரியத்துக்கும் உண்டான காரணத்த அந்தப் பொண்ணுக்கு சொல்லிப் புரிய வைக்காததுதான் கொற…” மறைமுகமாகத் தாய் சொன்ன விஷயத்தைப் புரிந்துகொண்ட ருத்ரன்,

 

“ஓஹோ…” என்றான் சிந்தனையுடன்.

 

“போய்யா… நாளைக்கு நீயே போயி அந்தப் பொண்ணுக்கிட்ட என்னா வெவரமுன்னு கேட்டுச் சமாதானம் பண்ணி வீட்டுக்குக் கூட்டியாய்யா…” என்று சொன்னப் பாட்டிக்குத் தலையை ஆட்டிவிட்டு மாடிக்குச் சென்றான்.

 

முதல்நாள் போலவே அன்றும் ருத்ரனுக்குச் சரியாக உறங்க முடியவில்லை. அந்த வீட்டில் மான்விழியின் நடமாட்டம் இல்லாதது பெரிய இழப்பாகத் தோன்றியது.

 

‘திமிர் பிடிச்சக் கழுத… ஒன்னுமில்லாத விஷயத்த ஊதிப் பெருசாக்கிட்டாளே…!’ என்று நினைத்தான். அதேநேரம் ‘அவளைக் கைநீட்டி அடித்தது ஒன்னுமில்லாத விஷயமா…? அதைக் கூடச் சகித்துக் கொண்டு இங்கு இருந்தவளை இந்த நிலப் பிரச்சனை விரட்டியடித்துவிட்டதா…? அவ்வளவு கடுமையாகவா இந்த விஷயம் அவள் மனதைப் புண்படுத்திவிட்டது?’ என்று அவன் மனசாட்சிக் கேள்வி எழுப்பியது.

 

‘எதைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்வது… எப்படித் தன்னை நியாயப்படுத்துவது… உண்மையிலேயே தன்னிடம் நியாயம் இருக்கிறதா…?’ என்றெல்லாம் யோசித்து யோசித்து விடைத் தேடிக் கொண்டிருந்தவன் மனப்போராட்டத்தினூடே வெகுநேரம் கழித்துக் கண்ணுறங்கினான்.

# # #

 

வைதேகி தேவனுடன் சிதம்பரத்தின் வீட்டிலிருந்து புறப்பட்ட பிறகு மான்விழிக்கு அவளுடைய தாய் எடுத்துச் சொல்ல முயன்றாள்…

 

“மானு… எதுக்குடி இப்புடிப் புடிவாதம் புடிக்கிற…? ”

 

“நீ எதுக்குப் புடிவாதம் புடிக்கிற…? நேத்து நீங்க ஏமாந்துப் போயி எழுதிக் குடுத்த நெலத்தத் திருப்பிக் குடுக்கச் சொல்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை…?”

 

“அது எப்புடிடீ கேக்க முடியும்….? காச வாங்கிகிட்டுப் பத்திரம் பண்ணிக் குடுத்த நெலத்தத் திருப்பிக் குடுன்னு எப்புடிடீ கேக்க முடியும்…?”

 

“காச வாங்கிக்கிட்டா…? காச வாங்கிக்கிட்டா நெலத்தக் குடுத்திங்க…? அப்பா நெலத்த வித்தாரா?”

 

“அப்பா விக்கல… உம்புருஷந்தான் புடிவாதமா நெலத்துக்கு உண்டான காசக் குடுத்துட்டாராம்…”

 

“என்னம்மா சொல்ற? இவரு நெறைய பேருக்கிட்ட நெலத்த ஏமாத்தி எழுதி வாங்கியிருக்காரும்மா… நம்மக்கிட்ட அதுமாரி பண்ணலையா…?”

 

“யாரு சொன்னது…? அந்தக் குட்டிச் சாத்தானா…? அது ஒரு அரவேக்காடு. அவ பேச்சக் கேட்டுக்கிட்டுத்தான் இப்படி உளறிகிட்டு இருக்கியா…?”

 

“அம்மா… அவ ஒன்னும் பைத்தியகாரி இல்ல விஷயம் தெரியாமப் பேசுறதுக்கு…”

 

“மூடுடி வாய… நீயே ஊரக் கூட்டி அவரு பேரக் கெடுத்துவுட்ருவ போலருக்கே… அவ பைத்தியக்காரி இல்ல… ஆனா நல்லது கெட்டதப் முழுசாப் புரியாத சின்னப்புள்ள… அவ சொன்னாளாம்… இவ கேட்டாளாம்…” என்று திட்டிவிட்டு அவன் மற்றவர்களிடம் நிலம் வாங்கிய விபரத்தையும் அதற்கான காரணத்தையும் விவரித்தாள்.

 

ருத்ரன் மீது கோபம் கொண்டதற்கான காரணங்கள் யாவும் பிசுபிசுத்துப் போய்விட்ட அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் மான்விழி திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

 

“என்னடி இப்படிப் பேய் முழிமுழிக்கற?”

 

“இந்த விஷயத்த நீ ஏன் நேத்தே என்னுகிட்டச் சொல்லல?”

 

“நீ எங்கடி என்ன பேசவிட்ட…? நா ஒன்னு சொன்னா நீ ஒன்ன பேசி சண்டப் போடறதல தானே குறியா இருந்த?”

 

தாய் சொல்வதில் இருந்த உண்மை உரைக்க மௌனமானாள் மான்விழி.

 

பணவிஷயத்தில் ருத்ரன் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை என்றாலும் நிலத்தை வலுக்கட்டாயமாகப் பிடிங்கியிருக்கிறான் என்று அவன் மீதானக் கோபத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்ள முயன்றாள்.

 

ஆனால் அவனுடைய அடாவடித்தனத்திற்குப் பின்னால் இருந்த பொதுநலம் அவளுடைய முயற்சியைச் சுக்குநூறாக்கிவிட்டது. அவன்மீது தவறில்லை என்பதை அவள் மனம் ஏற்றுக் கொண்டாலும் அவளால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள முடியவில்லை.

 

கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி வந்ததோடு சமாதானத்திற்கு வந்தவர்களையும் ரோஷத்துடன் திருப்பியனுப்பிவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அங்குச் செல்வது என்று தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி அவன் மீதானக் கோபத்தைத் தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவள், மீண்டும் பழைய விஷயத்தைப் பிடித்துக் கொண்டாள்.

 

“என்ன யோசிக்கிற…? நாளைக்குக் காலையில உன்ன…” தாய் பேசிக் கொண்டிருக்கும் போதே மகள் இடையிட்டாள்.

 

“அய்யோம்மா… ஏம்மா என்ன தொரத்தறதுலையே குறியா இருக்க…? அவர் என்னைக் கன்னத்துல அடிச்சாரே அதைக் கேக்கமாட்டியா…? என் கழுத்தப் பிடிச்சு நெரிச்சாரே அதைப் பத்திப் பேசவே மாட்டியா…?” என்றாள் சோர்ந்து போய்.

 

மகளின் அந்தக் குரல் தாயின் மனதைப் பிசைந்தது. தனக்குள் உண்டான உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள்,

 

“மானு… உங்க அப்பா அவருகிட்ட கேட்டுட்டாராம்டா… அவரும் செஞ்சது தப்புதான்னு ஒத்துக்கிட்டாரம்…”

 

மான்விழி பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். மகளை இதற்கு மேல் கட்டாயப்படுத்துவது முறையல்ல என்று உணர்ந்த தாய் ‘ஓணான் வேலிக்கு இழுக்குதுதவளைத் தண்ணிக்கு இழுக்குதுஇதுகளை எப்படிச் சமாதானம் செஞ்சு சேத்து வைக்கப் போறோமோ…’ என்கிற கவலையுடன் அங்கிருந்து அகன்றாள்.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Mam plz upload nxt ud am waiting

You cannot copy content of this page