Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-21

அத்தியாயம் – 21

ஜீவிதாவோடு மணமகள் அறைக்குள் மதுமதி நுழைந்த போது அங்கே அமர்ந்திருந்த அவளுடைய கல்லூரி தோழிகள் நான்கைந்து பேர் “ஹேய் மது…” “எப்படி மது இருக்க?” “நீ வருவியோ மாட்டியோன்னு நெனச்சுகிட்டே இருந்தோம்டி…” என்றபடி அவளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

 

புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி மீண்டு வந்திருக்கும் மதுமதியைப் பரிதாபம் கலந்த பாசத்தோடு அணைத்துக் கொண்ட தோழிகளின் செயல் அவள் மனதை வருத்தியது. தன் தனிப்பட்ட வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் போலீஸ், கோர்ட் என்று போனதால் ஊருக்கு அம்பலமாகிவிட்டதை உணர்ந்து குன்றினாள்.

 

நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களை அவளே மறக்க நினைத்தாலும்… தெரிந்தோ தெரியாமலோ அவளைச் சுற்றியிருப்பவர்கள் மறக்கவிடாமல் செய்து கொண்டிருந்ததால், “ம்ம்ம்… நா… நான்… நல்லா இரு… இருக்கேன்…” என்று நெருங்கிய தோழிகளிடம் கூட இயல்பாகப் பேச முடியாமல் தடுமாறினாள்.

 

“ஏய்… அவ நேத்தே ரிசப்ஷனுக்கு வந்திருந்தாடி… நீங்க தான் யாரும் வரல… கொஞ்சம் நகருங்க… அவ இன்னும் கல்பனாவைப் பார்க்கல…” – என்று மதுமதியின் நிலையை உணர்ந்து எதையோ பேசி தோழிகளிடமிருந்து அவளைக் காத்து உள்ளே அழைத்துச் சென்றாள் ஜீவிதா.

 

“மது…” – மணமகள் அலங்காரத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த கல்பனா மதுமதியைப் பார்த்ததும் எழுந்து வந்து கட்டிக் கொண்டாள்.

 

“கல்பனா… உக்காருடி… புடவைக் கலஞ்சிடப் போகுது…” – அக்கறையோடு தோழியின் ஒப்பனைகளைச் சரி பார்த்தவள்… “அழகா இருக்கடி… இரு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்…” என்று கைப்பையிலிருந்து கைப்பேசியை எடுத்துக் கல்பனாவைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தாள். பிறகு அங்கிருந்த ஒரு சின்னப் பெண்ணிடம் தன் கைப்பேசியைக் கொடுத்து, தோழிகள் எல்லோரோடும் சேர்ந்து தானும் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். ‘டச் ஸ்க்ரீன்’ கைப்பேசியைப் புதிதாகக் கையாண்ட அந்தப் பெண் தன்னுடைய விரல் பட்டு போன் ‘சைலண்ட் மோட்’ போய்விட்டது என்பதை அறியாமல்… மதுமதி சொல்லிக் கொடுத்தபடி அழகாகப் புகைப்படம் எடுத்துக் கொடுத்தாள்.

 

“பொண்ண அழச்சுண்டு வாங்கோ…” புரோகிதரின் குரலைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கல்பனா மணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அந்த நேரம் ஜீவிதாவின் கைப்பேசி குரல் கொடுத்தது. எடுத்துப் பேசியவள் மதுமதியைத் தனியாக அழைத்துக்கொண்டு வந்து “மது… குணா அண்ணன் வந்திருக்காங்கடி…” என்றாள்.

 

“குணா அண்ணனா…!” என்று ஆச்சர்யப்பட்டவள்… பிறகு “அவங்க ஸ்டேட்ஸ்ல தானே இருக்காங்க..!” என்றாள் குழப்பத்துடன்.

 

“இந்தியா வந்து ரெண்டு மாசம் ஆச்சு…”

 

“ஓ… ஆனா… கல்பனா கல்யாணத்துக்கு… குணா அண்ணன் எப்படி…! அவங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவா பழக்கம் இல்லையேடி…!”

 

“ப்ச்… அவங்க கல்யாணத்துக்கு வரலடி… உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க”

 

“என்னைப் பார்க்கவா! என்னடி சொல்ற?” ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

 

“ஆமாம்… உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க… வா சொல்றேன்…” – தோழியின் கையைப் பிடித்து மணமேடைக்குப் பின்னால் உள்ள படிகளில் இறங்கி உணவுக்கூடம் வழியாக கார் பார்க்கிங் நோக்கி இழுத்துச் சென்றாள்.

 

“ஏய்… எங்கடி கூட்டிட்டுப் போற?” – ஜீவிதா என்ன செய்கிறாள் என்பதை முழுதாகப் புரிந்து கொள்ள முடியாமல் அவளுக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்த மதுமதி, கார் நிறுத்தத்தை அடைந்ததும் “இங்க வர்றதுக்கு… வாசல் வழியாவே வந்திருக்கலாம்ல… இப்படிப் பின்னாடி வழியா போட்டு இழுத்துக்கிட்டு வர்றியே… என்னடி ஆச்சு உனக்கு..?” – என்று தோழியைக் கடிந்து கொண்டாள்.

 

“அந்தப் பக்கம் அவர் இருக்காரேடி…”

 

“யாரைச் சொல்றே..?”

 

“உன் மாமாவத்தான் சொல்றேன்… நீ குணா அண்ணன்கிட்டப் பேசுறதைப் பார்த்தா அவர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?” – குழப்பத்துடன் கேட்டாள்.

 

‘சந்தேகப்பட மாட்டாரா..?’ என்று அவள் மறைமுகமாகக் கேட்பதைப் புரிந்து கொண்ட மதுமதி மனம் நோகத் தலைகவிழ்ந்தாள்… தன் கணவன் தன்னிடம் நடந்து கொண்ட லட்சணம் தான் இவளை இப்படிப் பேச வைக்கிறது என்கிற நினைவில் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

 

“சாரி மது… இப்போ தான் உன் லைஃப் கொஞ்சம் சரியாயிருக்கு… அதுக்குள்ள உனக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாதுன்னு தான்…” – தோழியைக் காயப்படுத்தி விட்டோம் என்கிற குற்ற உணர்வில் மன்னிப்பு கேட்டாள் ஜீவிதா.

 

“விடு…” – ஜீவிதா தனக்காகத்தான் யோசிக்கிறாள்… பேசுகிறாள் என்பதெல்லாம் புரிந்தாலும், அவளுடைய அதிகப்படியான கற்பனையில் மதுமதிக்குக் கோபம் வந்தது.

 

“ஓகே… வா…” என்று ஜீவிதா முன்னே நடக்க அந்த இடத்திலிருந்து நகராமல் “ஜீவி…” என்று அழைத்தாள் மதுமதி. இரண்டு எட்டு எடுத்து வைத்த ஜீவிதா நின்று திரும்பிப் பார்த்தாள்.

 

‘என் கணவர் என்னை முழுமையாக நம்புவார்… உனக்கென்னடி தெரியும்..?’ என்று கத்தி சொல்ல வேண்டும் போலிருந்தது… ஆனால் ‘அவர் உன்னை நம்பும் லட்சணத்தைதான் நீலவேணி விஷயத்திலேயே நான் தெரிந்து கொண்டேனே…’ என்று அவள் திருப்பி அடித்துவிட்டால் முகத்தை எங்குக் கொண்டுபோய் வைத்துக் கொள்வது. மனம் புழுங்கிய மதுமதிக்கு, ஜீவிதா சொல்லிய வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமலும் இருக்க முடியவில்லை.

 

“அவர் என்னைச் சந்தேகமெல்லாம் படமாட்டார்டி…” – மிடுக்காகப் பேசவேண்டும் என்று நினைத்தும் முடியாமல் அவள் குரல் தழுதழுத்தது.

 

சட்டென்று பாய்ந்து வந்து மதுமதியைக் கட்டிக்கொண்ட ஜீவிதா… “ஹேய்… நான் அப்படியெல்லாம் நினைக்கலடி… ஆண்கள் கொஞ்சம் பொசஸிவா இருப்பாங்கல்ல… அதான் அப்படிச் சொன்னேன். எதுக்குத் தேவையில்லாம அவங்களை வெறுப்பேத்தணும்… அதுலேயும் உன் வீட்டுக்காரர் கோபக்காரர்… நான்தான் குணா அண்ணனை வரச்சொன்னேன்னு தெரிஞ்சா உன்ன விட்டுட்டு என்ன வெட்ட வந்துடுவாரு… இதெல்லாம் எனக்குத் தேவையா..?” சீரியசாகப் பேச ஆரம்பித்துக் கேலியில் முடிக்கவும் மதுமதியின் முகத்திலும் கீற்றாகப் புன்னகை வந்தது.

 

அந்த நேரம் அவர்களைக் கடந்து சென்று பார்க்கிங்கில் நின்ற காரிலிருந்து இறங்கினான் குணா.

 

“குணா அண்ணா…” என்று துள்ளிக் குதித்தபடி ஜீவிதா முன்னே ஓட… அமைதியான புன்னகையுடன் மதுமதி மெல்ல நடந்தாள்.

 

“எவ்வளோ நாளாச்சு உங்களைப் பார்த்து… எப்படிண்ணா இருக்கீங்க..? ” – ஆர்ப்பரித்தாள்.

 

“நல்லா இருக்கேன் ஜீவி… நீ எப்படி இருக்க..?”

 

“நான் சூப்பரா இருக்கேன்ணா…” அவள் குதூகலத்தோடு கூறிக் கொண்டிருக்கும் பொழுது மதுமதி அங்கு வந்து சேர்ந்தாள். எப்போதும் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் “ஹாய் குணாண்ணா…” என்றாள்.

 

அவள் அழகாகத்தான் இருந்தாள். ஆனால் மெலிந்திருந்தாள்… கண்களில் பழைய துறுதுறுப்பு இல்லை… அவளுடைய மாற்றம் குணாவை வெகுவாய் வருத்தியது.

 

“என்னம்மா இப்படி ஆய்ட்ட?” – தன்னை மீறிக் கேட்டான்.

 

“எனக்கென்னண்ணா..? நல்லாதானே இருக்கேன்…”

 

தற்போது ஜீவிதாவின் உபயத்தால் வாடிப் போயிருந்த அவள் முகத்தில்… உதட்டளவில் புன்னகைப் பூத்திருப்பதைக் கவனித்துக் கொண்டே ‘இல்லை’ என்பது போல் தலையசைத்து “ரொம்ப மாறிட்ட மது… மெலிஞ்சிட்ட… பழைய சிரிப்பு இல்ல…” உண்மையான வருத்தத்துடன் பேசினான்.

 

“அண்ணா… இப்ப இவ எவ்வளவோ பரவால்ல… ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி பார்த்திருந்தீங்க… இது மதுவே இல்லன்னு சொல்லிடுவீங்க… அவ்வளவு மோசமா இருந்தா…” – ஜீவிதா கூறினாள்.

 

“ஏய்… சும்மா இருடி… அதெல்லாம் இல்லைண்ணா… இவ சும்மா சொல்றா… பாப்பா இருக்கால்ல… அதான் கொஞ்சம் வேலை அதிகம்… மத்தபடி ஒண்ணுமில்ல…”

 

“பசங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனைன்னா… உடனே மச்சான் மாமான்னு பிரண்ட்ஸுக்குத் தான் முதல்ல போனை போடுவேம்… ஆனா இந்தப் பொண்ணுங்க எப்பவுமே ரொம்ப அழுத்தம்பா… எதையுமே வெளியே சொல்லாதீங்க…” – ஆற்றாமையுடன் பேசினான்.

 

தன் வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களைத் தெரிந்து கொண்டு தான் பேசுகிறானோ என்கிற சந்தேகம் வந்தது மதுமதிக்கு. ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

 

“அப்படியெல்லாம் எதுவுமே இல்லண்ணா… நீங்களா எதையாவது கற்பனை பண்ணிக்காதீங்க… சொல்லுங்க நீங்க எப்படி இருக்கீங்க… இவ்வளவு நாளுக்குப் பிறகு உங்களைச் சந்திச்சதே பெரிய சந்தோஷம்…” – சாமர்த்தியமாகப் பேச்சை மாற்றினாள். தன்னுடைய சொந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை அவள் எப்பொழுதுமே விரும்பியதில்லை. இப்போதும் விரும்பவில்லை.

 

“ம்ம்ம்… நல்லா இருக்கேன் மது…” அவன் அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, யாழினியின் அழுகுரல் கேட்டுச் சட்டென்று திரும்பிய மதுமதி பந்தலில் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த கார்முகிலன் தங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

 

“ஐயோ… யாழி குட்டி அழ ஆரம்பிச்சுட்டா…!” – பதறியவள், “அண்ணா… உள்ள வாங்கண்ணா…” என்று சொல்லிக்கொண்டே குழந்தையை நோக்கி ஓடினாள்.

 

ஜீவிதாவிற்குச் சர்வமும் ஒடுங்கிவிட்டது… “போச்சு… எல்லாம் போச்சு… மது இன்னிக்கு மாட்டினா…” – நடுங்கியபடிக் கூறினாள்.

 

“என்னாச்சு ஜீவி..?” குணா ஜீவிதாவைப் பார்த்துப் புருவம் உயர்த்தினான்.

 

“அவர்தான்ணா மதுவோட கணவர்… எப்படிப் பயந்துகிட்டு ஓடுறா பாருங்க…!”

 

“அந்தக் குழந்தை மதுவோடாதா? ரொம்ப அழகா இருக்கு இல்ல..?”

 

“அண்ணா… நா என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்… நீங்க என்ன பேசுறீங்க..? ஒழுங்கா… இப்படியே கார்ல ஏறி அப்பீட்டாயிருங்க… நான் போய் நீங்க என்னைத் தான் பார்க்க வந்தீங்க அப்படிங்கற மாதிரி சீனப் போடறேன்…”

 

“ப்ச்… டென்ஷனாகாத ஜீவி…” – பந்தலை நோக்கி நடக்க எத்தனித்தான். “ய்…யோ…” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அடிக்குரலில் கூறியவள், பதட்டத்துடன் அவன் கையைப் பிடித்துத் தடுத்து, “ண்ணா… உங்களுக்கு என்ன லூசா… அந்த ஆள் அங்க நின்னுகிட்டு இருக்காரேன்னு நானே பயந்து போயிருக்கேன்… நீங்க பாட்டுக்கு அங்க போறேங்கறீங்க… மதுக்குதான்ணா பிரச்…சனை…” – பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.

 

ஆனால் குணாவோ ஜீவிதாவின் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘மதுமதியைப் போன்ற ஒரு தங்கமான பெண்ணை… ஒழுக்கம் தவறிய மோசமான ஒருத்தியோடு சேர்ந்து கொண்டு வதைத்த அந்தக் காட்டானை அருகில் சென்று பார்க்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் கார்முகிலனும் மதுமதியும் நிற்கும் இடம் நோக்கிச் சென்றான்.

###

 

“குழந்தையைக் கூட மறந்துட்டு அப்படி என்ன பேச்சு அங்க..? அதுவும் கார் பார்க்கிங்ல..?” – கடுகடுத்த முகத்துடன் கேட்டான் கார்முகிலன்.

 

ஏற்கனவே ஜீவிதா கிளப்பிவிட்டிருந்த எரிச்சலிலிருந்து முழுதாக மீண்டிராத மதுமதி கணவனின் கடுமையில் ஆத்திரமடைந்தாள்.

 

“நான் அங்க நின்னதைத் தான் பார்த்தீங்கல்ல..?… குழந்தை அழுத உடனே தூக்கிக்கிட்டு வர வேண்டியது தானே? அதென்ன தூரத்துலேருந்து பார்வை..?” என்று சீறியவள் “என்…ன சந்…தேகமா?” என்று நக்கலாக முடித்தாள்.

 

அவளுடைய அபாண்டமான பேச்சில் ஒரு நொடி அதிர்ந்த கார்முகிலன் “ஏய்… என்னடி உளர்ற? கட்டின பொண்டாட்டிய சந்தேகப்படற அளவு நான் ஒண்ணும் கீழ்த்தரமானவன் இல்ல…” – வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

 

“ஆஹா… நீங்க என்னை நம்புற லட்சணத்தைத் தான் நான் நீலவேணி விஷயத்துலேயே பார்த்தேனே…!”

 

கணவன் தன்னைச் சந்தேகக்கண்ணோடு பார்க்கவில்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவனை எங்கு அடித்தால் வலிக்கும் என்பதை அறிந்து குறிபார்த்து அடித்தாள். வேறுவழி…! ஜீவிதாவின் வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்திற்கு மருந்தை அவள் எங்குப் போய்த் தேடுவாள்….! அவனிடம் தான் தேடியாக வேண்டும்.

 

மனைவியின் குத்தலுக்குப் பதில் பேச முடியாமல் ஒரு நொடி திகைத்த கார்முகிலன், சுதாரித்துக் கொண்டு பேசுவதற்குள்… குணாவும் ஜீவிதாவும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

 

கையைக் கட்டிப்போட்டு அடிப்பது போல் பதில் கொடுக்க முடியாத நேரத்தில் கடுமையான வார்த்தைகளால் தன்னைக் காயப்படுத்திவிட்ட மனைவியின் மீது சரியான கடுப்பில் இருந்தான் கார்முகிலன்.

 

“சாரிண்ணா… குழந்தை அழுதவுடனே ஓடி வந்துட்டேன்… இவர் தான் என் கணவர்… இவங்க யாழி குட்டி… என் பொண்ணு…” – கணவன் மீதான புகைச்சல் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தாலும் அதை குணாவிற்கு முன் காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, அவனுக்குத் தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினாள்.

 

“பரவால்லம்மா… ஜூனியர் மது பேரு யாழியா..?” – என்று குழந்தையின் கன்னத்தை வலிக்காமல் கிள்ளினான்.

 

“ஆமாம்ணா… யாழினி…” என்று அவனுக்குப் பதில் சொன்னவள், கணவனின் பக்கம் திரும்பி “இவங்க தான் குணா அண்ணன்… எங்க காலேஜ் சீனியர்… எனக்கும் ஜீவிக்கும் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க… ராக்கிங்லேருந்தெல்லாம் அண்ணன் பேரைச் சொல்லித்தான் தப்பிப்போம்… நல்ல ஃப்ரண்ட்” – குணாவை அறிமுகப்படுத்தினாள்.

 

அவள் அவனுடைய புகழைப் பாடப்பாட ஜீவிதாவிற்கு வயிறு கலங்கியது. ‘இவளுக்கு என்ன மண்டை குழம்பிடுச்சா… அந்த ஆளே ஒரு கட்டுப்பட்டி… அவர்கிட்டப் போய் இப்படிப் பேசித் தொலைக்கிறாளே…!’

 

அவனும் மனைவி மீது எவ்வளவு தான் கோபத்தில் இருந்தாலும்… மற்றவர்களுக்கு முன் அதைக் காட்டக்கூடாது என்ற எண்ணத்தில் அத்தனை கோபத்தையும் உள்ளே மறைத்துக் கொண்டு சிநேகப் புன்னகையுடன் குணாவிடம் கையை நீட்டி “ஹலோ…” – என்றான் கார்முகிலன்.

 

அவன் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்காமல் அவனைத் தலைமுதல் கால்வரை பார்வையால் அளவெடுத்தான் குணா. அவனுடைய பார்வையை முகிலன் சுத்தமாக ரசிக்கவில்லை. ‘யார் இவன்… நம்மை இப்படிப் பார்க்கறான்…!’ என்று பல்லைக் கடித்தான்.

 

கார்முகிலனின் முகமாற்றத்தைக் கவனித்த ஜீவிதா பயந்து போய் “அண்ணா… கையக் குடுங்கண்ணா…” என்று பின்னாலிருந்து அவனை உந்த… வேண்டாவெறுப்பாக அவனுடைய கையைப் பற்றிக் குலுக்கினான்.

 

குணாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த மதுமதிக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. ‘நம்ம லைஃப்ல நடந்த விஷயங்களை அண்ணன் கேள்விபட்டிருக்காங்க… அதான் இந்த மாதிரி நடந்துக்கிறாங்க…’ என்று அனுமானித்தபடி, கணவனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள். காரணம் குணாவைவிடப் பலமடங்கு அதிகமாக அவன், இவனை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

‘முதல் சந்திப்பிலேயே ரெண்டுபேரும் இப்படி முட்டிக்கிறாங்களே…!’ என்கிற வருத்தத்துடன் “சொல்லுங்கண்ணா… வேலையெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு..?” என்றாள்.

 

“நல்லா போயிட்டிருக்கும்மா… நீ என்ன செய்ற?”

 

“நான்… சும்மா… வீட்லதான்ணா… பாப்பா இருக்கால்ல…” – தடுமாற்றத்துடன் கூறினாள். ஏன் அந்தத் தடுமாற்றம் என்பது அவளுக்கே புரியவில்லை.

 

“சும்மா இருக்கியா!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டவன் “படிச்சிட்டு எதுக்கும்மா வீட்ல அடைஞ்சு கெடக்கற… வெளியே வா… உன்னோட பவரை யூஸ் பண்ணும்மா… அப்போ தானே மற்றவங்களுக்கு உன்னோட மதிப்பு என்னன்னு தெரியும்…” – முகிலனைப் பார்த்துக்கொண்டே பேசினான்.

 

குணாவின் பேச்சில் யதார்த்தம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட முகிலனின் முகம் கோபத்தில் சிவந்தது. “கொஞ்ச நாள் போகட்டும்ணா… குழந்தைக் கொஞ்சம் வளரட்டும்… பார்க்கலாம்…” என்று மழுப்பலாகப் பதில் சொன்னாள்.

 

அவளுக்கும் தன் கணவனை இன்னொருவன் அவமதிப்பதில் உடன்பாடில்லை. அவள் என்ன வேண்டுமானாலும் சொல்வாள்… ஆனால் அடுத்தவர்கள் பேசுவதையும்… முறைப்பதையும்… அவளால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்.

 

“குழந்தை… புருஷன்னு… குடும்பத்துக்காக உழைக்கற பொண்ணுங்களோட அருமை இன்னிக்கு யாருக்கும் தெரியிறது இல்ல மது… நீ உன்னோட சொந்தக் கால்ல நின்னாதான் உனக்குப் பாதுகாப்பு… நீ ரெஸ்யூம் மட்டும் அனுப்பு… வேலைக்கு நான் ஏற்பாடு பண்றேன்…” – உரிமையுடன் பேசினான்.

 

‘அடப்பாவி… நல்லது செய்றேன்னு வந்துட்டு அவ வாழ்க்கையைக் காலி பண்ணாம போகமாட்ட போலருக்கேடா…’ – குணாவின் மீது எரிச்சலானாள் ஜீவிதா.

 

“ம்ம்ம்… சரிண்ணா… பார்க்கலாம்…”

 

“பார்க்கலாம் எல்லாம் இல்ல… கண்டிப்பா அனுப்பற… உன் மொபைல் நம்பர் சொல்லு… என்னோட ஈமெயில் ஐடி அனுப்பறேன்…” என்று கூறி அவளுடைய கைப்பேசி எண்ணை வாங்கியவன், உடனடியாக அப்போதே அவனுடைய மின்னஞ்சல் முகவரியை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

 

கார்முகிலனுக்குக் கோபம் எக்குத்தப்பாக எகிறியது. ‘என் பொண்டாட்டிக்கு வேலை வாங்கிக் கொடுக்க நீ யாருடா..?’ – என்று கேட்டு அவனைப் புரட்யெடுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் மனைவியின் கோபத்திற்குப் பயந்து அமைதி காத்தவன், அவளிடம் திரும்பி “கிளம்பலாமா..?” என்றான் இறுக்கமான குரலில்.

 

“அண்ணன் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க… பேசிட்டு வந்திடுறேன்…” என்றாள்.

 

அவன் அவளைப் பயங்கரமாக முறைத்தான். “பரவால்ல மது… நீ கிளம்பு… நான் உன்னை வீட்டுல வந்து பார்த்துக்கறேன்…” கார்முகிலனைக் கண்டுகொள்ளமால் மதுமதியிடம் கூறினான் குணா.

 

“அப்போ சரிண்ணா… நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வாங்க…” என்று உடனே ஏற்றுக் கொண்டவள் “வாங்க போய் கல்பனாவை விஷ் பண்ணிட்டு வந்துடலாம்…” என்று கணவனை அழைத்தாள்.

 

‘அவன் உத்தரவு கொடுத்தால் தான் கிளம்புவீங்களோ…!’ என்று எரிச்சலுடன் நினைத்தவன், “நான் கார்ல இருக்கேன்… சீக்கிரம் போய்… விஷ் பண்ணிட்டு வா…” என்று கடுகடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page