Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 14

அத்தியாயம் – 14

விசிலடித்தபடியே படிகளில் ஏறிய  எழிலன், தன் பின்னால் உஷா வருகிறாளா இல்லையா என்றுகூட பார்க்கவில்லை… அத்தனை நம்பிக்கை. ஏன்! ஏன் அப்படி!உஷாவின் அறிமுகம், அவனுக்கே ஒரு இனம் புரியாத கிறக்கமாக இருந்தது.

 

அது ஒரு ப்ளாட் சிஸ்டம். எப்படியும் இருபது இருபத்தைந்து ப்ளாட்டுகளுக்கு மேல் இருக்கும். ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்… இருபது நொடிகள் கழித்து…

 

ப்ளக்… தாழ்ப்பாளை விலக்கி ஒரு பெண் எட்டிப்பார்த்தாள்.

 

“எஸ்”

 

“ஷர்மி…

 

“ஷர்மியா… நீங்க!”

 

“அவங்க இருக்காங்களா”

 

எழிலனின் பின்னால் நின்றிருந்த உஷாவைப் பார்த்தவள்…. “உள்… உள்ள… வாங்க” என்றாள்.

 

உஷாவிற்கு நிம்மதியாய் இருந்தது. சே, எழிலனை தப்பாய் நினைத்தோமே! இந்த அப்பா… லாயர்னுதான் பேரு! சுத்த பயந்தாங்கொள்ளி! பாரு எவ்ளோ அழகான ஒரு பொண்ணு. ஷர்மி அத்தைப் பொண்ணா இருப்பாளோ… எதுக்கும்  எழிலனை இனிமே இங்க வரவிடக் கூடாது… அஞ்சு நொடியில் அத்தனை யோசனை உஷாவுக்கு…

 

உள்ளே நுழைந்ததும், ஒரு சோபாவைக் காட்டி உக்காரச் சொன்னாள். “இருங்க.. ஷர்மி அவ பிரண்ட் கூட மாடில பேசிட்ருக்கா! கூப்பிடறேன்” என்றவள்

 

“ஷர்மி… ஷர்மி… உன்னைத் தேடி யாரோ வந்துருக்காங்க” என்றதும் ஒரு பெண் இறங்கி வந்தாள்…

 

அவளைப் பார்த்து உஷா அதிர்ந்தாள்! என்னதிது! யார் இவள்! இது ஷர்மி இல்லையே!

எதோ சொல்ல வாயெடுத்தவளின் வாயை மிகச்சரியாக  ஒரு டேப் ஒட்டியது. அதே வினாடி அவள் கை கால்களை இருவர் திமிர முடியாமல் பிடித்துக்கொண்டனர்.

உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்த உஷா எழிலனைப் பார்த்தாள்.  முகத்தில் ஒரு சோகம் தெரிந்தாலும், கைகளை கட்டியபடி ஸ்டைலாக சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.

 

உஷாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் கை, கால்களை பிடித்திருந்தவர்களும் பெண்கள்தான்.

 

ஆஹா! என்ன ஒரு நாடகம். எத்தனை திறமையான நடிப்பு. மிக மிக கச்சிதமாக திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கிறோம்.

எழிலனின் வார்த்தைகள் நினைவில் வந்து மோதின…

 

‘காரியத்த கெடுத்தீங்க…நீங்களும் ஷர்மிக்கு போன் பண்ணாதீங்க. அவங்க போன் பண்ணாலும் எடுத்துராதீங்க…’

 

‘என்னங்க நீங்க! உங்க பிரண்ட் ஷர்மியோட லவ்வர் ஆனந்தை உங்களுக்குத் தெரியும் போது… என் பிரண்ட் ஆனந்தோட லவ்வர் ஷர்மிய எனக்குத் தெரியாதா…’

 

‘இதுக்காகவே உங்களை ஒருதரம் கடத்திக் காமிக்கறேன் பாருங்க…’

 

‘அட டிக்‌ஷ்னரில பாருங்க எழிலன்னா, யோக்கியன்னு போட்ருக்கும்’

 

முட்டிக்கொண்டு வந்தது அழுகை… ஆஹா என்ன ஒரு கச்சிதமான, திட்டம்.

 

சே… எவ்வளவு நல்லவன் என நினைத்தோமே! எப்படியெல்லாம் இனிக்க இனிக்க பேசினான்… எல்லாம் நாடகம்… நாடகம்! ஒரு வேளை இதுதான் நாடகமா இருக்குமோ?

‘என்னங்க பயந்துட்டீங்களா? சும்மா ஒரு த்ரில்லுக்கு விளையாடினோம்’ என சொல்வானோ…

 

இத்தனைப் பெண்கள் யார்? எதற்காக?

 

அய்யோ! அப்பா சொன்னாரே! கேக்கலையே! உஷாவிற்கு அழுகை அழுகையாக வந்தது! இதற்குத்தான் பெரியவர்கள் சொல்வதைக் கேக்கனும்ங்கறது….

 

என்ன செய்வார்கள்! பலாத்காரமா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே! அட அறிவு கெட்ட முண்டம். இன்னும் உன் புத்தி மாறலையா? அய்யய்யோ! அம்மாவிற்கு தெரிந்தால் அந்த ஷணமே, உயிரை விட்டுடுவாளே! ஏற்கனவே ஹார்ட் வீக் வேற! நாலுமாசத்துக்கு முன்னாடிதான் இரண்டாவது மைல்ட் அட்டாக் வந்தது. அய்யோ அம்மா நானே உன்ன கொன்னுட்டேனே! காலையில் அம்மா சொன்னாளே, ‘வர வர நீ என் சொல்பேச்ச கேக்கவே மாட்டேங்கற’

அட! ஆமாம்மா! ஆமா!

 

உஷாவிற்கு கத்தவும் முடியவில்லை. கை கால்கள் எரிந்தது. இயலாமையைவிட எழிலனின் ஏமாற்றம் தாங்க முடியாமல் போனது! அடப்பாவி!  இப்போது கூட கதவை திறந்த பெண்ணைப் பார்த்ததும் இவனை இங்கே வரவிடக் கூடாது என்னும் அளவிற்கு உன்னிடம் உரிமை வந்தததே…, நினைக்க நினைக்க உஷாவின் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் வழிந்தது.

 

அதைப் பார்த்ததும், கைகளைப் பிடித்திருந்தவள்  பின்னால் பார்த்தாள்…

 

பின்னால் நின்றிருந்தவன் சொன்னான்…

“எழில்! (அப்போ உண்மையான பேரே எழிலன்தானா! ஏமாத்தறவன் எதுக்கு உண்மை பெயரைச் சொன்னான்!) உஷாவை நாங்கப் பாத்துக்கறோம். நீ அடுத்து லாயரைக் கவனி. மணியாய்ட்டே போகுது. அந்தாளு கோர்டுக்கு கிளம்பற நேரம். பையில் வச்சுருக்கல்ல! பத்திரம்”

 

உஷாவிற்கு தலை சுற்றியது. என்ன சொல்கிறார்கள் இவர்கள். லாயரென்றால்…  அப்பாவா! அய்யோ அப்பாவையா! டேய் பாவண்டா! அவர் சாதுடா! நினைக்க நினைக்கவே மயங்கினாள் உஷா.




Comments are closed here.

You cannot copy content of this page