Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 21

அத்தியாயம் – 21

கூடத்து சோபாவில் சரிந்து அமர்ந்து, அவனுடைய திருமணத்தன்று எடுக்கப்பட்டு… புதிதாக லேமினேட் செய்யப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஜீவன். அலங்காரமான நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த பாட்டிக்கு பின் சிவகாமி நின்று கொண்டிருந்தாள். பாட்டிக்கு வலதுபுறம் ஜீவன் தன் மனைவியுடன் நிற்க… இடதுபுறம் பிரகாஷ் அவன் மனைவியுடன் நின்றான். அம்சமாக இருந்த அந்த படம் புனிதாவையும் பவித்ராவையும் ஒப்பிட்டு பார்க்க சொல்லி அவனை தூண்டியது.

 

இரண்டு நாட்களுக்கு முன் பிரகாஷ் அந்த படத்தை கொண்டுவந்து மாட்டியதிலிருந்தே உள்ளுக்குள் புகைந்துக்  கொண்டிருக்கிறான். பவித்ராவின் மீது தேவையில்லாமல் கோபம் வந்தது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் புனிதாவின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் கட்டுக்கடங்காமல்  பெருகியது. தன்னுடைய இயலாமை தம்பியின் மீது பொறாமையாக பொங்குவதை  தடுக்க  முடியவில்லை.

 

பிரகாஷ் சில சமயங்களில் புனிதாவுடன் ஆங்கிலத்தில் பேசுவது உண்டு. ஒருமுறை அந்த பேச்சு தவறி போய் இவன் காதில் விழுந்துவிட உள்ளுக்குள் கொதித்துப் போனான். ‘எனக்கும் இப்படி இங்லீஷ்ல பேசத் தெரிஞ்சிருந்தா என்னைதாண்டா உன் பெண்டாட்டி கல்யாணம் செய்திருப்பா…’ என்று குரூரமாக நினைத்தான்.

 

நேற்று மாலை பிரகாஷ் அமெரிக்கா திரும்பினான். அதற்கு முன் புதிதாக திருமணமான அண்ணனுக்கு பணத்தேவைகள் இருக்கக் கூடும்… அவன் கேட்க சங்கடப்படுவான் என்று நினைத்து அவனுடைய கணக்கில் பணம் போட்டிருந்தான். அதை அவனிடம் தெரிவித்த பொழுது ஜீவனுக்கு அது தவறாக தெரிந்தது. தம்பி தன்னுடைய பணப்பெருமையை தன்னிடம் காட்டுகிறான் என்று எண்ணினான்.

 

இந்த புகைப்படத்தை கூட தன்னை வெறுப்பேற்றுவதற்காகவே  அவன் நடுவீட்டில் இவ்வளவு பெரிதாக மாட்டியிருக்கிறான் என்று காரணமே இல்லாமல் நினைத்தான். ஏதேதோ சிந்தனைகளுடன் அமர்ந்திருந்தவன்

“சாப்பிட வாங்க…” என்று அழைத்த பவித்ராவின் குரலில் சிந்தனை கலைந்து திரும்பினான்.

 

இளம்பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். கழுத்தில் தாலிச்சங்கிலி… சிறு ஜிமிக்கியுடன் கூடிய தோடு… நெற்றியில் சிறு பொட்டு… கையில் இரண்டு வளையல்கள்… ஒப்பனைகள் ஏதும் இல்லாமல் இயல்பாக இருந்தாள். சாந்தமான அந்த முகத்தின் அழகு அவன் கண்களுக்கு புலப்படவில்லை. மாறாக மெலிந்த உருவமும்… மாநிற மேனியும் அவன் கண்களை உறுத்தின. அவனுக்கு அவளை தன்னுடைய மனைவி என்று நினைக்கவே பிடிக்கவில்லை. ஆனால் அவள் மேல்நெற்றியில் இட்டிருந்த குங்குமம் அவனை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்க்க  அவனுக்குள் எரிச்சல் மூண்டது…

 

“உன்னை நான் சாப்பாடு கேட்டேனா…? சும்மா… சும்மா எதிர்ல வந்து எரிச்சல் படுத்தாமப் போயித் தொல…” என்று வெடுவெடுத்தவன் “சனியனையெல்லாம் தலையில தூக்கி சுமக்கனுன்றது என் தலைவிதி…” என்று சத்தமாக முணுமுணுத்தான்.

 

அவளுடைய சின்ன இதயத்தை வார்த்தைகளால் குத்திக் கிழிப்பதற்கு அவன் ஒருபோதும் தயங்குவதில்லை. பொறுக்க முடியாத அவமானத்தில் சட்டென அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது. அவன் முன் அழக் கூடாது என்கிற உறுதியுடன் நொடியில் மனதில் வேறு எண்ணங்களை கொண்டு வந்தாள். அழுகை கோபமாக மாறி வார்த்தைகள் சீற்றத்துடன் வெளிப்பட்டன…

 

“கட்டிய மனைவியை தலைச்சுமைன்னு சொல்ல அசிங்கமா இல்ல? உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்…?”

 

அவளுடைய வார்த்தைகள் அவனுடைய ஈகோவை உரசிப் பார்த்துவிட  அவன் முகம் கருத்தான்.

 

“என்னடி சொன்ன…?” என்று அவன் கையை ஓங்க “ஜீவா… என்னடா இது…?” என்று பாட்டி அதட்டினார்கள்.

 

குரல் வந்த திசையில் அவனுடைய கவனம் திரும்பியது. “என்ன அதட்ற…? பொண்ணு பார்க்க சொன்னா ஒரு பேயை புடிச்சு என் தலையில கட்டி வச்சுட்டு சவுண்ட் விடற…?” பாட்டியிடம் பாய்ந்தான்.

 

“என்னடா இது பேச்சு…? கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் கூட ஆகல… அதுக்குள்ள இந்த பொண்ண இப்படி கரிச்சு கொட்றியே… வேண்டாம்டா ஜீவா… ரொம்ப தப்பு பண்ற…”

 

“ஒன்னோட வேதாந்தத்தையெல்லாம் உன் சின்ன பேரனோட நிறுத்திக்கோ… என்கிட்ட எதுவும் செல்லாது…”

 

என்னடா ஜீவா பாட்டிகிட்ட மரியாதை இல்லாம பேசுற?” சிவகாமி மகனை அடக்க முயன்றாள்.

 

“வா… வா… உன்னோட பங்குக்கு நீயும் எதாவது சொல்லனும்ல்ல…”

“ஏண்டா இப்படியெல்லாம் பேசுற…?”

 

“சும்மா நடிக்காதம்மா… உங்களோட ஒரவஞ்சனையெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா…? பேசாம போய்டு சொல்லிட்டேன்…”

 

பவித்ராவின் மீது மூண்ட சினம் திசை மாறி பாட்டியிடமும் சிவகாமியிடமும் வெடித்தது. பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் கண்மூடித்தனமாக அவன் எரிந்து விழுவதைக் கண்ட பவித்ரா ‘இவன் எல்லோரிடமும் இப்படித்தான் நடந்துகொள்வான் போலும்…’ என்று எண்ணினாள்.

###

வழக்கம் போல் வெட்டியாக ஊரை சுற்றிவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது சாலையோரம் இருந்த பெட்டிக் கடையில் வண்டியை நிறுத்தி ஒரு சிகரெட் வாங்கி புகைத்துக் கொண்டிருந்த ஜீவன் ஒரு காட்சியை கண்டான். அழகிய புடவை அணிந்து… தலையில் பூசூட்டி… கையில் பூஜை கூடையுடன் மாலை வெயில் மேனியில் பட்டு மின்ன… முகத்தை சரியாக பார்க்க முடியாத தூரத்தில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

‘யாரு இந்த பொண்ணு நம்ம ஏரியால… புதுசா இருக்கே…!’ என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே நெருங்கி வரும் அந்த பெண்ணின் முகத்தை அவன் அடையாளம் கண்டு கொண்டான்.

 

‘இவளா…!’ என்று கண்ணை சிமிட்டி மீண்டும் பார்த்தான். பவித்ராவின் அழகை கண்டுகொண்டவனுக்கு அதை நம்ப முடியவில்லை.

 

‘இவ்வளவு மேக்கப் போட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு எங்க போயிட்டு வர்றா…?’ என்று எரிச்சலுடன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவளுக்கு எதிரில் வந்து வண்டியை நிறுத்தினான் ஒரு வாலிபன்.

 

அவனை பார்த்து முகத்தில் ஆச்சர்யம் காட்டியவள் ஓரிரு நிமிடம் அவனிடம் சிரித்து பேசிவிட்டு தலையாட்டி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

 

ஜீவனின் நெஞ்சம் தீ பிடித்தது போல் பற்றி எரிந்தது. அவனுக்குள் பொங்கியெழும் உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்று மேலும் சில சிகரெட்களை புகைத்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

 

வீடு அமைதியாக இருந்தது. சமயலறையில் யாரோ பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தான். பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்த பவித்ரா அரவரம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

 

புடவியிலிருந்து நைட்டிக்கு மாறியிருந்தாள். மற்றபடி நகைகள் பூ பொட்டு குங்குமம் திருநீர் எல்லாம் அப்படியே இருந்தன.

“எங்க போயிட்டு வந்த…?”

 

“எப்போ…?”

“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி…”

 

“கோவிலுக்கு…”

 

“யாரு அவன்..?”

 

“யார கேக்கறிங்க…?”

 

“நீ யார் கூட ரோட்ல நின்னு சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த…?” புயலை உள்ளடக்கிய அமைதியுடன் கேட்டான்.

 

“சுரேஷ்… என் தம்பி… சித்தப்பா பையன்… கல்யாணத்துல உங்களுக்கு கூட மோதிரம் போட்டானே… ஞாபகம் இல்ல…?” அவனுடைய மனநிலையை துல்லியமாக புரிந்துகொண்டாலும் அதைவெளியே காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பதில் சொன்னாள்.

 

அவனுக்குள் கொதித்துக் கொண்டிருந்த உணர்வுகளெல்லாம் மெல்ல வடிந்தன. இதுவரை இருந்த படபடப்பும் பரிதவிப்பும் அடங்கி மனதிற்குள் இனம் புரியாத ஓர் இதம் பரவியது. “ஓ… சரி…” என்றான் இளம்புன்னகையுடன். அந்த மந்திரப் புன்னகையின் பிரதிபலிப்பு பவித்ராவின் கண்களில் தெரிந்தது. மலர்ந்த அவள் விழிகளை குறுகுறுப்பாக நோக்கினான். கணநேரம் அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவள் ஏனோ தலைகுனிந்தாள்.

 

அந்தகணம் அவன் தான் யார்? அவள் யார்? தன்னுடைய பழைய வாழ்க்கையின் ஏமாற்றங்கள் என்னென்ன? வருங்காலத்தின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டான். அவளை மட்டும் மனதில் சுமந்து நின்று கொண்டிருந்தவனின் மோனநிலையை பேன்ட் பாக்கெட்டிலிருந்து அலறிய கைபேசி கலைத்தது. சட்டென கனவிலிருந்து விடுபட்டவன் போல் தன்னிலைக்கு மீண்டு தலையை கோதியபடி கைபேசியுடன் கூடத்திற்கு சென்றான்.

 

‘ஏன் இப்படி குறுகுறுன்னு பார்த்தான்… என்ன ஆச்சு திடீர்ன்னு…’ பவித்ரா குழப்பத்துடன் வீட்டு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பொழுது ஜீவனும் ‘ச்ச… என்ன ஆச்சு எனக்கு…? ஒரு நிமிஷம் எல்லாத்தையும் மறந்துட்டேனே…!’ என்று ஆச்சர்யபட்டான். லேசாக அவள் பக்கம் சரிந்த உள்ளத்தை அவளுடைய குறைகளாக இவன் நினைப்பவைகளை மனதில் கொண்டுவந்து இறுக்கிப் பிடித்தான். பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் ஜீவனின் எல்லாவிதமான லீலைகளுடனும் ஒருவார காலம் கரைந்தது.




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Jeeva… Unakaga Ava Daily pattu saree ah kattikitu irukka mudiyum…. :'( Bad fellow… Nee.
    Padikkavum avana nambatha marukka maarittaan

You cannot copy content of this page