Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-24

அத்தியாயம் – 24

அழும் குழந்தையைச் சமாதானம் செய்தபடியே படுக்கையறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் கார்முகிலன். கோபத்தோடு கட்டிலில் அமர்ந்திருந்த மதுமதி கணவன் உள்ளே நுழைவதைக் கண்டு சிலிர்த்தெழுந்தாள்.

 

“என்ன நெனச்சிட்டுருக்கீங்க உங்க மனசுல? எதுக்கு என்ன ரூம்ல தள்ளி கதவைச் சாத்துனீங்க?”

 

“ப்ச்… குழந்தையைப் பிடி முதல்ல… அவ அழறது உன் கண்ணுக்குத் தெரியல?”

 

ஒரு நொடி குற்ற உணர்ச்சியுடன் அமைதியானவள், வேகமாகக் கணவனை நெருங்கி அவனிடம் இருந்த குழந்தையைப் பிடுங்காத குறையாக வாங்கித் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே “நகருங்க முதல்ல… குணாண்ணன் தப்பா எடுத்துக்கப் போறாங்க…” – வெளியே செல்ல எத்தனித்தாள்.

 

“அவன் போய்ட்டான்… நீ எங்க போற இப்போ?”

 

“போயிட்டாங்களா! வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்கும் போது இப்படிக் கேவலமா நடந்துக்கிறீங்களே அசிங்கமா இல்ல? அவங்க என்ன நெனச்சுப்பாங்க?”

 

“அந்த அறிவு உனக்கு இருந்துச்சா? அடுத்தவன் பிரச்சனையில உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? அவனே நொந்து போய் இருக்கான். அவனைத் தூண்டிவிடற மாதிரி பேசுற? கோபத்துல முட்டாள்தனமா அந்தப் பொண்ண போய் எதாவது பண்ணிட்டான்னா என்ன செய்வ? எத்தனை நியூஸ் பார்த்தாலும்… பேப்பர் படிச்சாலும் உனக்கெல்லாம் புத்தியே வராது” – எரிந்து விழுந்தான்.

 

“அந்த மாதிரி கிரிமினல் புத்தியெல்லாம் உங்க ஃபிரண்டுக்குத் தான் இருக்கும். என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் அப்படிப்பட்டவங்க இல்ல…”

 

தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்கிற எண்ணம் ஓர் ஆணின் மனதில் வலுத்தால்… அவனுடைய சிந்தனைகள் எப்படியெல்லாம் விபரீதமாகப் பயணிக்கும் என்பதை உணர்ந்திருந்த கார்முகிலன், அதை மனைவிக்குப் புரியவைக்க முயன்றான். ஆனால் கணவன் சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாத மதுமதி அவன் கூற்றிலிருந்த தீவிரமான உண்மையை, நீலவேணியைப் பற்றிக் குத்திக் காட்டுவதன் மூலம் ஒரே நொடியில் தகர்த்தெறிந்துவிட்டாள். அதைச் சற்றும் எதிர்பார்க்காத முகிலன் திகைப்புடன் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“குணா அண்ணா என்ன பார்க்க வந்தாங்க. நாங்க ரெண்டுபேரும் என்ன வேணும்னாலும் பேசிக்குவோம். அதுல நீங்க எதுக்குத் தலையிடறீங்க?”

 

“நீ முட்டாள்தனமா பேசுவ… நான் அதைக் கேட்டுகிட்டே உட்கார்ந்திருக்கணுமா?”

 

“உட்கார முடியலன்னா எழுந்து போங்க… என்னை எதுக்குக் கட்டுப்படுத்தறீங்க? அந்த உரிமை உங்களுக்குச் சுத்தமா இல்ல…” – ஆத்திரத்துடன் பேசினாள்.

 

மனைவி எடுத்தெறிந்து பேசுவது, அவனுடைய கோபத்தை அதிகப்படுத்தினாலும் தன்னை அமைதியாகக் காட்டிக்கொண்டு “ம்ம்ம்… அப்புறம்…” என்று நக்கலாகக் கேட்டான். அவள் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்.

 

“இந்த மாதிரி டையலாக்ஸ்கெல்லாம் அசருற ஆள் நான் இல்ல… என்னோட உரிமை என்னன்னு எனக்குத் தெரியும். நீ எதையும் சொல்ல வேண்டியதில்ல”

 

“பெரிய உரிமை… உங்க உரிமை… கடமையெல்லாம் தான் அன்னிக்கு போலீஸ் ஸ்டேஷன்ல பார்த்தேனே!”

 

மதுமதிக்கு எப்போதெல்லாம் கார்முகிலனை எதிர்த்து வாதாட முடியவில்லையோ… அவனை எப்போதெல்லாம் வாயடைக்கச் செய்ய வேண்டுமோ… அப்போதெல்லாம் அவள் இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்தினாள். ஒன்று நீலவேணி மற்றும் அவள் சம்மந்தமான சம்பவங்களைப் பற்றிப் பேசுவது. இரண்டாவது அவனைத் தன்னிடமிருந்து விலக்கி வைத்து பேசுவது.

 

இவையிரண்டுமே அவனைப் பலமாகக் காயப்படுத்தி வாயடைக்கச் செய்கிறது என்பதை அறிந்து வைத்துக்கொண்டு சரியாகச் செயல்படுத்தினாள். ஆனால் இந்த முறை அவளுடைய கணக்குப் பொய்த்துப் போய்விட்டது. ஒவ்வொரு தரமும் அவளுடைய குத்தல் மொழிகளுக்கு வாய்மூடிக் கொள்பவன் இன்று பொங்கிவிட்டான்.

 

“ஆமாம்டி… நான் தப்புப் பண்ணினவன் தான். அதுக்காக ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுட்டேன். இன்னும் எத்தனை முறை வேணும்னாலும் கேக்கறேன். இல்ல தண்டனை தான் இந்தப் பிரச்சணைக்கு முடிவுன்னா என்ன தண்டனை வேணும்னாலும் கொடு ஏத்துக்கறேன். ஆனா இதையே காரணமா வச்சுக்கிட்டு நீ என்னை மட்டம் தட்டணும்னு நெனச்சின்னா அது நடக்காது. நீ பண்றதையெல்லாம் பார்த்துக்கிட்டு அப்படியே அம்மாஞ்சி மாதிரி உட்கார்ந்திருக்க நான் ஒண்ணும் கையாலாகாதவன் இல்லை… கார்முகிலன்… தொலைச்சிடுவேன்…” – மனதின் வலியை கோப வார்த்தைகளாக வெளியிட்டு, சுட்டுவிரல் நீட்டி எச்சரித்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

 

கார்முகிலனின் கோபம் மதுமதியை மிகவும் பாதித்தது. அவனுடைய கடுமையை அவளால் தாங்க முடியவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அழுதுவிடக் கூடாது என்று நினைத்து வெகுவாய் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கையிலிருக்கும் குழந்தை சிணுங்கியபடி கீழே நழுவியது. மகளுக்குப் பசியெடுத்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவள் குழந்தையோடு கீழே வந்தாள். முகிலனைக் காணவில்லை.

 

‘சண்டை போடுறதெல்லாம் போட்டுட்டு வெளியே போயிட்டான். போகட்டுமே… எனக்கென்ன வந்தது…’ – எரிச்சலுடன் நினைத்துக் கொண்டு குழந்தைக்குத் தோசை வார்த்து ஊட்டினாள். வயிறு நிறைந்து குழந்தை விளையாட ஆரம்பித்த நேரம் மதுமதியைக் கைப்பேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தாள். குணா தான்…

 

“குணாண்ணா…”

 

“மது…”

 

“சாரிண்ணா… நீங்க வந்த நேரத்துல இப்படிப் பிரச்சனையாயிடுச்சு… நான் இதை எதிர்பார்க்கவே இல்ல… ரொம்ப சாரிண்ணா”

 

“ப்ச்… அதை விடு. உன் வாழ்க்கைல என்னதாம்மா நடந்துச்சு? எதுக்கு அவர் உன்கிட்ட இவ்வளவு மோசமா நடந்துக்கிறார்?” – ஆதங்கத்துடன் கேட்டான்.

 

இதே கேள்வியை இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து அவன் கேட்டிருந்தால் அவளிடமிருந்து ஒற்றை வார்த்தையைக் கூட வாங்கியிருக்க முடியாது. ஆனால் சற்று நேரத்திற்கு முன், கணவன் காட்டிய கடுமையிலிருந்து வெளியே வர முடியாமல் புழுங்கிக் கொண்டிருந்தவள், குணாவின் அக்கறை கலந்த ஆதங்கத்தில் கொட்டித் தீர்த்துவிட்டாள்.

 

கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக் கொண்டே தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பித்தாள். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் மனதில் ஒரு நெருடல் தோன்றியது. கேட்கலாமா வேண்டாமா என்கிற தயக்கத்துடன் “மது… நான்… வேற மாதிரி கேள்விபட்டேனேம்மா…!” என்றான்.

 

“என்னண்ணா கேள்விபட்டீங்க?”

 

“வந்து… உன் கணவர்… அந்த நீலவேணி…” – முடிக்க முடியாமல் தயங்கினான்.

 

“என்னண்ணா… சொல்லுங்க” – ஊக்கம் கொடுத்தாள்.

 

“மது… உன் கணவருக்கு நீலவேணி கூட இல்லீகல் ரிலேஷன்ஷிப் இருந்ததா கேள்விபட்…” – தயக்கத்தை வென்று அவன் கேட்க நினைத்ததைக் கேட்டு முடிப்பதற்குள் மதுமதி குறுக்கிட்டாள்.

 

“ச்ச… ச்ச… என்னண்ணா நீங்க… யார் உங்ககிட்ட அந்த மாதிரியெல்லாம் சொன்னது?” – படபடத்தாள். அதுவரை கணவன் மீதிருந்த கோபம் இப்போது குணாவின் மீது திரும்பிவிட்டது.

 

மதுமதியின் கோபக்குரலில் ஒரு நொடி அதிர்ந்த குணா, “மது… நான் கேள்விபட்டதைத் தான் சொன்னேன். உண்மை என்னங்கிறதை நீதாம்மா சொல்லணும்” என்றான்.

 

“இல்லண்ணா… நீங்க கேள்விபட்டதுல துளி கூட உண்மை இல்ல. அந்த மாதிரி எண்ணமெல்லாம் அவருக்கு வரவே வராது…” – உறுதியாகக் கூறினாள்.

 

“ம்ம்ம்… ஆனாலும் அவர் செஞ்சதையெல்லாம்…” – இழுத்தான்.

 

“மறக்கவும் முடியாது,மன்னிக்கவும் முடியாதுண்ணா…” – அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.

 

“எனக்குப் புரியல மது… அவர் பண்ணின தப்பையெல்லாம் மறக்கவும் இல்ல, மன்னிக்கவும் இல்ல… ஆனா அதே மனுஷனோட சேர்ந்து வாழ்ந்துட்டு இருக்க! எப்படிம்மா?”

 

“ரொம்பக் கஷ்டப்படறேன்ணா… பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழறது மனச ரொம்ம்ம்ப அழுத்துது… எப்பவுமே பயமாவும் பதட்டமாவுமே இருக்கு. சில சமயம் ஒரேடியா இவர விட்டு பிரிஞ்சு எங்காவது ஓடிடலாமான்னு தோணும். ஆனா அந்த வெறுமையான வாழ்க்கையை நினைக்கவே முடியலண்ணா… பயமா இருக்கு…” – தலையை உலுக்கிக் கொண்டு நடுக்கத்துடன் கூறியவளின் குரலிலேயே ஒரு வித பயம் தெரிந்தது.

 

“இவர் முகத்தைப் பார்க்காம… குரல கேட்காம… இவரோட சிரிப்பையும் கோபத்தையும் அனுபவிக்காம… என்னால வாழவே முடியலையேண்ணா… செத்துப் போய்ட்ட மாதிரி… வெறுமையா… என்னால யாழி குட்டியைக் கூடப் பார்க்க முடியலையேண்ணா…” – துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.

 

“மது…!”

 

“ஆமாண்ணா… நான் அவரை வெறித்தனமா நேசிக்கிறேன்… பைத்தியக்காரி மாதிரி லவ் பண்றேன்… கண்மூடித்தனமா காதலிக்கிறேன். அந்தக் காதல் தான் என்னை அவரோட பிணச்சு வச்சிருக்கு… ஆனாலும் நான் அவரை நம்பல… நம்ப முடியல…” – அடக்க முடியாமல் குமுறி அழுதாள்.

 

மதுமதி காதலின் ஆழத்தில் குணா பிரம்மித்தான். ‘கார்முகிலன் இந்தக் காதலுக்குத் தகுதியான ஆள்தானா…! தகுதியில்லாத இடத்தில் வைத்த காதலைவிடக் கொடிய விஷம் வேறேதும் இருக்க முடியுமா! இந்த அப்பாவிப் பெண்ணுக்கும் இந்தக் காதல் விஷம் தானோ…!’

 

“மது…” – மெல்ல அழைத்தான்.

 

“சொல்லுங்கண்ணா…” – அழுதழுது ஓய்ந்தவள் சோர்வாகக் கேட்டாள்.

 

“இந்தப் போராட்டம் எத்தனை நாளைக்கும்மா?”

 

“தெரியல… ஒருவேள என்னோட கடைசி மூச்சு வரைக்கும் தொடருமோ என்னவோ…”

 

“தப்பு மது… இப்படியெல்லாம் விரக்தியா பேசக்கூடாது. வாழ்க்கையில கஷ்டமும், சந்தோஷமும் வரும் போகும். எல்லாத்தையும் ஒரே மாதிரி பார்க்கற பக்குவத்தை வளர்த்துக்கணும். இப்படி மனசொடஞ்சு போய்டக் கூடாது. இதுலேருந்து வெளிய வரணும்மா. முயற்சி பண்ணு”

 

“விடுங்கண்ணா…. இதான் என் விதி… இப்படியே வாழ்ந்துட்டுப் போக வேண்டியது தான்…” – மதுமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்முகிலன் உள்ளே நுழைந்தான்.

 

கணவனை நிமிர்ந்து பார்த்தவள் “சரிண்ணா… நான் இன்னொரு நாள் பேசுறேன்” என்று கூறிவிட்டு கைப்பேசியை அணைத்தாள்.

 

அவள் கடைசியாகக் கூறிய வார்த்தைகளும்… அழுததால் வீங்கியிருந்த முகமும் சிவந்திருந்த கண்களும் அவள் யாருடன் எதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள் என்பதை அவனுக்கு ஓரளவு புரியவைத்தது. மனதில் ஏறிக்கொண்ட பாரத்துடன் மாடிப்படிகளில் ஏறினான்.

 




Comments are closed here.

You cannot copy content of this page