Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 18

அத்தியாயம் – 18

பவித்ரா குளித்து முடித்து அறையிலிருந்து வெளியே வரும் பொழுது திருமணத்திற்காக வந்து வீட்டில் தங்கியிருந்த சில மூத்த உறவுக்கார பெண்கள் ஹாலில் அமர்ந்து காலை காபியை சுவைத்தபடி கதை பேசிக் கொண்டிருந்தார்கள். இவளை பார்த்ததும்… “வாம்மா பவித்ரா… வீடெல்லாம் புடிச்சிருக்கா… ஜீவா நல்லவிதமா பழகரானா…?” என்று சம்பிரதாயமாக விசாரித்தார்கள்.

 

“ம்ம்ம்… பிடிச்சிருக்குமா…” என்று சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள்.

 

“சரி வா… இப்படி உட்க்காரு…” என்று பாட்டி அவளை தன்னுடன் அமரவைத்துக் கொண்டு, “காலையில என்னம்மா சாப்பிடுவ…? காபியா இல்ல பாலா…?” என்று விசாரித்தார்கள்.

 

அவள் “காபி…” என்று பதில் சொன்னதும், அந்த பக்கமாக சென்ற ஒரு இளம் பெண்ணிடம் “சிந்து… பெரியம்மாகிட்ட அண்ணிக்கு ஒரு டம்ளர் காபி வாங்கிட்டு வா…” என்றார்கள்.

 

சிறிது நேரத்தில் சிவகாமியே காபியுடன் வந்தாள். “ஜீவா எங்கம்மா…? இன்னும் தூங்கறானா…?” என்கிற விசாரணையுடன் மருமகளுக்கு காபியை நீட்டினாள்.

 

பவித்ராவிற்கு திக்கென்றது… ‘ஐயோ… அவன் இங்கு இல்லையா…! இவ்வளவு காலையில் எங்கு போனான்… என்று யோசித்தபடி “அவர் முன்னாடியே எழுந்து குளிச்சிட்டாரே அத்த… ரூம்ல இல்ல…” என்றாள். அங்கு சூழ்ந்திருந்த பெண்களின் பார்வை மாறியது.

 

அப்போது அந்த சிந்து என்கிற பெண், “அண்ணன் வெளிய பைக்க எடுத்துட்டு போனிச்சு பாட்டி…” என்று விபரம் சொன்னாள்.

 

“வெளியே போயிட்டானா… எப்ப போனான்…? ஏம்மா… உன்கிட்ட எதுவும் சொல்லலியா…?” என்று பவித்ராவை எல்லோரும் கேட்டார்கள்.

 

அவள் தயக்கத்துடன் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றதும் அதற்க்கு மேல் யாரும் அவளை எதுவும் கேட்கவில்லை. சிவகாமி மகனுடைய கைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்றாள். அது வீட்டிற்குள்ளேயே ஒலித்தது. ‘சரி… இங்குதான் எங்காவது போயிருப்பான்… வந்துவிடுவான்…’ என்று காத்திருந்தாகள். ஆனால் நேரம்தான் கடந்து கொண்டிருந்ததே தவிர அவன் வரவே இல்லை. மறுவீட்டு விருந்திற்கு அழைத்து செல்வதற்காக காத்திருந்த பவித்ராவின் மாமாவும் மாமியும் பொறுமை இழந்தார்கள்.

 

அடிக்கடி பிரகாஷையும் சிவகாமியையும் “மாப்பிள்ளை எங்கு போனார்…?” என்று கேட்டு குடைந்து எடுத்தார்கள். எரிச்சலான பிரகாஷ் தாயை தனியாக அழைத்து சென்று கோபப்பட்டான்.

 

“எங்கம்மா போனான்…? உன்கிட்ட எதுவும் சொல்லலையா…?”

 

“நான் அவனை காலையிலிருந்து பார்க்கவே இல்லையேடா…”

 

“வீட்டுலதானேம்மா இருந்த…? அவன் எங்க போறான் வர்றான்னு பார்க்க மாட்டியா…? ஏன் அவன் இப்படி செய்றான்…? கல்யாணத்துல கூட ஒரு மாதிரிதான் இருந்தான். என்னம்மா ஆச்சு இவனுக்கு…?”

 

“பொண்ணு அழகா இல்லன்னு நினைக்கிறான். அதான் இப்படி நடந்துக்கறான்…”

 

“பைத்தியக்காரனாம்மா உன் பையன்… பொண்ண பிடிக்கலன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே… மகாராஜா அப்போ என்ன செஞ்சுகிட்டு இருந்தார்…” என்று நக்கலாக கேட்டான்.

 




 

“சரி அதை விடுப்பா… நீயும் கோவப்பட்டா நான் என்னடா செய்வேன். நீ போய் அவன் எங்க இருக்கான்னு தேடி பாரு. அந்த ஆட்டோகார பயலுகளை பிடிச்சு விசாரி…” என்று இளைய மகனை சமாதானம் செய்து ஜீவனை தேடிபிடிக்க அனுப்பி வைத்தாள்.

 

பவித்ராவிற்கு நெருப்பின் மீது நிற்பது போல் தவிப்பாக இருந்தது. ஜீவன் விழா நேரத்தில் வீட்டில் இல்லாதது உறவினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பாக மாறியது. எல்லோருடைய பார்வையும் பவித்ராவின் மீது கேள்விக் குறியுடன் படிந்தது. சிலர் அவள் காதுபடவே “ஜீவனுக்கு பெண்ணை பிடிக்கலையாம்… அதான் ஓடிட்டான்…” என்று பேசினார்கள். இன்னும் சிலர் அவளுடைய ஒரு நாள் திருமண வாழ்க்கையை பற்றி நேரடியாகவே கேள்வி கேட்டார்கள்.

 

பவித்ரா பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினாள். எதை சொல்லி சமாளிப்பது… உண்மையை சொல்வதா அல்லது பொய் சொல்வதா என்று தெரியாமல் குழம்பி மௌனத்தை ஆயுதமாக மாற்றிக் கொண்டாள். அப்படியும் விடாமல் சிலர் அவளை பார்வையால் துளைப்பதை தாங்க முடியாமல் இங்கிருந்து தப்பி எங்காவது கண்காணாத தேசத்திக்கு ஓடிவிடலாமா என்று எண்ணினாள். தாலிகட்டிய மறுநாளே மற்றவர்களின் பேச்சுக்கும் பார்வைக்கும் தன்னை ஆளாக்கிவிட்டானே என்று ஜீவனை நினைத்து நொந்தாள். தைரியமான அவள் நெஞ்சே சுக்கு நூறாக வெடித்துவிடும் போல் ஆனது. யார் முகத்திலும் விழிக்க பிடிக்காமல் முதல்நாள் இரவு அவள் தங்கியிருந்த அறைக்குள் நுழைத்து கொண்டாள்.

 

வெளியே சென்று அண்ணனை தேடி பார்த்த பிரகாஷ் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த போது அன்றைய பொழுதே கழிந்துவிட்டது. பவித்ராவின் அண்ணனுக்கும் விஷயம் தெரிந்துவிட்டதால் அவனும் இரண்டு ஆட்களுடன் வந்துவிட்டான். இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை நடந்துது. பெண்ணை அழைத்து விசாரணையும் செய்தார்கள். இதற்கு மேல் மௌனம் உதவாது என்று எண்ணிய பவித்ரா வாய் திறந்து பேசினாள்.

 

“எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இருக்கற மாதிரி எனக்கு தெரியல. அப்படி இருந்தா அதை நாங்களே பேசி தீர்த்துக்கறோம். நீங்க யாரும் இன்னிக்கு நடந்த விஷயத்தை பெரிதாக்காமல் விட்டுடுங்க… அண்ணா… இன்னிக்கு நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர முடியாமல் போனதுக்கு மன்னிச்சிடுங்க… நாங்க ரெண்டு பேரும் இன்னொரு நாள் வர்றோம்…” என்று எல்லோரையும் சமாதானம் செய்தாள்.

 

அவளுடைய நேர்கொண்ட பார்வையும் நிமிர்வான பேச்சும் மற்றவர்களின் வாயை அடைத்துவிட எல்லோரும் களைந்து போனார்கள். அனைவரையும் அடக்கிவிட்டாலும் அவளுடைய மனம் தெளிவடையவில்லை. சோர்வுடன் வந்து அறையில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

 

‘எப்படிபட்ட மனிதன் இவன்…! கடவுளே…!!!’ பவித்ராவிற்கு ஜீவனை நினைத்து பயம் வந்தது. இவனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று மலைப்பாக இருந்தது.

###

இரவு பதினொரு மணி… வீட்டில் தங்கியிருந்த உறவினர்களின் ஆரவரம் அடங்கிவிட்டது. ஜீவனுக்காக பாட்டி, சிவகாமி மற்றும் பிரகாஷ் மூவரும் ஜீவனுக்காக உறங்காமல் ஹாலில் காத்துக் கொண்டிருந்தார்கள். வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ‘வந்துவிட்டான்…’ என்று பாட்டியும் சிவகாமியும் ஒருவருக்கொருவர் பார்வையால் பேசிக் கொண்டார்கள். பிரகாஷ் டிவி பார்ப்பது போல் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

‘யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே… ‘ என்பது போல் ஜீவன் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் மதுவின் வாடை வீட்டை நிறைத்தது.

 

பிரகாஷ் அசையாமல் சோபாவில் அமர்ந்திருக்க சிவகாமி மகனிடம் சீறினாள். “டேய்… எங்கடா போயி தொலஞ்ச காலையிலிருந்து…? இப்பவும் குடிச்சிட்டு வந்து நிக்கிற? வீட்டுல இருக்க விருந்தாளிங்க எல்லோரும் என்னடா நினைப்பாங்க?”

 

“சிவகாமி… உன் மகன் இப்போ பதில் சொல்ற நிலைல இல்ல… போய் படுக்க சொல்லு காலையில பேசிக்கலாம்…” என்று பாட்டி மகளை அதட்டினார்கள்.

 

சிவகாமிக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. காலையிலிருந்து பட்ட அவஸ்த்தைக்கு அவனை குதறி எடுத்துவிடும் வெறி இருந்தாலும் இப்போதைக்கு அவனிடம் பேச்சு கொடுத்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதை புரிந்து கொண்டு “சாப்பிட்டியா… இல்ல ஏதாவது எடுத்து வைக்கவா…?” என்று மட்டும் கேட்டாள். அவ்வளவு கோபத்திலும் தாயுள்ளம் மகனின் வயிறு பட்டினியாக கிடக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. பிரகாஷ் அங்கு இருந்ததாலோ என்னவோ ஜீவன் பதில் பேசாமல் அவனுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அந்த அறையில் ஒரு மூலையில் சுவர் ஓரமாக பவித்ரா பாய்விரித்து போர்வை போர்த்தக் கொண்டு கண்களை இறுக்கமாக மூடியபடி படுத்திருந்தாள். அவள் உறங்கிவிட்டாள் என்று நினைத்தவன்…

 

“ஹும்… புருஷனை காலையிலிருந்து கானமேங்கர கவலை கொஞ்சமாவது இருக்கா…! எனக்கென்னன்னு தூங்கறா பாரு…” என்று முணுமுணுத்துவிட்டு கட்டிலில் சாய்ந்துவிட்டான்.




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Manushana ivan


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Jeeva unakaga Ava wait pannalai theriyama bad fellow. Knee down poda vaikkanum Unnai….

You cannot copy content of this page