உனக்குள் நான்-23
3262
0
அத்தியாயம் – 23
“காபி எடுத்துக்கோங்கண்ணா…” சோபாவில் அமர்ந்திருந்த குணாவிடம் டிரேயை நீட்டினாள் மதுமதி.
“தேங்க் யு மது…” – கப்பை எடுத்துச் சுவைத்தான்.
“ம்ம்ம்… நல்லா சமைக்க ஆரம்பிச்சுட்ட போலருக்கே… காபி பிரமாதமா இருக்கு…” – குணாவின் கேள்விக்கு, இன்னொரு சோபாவில் அமர்ந்து காபியைச் சுவைத்துக் கொண்டிருந்த கணவனிடம் திரும்பி, “அப்படியா..?” என்று சிரித்துக் கொண்டே பதில் கேள்வி கேட்டாள்.
மனைவியின் அந்த இயல்பான செயல், கார்முகிலனின் மனதை வருடியது. ‘எந்த நேரம் கோபப்படுவா… எப்போ சிரிச்சு பேசுவான்னே தெரியலயே…!’
அவளைக் காதலோடு பார்த்துக் கொண்டே, “நிச்சயமா… மனைவியின் சமையலை எந்த மடையன் நல்லா இல்லைன்னு சொல்வான்…!” என்றான்.
அதுவரை கார்முகிலனை வில்லன் போல் பார்த்துக் கொண்டிருந்த குணா குழம்பினான். ‘என்னங்கடா நடக்குது இங்க…! நாம காபி நல்லா இருக்குன்னு சொன்னா… மது அவனைப் பார்த்து ‘அப்படியா’ன்னு கேக்கறா…! அவன் என்னவோ கண்ணாலயே காதல் கவிதை எழுதறான்…! இதுகளைப் பார்த்தா அடிச்சுக்கிட்டு கோர்ட் வரைக்கும் போன மாதிரி தெரியலயே…!’
“அடடா… மனைவிக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுறவர் தான்…” – மதுமதி விளையாட்டாகத்தான் கணவனுக்குப் பதில் சொன்னாள். ஆனால் கார்முகிலனின் முகம் வாடிவிட்டது. அதைக் கவனித்த மதுமதிக்கும் சங்கடமாகிவிட்டது.
‘இப்போ என்ன சொல்லிட்டான்னு இப்படி மூஞ்ச தூக்கி வச்சுக்கறான்…! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்தப் பார்வைப் பார்த்தான்… இப்போ இப்படி முகத்தைத் திருப்பிக்கறான்… பாவம் மதுவ… வாயத் திறந்து பேசவே விட மாட்டான் போலருக்கே… இவனப் போய் எப்படி லவ் பண்ணித் தொலைச்சா இந்த மது…!’ – கார்முகிலனைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழப்பத்துடன் அவர்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.
“சொல்லுங்கண்ணா… என்னைப் பார்க்க தான் கல்பனாவோட கல்யாணத்துக்கு வந்தீங்கன்னு ஜீவி சொன்னா…” – கணவனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே கேட்டாள்.
அவளுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாமல் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் ஒரு நொடி தடுமாறிய குணா… பின் சுதாரித்துக் கொண்டு, “உன்னைப் பார்த்து… பேசி… வருஷக்கணக்கா ஆச்சு. நீயும் உன் கல்யாணத்துக்கு என்னை இன்வைட் பண்ணல. என்னாலேயும் வர முடியல. அதான் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்” என்றான்.
“சாரிண்ணா… கல்யாணம் அவசரமா ஒரு வாரத்துல நடந்து முடிஞ்சிடுச்சு. அதான் ஃபிரண்ட்ஸ் யாரையும் கூப்பிட நேரமே இல்ல”
“ஓகே… ஓகே… இப்போ எப்படிப் போயிட்டு இருக்கு… கல்யாண லைஃப்?”
“என் வாழ்க்கையை விடுங்கண்ணா. உங்களுடைய கல்யாணம் என்னாச்சு? ரோகினி என்ன பண்ணிட்டு இருக்காங்க? அவங்க வீட்ல கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டாங்களா?” – கேள்விகளை அடுக்கினாள்.
‘ரோகினி’ என்கிற பெயரைக் கேட்டதும் குணாவின் முகம் சட்டென்று இறுகியது. அவனால் மதுமதியை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அசௌகர்யமாகக் காணப்பட்டான்.
“என்னண்ணா ஆச்சு..?” – மதுமதி புருவம் சுருக்கிக் கேட்டாள்.
“ப்ச்… ஹும்ம்ம்…” பெருமூச்சு விட்டுவிட்டு வறண்ட புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்து “அவங்க சம்மதமெல்லாம் சொல்லி கல்யாணமும் முடிஞ்சிடுச்சு…” என்றான்.
“கல்யாணம் முடிஞ்சிடுச்சா…! எப்போ..? எங்களுக்கெல்லாம் இன்விடேஷனே அனுப்பல..?” – தானும் அவனுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை என்பதை மறந்துவிட்டு ஆர்வத்துடன் கேட்டாள்.
“எனக்குக் கல்யாணம் நடந்தா கட்டாயம் அனுப்பறேன்…” – புன்னகை கூட மனதின் வலியை வெளிப்படுத்துமா…! ஆம்… வலி நிறைந்த புன்னகையுடன் தான் கூறினான் குணா.
மதுமதிக்கு ஒரு நொடி தன் செவிகளையே நம்பமுடியவில்லை. ‘சரியாகத்தான் கேட்டோமா…! அல்லது தவறாகப் புரிந்து கொண்டோமா…!’ – குழப்பமும் அதிர்ச்சியுமாக “என்னண்ணா சொல்றீங்க?” என்றாள்.
‘ஆம்’ என்பது போல் தலையாட்டியவன்… ஒரு நொடி தயக்கத்திற்குப் பின் “ரோகினிக்குக் கல்யாணம் ஆயிடுச்சு மது… அவங்க அப்பாம்மா பார்த்த மாப்பிள்ளை…” என்றான்.
“அண்ணா…!” – பேச்சே வரவில்லை மதுமதிக்கு. அவர்களுடைய காதலைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளுக்குத் தெரியும் என்பதைவிடக் கல்லூரிக்கே தெரியும். திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்கிற நம்பிக்கையில் அவ்வளவு வெளிப்படையாக இருப்பார்கள். இது எப்படி நடந்தது….!
“ரோகினி…! எப்படிண்ணா…!” – நம்ப முடியாமல் கேட்டாள்.
“அப்பாம்மா பாசம்… அவங்களை கன்வின்ஸ் பண்ண முடியல… என்னை… உதறிட்டா…”
‘அந்தப் பெண்ணை எவ்வளவு நேசித்திருந்தால் இப்போது கூட அவளைப் பற்றிப் பேசும் பொழுது இவன் குரல் உடைந்து கண்கள் கலங்கும்…!’ – முகிலனுக்கே பாவமாக இருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை… பேச முடியவில்லை… ஊசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவிற்கு மயான அமைதி.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு குணாவே பேச்சைத் துவங்கினான். “ப்ச்… அதெல்லாம் பழைய கதை… விட்டுத் தள்ளிட்டுப் போக வேண்டியது தான்…” – உணர்வுகளை உள்ளே மறைத்துக் கொண்டு இயல்பாகப் பேசினான்.
ஆனால் குணாவை போல் மதுமதிக்கு இயல்பாக இருக்க முடியவில்லை. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. முகம் சூடாகி சிவந்துவிட்டது.
“என்னால இன்னமும் நம்ப முடியலண்ணா… ரோகினி… ரோகினி எப்படி…!” – மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள்.
“அவளோட சூழ்நிலை அந்த மாதிரி முடிவெடுக்க வச்சிடுச்சு மது…” – முன்னாள் காதலியை விட்டுக் கொடுக்க முடியாமல் பேசினான் குணா.
“சூழ்நிலையெல்லாம் காரணம் இல்லைண்ணா. சுயநலம்… சுயநலம் மட்டும் தான் காரணம்”
“இல்ல மது… அவ அப்பாம்மா…”
“அப்பாம்மா என்னண்ணா… உலகமே வந்து சொல்லட்டுமே… எப்படிண்ணா அவ உங்களை விட்டுட்டுப் போகலாம்? ஆண்கள் தான் நம்ப வச்சுக் கழுத்தறுக்கிறாங்கனு பார்த்தா பொண்ணுங்க கூட இப்படிச் செய்வாங்களா?”
மதுமதியின் கோபம் தன் மீதான அக்கறையின் வெளிப்பாடு என்று நினைத்த குணாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ரோகினியை அவள் தவறாக நினைப்பது சங்கடமாக இருந்தது. பதில் பேச முடியாமல் தலை கவிழ்ந்தான்.
“மதி… பெத்தவங்க பேச்சை மீற முடியாமல் தான் அந்தப் பொண்ணு அப்படிப் பண்ணிடுச்சுன்னு அவரே சொல்றார்ல… விடு…” – கார்முகிலன் அதட்டினான்.
“விடணுமா…! நீங்க ஏன் சொல்லமாட்டீங்க..? நீங்களும் அவள மாதிரி தானே? அவளாவது அப்பாம்மா பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அண்ணனைத் தூக்கியெறிஞ்சா… ஆனா நீங்க… உங்க கேடு கெட்ட ஃப்ரண்டை நம்பி என்னைத் தூக்கியெறிஞ்சவராச்சே…!” – கணவனிடம் வெடுவெடுத்தாள். அவன் முகம் அவமானத்தில் கருத்தது.
குணாவின் பக்கம் திரும்பி, “அப்பாம்மா, கூடப் பிறந்தவங்கல்லாம் முக்கியம்னு நினைக்கிறவ எதுக்குண்ணா உங்களை லவ் பண்ணினா? காதல்… கல்யாணம்னா ஏதோ விளையாட்டுன்னு நினைக்கிறாளா..? என்னண்ணா இதெல்லாம்? அவ உதறிட்டுப் போனா… நீங்களும் விட்டுடுவீங்களா..?” – என்ன பேசுகிறோம் என்கிற நிதானமில்லாமல் உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொண்டு பொறிந்து கொட்டினாள். குணாவின் முகத்தில் தோல்வியின் கோபம் ஜொலித்தது.
மதுமதியின் சொந்தப் பிரச்சனையின் தாக்கம் தான் அவளை இப்படிப் பேச வைக்கிறது என்பது கார்முகிலனுக்குப் புரிந்தாலும், ஏற்கனவே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அமர்ந்திருப்பவனுடைய கோபத்தைத் தூண்டிவிடுவது போல் அவள் பேசுவதில் அவனுக்குச் சுத்தமாக உடன்பாடில்லை.
“மதி… நீ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகற..? இப்படி வந்து உட்காரு…” – எழுந்து வந்து மனைவியின் கையைப் பிடித்து சோபாவில் அமர வைக்க முயன்றான்.
“கையை விடுங்க…” வெடுக்கென்று அவனை உதறினாள். உணர்ந்து செய்யவில்லை என்றாலும் இன்னொருவனுக்கு முன் அவள் அப்படி முகத்திலடித்தது போல் நடந்து கொண்டதில் அவன் தன்மானம் அடிவாங்கிவிட… அவனுடைய வார்த்தைகள் சீற்றமாக வெளிப்பட்டன.
“ஏய்… பிரச்சனை என்னன்னு முழுசா புரிஞ்சுக்காம எதுக்குடி இப்படி உளறி தொலைக்கிற? அவர் தான் கூலா இருக்கார்ல… நீ என்னவோ கெடந்து குதிக்கற? பேசாம உக்காருடி…” வலுக்கட்டாயமாக அவளை இழுத்துத் தள்ளி சோபாவில் அமரவைத்தான்.
தன் முன்பே அவன் இவ்வளவு முரட்டுத்தனமாக மதுமதியிடம் நடந்து கொண்டது குணாவைத் திகைக்க வைத்தது. “என்ன சார் இப்படி நடந்துக்கறீங்க..?” – அதிர்ச்சியுடன் கேட்டான்.
“சாரி குணா… மதி எங்க பிரச்சனையையும், உங்க பிரச்சனையையும் போட்டுக் குழப்பிக்கறா. இவ பேசின எதையும் நீங்க மனசுல போட்டுக்காம எப்பவும் போல இருங்க…”
“இல்ல சார்… மது சொல்றதுல எந்தத் தப்பும் இல்ல… அடி வாங்கினவங்களுக்குத் தானே வலியோட கொடுமை என்னன்னு தெரியும்…”
“நல்லா சொல்லுங்கண்ணா… இவர் பண்ணின கொடுமையெல்லாம் மறந்துட்டு மண்ணு மாதிரி இருந்தா நான் நல்லவ… எதிர்த்துக் கேட்டா புரியாம பேசுறேன்… குழப்பிக்கறேன்னு சொல்ல வேண்டியது. இதெல்லாம் என்ன அராஜகம்..?” – கோபாவேசத்தில் சோபாவிலிருந்து மீண்டும் எழுந்து நின்று கொண்டு பேசினாள்.
‘அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசி அவனைக் குழப்பாதடின்னு சொன்னா… விஸ்கு… விஸ்குன்னு ஸ்ப்ரிங் மாதிரி எந்திரிச்சு நின்னுகிட்டு நம்ம பிரச்னையை இடையில இழுத்து விடுறா பாரு… இவளை என்னதான் செய்றதோ…!’ – சுவற்றில் முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது முகிலனுக்கு.
“ஏய்… வாய மூடுடி” – பல்லைக் கடித்துக்கொண்டு வார்த்தைகளைத் துப்பினான்.
“எதுக்கு மூடணும்? ஃப்ரண்ட்ஷிப்கு… அப்பாம்மா பாசத்துக்கெல்லாம் உயிரைக் கொடுக்கறவங்க எதுக்குக் காதலிச்சு தொலைக்கிறீங்க? உங்களை நம்பி உங்க மேல நாங்க உயிரையே வச்ச பிறகு தூக்கியெறிஞ்சுட்டுப் போறதுக்கா?” – கண்ணீருடன் நியாயம் கேட்பவளைப் பார்க்கும் பொழுது முகிலனுக்கு இழுத்து வைத்து அறைய வேண்டும் போலிருந்தது.
“உன்னையெல்லாம் அடக்கவே முடியாதுடி… முதல்ல இங்கிருந்து வா…” என்று அவள் கையைப் பிடித்து மாடிப்படியை நோக்கி இழுத்துச் சென்றான்.
“என்ன பண்றீங்க? விடுங்க… விடுங்கன்னு சொல்றேன்ல…” மதுமதி அவன் பிடியிலிருந்து தன் கையை உருவ முயன்றபடியே அவனுடன் சேர்ந்து நடந்தாள்.
“சார்… என்ன சார் இது…! விடுங்க சார்…” – குணாவும் தடுக்க முயன்றான்.
ஆனால் கார்முகிலனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மதுமதியை இழுத்துக் கொண்டு மாடியறைக்குச் சென்றவன், அவளை உள்ளே தள்ளி கதவைச் சாத்திவிட்டு கீழே வந்தான்.
குணா திகைப்பிலிருந்து மீளாமல் மாடியை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்க, பெற்றோரின் போராட்டத்தைப் பார்த்துவிட்டுப் பயந்து போய் அழுது கொண்டிருந்தாள் யாழினி. மகளின் அழுகுரல் முகிலனைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்த, இரண்டே எட்டில் பாய்ந்து வந்து மகளைத் தூக்கி அணைத்துக் கொண்டான்.
“என்ன… என்ன… என்ன… பொம்மு குட்டி எதுக்கு அழறாங்க..? பயந்துட்டீங்களா? ஒண்ணுமில்லடா… சும்மா அப்பா அம்மாகிட்ட விளையாடினேன்டா… அம்மாவ போய்ப் பார்க்கலாமா…” என்று குழந்தையைச் சமாதானம் செய்தவன், குணாவிடம் நெருங்கி “சாரி குணா… நீங்க கிளம்புங்க… இன்னொரு நாள் மீட் பண்ணலாம்…” என்று சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.
சற்றுநேரம் கார்முகிலனின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்த குணாவின் மனதில் அவன் மீது நல்லவிதமான எண்ணம் துளியும் இல்லை. நாகரீகமே இல்லாத இந்தக் காட்டானிடமிருந்து மதுவைக் காப்பாற்றி வெளியே கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் வலுத்தது. சிந்தனைகளுடன் வாசல் நோக்கி நடந்தான்.
Comments are closed here.