Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 20

அத்தியாயம் – 20

“என்னடா மாப்ள… ரொம்ப டல்லா இருக்க…?” ஆட்டோவின் பின் சீட்டில் அமர்ந்து சிகரட்டை பற்றவைத்தபடி கேட்டான் துரை.

 

“ம்ஹும்… ஒன்னும் இல்லடா…”

 

“இல்லையே… வந்ததுலேருந்து பேசாம உக்கார்ந்திருக்க… என்னடா ஆச்சு…?”

 

“இப்ச்… என்னத்தடா சொல்றது… வாழ்க்கையே வெறுப்பா இருக்கு…” விரக்தியாக பேசினான் ஜீவன்.

 

“ஏண்டா இப்படி பேசுற? ”

 

“வேற எப்படிடா பேசுறது… அந்த புனிதா வேற வீட்டுல இருக்கா… அவளை பார்த்தாலே எனக்கு டென்ஷன் எகுருது… ஏதாவது சொல்லிடுவேனோன்னு பயமா இருக்கு… அதான்… கெளம்பி வந்துட்டேன்…”

 

“விடுடா மாப்ள… அவள்ளாம் ஒரு ஆளுன்னு பெருசா பேசிகிட்டு…”

 

“படிக்க வேண்டிய நேரத்துல காதல் கீதல்ன்னுக் கண்டபடி சுத்தி வீணா போயிட்டேன்… கல்யாணத்துலையும் எதிர்பார்த்த மாதிரிப் பெண்ணை கல்யாணம் பண்ணாம தோத்துட்டேன்… சம்பாதிக்கல… வீட்லயும் யாரும் மதிக்கறது இல்ல… அடுத்து என்ன செய்றதுன்னு ஒண்ணுமே புரியல… மண்டக்காயுது… இந்த நேரத்துல இவளைப் பார்த்தா… எல்லாத்துக்கும் இவதானே காரணம்ன்னு… அப்படியே… ஆத்திரமா வருதுடா… பிரகாஷ்க்காகதான் பொறுமையா இருக்கேன்…”

 

“அட… இதுக்குத்தான் இப்படி கப்பல் கவுந்து போனமாதிரி உட்கார்ந்திருந்தியா… யார்ரா இவன்…! ஜீவா… உனக்கு என்னடா குறைச்சல்… ராஜ யோகத்துல பிறந்தவன்டா நீ… சம்பாதிக்கனும்ன்னு என்னடா அவசியம் உனக்கு…? அந்த புனிதா இல்லன்னா என்னடா… இப்போ உனக்குன்னு ஒரு பொண்ணு வந்துட்டா… இருக்கறதை வச்சுகிட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுடா…”

 

“டேய்…. கடுப்பேத்தாத… ஏற்கனவே கொலவெறில இருக்கேன்…”

 

“எதுக்குடா இப்படி கோவப்படற…? வா… கொஞ்சம் மருந்து சாப்பிட்டா எல்லாம் சரியாயிடும்…”

 

“என்ன இந்த நேரத்துல கூப்பிடற…? சவாரி போகலையா நீ…?”

 

“நண்பன் சோகத்துல இருக்கப்ப சவாரியா முக்கியம்… வாடா மாப்ள…”

 

“ங்கொய்யால…! சரக்கடிக்கரதுக்கு இது ஒரு சறுக்கா உனக்கு…? குடிகார பயலே…” என்று நண்பனின் முதுகில் தட்டி சிரித்தான்.

“நாமள்லாம் குடிகாரன்களே இல்லடா மாப்ள… ரோட்ல நெலம தெரியாம விழுந்து கெடக்குரானே… அவந்தான் மாப்பு குடிகாரன்…

“அப்படிங்கற…!” நக்கலாக சிரித்தான். இருவரும் மதுபான கடைக்கு பயணப்பட்டார்கள்.

# # #

“வாவ்… எவ்வளவு அழகா மெகந்தி போடறீங்க பவித்ரா நீங்க…! கல்யாணத்துல கூட நான் இவ்வளவு அருமையான டிசைன் போடல… தேங்க்ஸ்…”

 

“அடடா… ஒரு மெகந்தி போட்டுவிட்டதுக்கு எத்தனை தடவ தேங்க்ஸ் சொல்லுவிங்க… விடுங்க புனிதா… சரி… டைம் ஆச்சு… பாட்டிக்கும் அத்தைக்கும் டீ போடணும். நீங்க என்ன சாப்பிடரிங்க…? டீயா காபியா…?”

 

“டீயே  கொடுங்க… கைல மெகந்திப் போட்டுட்டு உட்கார்ந்துட்டேன்… உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியல சாரி…”

 

“அதுனால என்ன…? நான் என்ன மலையவாப் புரட்ட போறேன்… டீதானேப் போடப்போறேன்… அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. வந்தடறேன்…” பவித்ரா புன்னகையுடன் சமையலறைக்குள் நுழைந்து மாலைநேர தேநீர் தயாரிக்க முனைந்தாள்.

 




 

‘காலை பத்து மணிக்கு வெளியே சென்ற ஜீவன் இன்னும் வீடு திரும்பவில்லையே… இப்போது எங்குக் குடித்துவிட்டு… யாரிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறானோ…!’ என்றெல்லாம் பலவிதமாக குழம்பினாலும்… எதையும் வெளியேக் காட்டாமல் இன்று காலை தாய் வீட்டிலிருந்து வந்திருந்த புனிதாவுடன் நன்கு சிரித்து பழகினாள் பவித்ரா. இருவரும் ஒரே நாளில் நல்ல தோழிகளாகிவிட்டார்கள்.

 

பவித்ராவின் கைவண்ணத்தில் தயாரானத் தேநீரை சுவைத்தபடி தொலைக்காட்சியில் தோன்றிய காட்சியை விமர்சித்து இருவரும் சிரித்துக் கொண்டிருந்த பொழுது ஜீவன் வீட்டிற்குள் நுழைந்தான். போதையில் வந்தவனை பெண்களின் சிரிப்பு சத்தம் வெறுப்பேற்ற அவன் மனைவியைப் பார்த்து முறைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான். அவனுடையப் பார்வை வித்தியாசத்தை உணர்ந்து அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

“என்ன இளிப்பு அங்க…? நீ சிரிக்கற சத்தம் ரோடு வரைக்கும் கேக்குது…?” என்று கடுப்படித்தான்.

அவனுடைய கோபத்தை எதிர்பார்த்தே உள்ளே வந்ததால் “என்ன ஆச்சு…? எதுக்கு இவ்வளவு கோவப்படரிங்க…?” என்று பொறுமையாக கேட்டாள்.

 

“கோவப்படாம உன்கிட்டக் கொஞ்சிப் பேசணுமா…? மூதேவி… மூதேவி…”

 

அவனுடையக் குரூரமான வார்த்தைகள் அவள் மனதை வேதனைப் படுத்திவிட அவள் முகம் சூடாகிச் சிவந்துவிட்டது.

 

கைவிரல்களை இறுக்கமாக மூடி ஆழமாக மூச்செடுத்து உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள் “மூதேவின்னு தெரிஞ்சுதானே தாலிக் கட்டினிங்க…? ஏன்…? இந்த மூதேவியை தவிர வேறு எந்த ஸ்ரீதேவியும் உங்களுக்கு சிக்கலையோ…!” என்று நக்கலாக கேட்டாள்.

 

அவள் எதார்த்தமாக பேசியது அவனுடைய பழைய தோல்வியை குத்திக்காட்டுவது போல் அமைந்துவிட்டதில் அவன் கொதித்துப் போனான்.

 

“ஏய்… என்னடி திமிரா பேசுற…? உன்னோட திமிருத் தனத்தையெல்லாம் என்கிட்ட காட்டின… கொலையே செஞ்சுடுவேன்… போடி இங்கிருந்து…” என்று சுட்டுவிரல் நீட்டி அதட்டி மிரட்டி விரட்டினான்.

 

அவனுடைய மிரட்டலுக்கு அவள் பயந்துவிடவில்லை. ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்ட கரடுமுரடான வார்த்தைகளும் மதுவாடையும் அவன் குடித்திருக்கிறான் என்பதை தெளிவுப்படுத்த… இதற்கு மேல் பேசினால் பிரச்சனைதான் பெரிதாகும் என்று நினைத்து அமைதியாக அறையிலிருந்து வெளியேறிவிட்டாள்.

 

இந்த சிறு வயதில் எத்தனையோ கஷ்ட்டங்களை கடந்து வந்தவளுக்கு திருமண வாழ்க்கையாவது நிம்மதியாக அமைந்திருக்கக் கூடாதா…? உடன்பிறந்த கடமையைக் கழிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விசாரிக்காமல் படுகுழியில் தள்ளிவிட்டுவிட்ட அண்ணன் மீது ஆத்திரம் பொங்கியது… ஆனால் அவன் மீது ஆத்திரப்பட்டுக் கொண்டிருப்பதால் எதுவும் மாறப்போவதில்லை. அவளுடைய பிரச்சனையை அவளேதான் தீர்க்க வேண்டும். எப்படி தீர்க்கலாம்…? சிந்தித்தாள்…

 

கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பவனை திருத்தி அவனோடு சேர்ந்து வாழவேண்டும் என்கிற எண்ணம் தவறில்லை. ஆனால் மருந்தளவும் மனதில் அன்பில்லாமல் மனைவியை வெறுத்து ஒதுக்குபவனை எந்தவிதத்தில் திருத்துவது…! இப்படி மான ரோஷத்தை விட்டுக் கொடுத்து… அவனுடைய விருப்பங்களை மறக்கடித்து… மனதை மாற்றி அவனோடு சேர்ந்து வாழ்ந்தே தீரவேண்டும் என்று என்ன கட்டாயம்…! பேசாமல் பிரிந்து சென்றுவிட்டால் என்ன…?

 

ஆனால் பிரிவு என்பது சரியான முடிவா…? ஓரிரு சம்பவங்களையும்… சில நாள் அனுபவங்களையும் வைத்து பெரியவர்கள் ஆசியுடன் நடந்து முடிந்த திருமணத்தை ரத்து செய்வது முறையா…? இல்லை என்றது அவள் மனம்… இந்த பந்தத்தை வாழ வைக்க முடிந்த அளவு போராடி பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள்.




Comments are closed here.

You cannot copy content of this page