விடிவெள்ளி – 22
2872
0
அத்தியாயம் – 22
மௌனம் ஒரு பலமான ஆயுதம். அது புதிய பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்கும் என்கிற நம்பிக்கையில் ஜீவனிடமிருந்து ஒதுங்கி இருந்த பவித்ரா அவனுடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாவதை கண்டு அமைதியிழந்தாள். மௌனம் இனி கைகொடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து அடுத்த அடியை எடுத்து வைத்தாள்.
அன்று காலை அவன் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் போது “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியுமா…?” என்றாள்.
“என்னன்னு சீக்கிரம் சொல்லு…” எரிச்சலுடன் வெளிப்பட்டன அவனுடைய வார்த்தைகள்.
அவன் முகத்தில் அடித்தது போல் பேசுவதை ஜீரணிக்க சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு “உங்களுக்குன்னு சில பொறுப்புகளும் கடமைகளும் இருக்கே… அதை பற்றி நினைக்கிற ஐடியா கொஞ்சமாது இருக்கா…?” என்றாள்.
ஒரு சிறிய உருவம் தலைநிமிர்ந்து… கண்களை நேருக்கு நேர் நோக்கி… அழுத்தமாக கேள்வி கேட்பதை புதிதாக பார்த்தான். பழைய ஜீவனாக இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பானோ தெரியாது. ஆனால் சமீப காலத்தில் அவனிடம் ஏற்பட்டிருந்த சிறு மாறுதலால் அவளுடைய பேச்சை தன்னை மீறி ரசித்தாலும் அதை கவனமாக மறைத்துக் கொண்டு அவளை உணச்சிகளற்ற பார்வை பார்த்தான். அந்த பார்வையை தவறாகப் புரிந்து கொண்டவள்,
“நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்ல. இப்போ நான் எனக்காக எதையும் எதிர்பார்த்து பேச வரல… நான் பேச வந்தது உங்க பாட்டிக்காகவும் அம்மாவுக்காகவும்தான். இப்படி தினமும் குடிச்சிட்டு வந்து ரகளை பண்ணி வயசான காலத்துல அவங்களோட நிம்மதியை எதுக்காக கெடுக்குரிங்க…?” என்றாள்.
அவனுடைய குறையை முகத்துக்கு நேராக அவள் சுட்டிக் காட்டியதில் சினம் கொண்டவன் பல்லை கடித்துக் கொண்டு “அவங்க என்னோட அம்மா… என்னோட பாட்டி… அவங்களை பற்றி உனக்கென்ன கவலை?” என்றான்.
“இருக்கலாம்… ஆனா அவங்களுக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. ஏன்னா… உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் நான்தான் இந்த வீட்டோட மூத்த மருமகள்…” என்றாள் திருத்தமாக.
அவள் எதிர்த்தெதிர்த்து பேசுவது அவனுக்கு எரிச்சலாக இருந்தாலும் அந்த குடும்பத்து மூத்தவர்களின் மீது அவள் கொண்டிருந்த அக்கறை அவனுக்கு பிடித்திருந்ததால்,
“இப்போ என்னை என்ன செய்யணும்கிற?” என்றான் கோபத்தை உள்ளடக்கியபடி.
“நீங்க குடிக்கக் கூடாது… ஏதாவது வேலைக்கு போகணும்… பொறுப்பா இருக்கணும்…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
“இங்க பாரு பவித்ரா… நீ நினைக்கிற எதுவும் நடக்காது. இந்த பழக்கம் எனக்கு சின்ன வயசுலேருந்து இருக்கு. இப்போ திடீர்ன்னு நீ வந்து தண்ணியடிக்காதிங்க… தம்மடிக்காதிங்கன்னா உடனே சலாம் போட்டு டான்ஸ் ஆடுறதுக்கு நான் ஒன்னும் நீ கீ குடுக்கற பொம்மை இல்ல… என் விஷயத்துல அனாவசியமா மூக்கை நுழைக்காம உன் வேலையை மட்டும் பாரு…” என்று அவளுடைய மூக்கை உடைத்துவிட்டு போய்விட்டான். ஆனால் அவள் மனம் தளரவில்லை. எப்படியாவது பேசி… வாழ்க்கையை புரியவைத்து அவனை நெறிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அவளுடைய உறுதியை பதம் பார்க்க அடுத்த நாளே ஒரு சம்பவம் நடந்தது.
###
ஒயின் ஷாப்பில் தகறார் செய்துவிட்டு கிழிந்த சட்டையும்… நெற்றியில் வழியும் இரத்தமும்… வீங்கிய தாடையுமாக… பார்க்கவே பயங்கரமான கோலத்தில் தானே வண்டி ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தான் ஜீவன்.
திருமணம் ஆனதிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட பவித்ராவை அவன் மனைவியாக மதித்ததில்லை. பல முறை அலட்சியப்படுத்தி அவமானம் செய்திருக்கிறான். அப்படி இருந்தும் அவனை அந்த நிலையில் பார்த்ததும் அவள் துடித்துவிட்டாள். சிவகாமி… பாட்டி எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு “ஐயோ… என்ன ஆச்சு…?” என்று பதறியடித்துக் கொண்டு வந்து அவன் கையை பிடித்தாள்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்கிற கூற்று பவித்ரா விஷயத்தில் மெய்யாகிப்போனது. அவளுக்கு அவன் மீது இவ்வளவு பாசம் எப்படி வந்தது… எப்போது வந்தது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவன் காயப்பட்டு வந்து நிற்ப்பதை அவளால் தாங்க முடியவில்லை என்பது மட்டும் உண்மை.
அவன் ஓரளவு நிதானமாகத்தான் இருந்தான் என்பதால் அவளுடைய பிசிறடித்த குரலிலும் நடுங்கும் விரல்களிலும் இருந்த பதட்டத்தை உணர்ந்து கொண்டு “ஒன்னுல்ல விடு…” என்றபடி உள்ளே நடந்தான்.
யாரிடமோ பெரிதாக தகராறு செய்து அடி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை சகிக்க முடியாமல் “என்னடா ஜீவா இதெல்லாம்…?” என்று சிவகாமி கண்கலங்க, பாட்டி எதுவும் பேச முடியாமல் இறுகி போய் நின்றார்கள்.
அவன் அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் கிழிந்திருந்த சட்டை பொத்தானை விடுவிக்க முயன்றான். விரலில் பட்டிருந்த காயம் அவனை முகம் சுளிக்க வைத்தது. பல்லை கடித்துக் கொண்டு பிடிவாதமாக கழட்ட முயன்று கொண்டிருக்கும் போது “விடுங்க… நான் கழட்டுறேன்…” என்று பவித்ரா உதவினாள்.
“இப்ச்… விடு… எனக்கு தெரியும்…” என்று அவன் அதட்டினான்.
“விடுங்கன்னு சொல்றேன்ல்ல…” என்று அவனை பதிலுக்கு அதட்டி அடக்கிவிட்டு அவனுடைய சட்டையை கழட்டினாள்.
அவளுடைய அதட்டலுக்கு வழக்கமாக ஆத்திரப்படுபவன் இந்த முறை அமைதியாக இருந்தான். நமக்காக ஒருத்தி பதறுகிறாள்… உரிமையாக கோபப்படுகிறாள் என்பது அவனை பாதித்திருக்க வேண்டும். அதனால்தான் பவித்ரா செய்த உதவிகள் எதையும் அவன் மறுக்கவில்லை.
சுடுதண்ணீர் கொண்டுவந்து காயங்களை சுத்தம் செய்து மருந்திட்டாள். தலையில் பட்டிருந்த காயம் ஆழமாக இருந்தது.
“தலையில காயம் பெருசா இருக்கு… ஹாஸ்பிட்டல் போயிடலாமே…” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம்… நீ நகரு முதல்ல…” என்று பொய்யாக எரிந்து விழுந்தான்.
இரத்தத்தை பார்த்த அதிர்ச்சியில் மகனுக்கு அருகில் வரவே பயந்து கொண்டு தூரமாகவே நின்று கண்ணீர் விட்ட சிவகாமி “எங்கடா போயி இப்படி அடி வாங்கிகிட்டு வந்து நிக்கிற…? ஊர் வம்பை இழுக்கலன்னா உனக்கு தூக்கமே வராதா…?” என்று சத்தம் போட்டாள்.
“அத்த… டாக்டர்கிட்ட போகலன்னா சரிவராதுத்த…” என்று பவித்ரா சொன்னதும் சிவகாமி மகனை கெஞ்சினாள்.
“டேய்… தம்பி வாடா போயி டாக்டரை பார்த்துட்டு வந்துடலாம்… இவ்வளவு இரத்தம் போயிருக்கு… நைட்ல எதுவும் செஞ்சா என்னடா செய்ய முடியும்… சொன்னா கேளுடா…”
தாயின் வசவிலும் கண்ணீரிலும் எரிச்சலானவன் “சும்மா தொனதொனக்காம போம்மா அந்தப்பக்கம்… நானே எரிச்சல்ல இருக்கேன் நீ வேற…” என்று கடுப்படித்துவிட்டு படுக்கையில் சாய்ந்துவிட்டான்.
சிவகாமி பயந்தது போலவே அன்று இரவு ஜீவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. ஜுர வேகத்தில் ஏதேதோ உளறினான். நேரம் ஆகஆக சூடு அதிகமாகிக் கொண்டே இருந்தது. பாட்டி முதுமையின் காரணமாக வீட்டிலேயே தங்கிவிட… கால் டாக்ஸியை வர சொல்லி மிகவும் சிரமப்பட்டு சிவகாமியும் பவித்ராவும் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
Comments are closed here.