உனக்குள் நான்-17
3312
0
அத்தியாயம் – 17
காலை சூரியன் மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்க… கார்முகிலனின் கார் சீரான வேகத்தில் கொச்சியிலிருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது. நான்கு நாள் பயணமாக மூணாறு வந்தவர்கள், முதல் நாள் நடந்த சம்பவத்தால் ஒரு நாள் முன்னதாகவே ஊருக்குப் புறப்பட்டுவிட்டார்கள்.
கையில் காயம் பட்டிருப்பதால் கார்முகிலனுக்கு கார் ஓட்டுவது சிரமமாகிவிட்டது. உதவிக்கு வந்த டேனியல், டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்க… பின் சீட்டில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தன்னோடு ஒட்டி அமர்ந்திருக்கும் மனைவியைத் திரும்பி விசித்திரமாகப் பார்த்தான் கார்முகிலன். அன்று காலை கண் விழித்ததிலிருந்தே அவளுடைய செயல்கள் அனைத்தும் புதிராகவே தான் இருக்கின்றன. ‘ஹும்ம்ம்…’ – பெருமூச்சுடன் சீட்டில் தலையைச் சாய்த்துக் கண்மூடினான். அன்று காலை நடந்த சம்பவங்களெல்லாம் அவன் கண்களுக்குள் படமாக ஓடின.
உறக்கம் களைந்து அவன் படுக்கையிலிருந்து எழும்போது “குட் மார்னிங்…” என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரித்த முகத்துடன் காலை வணக்கம் சொன்னாள் மதுமதி. மனைவியின் சிரிப்பிற்குள் ஒளிந்திருக்கும் சாதூர்யத்தைப் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் கார்முகிலனுக்கு ஏது..? அவன் வெள்ளந்தியாக அகமகிழ்ந்தான். ஆனாலும் உள்ளே ஓர் எண்ணம் குறுகுறுத்தது…
‘நமக்குத் தான் சொல்றாளா…!’ – மெல்ல தயக்கத்துடன் தலையைத் திருப்பித் தனக்குப் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்தான்.
“இப்போ கைவலி எப்படியிருக்கு..?” – அடுத்தக் கேள்வியில் சட்டென்று திரும்பி மனைவியின் முகம் பார்த்தான்.
‘என்னாச்சு இவளுக்கு…! நேத்துக் குடுத்த அறைல மூளை கீளை எதுவும் குழம்பிடுச்சோ…!’ குழப்பத்துடன் மனைவியை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தான்.
நேற்று நடந்த பிரச்சனைக்கு… ஒன்று அவள் அவன் மீது கோபமாக இருந்திருக்க வேண்டும். அல்லது கூட்டுக்குள் சுருளும் நத்தை போலத் தனக்குள் சுருண்டிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் இப்படி எதுவுமே நடக்காதது போல் அவள் நடந்துகொள்வது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பதில் சொல்லாமல் எழுந்து குளியலறைக்குள் சென்றான். அவன் குளிப்பதற்குத் தேவையான பொருட்களெல்லாம் உள்ளே எடுத்து வைக்கப்பட்டிருந்தன. வெளியே வரும் பொழுது காலை உணவு காத்துக் கொண்டிருந்தது.
“பாப்பாக்குச் சாப்பாடு கொடுத்துட்டேன்… நீங்களும் வந்து சாப்பிடுங்க…”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… ஒன்பது மணிக்கு ரூம் வெக்கேட் பண்றோம்… திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை…” – அதிகாரமாகச் சொன்னான்.
‘நாளைக்குத் தானே…!’ – ஒரு நொடி திகைத்த மதுமதி, பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு “பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் பேக் பண்ணிடுவேன்… நீங்க சாப்பிடுங்க…” – புட்டு… கொண்டைக்கடலை குருமாவைத் தட்டில் போட்டுக் கொண்டு வந்தாள்.
“வேண்டாம்னு சொல்றேன்ல…” அவன் கோபமாக மறுத்துக் கொண்டிருக்கும் போதே ஒருவாய் உணவை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.
அவனுக்கு நம்பவே முடியவில்லை. கனவோ என்று நினைத்துத் திகைப்புடன் மனைவியைப் பார்த்துக்கொண்டே வாயிலிருந்த உணவை மென்றவன்… அவ்வளவு நேரமும் பிடிவாதமாகத் தனக்குள் தேக்கி வைத்திருந்த கோபங்களெல்லாம் கரைந்து காணாமல் போவதை உணர கூட இல்லாமல் “மதி…” என்றான் காற்றாய் வெளிப்பட்ட குரலில்.
“சாப்பிடுங்க…” – அவனைப் பேச விடாமல் தொடர்ந்து உணவை அவன் வாயில் திணித்துக் கொண்டே இருந்தாள். மனைவியைப் புதிராகப் பார்த்துக் கொண்டே அவன் காலை உணவை முடித்தான்.
கணவனுக்கு ஊட்டி முடித்த பிறகு அதே தட்டில் தனக்கும் பரிமாறிக் கொண்டு உணவையும் முடித்தவள்… அவன் சாப்பிட வேண்டிய மாத்திரையை எடுத்துக் கொடுத்தாள். குழந்தைக்கு உடை மாற்றிவிட்டு… கணவன் உடை மாற்றும் பொழுது அவனுக்கு பட்டன் போட உதவி செய்தாள். மற்றப் பொருட்களை மளமளவென்று பெட்டியில் அடுக்கி வைத்துச் சொன்னது போலவே பத்து நிமிடத்தில் தயாரானாள்.
“கார் எப்படி டிரைவ் பண்ணுவீங்க?”
“டேனியலை வரச் சொல்லியிருக்கேன்…”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே டேனியல் வந்துவிட… அவனால் மனைவியிடம் எந்த விளக்கமும் கேட்க முடியவில்லை.
“ரெடியா சார்..?”
“ரெடி டேனியல்… நீங்க பிரேக் ஃபாஸ்ட் முடிச்சிட்டீங்களா?”
“ஆச்சு சார்…”
பத்து மணிக்கு ஹோட்டலை செக் அவுட் செய்துவிட்டுப் புறப்பட்டார்கள். இரண்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு அவர்களுடைய கார் கொச்சி, மதுரை, தேனி நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள அபிராமி ஆர்த்தோ மருத்துவமனையைத் கடந்து தேனிக்குள் நுழைந்தது.
“எந்தப் பக்கம் சார் போகணும்..?” – டேனியலின் குரல் கார்முகிலனின் சிந்தனைகளைக் கலைத்தது.
“ரைட் எடுத்து செகண்ட் லெஃப்ட் எடுத்து ஸ்ட்ரைட்டா போங்க…” – லக்ஷ்மிபுரம் செல்ல வழிகாட்டினான். மேலும் முக்கால் மணிநேர பயணத்தில் அவர்கள் லக்ஷ்மிபுரத்தை அடைந்தார்கள். காரிலிருந்து சாமான்களை இறக்கி வைக்க டேனியல் உதவினார்.
நேற்றிலிருந்து அவர்களுக்காகவே அலைந்து கொண்டிருப்பவரைப் பார்த்து “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…” என்று மனதார நன்றி சொன்னாள் மதுமதி.
“உள்ள வாங்க டேனியல்… ஒரு ஜூஸ் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்…”
“இல்ல சார்… நீங்களே இப்போ தான் வந்திருக்கீங்க… நான் வெளியே பார்த்துக்கறேன்” – புரிதலோடு கூறினார்.
அவரைப் பெருமையோடு பார்த்த கார்முகிலன் தேனிக்கு வந்தால் மறக்காமல் வீட்டுக்கு வரவேண்டும் என்கிற வேண்டுதலோடு, இருமடங்கு அதிகமாகப் பணத்தைக் கொடுத்து… கைகுலுக்கி… ஆட்டோவை வரச் சொல்லி அவரை மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தான்.
###
டேனியல் கிளம்பிச் சென்ற பிறகு, பெட்டிகளை உள்ளே எடுத்துக்கொண்டு வந்து வைத்தான் கார்முகிலன்.
“இதெல்லாம் நான் எடுத்துக்க மாட்டேனா? உங்களுக்குத்தான் கை அடிபட்டிருக்குல்ல… பேசாம இருக்க வேண்டியது தானே?” – கடிந்து கொண்டாள் மதுமதி.
அவளுடைய அக்கறையான பேச்சு, காயம்பட்ட அவன் மனதை மென்மையாக வருடியது. இதமான மனநிலையுடன் உள்ளே வந்தவன், “ஹோட்டல்ல லஞ்ச் வாங்கிக்கிட்டு வந்துடறேன்… வீட்ல ஒண்ணும் செய்ய வேண்டாம்…” என்றான்.
“கைல அடிபட்டிருக்கப்போ எப்படிக் கடைக்குப் போவீங்க?”
“கைல தானே அடி… கால் நல்லாத்தான் இருக்கு… பக்கத்துல தானே… அப்படியே நடந்து போயிட்டு வந்துடறேன்…”
“அதெல்லாம் வேண்டாம்… சிம்பிளா நானே ஏதாவது செஞ்சுடறேன்…”
“ப்ச்… ட்ராவல் பண்ணி வந்த டயர்ட்ல கிச்சன்ல போய் நிக்க வேண்டாம்… நான் போய் வாங்கிட்டு வந்தடறேன்…” – வெளியே செல்ல எத்தனித்தான்.
“வேண்டாம்னு சொல்றேன்ல… நான் சொல்றதைக் கேக்கவே கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கீங்களா? பேசாம போய்ப் படுங்க… நான் சமையலை முடிச்சுட்டு வந்து எழுப்பறேன்…” – ஒரே அதட்டில் அவனை அடக்கிவிட்டாள்.
இடிபோல் ஒலித்த மனைவியின் குரலில் ஒரு நொடி அதிர்ந்தவன் வியப்புடன் அவளை நோக்கினான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கைப்பேசியை எடுத்து ராதாவிற்கு அழைத்தாள்.
“ஹலோ… ராதாம்மா… ”
“யாரு பேசுறது?”
“மது பேசுறேன்மா…”
“அம்மாடி எப்படிம்மா இருக்க? பாப்பா நல்லா இருக்கா?”
“நல்லா இருக்கோம்மா… வீட்டுக்கு வந்துட்டோம்… ”
“நாளைக்குத் தானேம்மா..?”
“ம்ம்ம்… இன்னிக்கே வர்றது மாதிரி ஆயிடுச்சு… வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு… உங்களுக்கு வர முடியுமா?”
“இதோ… பத்து நிமிஷத்துல வந்துடறேம்மா…”
“சரிம்மா… ” – போனை அணைத்துவிட்டுக் கணவன் பக்கம் திரும்பியவள் “நீங்க இன்னும் படுக்கப் போகலையா?” என்றாள் கடுமையாக. அவள் காட்டிய கடுமையில் உரிமை உணர்வு மட்டும் தான் தெரிந்தது.
“என்னடி ஆச்சு உனக்கு?”
“என்ன என்னடி ஆச்சு?” – புருவம் சுருக்கி இடுங்கிய கண்களுடன் கேட்டாள்.
“இவ்வளவு கோபப்படற?”
“ஏன் உங்களுக்குத்தான் கோபம் வரணுமா? எங்களுக்கெல்லாம் வரக் கூடாதா?”
“எவன் சொன்னான்..? உனக்கு இல்லாத உரிமையா..? நீ என்ன வேணா செய்யலாம்…” – மழைக்கு ஏங்கும் சாதகப்பட்சியாக அவளுடைய அன்புக்கு ஏங்கிக் கிடந்தவன், மகிழ்ச்சியோடு உற்சாகமாகச் சொன்னான்.
“அப்புறம் என்ன? போய்ப் படுங்க… பத்து நிமிஷத்துல சமைச்சிடுவேன்… கூப்பிடறேன்”
அவள் சிடுசிடுப்பு மாறாமலே சொன்னாலும்… அவன் புன்சிரிப்புடன் தோள்களைக் குலுக்கியபடி “ஓகே…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
‘என்னாச்சு இவளுக்கு… திடீர்னு இவ்வளவு க்ளோஸா பழகுறா…! உரிமையா கோபமெல்லாம் படறா!’ – படுக்கையறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்தவனுக்கு மண்டைக்குள் நண்டு ஓடுவது போல் இருந்தது.
மனைவியிடம் இப்படிப்பட்ட மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் சுற்றுலாவிற்கே அழைத்துச் சென்றான். முதல் இரண்டு நாட்கள் எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தன. ஆனால் மூன்றாவது நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்மறையான விளைவைத்தான் ஏற்படுத்தின. அவற்றையெல்லாம் பேசி சரி செய்வதற்குள் இந்தத் திடீர் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை.
அவனுக்குக் கையடிபட்டதால் அவள் மனம் மாறியிருக்கிறாள் என்றால் இது ஒன்றும் அவன் முதல்முறை அடிபடுவதில்லையே…! ஏற்கனவே ஒருமுறை காலில் அடிபட்டு வந்த போது எனக்கென்ன என்று இருந்தவள் தானே…! ஒருவேளை அவளுக்குக் கொடுத்த அறை வேலை செய்துவிட்டதோ..! அது எப்படி…! ஒருவரை அடித்தால்… அடித்தவர் மீது கோபம் தானே வர வேண்டும்…! இவள் பாசமாகச் சாப்பாடெல்லாம் ஊட்டிவிடுகிறாளே…! உரிமையாகக் கோபமெல்லாம் படுகிறாள்…! எப்படி மாறினாள்… கிட்டத்தட்ட பழைய மதுமதி போலவே நடந்து கொள்கிறாளே…! – எவ்வளவு யோசித்தாலும் தெளிவு கிடைக்கவில்லை.
அவள் மாறியிருப்பது மகிழ்ச்சி தான் என்றாலும்… மாற்றத்திற்கான காரணத்தைக் கணக்கிட முடியாமல் குழம்பினான். அவளிடமே கேட்டுவிடலாம் என்றால் ‘உள்ளதையும் கெடுத்து விடுவோமோ…!’ என்கிற பயம் தடுக்க அமைதியாக இருந்துவிட்டான்.
Comments are closed here.