விடிவெள்ளி – 25
2871
0
அத்தியாயம் – 25
“ஜீவன் எழுந்துட்டான் போலருக்கு… காபி வேனுமான்னுக் கேட்டுக் கொண்டு போய் கொடு…” சிவகாமி சமையலறையில் வேலையாக இருந்த மருமகளிடம் சொன்னாள்.
நேற்று மாலை போதையுடன் வந்து படுத்தவன் மறுநாள் காலைதான் எழுந்தான். இரவு மகன் உணவருந்தவில்லையே என்கிறக் கவலை சிவகாமிக்கு. அவளுடைய அந்த பாசம் பவித்ராவை எரிச்சல் படுத்தியது. ‘இப்படி தலைமேல தூக்கி வச்சு தாங்கித் தாங்கியே அவனைக் குட்டிச்சுவராக்கிட்டிங்க…’ என்று நினைத்தபடி “காபிக் குடிச்சுட்டு ஆபீஸ்க்கா போகப் போறாரு… வெட்டி ஆபீசர்தானே… மெதுவாக் கொடுக்கலாம்… என்ன அவசரம்…?” என்றாள் அலட்சியமாக.
மருமகளின் ஏளனமான பேச்சில் மாமியாருக்கு ரோஷம் வந்தது. தன் முன்னாலேயே தன்னுடைய மகனை மட்டமாக பேசுகிறாளே என்கிறக் கோபம். ஆனால் நேருக்கு நேர் சண்டைப் போடப் பிடிக்காமல் தானே காபியை தயார் செய்ய துவங்கினாள். சிவகாமியின் அமைதி பவித்ராவை சங்கடப்படுத்தியது.
‘அவன் செய்யும் தப்பிற்கு இவர்களிடம் பாய்ந்து என்ன பயன்…’ என்று வருந்தியவள் “நீங்க நகருங்க… நானே கொண்டுப் போறேன்… உங்களுக்கும் ஒரு கப் கொடுக்கவா…?” என்று சமாதானமாக பேசி மாமியாரை கூல் செய்துவிட்டு கணவனுக்கு காபியை கொண்டு சென்றாள்.
கட்டிலில் தலையை கைகளால் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தவனிடம் “இந்தாங்க…” என்று காபியை நீட்டினாள்.
நிமிர்ந்து பார்த்தவன் கப்பை கையில் வாங்காமல் “வேண்டாம் கொண்டு போ…” என்றான் கடுப்பாக.
‘தவறை நீ செய்துவிட்டு கோபத்தை என்னிடம் காட்டுகிறாயா…’ என்று எரிச்சல் பட்டவள் “உங்களுக்கு காபியெல்லாம் குடிக்கப் பிடிக்குமா… பியர், பிராந்தி, ஓயின்னாப் பிடிக்கும்…” என்றாள் குத்தலாக.
அவளுடைய குத்தலுக்கு அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. மாறாக “நீ என்ன படிச்சிருக்க…?” என்று சம்மந்தம் இல்லாமல் ஒரு கேள்வியை கேட்டான்.
கொஞ்சம் குழம்பினாலும் “பிளஸ் டூ” என்று தயக்கம் இல்லாமல் பதில் சொன்னாள்.
அவன் அவளுடைய முகத்தை கவனமாகப் பார்த்தான். அவளிடம் பயமோ குற்ற உணர்வோ துளியும் இல்லை. அவன் ஏமாற்றப்பட்டிருப்பது அவளுக்கு தெரியவில்லை என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. ஆனாலும் அவள் மீது உண்டகும் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
வெறுப்புடன் அவளை பார்த்து “நீ படிச்ச மெத்தப் படிப்பு என்னன்னு உன் மாமியாருக்கு தெரியுமா…?” என்றான்.
அவனுடைய குத்தல் பேச்சு அவளுடைய கோபத்திற்கு தூபம் போட்டது. “அதெல்லாம் துருவித்துருவி விசாரிச்சவங்க… உங்களோட மேதாவித் தனத்தையும் ஊதாரித் தனத்தையும் தான் என்கிட்ட சொல்லாம விட்டுட்டாங்க…” என்றாள்.
“நான் பயங்கர கடுப்புல இருக்கேன்… வாங்கிகட்டிக்காம போயிரு…” என்று எச்சரித்தான்.
பவித்ரா அவனுடைய எச்சரிக்கையை கருத்தில் கொள்ளும் நிலையில் இல்லை. நேற்றிலிருந்து அவளுடைய மனநிலையும் கலங்கிப் போய்தான் இருந்தது. இப்போதுப் பொறுமை என்பது சிறிதும் இல்லை அவளிடம்.
“ஆஹா… கோபம்… கடுப்பெல்லாம் உங்களுக்குத் தான் முதல்ல வரணும்… ரொம்ப வேலை பாரு… அந்த டென்ஷன்…” என்றாள் நக்கலாக.
உண்மையை சொன்னாள் உடம்பெல்லாம் எரியும் என்பது உண்மைதான் போலும்… பவித்ரா குத்திக் காட்டியதும் வந்ததே அவனுக்கு வெறி…
“என்னடி சொன்ன…?” என்றபடி விருட்டென்று கட்டிலிலிருந்து எழுந்து தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவள் செவிப்பறையை கிழித்தான். அவள் கையில் வைத்திருந்த காபி கப் ஒரு பக்கம் சிதற அவள் இன்னொரு பக்கம் தரையில் சுருண்டு விழுந்தாள்.
“அனாதை நாயே…! கல்யாணம் பண்ணிக் கொடுத்ததோடு தலை முழுகிட்டு போய்ட்டான் உன் அண்ணன். அடிச்சா ஏன்னு கேக்க ஆளு இல்லாத பரதேசி… நீ என்ன வெட்டிப் பயல்ன்னு சொல்றியா…?” என்று தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று தரையில் கிடப்பவளிடம் சீறினான்.
சிவந்த விழிகளும் முரட்டு உருவமுமாக தன் எதிரில் நின்று கொந்தளிப்பவனைக் கண்டு அவள் அஞ்சவில்லை. தண்ணீர் தலைக்கு மேல் போயாச்சு… இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன… என்கிற மனநிலைக்கு வந்துவிட்டவள் எழுந்து,
“பெண்ணை கை நீட்டி அடிக்கிற நீங்கல்லாம் ஒரு ஆணா…! வெக்கமா இல்ல… உத்தியோகம் புருஷ லட்சனம்ன்னு சொல்வாங்க. குடிக்கறதையும் ஊர் வம்பை இழுக்கரதையும் தவிர உங்கிட்ட என்ன லட்சணம் இருக்கு சொல்லுங்க பார்ப்போம்…” என்றாள் திமிராக.
அவளுடைய பேச்சு அவனை மூர்க்கனாக்கியது. வெறிப்பிடித்தவன் போல் கண்டபடி பேசியதோடு இன்னும் பலமாக அவளை அறைந்தான். உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது. அப்போதும் அவனுடைய வெறி அடங்கவில்லை. அவளுடைய முடியை கொத்தாக பிடித்துவிட்டான்.
சத்தம் கேட்டு ஓடிவந்த பாட்டியும் சிவகாமியும் அவனுடைய ஆவேசத்தை கண்டு அதிர்ந்தார்கள். “ஐயோ… விடுடா அந்த பொண்ண… பாவி… இப்படி நடந்துக்கறியே… விட்டுத்தொலடா…” என்று பாட்டி சத்தம் போட்டபடி பவித்ராவை விடுவிக்க முயல, சிவகாமியும் “டேய்… விடுடா அவள… என்னடா ஆச்சு உனக்கு…?” என்று மருமகளை மகனின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றாள். அவர்களுடைய முறச்சி எதுவும் பலனளிக்கவில்லை. அவன் அவளை வேகமாக கீழேத் தள்ளினான்.
இருந்தும் அவனுடைய ஆவேசம் அடங்கவில்லை. கீழே கிடந்தவளின் கையை பிடித்து முரட்டுத் தனமாகத் தூக்கினான். எழுந்து நிற்க முடியாமல் துவண்டு கீழே சரிந்தவளை விடாமல் அவள் புஜங்களை பிடித்து தூக்கி நிறுத்தி… “எனக்கு என்னடி குறைச்சல்…? சொல்லுடி… சொல்லு…” என்று உலுக்கினான். அவனுடைய கண்மூடித்தனமான நடத்தைக்கு காரணம் பவித்ரா பேசிய வார்த்தைகள் மட்டும் அல்ல… அவனுக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையும் தான்.
“அய்யய்யோ… விட்டுடுடா… கொலைகாரப் பாவி… விடு… விடுன்னு சொல்றேன்ல்ல…” என்று பாட்டி பேரனை முதுகில் தன் பலம் கொண்டமட்டும் அடித்தார்கள். அதெல்லாம் அவனுக்கு தூசியை தட்டியது போல்தான் இருந்திருக்கும்.
“ஜீவா… உன்னை கெஞ்சி கேக்குறேண்டா… விட்டுடு… எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்…” என்று சொன்னபடி சிவகாமி பவித்ராவை அவனிடமிருந்து பிடித்து இழுத்தாள். ஒரு வழியாக இரண்டு பெண்களும் அவன் பிடியிலிருந்து பவித்ராவை பிடுங்கிய பொழுது அவள் மயங்கி சரிந்தாள். ஆனால் முற்றிலும் நினைவிழந்துவிடவில்லை.
“உனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தப்புடா… உன்னையெல்லாம் தண்ணி தெளிச்சு விட்டுருக்கனும். திருந்திடுவேன்னு நெனச்சு இழுத்து பிடிச்சதுக்கு ஒரு அப்பாவி பொண்ண கொலையே பண்ணியிருப்பியே… நீயெல்லாம் உருப்படவே மாட்டாடா…” என்று சபித்த பாட்டியின் உடல் உணர்ச்சியின் வேகத்தில் நடுங்கியது. சிவகாமிக்கும் அதே நிலைதான்.
“கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணினவன் எல்லாம் குடும்பம் குட்டின்னு வாழாமலா இருக்கான்… நீ எதுக்குடா இந்த அநியாயம் பண்ற…?” என்று சீரிய சிவகாமி மருமகளை படுக்கையில் படுக்க வைத்தாள். அரைமயக்கத்தில் இருந்த பவித்ராவின் செவிகளில் அவளுடைய பேச்சு அமிலமாய் பாய்ந்தது.
“இங்க பாரு… நீ பேசாத… நான் லவ் பண்ணின பொண்ண உன் சின்ன மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதோட இல்லாம… இந்த பிசாச என் தலையில கட்டின பொம்பளதானே நீ…? BE படிச்சிருக்கான்னு சொன்ன…? எங்க இப்போ சொல்லு பார்ப்போம்… துரோகி… துரோகி… என் வாழ்க்கையை நாசம் பண்ணின துரோகி நீ…” என்று பெற்ற தாயிடம் சிறிதும் மரியாதை இல்லாமல் காட்டான் போல பேசியவன் பாட்டியிடமும் அதையே தொடர்ந்தான்.
“ஏய் கெழவி… எனக்கே சாபம் குடுக்குறியா…? உன் மகளுக்கு நீதானே குரு…! ரெண்டு பெரும் சேர்ந்துதான் என்ன உருப்பட விடாம பண்ணிட்டிங்களே… இன்னமும் திருப்தியாகலையா…? இனி நீ இந்த வீட்டுல இருக்கக் கூடாது… மரியாதையா உன் மகன் வீட்டுக்கு ஓடிடு… இல்ல… அடுத்த பலி நீதான்…” என்று சொல்லிவிட்டு வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.
Comments are closed here.