Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-16

அத்தியாயம் – 16

தனிமையில் அழுதழுது மதுமதிக்குக் கண்ணீர் வற்றிவிட்டது. ‘என்ன காரியம் செய்துவிட்டான்…! எவ்வளவு இரத்தம்…! ச்ச… அப்படி என்ன கோபம்…! ஹாஸ்பிட்டலுக்குப் போனவங்களை வேற இன்னும் காணோமே…! ஏதாவது சீரியஸா ஆயிடுச்சோ…! கடவுளே…!’ – மனம் புலம்பித் தவித்தது.

 

அவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு ரிசப்ஷனுக்கு போன் செய்து அறையை மாற்றிக் கொடுக்க முடியுமா என்று கேட்டு, பக்கத்து அறைக்கு மாறினாள். கணவனைப் பற்றிய கவலை மனதை அரித்துக் கொண்டிருக்க… சிந்தனையைத் திசை திருப்ப முடியாமல் அதில் உழன்றபடியே குழந்தைக்கு உணவு கொடுத்து உறங்க வைத்துவிட்டுக் காத்திருந்தாள்.

 

மணிக்கணக்காகக் காத்திருந்தும் மருத்துவமனைக்குச் சென்றவர்கள் வரவே இல்லை. என்னவோ ஏதோ என்று அவளுடைய கலக்கம் அதிகமானது. போன் செய்து கேட்கலாம் என்றால் யாருக்கு போன் செய்வது…! கார்முகிலன் அவனுடைய கைப்பேசியை எடுத்துச் செல்லவில்லை. டேனியலின் கைப்பேசி எண் இவளுக்குத் தெரியாது… எதுவும் செய்ய முடியாமல் தவித்து மனக்குழப்பத்துடனும், சஞ்சலத்துடனும் நேரத்தைப் பிடித்துத் தள்ளினாள்.

 

அவளுடைய வெகுநேரக் காத்திருப்பிற்குப் பிறகு இரவு பதினொரு மணிக்கு அழைப்புமணி அடித்தது. சேஃப்டி லென்ஸ் வழியாகப் பார்த்தாள். முகிலனும் டேனியலும் நின்று கொண்டிருந்தார்கள். அவசரமாகக் கதவைத் திறந்தவள் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

 

பாறை போல் இறுகியிருந்த முகம் அவளை அச்சுறுத்தியது. இப்போதைக்கு இவனிடம் பேசவே முடியாது என்பதை உணர்ந்தவள், டேனியல் பக்கம் திரும்பி “என்னண்ணா இவ்வளவு லேட் ஆயிடுச்சு..? டாக்டர் என்ன சொன்னார்?” – என்று கேட்டபடி அவர்கள் உள்ளே நுழைய வழிவிட்டாள்.

 

“ஒண்ணும் பிரச்சனை இல்லம்மா… காயம் மேலால தான் பட்டிருக்கு. நல்லவேளை நரம்பு கிரம்புல காயம் பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும்… இந்தாங்கம்மா… இதுல மாத்திரை இருக்கு… ரெஸ்டாரன்ட்லேயே சார் சாப்பிட்டுட்டார். பெயின் கில்லர் ஊசி போட்டிருக்காங்க… தூங்குவாரு… பார்த்துக்கங்க… ” – அக்கறையோடு கூறினார்..

 

‘யார் இந்த மனிதர்…! எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எதற்காக அவர்களுக்கு இவ்வளவு உதவிகளையும் செய்கிறார்…! இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா…!’ – அன்போடு அவரைப் பார்த்தவள் மனதின் அடியாழத்திலிருந்து “ரொம்ப நன்றிண்ணா…” என்றாள். அவளுடைய குரல் நெகிழ்ந்திருந்தது.

 

“இருக்கட்டும்மா… சாரைப் பார்த்துக்கங்க… நான் காலையில வர்றேன். இந்தாங்க… என்னோட கார்ட்… இதுல என் நம்பர் இருக்கு… ஏதாவது வேணும்னா உடனே கால் பண்ணுங்க” – அவருடைய விசிட்டிங் கார்ட் ஒன்றைக் கொடுத்தார்.

 

“தேங்க்ஸ் அண்ணா…” – அவர் கொடுத்த அட்டையைப் பெற்றுக்கொண்டாள்.

 

“வர்றேன் சார்…” – கையில் கட்டுடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவனிடம் கூறினார்.

 



 

அவன் பதில் சொல்லவில்லை. மாறாக எழுந்து வந்து இடது கையால் அவரைத் தோளோடு சேர்த்து அழுத்தமாக அணைத்தான். அவனுடைய அந்தச் செயலில் வெளிப்பட்ட ஆழமான அன்பைப் புரிந்துகொண்டவர் புன்சிரிப்புடன், “காலையில பார்க்கலாம் சார்…” – என்றார்.

 

“ம்ம்ம்…” என்று கண்களை மூடித் திறந்து தலையசைத்து அவருக்கு விடைகொடுத்தான்.

 

டேனியல் வெளியேறிய பிறகு மனைவியின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் உடை மாற்றிக்கொண்டு வந்து குழந்தைக்கு அருகில் படுத்து… ஐந்தே நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான்.

 

வெகுநேரம் விழியகற்றாமல் உறங்கும் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மதுமதி, திடீரென்று குழந்தை ஒருமுறை சிலிர்த்து நடுங்கிவிட்டு மீண்டும் உறங்குவதைக் கவனித்தாள். அப்போது தான் அறையில் குளிர் அதிகமாகப் பரவியிருப்பதை உணர்ந்தவள், எழுந்து சென்று ஹீட்டரை ஆன் செய்துவிட்டு வந்து குழந்தையைச் சுவரோரமாக நகர்த்திப் படுக்க வைத்ததோடு… போர்வையையும் போர்த்திவிட்டாள். பிறகு கணவனுக்கும் குழந்தைக்கும் இடையில் படுத்துக் கண்மூடினாள்.

 

உறக்கம் வரவில்லை. அன்று அவன் நடந்து கொண்ட விதம் அவள் மனதை அழுத்தியது. ‘அப்படி என்ன நான் தப்புப் பண்ணிட்டேன்… ஏதோ கோபத்துல ஒரு வார்த்தைச் சொல்லிட்டேன். அதுக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டானே…! இப்ப கூட முகத்தைத் திருப்பிக்கிட்டுப் படுத்துட்டானே…!’ -சமீபகாலமாக அவள் என்ன செய்தாலும் பொறுத்துப் பொறுத்துப் போனவன், இன்று இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வது மனதை வலிக்கச் செய்தது.

 

லேசாகத் தலையைத் திருப்பி அவன் முகம் பார்த்தாள். மெல்லிய குறட்டை ஒலியுடன் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தான். ‘இவன் தானா சற்றுமுன் அவ்வளவு ஆட்டம் போட்டது…!’ – என்கிற ஆச்சர்யம் கூடத் தோன்றியது அவளுக்கு.

 

‘வெறி பிடிச்ச மாதிரிக் கையைக் கண்ணாடில மோதிக் காயப்படுத்திக்கிட்டவன்… அதே கண்ணாடி நம்ம கால்ல குத்திடக் கூடாதுன்னு… எப்படி நம்மள பிடிச்சுக் கட்டில்ல தள்ளிவிட்டான்…! மனசுல அன்பு இல்லன்னா… அனிச்சையா எப்படி அவ்வளவு வேகம் வரும்…!’ – இதமான ஓர் உணர்வு மனதில் பரவ… கண்களில் கண்ணீர் பளபளத்த போதும் இதழ்களில் மெல்லிய புன்னகை பூத்தது. அறிவின் அனுமதியை எதிர்பார்க்காமல் மனதின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுத் தன் வெண்டைப்பிஞ்சு மென்விரலால் அவன் தலை கோதினாள்.

 

நீலவேணி என்னும் இருண்ட காலம் அவள் வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்தாள். ‘காபி, கிரிக்கெட்னு அவனுக்கு ரொம்பப் பிடிச்ச சின்னச் சின்ன ஆசைகளைக் கூட நமக்காகத் தியாகம் பண்ணிட்டானே…!’

 

‘வீட்டு வேலையே செய்யாதவன் நமக்குப் பிடிக்குங்கிறதுக்காக மீன்தொட்டியைக் கூடத் தண்டனை மாதிரி வாரா வாரம் கழுவிகிட்டு இருக்கானே…!’ – அவள் மனம் இரங்கியது.

 

‘யாரைப் பத்தியும் கவலைப்படாம தனக்குச் சரின்னு பட்டதை மட்டும் செஞ்சு முடிக்கற பிடிவாதக்காரன்… இன்னிக்கு நம்மள சந்தோஷப்படுத்தணும்னே ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துச் செய்றானே…!’ – மனதிற்குள் இதமான உணர்வு பரவியது.

 

‘நாம எவ்வளவு தான் தாமரை இலை தண்ணி மாதிரி ஒட்டாம வாழ்ந்து அவன் மனச நோகடிச்சாலும்… திரும்பத் திரும்ப நம்மளையே சுத்திச் சுத்தி வருவானே…! என்னதான் அவனோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காம விலகிவிலகிப் போனாலும் அதை அவமானமா நினைக்காம தானா வந்து இழைவானே…!’ – மனதில் மகிழ்ச்சியின் சாரலடிக்க ஆரம்பித்தது.

 

‘தன்னுடைய சுயத்தை யாருக்காகவும் இழக்காதவன் இன்று நம்மகிட்ட தன்னையே இழந்துவிட்டது போல் நடந்து கொள்கிறானே…! காதல் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா…! ஒருவேளை உண்மையிலேயே இவனுக்கு நம்மீது காதல் இருக்கிறேதோ…!’ – மனம் அவனுக்குச் சாதகமான திசையில் பயணிக்கத் துவங்கியதுமே ‘நம்பாதே…! நம்பாதே…!’ என்று அறிவு கூக்குரலிட்டது.

 

‘ஒருமுறை நம்பி ஏமார்ந்து பெரும் சுழலில் சிக்கி மீண்டிருக்கிறாய்.. திரும்ப அந்தத் தவறை செய்யாதே’ என்று அவளை இழுத்துப் பிடித்தது. மனமும் அறிவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க… பெரும் உணர்ச்சிப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டவளின் உடல் நடுங்கியது. ‘இல்ல… நம்ப மாட்டேன்… நடிக்கிறான்… என் மனச மாத்துறதுக்காக டிராமா பண்ணுறான்…’ – பதட்டத்துடன் அவள் சிந்தனைகள் அலைமோதின.

 

அடுத்த நொடி அழுத்தமாக ஒரு கை அவள்மீது விழுந்து வளைத்தது. அவள் அதிர்ந்து சிந்தனைகளிலிருந்து விடுபடும் முன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தான் கார்முகிலன். என்ன நடக்கிறது என்பதை யோசிக்கக் கூட முடியாமல் ஒரு கணம் திகைத்தவள்… அவனிடமிருந்து ஏதோ முனகலான வார்த்தைகள் வெளிப்படுவதைக் கேட்டுத் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

 

தூக்கத்தில் ஏதோ உளறினான். என்ன சொல்கிறான் என்பது புரியவில்லை. ‘தூங்கறானா இல்ல தூங்கற மாதிரி நடிக்கிறானா…!’ – மீண்டும் சந்தேகம். நன்றாக உற்று நோக்கினாள். சீராக மூச்சை இழுத்துவிட்டபடி படுத்திருந்தவனின் நிர்மலமான முகத்தைப் பார்த்தால் நிச்சயமாகச் சொல்லலாம்… இந்த உறக்கம் பொய்யில்லை. அலைந்த களைப்பிலும்… மருந்து வேகத்திலும் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

 

‘என்னாச்சு இவனுக்கு…!’ என்று அவள் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவன் உடல் தூக்கிவாரிப் போட்டு நடுங்க… எதையோ கண்டு அஞ்சும் குழந்தை போல் மதுமதியை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான். அசாத்தியமான மனவலு கொண்ட… ஆறடி உயரம் வளர்ந்த ஆஜானுபாகுவான ஆண்மகன்… குழந்தை போல் தூக்கத்தில் கனவு கண்டு அவளைக் கட்டிப்பிடித்துக் கொள்வதை, நம்ப முடியாத திகைப்பிலிருந்து அவள் மீள்வதற்குள் மீண்டும் உளறினான்…

 

“ம்தீ… எங்கடி… போ…ய்…ட்ட… மதீ… வந்…து…ர்ரீ… தீ…ஈ…” – அவள் பெயரைத் தான் கூறினான். அவளைக் காணாமல் தவித்த தவிப்பை தான் தூக்கத்தில் உளறினான்.

 

ஏனோ அவளுடைய கண்கள் கலங்கின… அனிச்சையாக கை அவன் முதுகை வருட… “இங்கதான் இருக்கேன்… நிம்மதியா தூங்குங்க…” என்று வாய் அவன் காதருகே முணுமுணுத்தது. என்ன ஆச்சர்யம்…! அதுவரை ஒருவித இறுக்கத்துடன் இருந்த அவன் உடல் மெல்ல மெல்லத் தளர்ந்து… இரும்புபிடி போலிருந்த அவன் அணைப்பு இளகியது. ஓரிரு நிமிடங்களிலேயே மீண்டும் அவனிடமிருந்து மெல்லிய குறட்டை வர ஆரம்பித்தது.

 

‘இந்த உணர்வை எப்படி நடிப்பென்று சொல்ல முடியும்…! அவன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது வெளிப்படும் இந்தத் தவிப்பை நாடகமென்று யாரால் கூற முடியும்…!’ கலங்கியிருந்த அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வடிந்தது.

 

‘தூக்கத்தில் உளறுமளவிற்கு மனம் பாதிக்கப்பட்டிருக்கிறான்…! இந்த வலியை நடிப்பென்று சொல்லிவிட்டோமே…! துடித்துப் போய்விட்டான்… அதனால் தான் அவ்வளவு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருக்கிறான். நியாயம் தானே…! இந்தக் கோபம் நியாயமானது என்றால் அவனுடைய காதல்..? அது மட்டும் எப்படிப் பொய்யாகும்…! உண்மைதானோ…! உண்மை தான்…! உண்மையே தான்…! இவன் நம்மைக் காதலிக்கிறான்… நிச்சயமாகக் காதலிக்கிறான்…!’ – இந்த எண்ணம் தோன்றியவுடன் அவளுடைய மனம் மகிழ்ச்சியில் பூரித்திருக்க வேண்டும். ஆனால் அவளால் மகிழ முடியவில்லை. மாறாகக் கண்ணீர் மாலை மாலையாகப் பெருகியது.

 

‘மனசுல இவ்வளவு காதல் இருந்தும் என் கஷ்டத்தைக் கைகட்டி வேடிக்கை பார்த்தீங்களே! நீங்க உதவி பண்ணல… பரவால்ல… ஆனா அடுத்தவங்க உதவி பண்ணி வெளியே வந்துட்டேங்கறதைக் கூடப் பொறுக்க முடியாம டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புனீங்களே…! எவ்வளவு கொடூரமான மனசு உங்களுக்கு…!’ – அவன் முதுகை வருடிக் கொண்டிருந்த அவளுடைய கை தானாக விலகியது.

 

‘நான் தப்பே பண்ணியிருந்தாலும்… நீங்க என் பக்கம் தானே நின்னிருக்கணும்..? நிக்கலையே! ஏன் நிக்கல? நீலவேணி…! என் காதலைவிட அவ நட்பு பெருசா போச்சுல்ல?’ – எத்தனையோ முறை எண்ணியெண்ணி துயரப்பட்ட சம்பவம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் முதல் முறை போலவே தாங்கமுடியாத பாரம் அவள் மனதை அழுத்தியது.

 

‘பாவி… பாவி… எப்படிடா உனக்கு மனசு வந்தது? லவ் பண்ணி… கல்யாணம் பண்ணி… உன்னோடு வாழ்ந்து… உன் குழந்தைக்குத் தாயும் ஆன என்னைவிட அந்த நீலவேணி உனக்கு முக்கியமா போயிட்டாளே…! எப்படிடா..? என்னைவிட எப்படிடா நீ இன்னொருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்… நட்புக்கு உண்மையா இருக்கணும்னு காதலுக்குத் துரோகம் பண்ணிட்டியே…! துரோகி…!’ – மனதில் ஆங்காரம் பொங்க அவள் முகம் பயங்கரமாக மாறியது. கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டாள்.

 

அவனுடைய காதலை நம்பாத வரை அவளுக்குள் புகைந்து கொண்டிருந்த விரக்தி, ‘அவனுக்குள் காதல் இருக்கிறது… ஆனால் அந்தக் காதலைவிட வேறு ஏதோ ஒன்று அவன் மனதில் முக்கியத்துவம் பெற்றிருந்திருக்கிறது’ என்பதைப் புரிந்து கொண்டவுடன்… பெரும் கோபத்தீயாக உருமாறியது. அந்தத் தீயில் எண்ணெயாக ஊற்றப்பட்ட உரிமை உணர்வால் அக்னி தேவியாக உருமாறினாள் மதுமதி.

 

அந்தக் கோபத்தீயின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல் இனி ஒவ்வொரு நாளும் பொசுங்கிச் சாகப் போகிறோம் என்பது புரியாமல், மனைவியை அணைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினான் கார்முகிலன்.

 

நீலவேணியும் செத்துவிட்டாள்… அவள் மீது கார்முகிலன் கொண்ட நட்பும் செத்துவிட்டது என்கிற உண்மை புரிந்தாலும்… இனியொரு முறை தன் வாழ்க்கையில் யாரையும் குறுக்கிட விடக்கூடாது என்பதை உறுதியாக முடிவு செய்தாள் மதுமதி. அந்த முடிவால் அவளுடைய குணமே தலைகீழாக மாற… கார்முகிலனின் சோதனைக்காலமும் ஆரம்பமானது.




Comments are closed here.

You cannot copy content of this page