விடிவெள்ளி – 24
2707
0
அத்தியாயம் – 24
ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டியிருக்கும் பெட்டிக் கடையில் அமர்ந்து தம் அடித்துக் கொண்டிருந்த ஜீவனுடைய சிந்தனைகள் முழுவதும் பவித்ராவையேச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு முறை அவன் அவளை அவமதிக்கும் பொழுதும் பெண்புலியாக மாறி கண்களால் நெருப்பை உமிழும் அவளுடைய கோவப் பார்வை… மெலிந்த மாநிற மேனியாக இருந்தாலும் அன்றொருநாள் மாலை வெயிலில் பளபளத்த அவள் அழகு முகம்… எப்போதாவது காணக்கிடைக்கும் கள்ளமில்லா சிரிப்பு… அளவாக வெளிப்பட்டு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் கோர்வையான வார்த்தைகள்… குடும்பத்தின் மீது அவள் கொண்ட பற்று… அவன் மீது கொண்டுள்ள பாசம்… அக்கறை… என்று அத்தனையும் அவன் மனதில் ரீங்காரமிட்டு அவனை வதைத்தன.
அவளுக்காக இன்று ஒரு நாள் குடிக்காமல் வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்தான். ஆனால் வழக்கம் போல் நண்பர்கள் ஒயின் ஷாப்பிற்கு கிளம்பிய போது அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
ஜீவன் வீட்டிற்கு வரும் பொழுது நேரம் நள்ளிரவை தொட்டிருந்தது. நாள் முழுவதும் வேலை செய்த களைப்பில் பவித்ரா உறங்கிவிட சிவகாமிதான் அவனுக்கு கதவை திறந்துவிட்டாள். செம்மைப் படர்ந்த விழிகளும் வியர்வையில் பளபளக்கும் முகமுமாக போதையில் வந்து நின்ற மகனை வேதனையுடன் பார்த்த தாய் “சாப்பிடறியா…?” என்றாள்.
“ம்ஹும்… பரோட்டா சாப்பிட்டேன்…” என்று சொல்லியபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அவன் முதுகைப் பார்த்துப் பெருமூச்சு விட்ட சிவகாமி வாசல் கதவை அடைத்துவிட்டு படுக்கைக்கு சென்றாள்.
இருட்டிக் கிடந்த அறையை மின்விளக்கை போட்டு வெளிச்சப்படுத்தினான் ஜீவன். நாள் முழுவதும் அவனை ஆட்டிப் படைத்த பவித்ரா அமைதியாக தரையில் விரித்திருந்த பாயில் உறங்கிக் கொண்டிருந்தாள். நிர்மலமான அவள் முகம் அவனை வசீகரித்தது. சிறிது நாட்களாகவே அவன் மனதில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் ஆசை அலைகள் போதை மயக்கத்தில் வீரியம் பெற்றது.
மனதின் தவிப்பை அடக்க முடியாமல் அவளிடம் நெருங்கினான். அவளிடம் அசைவுத் தெரிந்தது. குப்பென்று வியர்த்தது அவனுக்கு. இனம்புரியாத பயத்தில் உடல் நடுங்கியது. உறங்கிக் கொண்டிருந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தது போல் மோகத்திரை நொடியில் களைந்துவிட குற்றம் செய்துவிட்டவன் போல் கழிவிரக்கத்துடன் கட்டிலில் கவிழ்ந்தான்.
# # #
விடிந்ததும் பவித்ரா இயல்பாக இருந்தாள். ஆனால் அவனுக்குத் தான் அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. எதிலிருந்தோ தப்பிக்க நினைப்பவன் போல் அவசரமாக வெளியே கிளம்பினான். அந்த நேரம் தான் புனிதாவின் பெற்றோர் அவர்கள் உறவினர் ஒருவருடன் பத்திரிகை வைப்பதற்காக வந்தார்கள். அவர்களை பார்த்ததும் இவனுடைய உணர்வுகளெல்லாம் திசைமாறின. கோபமும் ஆத்திரமும் அவனை ஆட்க்கொண்டது.
பாட்டியும் சிவகாமியும் அவர்களிடம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது ஜீவன் அவனுடைய அறையிலிருந்து வெளிப்பட்டான்.
“எப்படி இருக்கீங்க மாப்ள…?” புனிதாவின் தந்தை கேட்டார். அவர் எதார்த்தமாக அவளை மாப்பிள்ளை என்று அழைத்ததை அவன் வெறுத்தான்.
“ம்ம்ம்… ம்ம்ம்…” என்று முனகிவிட்டு உணவுக் கூடத்திற்குள் நுழைந்தான்.
பவித்ரா விருந்தாளிகளுக்கு காபி ட்ரேயுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.
“சாப்பாடு எடுத்து வை…” இறுக்கமான குரலில் உத்தரவிட்டான்.
“ஒரு நிமிஷம் இருங்க… இதை அவங்களுக்கு கொடுத்துட்டு வந்துடறேன்…” என்றபடி பவித்ரா கூடத்திற்கு வந்தாள்.
“எப்படிம்மா இருக்க…?” புனிதாவின் தாய் விசாரித்தாள்.
“நல்லா இருக்கேன்ம்மா… நீங்க நல்லா இருக்கிங்களா…? நல்லா இருக்கிங்களாப்பா…?” என்று இருவரையும் அன்புடன் விசாரித்தாள்.
புனிதாவின் தந்தை பவித்ராவை உடன் வந்திருந்த உறவினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் அவளிடம் “நீ பிறந்தது எந்த ஊரம்மா…? எந்த காலேஜ்ல படிச்ச…?” என்று விசாரித்தார்.
ஒரு நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு வந்த பவித்ரா, இரண்டு… மூன்று… நான்கு நிமிடம் கடந்தும் உணவு பரிமாற வராததில் பொறுமையிழந்து எரிச்சலுடன் ஹாலுக்கு வந்த ஜீவனின் காதில் அவள் சொன்ன பதில் காய்ச்சிய ஈயமாக பாய்ந்தது.
“காலேஜ் போகல அங்கிள்… சென்ட் மேரிஸ் ஸ்கூல்ல படிச்சேன்…”
ஜீவனின் உலகம் எதிர்திசையில் சுழன்றது. கண்கள் இருட்டியது. ‘என்ன சொல்றா இவ…!’ ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சியில் திகைத்து சுவற்றை பற்றிக் கொண்டு நின்றான்.
“காலேஜ் போகலையா…! ஏம்மா…?” புதியவர் கரிசனமாக கேட்டார்.
“ப்ளஸ் டூ படிக்கும் பொது அம்மா அப்பா ரெண்டு பேருமே தவறிட்டாங்க. குடும்ப சூழ்நிலை மேலப் படிக்க அனுமதிக்கல அங்கிள்…”
“ச்சு… ச்சு…” அவர் அனுதாபப்பட்டார்.
அவர்களுடைய உரையாடல் எதையும் அவனால் உள்வாங்க முடியவில்லை. பெரிதாக ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைத்தான். திட்டமிட்டு முட்டாளக்கப்பட்டுவிட்டதை ஏற்க முடியாமல் திணறினான். புனிதாவின் பெற்றோர் முன் அவமானமாக உணர்ந்தான்.
ஜீவனுக்கு முன் விஷயம் உடைந்துவிட்டதில் பாட்டியும் சிவகாமியும் பதட்டத்துடன் காணப்பட்டார்கள். யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் அவன் வேகமாக வெளியேறினான்.
“இதோ வந்துடறேன்…” என்று விருந்தினர்களிடம் சொல்லிவிட்டு ஜீவனை பின்தொடர்ந்து வந்தாள் பவித்ரா.
“சாப்பிடாம கிளம்பிட்டிங்களே…” என்று அவசரமாக அவனை தொடர்ந்து ஓடி வந்தவளை… நின்று திரும்பிப் பார்த்தான். அவனுடைய பார்வையில் இருந்த வெறுப்பில் அவள் இரண்டடி பின்னடைந்தாள். ஒரு நிமிடம் அவள் முகத்தை வெறித்து நோக்கியவன் எதுவும் சொல்லாமல் வாசல் பக்கம் திரும்பி நடந்தான்.
‘சாப்பாடு எடுத்து வைக்க ரெண்டு நிமிஷம் லேட் ஆனதுக்கு இவ்வளவு கோபமா… இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல…’ பவித்ரா எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.
###
“போதும்டா மாப்ள… இப்பவே ரொம்ப ஓவராயிடிச்சு…”
“இன்னும் ரெண்டு ரௌண்ட் உள்ளப் போனாத்தான் மச்சான் உள்ள எரியிற தீ அடங்கும். நீ ஊத்து…”
“சொன்னாக் கேளுடா…” துரை கெஞ்சினான்.
“முடியலடா… சொந்த குடும்பமே முதுகுல குத்திட்டுடா… எத்தனவாட்டிடா இந்த நெஞ்சு தாங்கும்…?” மடார் மடார் என்று நெஞ்சில் அடித்துக்காட்டிய ஜீவன் “தாங்க முடியலடா…” என்று கூறியவாறு மதுவை பாட்டிலுடன் எடுத்து வாயில் கவிழ்த்தான். அவனை தடுக்க முடியாமல் அமர்ந்திருந்தான் துரை.
அரை மணிநேரம் கழித்து போதையுடன் தள்ளாடியபடி ஒயின் ஷாப் வாசலுக்கு வந்து வண்டியை எடுக்க முயன்றான். சாவி துவாரம் ஒருபக்கம் இருக்க இவன் ஒருபக்கம் சாவியை உள்ளே நுழைக்க முயன்று கொண்டிருந்தான். அவனிடமிருந்து சாவியை வாங்கி துரை வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
“டேய் மச்சி… நா வண்டிய ஓட்டுறேண்டா”
“நீ உக்காரு… நானே ஓட்றேன்…”
“நீ ஒன்னும் கவலைப்படாத மச்சி… நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன். ”
“சரிடா… இன்னிக்கு ஒரு நாள் நா உன்னோட வண்டிய ஓட்றேன். நீ உக்காரு…” என்று சமாதானம் செய்து அவனை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்தான் துரை.
வழக்கத்தைவிட அதிகமாக நிதானம் தவறும் அளவிற்கு குடித்துவிட்டு நண்பனின் தோளில் சாய்ந்தபடி ஏதோ உளறிக் கொண்டே வீட்டிற்குள் வரும் ஜீவனை பார்த்த பவித்ரா கோபத்தில் முகம் சிவந்தாள். வீட்டின் மூத்த பெண்மணிகளோ ஒருவருக்கொருவர் ரகசிய பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.
Comments are closed here.