Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 23

அத்தியாயம் – 23

ஜீவன் கண்விழிக்கும் பொழுது பவித்ரா அவன் கால்பக்கம் போடப்பட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்து முழங்கையை கட்டிலில் ஊன்றி உள்ளங்கையில் முகத்தினை தாங்கியபடி கண்களை மூடியிருந்தாள். பாந்தமான அந்த முகத்தை  இன்னும் சிறிது நேரம் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. அதிலிருந்த ஏதோ ஒரு வசீகரம் அவனைக் கட்டிப்போட்டது.

 

சிறிது நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் தன்னையறியாமல் “ஹும்…” என்று பெருமூச்சு விட… வெடுக்கென்று நிமிர்ந்தாள் பவித்ரா.

 

“முழுச்சிட்டிங்களா…? இப்போ எப்படி இருக்கு…?” என்று கேட்டபடி அவனுடைய நெற்றியில் கட்டுப் போட்டிருந்ததால் முகத்தை தொட்டு பார்த்தாள். சில்லென்று இருந்தது.

 

“ஜுரம் இல்ல… வலி இருக்கா…?”

 

“ம்ஹும்…”

 

“எதாவது சாப்பிடரிங்களா…?”

 

“வேண்டாம்… அம்மா எங்க…?”

 

“அத்தை வீட்டுக்கு போய்ட்டாங்க… இங்க ஒருத்தர்தான் இருக்க முடியும். காலையில வந்துடுவாங்க…”

 

“மணி என்ன ஆகுது…?”

 

கைபேசியை எடுத்து பார்த்துவிட்டு “இரண்டு…” என்றாள்.

 

“இந்த நேரத்துல எதுக்கு அம்மாவை தனியா போக சொன்ன…?” தாயின் மீது அக்கறை காட்டி அவன் விசாரித்தது மனதிற்கு இதமாக இருந்தது. முரட்டுத்தனமா இருந்தாலும் உள்ளுக்குள்ள பாசம் இருக்கு… என்று நினைத்துக் கொண்டு,

 

“நாம வந்த டாக்ஸி டிரைவர் தெரிஞ்சவர்தான். அவரோடதான் போனாங்க… வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்க. போன் பண்ணிட்டேன்… நீங்க கவலைபடாம ரெஸ்ட் எடுங்க…” என்றாள்.

 

அவனுடைய முகம் சங்கடத்துடன் சுருங்குவது போல் தெரிந்தது.

 

“என்ன ஆச்சு…?” என்றாள் குழப்பத்துடன்.

 

“ஒன்னும் இல்ல…”

 

“நர்ஸ் யாரையாவது வர சொல்லட்டுமா…?”

 

“வேண்டாம்… வேண்டாம்….” என்று சொல்லிவிட்டு கட்டிலிலிருந்து எழுந்தவன் மீண்டும் தொப்பென்று அமர்ந்துவிட்டான்.

 

“என்ன ஆச்சு…?” என்று பதறிய பவித்ராவை “ஒன்னும் இல்ல… லேசா தலை சுத்தற மாதிரி இருக்கு…” என்று சமாதானம் செய்தான்.

 

“பாத்ரூம் போகனுமா…?” என்று கனிவாக கேட்டாள். அவன் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

“என்னை புடிச்சுக்கோங்க. நான் கூட்டிட்டு போறேன்” என்றாள்.

 

அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவன் வாய்திறந்து சொல்லாமலே அவனுடைய தேவைகளை அவள் புரிந்துகொள்வது அந்த நேரத்திலும் அவனுக்கு வியப்பாக இருந்தது.

 

“ப்ளீஸ்… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… இன்னிக்கு மட்டும் தானே… நாளைக்கு சரியாயிடும்” என்று கெஞ்சினாள். அவளுடைய உதவியை ஏற்றுக்கொள்வதை தவிர அவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. அந்த சூழ்நிலை இருவரும் கொஞ்சம் நெருங்கிப் பழக உதவியது.

###

“வாங்க சாப்பிடலாம்…” வியர்வையை ஷாலால் துடைத்தபடி வந்து பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஜீவனை அழைத்தாள் பவித்ரா.

 

“இப்போதானே சூப் சாப்பிட்டேன்… கொஞ்ச நேரம் ஆகட்டும்.”

 

“சூப் சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆச்சு… இப்ப எழுந்து வாங்க டைம் ஆச்சு… இன்னும் லேட்டாச்சுன்னா சாயங்காலம் ஆயிடும்” என்று பிடிவாதப் படுத்தினாள்.

 

புன்னகையுடன் எழுந்து சென்றான் அவன். உடல் பலகீனத்தால் ஒரு வாரமாக வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்தவனின் கவனம் அதிகமாக பவித்ராவின் பக்கம் திரும்பியிருந்தது. காலை எழுந்ததிலிருந்து பம்பரமாக சுழன்று அத்தனை வேலைகளையும் நாசுக்காக செய்து முடிப்பவளை பார்த்து வியந்தான். ‘சின்ன பொண்ணா இருக்கா… எப்படி பரபரன்னு வேலை செஞ்சுகிட்டே இருக்கா…!’ என்று ஆச்சர்யப்பட்டான்.

 

இயல்பாக அவள் அவனிடம் பேசுவது பிடித்திருந்தது… ‘யாருடன் பிரச்சனை…? என்ன சண்டை…?’ என்றெல்லாம் சிவகாமியை போல் அவள் குடையாமல் இருந்தது ஆறுதலாக இருந்தது. கேட்டிருந்தால் அன்று நடந்த வெட்டித் தகராறை எப்படி விளக்குவது…!

 

நேரம் தவறாமல் பால், ஜீஸ், சூப்… என்று கொடுத்து அவனுடைய உடல்நிலையை தேற்றுவதில் அவள் காட்டிய உண்மையான அக்கறை, அவள் மீது அவன் மனதில் ஒரு சிறு அன்பு உருவாக காரணமாக இருந்தது. மொத்தத்தில் அவர்களுக்குள் ஒரு இலக்கமான சூழல் உருவாகியிருந்தது…

 

கூடத்தை கடந்து செல்லும் பொழுது அம்மாவும் பாட்டியும் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்துவிட்டுக் கேட்டான்.

“அம்மாவும் பாட்டியும் சாப்பிட்டாச்சா…?”

“ம்ம்ம்…”

 

உணவு மேஜையை நெருங்கி நாற்காலியில் அமரும் பொழுதுக் கேட்டான் “நீ சாப்பிட்டியா…?”

 

அவனுடைய திடீர் அக்கரையில் பரிமாறிக் கொண்டிருந்தவளின் கை அசைவற்று நின்றுவிட்டது.

 

“என்ன ஆச்சு…?”

“ஒன்னும் இல்ல…” என்று சமாளித்துவிட்டு மீண்டும் பரிமாறினாள்.

 

“சாப்பிட்டியான்னு கேட்டேன்…”

“இல்ல… இனிதான்…”

 

“உக்கார்… சேர்ந்து சாப்பிடலாம்…”

“நீங்க சாப்பிடுங்க… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்…”

 

“உக்காருன்னு சொல்றேன்ல்ல…” அவன் வர்ப்புறுத்தினான்.

 

அதற்குமேல் போலிபாவனை காட்டாமல் அவனோடு சேர்ந்து உணவருந்தினாள். அவள் மீது அவன் காட்டிய சிறு அக்கறை அவளுக்கு கடலளவு மகிழ்ச்சியை கொடுத்தது.

###

ஜீவனுக்கு வீட்டுக்குள் அடைந்துக் கிடப்பதுச் சிறையில் இருப்பதுப் போன்ற உணர்வைக் கொடுத்தது. நண்பர்களைச் சந்தித்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அன்று மாலை வெளியேச் செல்ல தயாரானான்.

 

“வெளியே கிளம்பிட்டு இருக்கீங்க போலருக்கு….?” பவித்ரா கேட்காதது போல் கேட்டாள்.

 

“ம்ம்ம்… ஆமாம்…”

அவள் பதில் பேசாமல் அறையிலிருந்து வெளியேற எத்தனித்தாள்.

 

“எதாவது வேணுமா…?”

முதல் முறையாக அவளுடைய தேவைகளை பற்றி அவன் அக்கறை காட்டியது அவள் மனதை குளிர்வித்தது. ஆனால் முகத்திலோ குரலிலோ மலர்ச்சி சிறிதும் இல்லாமல் “ம்ஹும்…” என்றாள்.

 

“என்ன ஆச்சு…? ஒரு மாதிரி இருக்க…”

 

“ஒன்னும் இல்ல… உங்களுக்கு இப்போதான் கொஞ்சம் சரியாயிருக்கு… அதுக்குள்ள வெளியே போகனுமா…?”

 

“எவ்வளவு நாள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும்…?”

 

“அதுக்கு இல்ல… வெளியே போனா… திரும்ப வீட்டுக்கு வரும் போது நிதானத்தோட வரமாட்டிங்களே…”

 

அவன் அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்தான். ‘இடத்தை கொடுத்ததும் மடத்தை பிடுங்குகிறாளோ…’ என்கிற சந்தேகத்தை கொண்டிருந்தது அந்த பார்வை.

 

“உங்களுக்கு நான் அறிவுரைச் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். உங்களோட உடல் நிலையை பற்றி உங்களுக்கு ஞாபகப் படுத்தனும் என்று தோணிச்சு அதான் சொன்னேன்… அப்புறம் உங்க விருப்பம்…” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

 

அவன் சிறிது நேரம் அவள் சென்றத் திசையையேப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தலையை உலுக்கிக் கொண்டு பைக் சாவியை எடுத்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page