உனக்குள் நான்-18
3943
0
அத்தியாயம் – 18
கார்முகிலனும் மதுமதியும் கேரளாவிலிருந்து திரும்பி வந்து ஐந்து நாட்கள் முடிந்துவிட்டன. அன்று ஞாயிற்றுக்கிழமை… மாலை மூன்று மணியிருக்கும். முகிலன் ஹால் சோபாவில் அமர்ந்து நாளிதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்.
“இந்தாங்க…” – மதுமதி ஒரு கப்பை அவனிடம் நீட்டினாள்.
“என்ன இது..?”
“காபி…”
“காபியா…! நான் தான் காபி குடிக்கிறது இல்லையே…” – மறந்துவிட்டுக் கொடுக்கிறாளோ என்ற எண்ணத்தில் அவளிடம் சொன்னான்.
அவள் எதையும் மறக்கவில்லை. கணவன் தன்னைக் காதலிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாலும், அவன் தன்னைவிட வேறு எதற்கெல்லாம்… யாருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியிருந்தது. அந்த எண்ணம் அவளை வழிநடத்த… ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவனைச் சோதனை செய்ய ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு காபின்னா ரொம்பப் பிடிக்குமே… இப்போல்லாம் ஏன் குடிக்கறது இல்ல?” – ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள் .
அவன் மனைவியை ஆழமாகப் பார்த்தான். அவள் பேச்சில் உள்நோக்கம் இருக்குமோ என்கிற சந்தேகம் அவனை உஷார்ப்படுத்தியது.
“எனக்கு வேணாம் மதி… என் பொண்டாட்டிக்கு நான் காபி குடிச்சா பிடிக்காது… அடிப்பா…” என்றான் பயப்படுகிறவன் போல் பாவனைச் செய்து கொண்டு. அவன் அழகாகத்தான் நடித்தான். ஆனால் அவள் சிரிக்கவில்லை. அமைதியாகச் சமயலறைக்குத் திரும்பியவள் மீண்டும் கையில் இன்னொரு கப்புடன் வந்து அவனிடம் நீட்டினாள்.
“இது என்ன டீயா..? சாரிடி செல்லம்… நான் டீயும் குடிக்கறது இல்ல… அதுவும் என் பொண்டாட்டிக்குப் பிடிக்காது…” சிரித்துக் கொண்டே அவளை வம்பிழுத்தான்.
“இது பால்…” முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல் கூறினாள்.
“சரி குடு…” கையில் வாங்கிக் கொண்டான்.
அவள் சோபாவில் அவனுக்கருகில் அமர்ந்து… அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு டிவி ரிமோட்டை எடுத்து கிரிக்கெட் சானலை ஓடவிட்டாள். இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா ஒன் டே மேட்ச் நடந்து கொண்டிருந்தது.
மனைவி தனக்கருகில் அமர்ந்து தன் தோள் மீது சாய்ந்ததும்… ‘ஆஹா… மதி… என்னடி ஆச்சு உனக்கு இன்னிக்கு…!’ என்று எண்ணி பேரானந்தம் கொண்டவனுக்கு, அவள் கிரிக்கெட் சானலை ஓடவிட்டதும் விஷயம் விளங்கிவிட்டது.
‘என்கிட்டயே டெஸ்ட் மேட்ச் ஆடுறியா?’ என்று நக்கலாக நினைத்தபடி அவளை இடதுகையால் தோளோடு அணைத்துக் கொண்டு, வலதுகையில் புத்தகத்தைப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தான்.
நேரமாக ஆக மேட்ச் சூடு பிடித்தது. கார்முகிலனின் கவனமும் புத்தகத்திலிருந்து டிவி பக்கம் மெல்ல திரும்பியது. ஆரம்பத்தில் உதட்டில் மெல்லிய புன்னகையுடன் மனைவியின் செயல்களை ரசித்தபடி புத்தகத்தில் கவனமாக இருந்தவன் அனைத்தையும் மறந்துவிட்டு மேட்ச்சில் மூழ்கினான்.
‘விராத் கோலி’ பேட்டிங்… ‘பாட்டின்சன்’ பௌலிங்… கடைசி ஓவரில் முதல் பால்… மிகவும் விறுவிறுப்பான கட்டம். விராத் கோலி தன்னை நோக்கி பாய்ந்து வரும் பந்தைத் தூக்கி அடித்தான்… பத்து விண்ணில் பறந்தது. பௌண்டரியில் நின்று கொண்டிருந்த ‘கிளார்க்’ கையை உயரே தூக்கியபடி பந்தைப் பிடிக்கத் தயாராக நின்று கொண்டிருப்பதைக் கேமராவில் ஜூம் செய்து காட்டிக் கொண்டிருந்தார்கள். பந்து மெல்ல கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது… ‘கிளார்க்’ கையை உயர்த்திப் பிடித்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டே பின்னோக்கி ஓடுகிறான்…. பிடிப்பானா..? மாட்டானா..? எல்லோரும் திறந்த வாய் மூட மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்… “எத்திசையும் ஒலிக்கும் எங்கள் இசை… இந்த இசைக்கு இல்லை ஈடு இணை…” – திடீரென்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி டிவி திரையில் தோன்றியது. சேனல் மாறியிருந்தது…
முதலில் அதிர்ந்தவன் பின் சட்டென்று மூண்ட எரிச்சலோடு மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அவளோ எந்தச் சலனமும் இல்லாமல் நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிரிக்கெட் வெறியர்களுக்கும் விராத் கோலியின் தீவிர விசிறிகளுக்கும் மட்டும் தான் தெரியும் இந்தச் சூழ்நிலை எத்தனை கடுப்பானது என்று… கார்முகிலனும் அவர்களில் ஒருவன் தான்.
கண்மண் தெரியாத கோபம் கட்டுக்கடங்காமல் அவனுக்குள் கிளர்ந்தெழுந்தது. முகம் சூடாகி சிவந்துவிட்டது. பழைய முகிலனாக இருந்திருந்தால் இந்நேரம் டிவி உடைந்திருக்கும் அல்லது ரிமோட் நொறுங்கியிருக்கும். ஆனால் இவன் புதியவன்… உள்ளே அலையலையாகப் பொங்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு “ஏன் சேனலை மாத்திட்ட..?” என்றான் பொறுமையாக.
சிவந்துவிட்ட முகத்துடன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு… ஒருவித இறுக்கம் நிறைந்த குரலில் கேட்கும் கணவனை நிமிர்ந்து பார்த்து “நீங்க பார்க்கணுமா?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.
“……………………” அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். முறைத்தான் என்று கூடச் சொல்லலாம். பேசாமல் நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தவனை இப்படிச் சீண்டி விளையாடுகிறாளே…! இவளை என்ன செய்தால் தகும்..?
“எனக்கு இந்த ‘ப்ரோக்ராம்’ ரொம்பப் பிடிக்கும்… உங்களுக்கு வேணும்னா சேனல் மாத்தட்டுமா?” அக்கறையாக அவள் கேட்டாலும் ‘உனக்கு என்னுடடைய விருப்பம் பெரிதா அல்லது கிரிக்கெட் பெரிதா..?’ என்கிற கேள்வி அவளுடைய பார்வையில் வெளிப்பட்டது.
வேண்டுமென்றே செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் எதுவும் சொல்லாமல் சோபாவிலிருந்து எழுந்தான்.
“என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல…” – கையிலிருந்த புத்தகத்தை டீப்பாயில் போட்டுவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.
சிறிது நேரத்தில் டீ-ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து கொண்டு, கீழே இறங்கி வந்தவன் வாசலை நோக்கி நடந்தான்.
“எங்க கிளம்பிட்டீங்க?”
“கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்…” என்றபடி வேகமாக வெளியேறினான்.
‘நமக்காக கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்துவிட்டுப் போகிறான்… ஓகே தான்…. ஆனால் அது எதற்கு இந்தத் தேவையில்லாத கோபம்..? அப்போ என்னைவிட கிரிக்கெட் தான் முக்கியமா?’ – குறையோடு கணவனின் முதுகை வெறித்தாள்.
லக்ஷ்மிபுரத்தில் அமைந்துள்ள பெரிய விளையாட்டு மைதானத்தில் சிலர் ஆங்காங்கே மாலை நேர நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். சுற்றிலும் நடப்பட்டிருக்கும் புங்கை மரத்தின் அடியில் போடப்பட்டிருக்கும் கல் பெஞ்சுகளில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே பூங்காவிற்கு இணையாகச் சீராக வெட்டப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படும் புல்தரையில் மல்லாந்து படுத்து மேகக்கூட்டங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்முகிலன். அவனுடைய சிந்தனைகள் முழுவதும் மனைவியையே சுற்றி வந்து கொண்டிருந்தன.
இன்று மதுமதி நடந்து கொண்ட விதம் ஆரம்பத்தில் அவனை வெகுவாகக் கோபப்படுத்தினாலும் நேரமாக ஆக ‘இதெல்லாம் ஒரு விஷயமா..? இதுக்குப் போய் நமக்கு இவ்வளவு கோபம் வருதே…!’ என்று தன்னையே கடிந்து கொண்டான். ஆனால் அவனுடைய சிந்தனைகள் வேறுவிதமாகப் பயணிக்கத் துவங்கியிருந்தன.
வேண்டுமென்றே அடுத்தவர்களைக் கோபப்படுத்துவதோ… காயப்படுத்துவதோ மதுமதியின் இயல்பே இல்லை. அப்படியிருக்கும் போது இன்று அவள் நடந்து கொண்ட விதம் அவளுடைய இயல்புக்கு மீறியது. ‘எதனால் அப்படி நடந்து கொண்டாள்..? ஒருவேளை அவளுடைய பழைய கோபம் இன்னும் குறையவில்லையோ… அவளுடைய மனம் இன்னும் ஆறவில்லையோ…! அப்போ இந்த ஒரு வாரமா எதுக்கு நல்லவிதமா நடந்துக்கறா? அவ மனசுல என்னதான் இருக்கு?’ – எதுவும் புரியாமல் குழம்பினான்.
“எங்க கிளம்பிட்டீங்க?” – கல்லூரிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவனின் கவனத்தை மதுமதியின் குரல் கவர்ந்தது.
“இது என்ன கேள்வி? காலேஜுக்குத்தான்” – கண்ணாடியைப் பார்த்தபடி ‘பாடி ஸ்ப்ரே’ போட்டுக்கொண்டே கேட்டான்.
“இன்னிக்கு லீவ் போடுங்க…” கட்டிலில் அமர்ந்து குழந்தைக்கு உடை மாற்றிவிட்டுக் கொண்டே கூறினாள்.
“லீவா…! எதுக்கு..?” – சீப்பை எடுத்துத் தலை வாரினான்.
“கொஞ்சம் வேலை இருக்கு”
கையிலிருந்த சீப்பை மனைவியின் தலையில் சொருகிவிட்டு, அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி “என்னடி வேலை?” – என்றான்.
“அடுத்த வாரம் என் ஃப்ரண்ட் கல்யாணம் வருது. ஷாப்பிங் பண்ணனும்…”
“பொம்மு குட்டி… உங்க அம்மாவுக்குக் குசும்பப் பாருடா… அடுத்த வாரம் கல்யாணம் அட்டென்ட் பண்றதுக்கு இன்னிக்கு ஷாப்பிங் போகணுமாம்… அதுவும் லீவ் போட்டுட்டு…” – என்றபடி மகளைத் தலைக்கு மேல் தூக்கி அவள் வயிற்றில் முகத்தை வைத்து கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தவன்… அவளை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு “டைமாச்சு… வந்து டிஃபன் எடுத்து வை…” என்றான்.
“விளையாடாதீங்க… நான் இன்னிக்குக் கண்டிப்பா ஷாப்பிங் பண்ணியாகணும். கடைக்குக் கூட்டிட்டுப் போகப் போறீங்களா இல்லையா..?” மதுமதியின் குரலில் கடுமை ஏறியது.
‘எதையோ மனசுல வச்சுக்கிட்டுப் பேசுற மாதிரி பேசுறாளே…!’ மனைவியைக் கூர்மையாகப் பார்த்து “சனிக்கிழமை கூட்டிட்டுப் போறேன் மதி…” என்றான்.
“இல்ல… எனக்கு இன்னிக்கே போகணும்”
“சரி… அப்போ அக்காவை வரச் சொல்றேன்… நீங்க ரெண்டுபேரும் போயிட்டு வாங்க”
“உங்களுக்குக் கூட்டிட்டுப் போக முடியுமா முடியாதா?” – பிடிவாதமான குரலில் கேட்டாள் .
“எனக்கு இன்னிக்கு ஒரு முக்கியமான கிளாஸ் இருக்கு மதி… வேணும்னா நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்…” – பொறுமையாகச் சொன்னான்.
‘முடியாது…’ என்பது போல் தலையசைத்தாள்.
“என்னடி இது சின்னப் பிள்ளை மாதிரி..? முக்கியமான கிளாஸ் இருக்குன்னு சொல்றேன்… புரிஞ்சுக்க மாட்டேங்கிற…”
“முக்கியமான கிளாஸா..? அப்போ என்னைவிட உங்களுக்கு காலேஜும் உங்க வேலையும் தான் முக்கியம் இல்ல?” – இடுங்கிய கண்களுடன் கேட்டாள்.
‘இவ நம்மள டெஸ்ட் பண்றா…’ – அப்போது தான் அவனுக்குப் பொறிதட்டியது. மனைவியின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை உதயமானது.
“இப்போ என்ன..? இன்னிக்கு லீவ் போட்டுட்டு உன்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போகணும்… அவ்வளவு தானே…! லீவ் என்ன… வேலையையே ரிசைன் பண்ணிட்டு வேணும்னாலும் கூட்டிட்டுப் போறேன்… சந்தோஷமா..?” என்று கேட்டு அவள் கன்னத்தில் தட்டினான்.
அவன் உண்மையாகத்தான் பேசுகிறான் என்றாலும்… அவனின் குரல் சற்றுக் கேலியுடன் ஒலித்தது போல் இருந்தது. ‘என்ன இவன்… நம்மள கிண்டல் பண்றானோ…!’ – மதுமதி குழப்பத்துடன் கடைவீதிக்குச் செல்லத் தயாரானாள்.
Comments are closed here.