Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 19

அத்தியாயம் – 19

அன்று இரவு முழுவதும் பவித்ராவிற்கு தூக்கமே வரவில்லை. விடிந்ததும் விடியாததுமாக எழுந்து குளித்துவிட்டு ஜீவன் கண் விழிப்பதற்காக காத்திருந்தாள். முதல்நாள் அருந்தியிருந்த மதுவின் மயக்கத்தில் குறட்டைவிட்டு கொண்டிருந்தான் அவன். அவளுடைய நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் சோம்பல் முறித்து  எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான். அவன் வெளியே வந்ததும் அவள் பேச்சை ஆரம்பித்தாள்.

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”

 

அவன் பதில் சொல்லாமல் துண்டை எடுத்து ஈர தலையை துடைத்துவிட்டு  வேறு உடைக்கு மாறினான். வெளியே செல்ல தயாராகிறான் என்பது தெரிந்தது.

 

“எங்க கிளம்புறிங்க…?” பவித்ரா கேட்டாள்.

 

அவன் சட்டென திரும்பி அவளை முறைத்தான். அவன் முறைப்பதை அலட்சியம் செய்து “நேத்து எங்க போனிங்க…?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

 

“என்னை யாரும் கேள்வி கேட்டா எனக்கு பிடிக்காது…” என்று கோப குரலில் கூறிவிட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்தினான்.

 

“என்னால அப்படி இருக்க முடியாது. உங்களை பற்றி நீங்களா சொல்லலன்னா நான் கேட்கத்தான் செய்வேன்… ” என்றாள் அழுத்தமாக.

 

“என்னை கேள்வி கேட்கும் உரிமை உனக்கு இல்ல…”

 

“அப்போ இதுக்கு என்ன அர்த்தம்…?” கழுத்தில் கிடந்த புது மஞ்சள் கயிறை எடுத்துக் காட்டி கேட்டாள்.

 

“இந்த டிராமா போடுற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். நான் இப்படித்தான் இருப்பேன். பிடிக்கலன்னா பெட்டியை கட்டிக்கிட்டு உன் வீட்டுக்கு கிளம்பு…” என்றான் அதிகாரமாக.

 

“என் வீட்டுக்கு கிளம்பறதா…! இதுதான் என்னோட வீடு… இங்கிருந்து நான் எதுக்கு போகணும்…?”

 

“உன்னோட வீடா… ஹா… ஹா… குட் ஜோக்… உனக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்கா…! இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ… இந்த வீடு என்னோட பூர்வீக சொத்து இல்லை… உடனே நான் சம்பாதிச்சு இந்த வீட்டை கட்டியிருக்கேன்னு தப்பு கணக்கு போடாத… இன்னிக்கு வரை நான் ஒரு ரூபாய் கூட சம்பாதித்து இல்ல… இந்த வீடு முழுக்க முழுக்க என் தம்பியோட உழைப்பிலும் வருமானத்திலும் உருவானது… அவன் என்றைக்கு என்னை இந்த வீட்டிலிருந்து வெளியேற சொல்றானோ… அன்றைக்கு கட்டிய துணியோடு வெளியேற வேண்டியவன்தான் நான்… அதனால் இந்த வீடு என்னோடது… என் மூலம் உன்னோடதுன்னு நினைத்து கனவு கண்டு… கணக்கு போடாமல் ஊர் போய் சேர்கிற வழியை பாரு…” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான்.

 

அவனுடைய குதர்க்கமான பேச்சில் பவித்ரா வாயடைத்து போய் நின்றுவிட்டாள். ‘நான் எந்த அர்த்தத்தில் பேசுகிறேன்… இவன் எந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு பதில் சொல்கிறான்…!’ என்று வியந்தாள்.

 

ஜீவன் அறையை விட்டு வெளியேறியதும் அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் குடும்பத்தினர் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் பிடி கொடுக்காமல் “ஒரு மணி நேரத்துல வந்துடறேன்… பேசிக்கலாம்…” என்று சொல்லிவிட்டு நழுவி வெளியேறிவிட்டான்.

 

அவன் பயங்கர குழப்பத்தில் இருந்தான். நண்பர்களை சந்திக்கும் மனநிலை இல்லாததால் தனிமையை தேடி ஏரிக்கரைக்கு வந்தான். காலையில் பவித்ராவிடம் என்ன பேசினோம்… என்று ஆச்சர்யத்துடன் நினைத்து பார்த்தான்…

 

‘இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை… அந்த வீட்டில் எனக்கு எந்த உரிமையும் இல்லை… இன்றைய நினையில் நான் உடுத்தியிருக்கும் துணி கூட என்னுடைய உழைப்பில் வாங்கியதில்லை… என்ன ஒரு கேவலம்…!’ இத்தனை நாளும் தனக்கு எந்த குறையும் இல்லை… தனக்கு எல்லாம் இருக்கிறது என்று தன்னைதானே  ஏமாற்றிக் கொண்டிருந்தவன், இன்று கோபத்தில் பவித்ராவை கலவரப் படுத்துவதாக நினைத்து அவன் அடிமனதில் உறுத்திக் கொண்டிருந்த உண்மையை உளறிவிட்டான்.

 

அதையே வேறு யாராவது சொல்லியிருந்தால்… அவர்கள் மீதுதான் கோபப்படுவானே ஒழிய நிச்சயம் உண்மை என்ன என்பதை பற்றி யோசித்திருக்க மாட்டான். ஆனால் இன்று பேசியதே அவன்தான்… அவனுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளை அவனே எப்படி அலட்சியம் செய்வான்… செய்ய முடியவில்லை…. நெடுநேரம் அவனுடைய பேச்சின் சாராம்சத்தை திரும்ப திரும்ப அசை போட்டு பார்த்தான். தன்னுடைய நிலை மிக மோசமாக இருக்கிறது என்பது புரிந்தாலும் அதிலிருந்து எப்படி மீள்வது…? மீள முடியுமா…? என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருந்தது…

###

ஜீவன் ஏரிக்கரையிலிருந்து மது கடையையோ நண்பர்களையோ தேடி செல்லாமல் நேராக வீட்டிற்கு திரும்பினான். நேரம் பிற்பகலை நெருங்கிவிட்டது… காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததாலும்… வெயிலாலும் களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான். நிதானத்துடன் வந்திருந்த மகனை கண்டு ஆறுதலடைந்த சிவகாமி நேற்றைய பிரச்னையை மறந்துவிட்டு மகனின் இன்றைய சோர்வுக்கான காரணத்தை அறிய முற்பட்டாள்.

 

“என்னப்பா ஒரு மாதிரி இருக்க…? வா சாப்பிடலாம்…” என்று அழைத்து சென்று உணவு மேஜையில் அமர வைத்தாள்.

 

“பவித்ரா… இங்க வாம்மா… வந்து ஜீவனுக்கு சாப்பாடு எடுத்து வை…” என்று மாமியார் மருமகளை அழைக்க… பவித்ரா கணவனுக்கு கவனமாக உணவு பரிமாறினாள்.

 

இப்போது ஜீவனின் எண்ணங்கள் முழுக்க அவனை பற்றி மட்டுமே சுற்றிக் கொண்டிருந்ததால் அவன் வேறு எதை பற்றியும் நினைக்காமல் உணவை முடித்துக் கொண்டு எழுந்தான்.

 

திருமணத்திற்காக வந்து தங்கியிருந்த உறவினர்கள் ஊர் திரும்பிவிட்டார்கள். புனிதா தாய் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னதால் அவளை அழைத்துக் கொண்டு பிரகாஷ் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தான். சிவகாமி திருமணத்திற்கு ஆன  செலவு கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஜீவன் சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தப்படுத்திவிட்டு பவித்ரா கூடத்திற்கு வரும் பொழுது அவன் மட்டும்தான் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து அமர்ந்து பொழுதை கழிக்கும் சூழ்நிலை அவளுக்கு இல்லாததால் திண்ணைக்கு சென்று பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

 

“என்ன பாட்டி… தனியா உட்கார்ந்திருக்கிங்க…? டிவி பார்க்க வேண்டியதுதானே…”

 

“ஆமா… எவ்வளவு நேரம் அதையே பார்க்கறது…? ஜீவன் சாப்பிட்டானா?”

 

“ம்ம்ம்… சாப்பிட்டாரு பாட்டி…”

 




 

“உன்கிட்ட ஏதாவது பேசினானா…?”

“ம்ஹும்…”

 

“இப்ப என்ன செய்றான்?”

 

“டிவி பார்க்கறாரு…”

“ம்கும்… முந்தாநாள் கல்யாணம் பண்ணினவன் இன்னிக்கு டிவியை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கான்… என்னத்த சொல்றது…” என்று பாட்டி மெதுவாக முனுமுனுத்தார்கள்.

 

“அவர் எப்பவுமே இப்படிதானா பாட்டி…?”

“எப்படிம்மா…?”

 

“ரொம்ப அதிகமா கோவப்படறாரே… குடிக்க வேற செய்றாரு…” மெதுவாக கேட்டாள்.

 

பாட்டிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எப்பொழுதுமே குடித்துக் கொண்டுதான் இருந்தான் என்று சொன்னால் உண்மையை மறைத்து திருமணம் செய்து என் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்களே என்று கோபப்படுவாளோ…! என்கிற அச்சம் எழுந்தாலும் பொய் சொல்லவும் விருப்பம் இல்லாமல் “உண்மையிலேயே அவன் ரொம்ப நல்ல பையன்தான் பவித்ரா… ஆனா இப்போ கூட்டாளிங்களோடு சேர்ந்து கெட்டு போய்ட்டான்ம்மா…” என்று மழுப்பலாக கூறினார்கள்.

 

“கல்யாணத்திற்கு முன் என்னோட போட்டோவை பார்த்தாரா பாட்டி…?” அவனுக்கு அவளை கொஞ்சமாவது பிடித்திருந்ததா என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.

 

“ம்ம்ம்… பார்த்தானே… போட்டோவை பார்த்து அவன் பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னதற்கு பிறகுதானே நாங்க கல்யாண ஏற்ப்பாடு செய்தோம்…” என்று அழுத்தமாக சொன்னார்கள்.

 

அவள் எதற்காக கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்ட பாட்டி எதுவும் தெரியாதது போல் பதில் சொல்கிறார்கள் என்பதை அறியாமல் கணவனை நல்வழி படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கையில் முகம் மலர்ந்தாள்.

###

அன்று ஜீவனுடைய வண்டி பழுதடைந்துவிட்டதால் வீட்டிற்கு நடந்து வந்தான். இவன் போதையில் வருவது பக்கத்து வீட்டு நாய்க்குக் கூட  பிடிக்கவில்லை போலும். அது தெருவில் இறங்கி பயங்கர சத்துடன் குரைத்தது. இரண்டு முறை விரட்டிப் பார்த்தவன் அதை அடக்க முடியாமல் அதை வளர்த்த மனிதனிடம் மல்லுக்கு நின்றான்.

 

“யோவ் சந்தானமூர்த்தி… வெளிய வாய்யா…? வெளிய வாய்யான்றன்ல்ல…! என்னையா பொம்பள மாதிரி வீட்டுக்குள்ள உக்காந்திருக்க… ஆம்பளையா இருந்தா வாய்யா வெளியே…” என்று வாசலில் நின்று சத்தம் போட்டு அழைத்தான்.

 

அவன் பேசப்பேசக் கடுப்பான நாய் இன்னும் வேகமாகக் குரைத்தது.

 

“ஏய்… யாரைப் பார்த்துக் கொலக்கிற…? மரியாதையா போயிடு… இல்ல… மண்டையை பொலந்துடுவென்…” என்று நாயிடம் பேச்சு வார்த்தை நடத்தினான்.

 

அந்த நேரம் “யாருப்பா அது…? என்ன விஷயம்…?” என்று கேட்டபடி உள்ளேயிருந்து ஒரு நாற்ப்பது வயது மதிக்கத்தக்க மனிதர் வந்தார்.

 

“டேய்… ரோட்ல எத்தனப் பேருப் போறா(ன்) வர்றா(ன்)… எல்லாரையும் விட்டுட்டு எதுக்குடா உன் நாயி என்ன பார்த்து மட்டும் கொலைக்குது… என்னடா சொல்லிக் குடுத்து வச்சிருக்க… என்ன பார்த்தாத் திருட்டுப் பய மாதிரி இருக்கா உனக்கும் உன் நாயிக்கும்…?”

 

“தம்பி… உன் வயசு என்ன… என் வயசு என்ன…? முதல்ல மரியாதைக் குடுத்துப் பேசு… நாய் குலைக்கிரதுக்கு நான் என்ன செய்ய முடியும்…?”

 

“இந்த நாய்க்கு… ஓனர் நாய் நீதானேடா…? இந்த கேம் ஆடற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்…”

“டேய்… குடிச்சிருக்கேன்னு பார்க்குறேன்… மரியாதையா போயிரு சொல்லிட்டேன்…”

 

“இல்லன்னா என்னடா செய்வ…? அடிப்பியா… எங்க அடிடா பார்க்கலாம்…? அடிடாங்கறேன்ல்ல… அடிடா… ஏய்… நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தா இப்ப அடிடா பார்க்கலாம்..” என்று எகிறினான் ஜீவன்.

 

‘இந்த நாயை வளர்த்த பாவத்துக்கு இவனுகிட்டயெல்லாம் பாட்டு வாங்க வேண்டியிருக்கே…!’ நினைத்து அவர் பின்வாங்கினார். தெருவில் கூட்டம் கூடிவிட்டது. நாய் விடாமல் சல்சல்லென்று குரைத்ததுக் கொண்டிருந்தது. அதை ஒரு உதைவிட்டான். அது பலத்த சத்துடன் உருண்டு விழுந்து மீண்டும் எழுந்து நின்று குரைத்தது.

 

நாய் தாக்கப்பட்டதும் சந்தானமூர்த்தி பொறுமை இழந்து ஜீவனின் சட்டையை பிடிக்க… இவன் பதிலுக்கு அவர் கழுத்தை பிடிக்க… கெட்ட வார்த்தைகள் தெறித்து விழ… ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு கீழே விழுந்து கட்டிப்புரள… உடல்களில் சிராய்ப்பு ஏற்ப்பட்டு ரெத்தம் கசிய… அங்கு பெரிய ரசாபாசமாகிவிட்டது

 

சத்தம் கேட்டு ஜீவனின் வீட்டிலிருந்து எல்லோரும் ஓடி வந்தார்கள். சிவகாமியும் பாட்டியும் சிரமப்பட்டு சண்டையை விளக்கிவிட்டு அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவன் பேசிய மோசமான வார்த்தைகளிலும் அவன் நடந்து கொண்ட விதத்திலும் பவித்ரா அதிர்ந்தாள். அவமானத்தில் குன்றினாள். இவ்வளவு தரம்தாழ்ந்து நடந்துக் கொள்பவன் தன்னுடைய வாழ்க்கை துணையாகிவிட்டானே என்று புழுங்கியவள்,  எதிர்காலத்தை இப்படிப்பட்ட ஒருவனோடு எப்படி கழிப்பது என்று மலைத்தாள். வெறிப்பிடித்த மிருகம் போல் உறுமிக் கொண்டிருப்பவனிடம் நெருங்க பயந்து ஒதுங்கி நின்றாள்.

 

ஆனால் இப்படி ஒதுங்கி நிற்பதால் எதையும் சாதிக்க முடியாது என்பதை சிறிது நேரத்திலேயே உணர்ந்தவள் இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை… இதில் முட்டி மோதி ஜெயிப்பது தான் நமது சாமர்த்தியம் என்னும் நிதர்சனத்தை புரிந்து கொண்டாள். உடனே ஜெயித்துவிட முடியுமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதமும் கூடவே எழுந்தது…




Comments are closed here.

You cannot copy content of this page