உனக்குள் நான்-26
3218
1
அத்தியாயம் – 26
வீரராகவன் படுக்கவைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரெட்சரை வெள்ளை சீருடை அணிந்த மருத்துவமனை ஊழியர்கள் அவசரசிகிச்சைப் பிரிவிற்கு உள்ளே பரபரப்புடன் தள்ளிக் கொண்டு செல்ல, ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியப் பெண்களும் அவர்களைத் தொடர்ந்து சென்றார்கள்.
தன் ஜீவனே பிரிந்து தூரமாக எங்கோ செல்வது போல் உணர்ந்த கௌசல்யா வலுவிழந்து… கால்கள் தொய்ந்து… அங்கே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் சரிந்தமர்ந்து குலுங்கி அழுதாள்.
பாதியிலேயே தூக்கம் கலைந்த எரிச்சலில் நைநை என்று அழுது கொண்டிருக்கும் குழந்தையைச் சமாளிக்க முடியாமல் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த மதுமதியின் மனம், துக்கத்தில் துவண்டு போகும் தாயின் துன்பத்தைச் சகிக்கவும் முடியாமல்… சற்றுநேரத்திற்கு முன் உள்ளே கொண்டு செல்லப்பட்ட தந்தையின் நிலை என்னவென்றும் புரியாமல் தவிப்போடு பதட்டத்தின் உச்சியில் இருந்தது.
ஒரு பக்கம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தந்தை… இன்னொரு பக்கம் தவிப்போடு புலம்பிக் கொண்டிருக்கும் தாய், கையில் அழும் குழந்தை… மனத்தைக் கவ்வி தொண்டையை நெறிக்கும் பயம்… மதுமதியின் நிலை மிக மோசமானதாக இருந்தது.
‘இப்போ மாமா மட்டும் இங்கேயிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்…’ – அவன் ஏதோ கடவுள் போலவும், அவன் வந்துவிட்டால் மந்திரம் போட்டது போல் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்பது போலவும் அசட்டுத்தனமான நம்பிக்கையில் அவள் மனம் கணவனைத் தேடியது மட்டுமல்லாமல்… தன்னையறியாமலே அவனை ‘மாமா’ என்றும் அழைத்தது.
அதை உணர்ந்து கொள்ளக் கூட நேரமில்லாமல் கணவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிற உந்துதலில் கைப்பேசியைத் தேடினாள். கார் சாவி மட்டும் தான் கையில் இருந்தது. ‘ச்ச… வீட்டுலேயே விட்டுட்டு வந்துட்டோமே… இப்போ என்ன பண்றது…’ – அவள் எண்ணங்கள் கணவனைத் தேடி ஓடிக் கொண்டிருந்த கணம், வீரராகவனிடம் அட்டென்டராக வேலை பார்க்கும் நாற்பது வயது மதிக்கத்தக்க மேரி அங்கு ஓடிவந்தாள்.
“மேடம்…”
மதுமதி சட்டென்று மேரியைத் திரும்பிப் பார்த்தாள்.
“இப்போ தான் மேடம் கீழ சொன்னாங்க… அதான் ஓடி வந்தேன்… டாக்டர் என்ன மேடம் சொன்னாரு?”
“உள்ள கூட்டிட்டுப் போயிருக்காங்க. இன்னும் ஒண்ணும் தெரியல… நீங்க கீழ போய் என் கணவருக்கும், தர்மா தாத்தாவுக்கும் கால் பண்ணி விபரம் சொல்லிடுங்க”
“நம்பர் மேடம்?”
“சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க”
“சரி மேடம்…” – மதுமதி கூறிய எண்களைக் குறித்துக் கொண்டவள், வேகமாக அங்கிருந்து நகரும் பொழுது “மேரி…” என்கிற மதுமதியின் குரல் அவளைத் தடுக்க, நின்று திரும்பிப் பார்த்தாள்.
“குழந்தையைப் பார்த்துக்கணும். நல்ல பொண்ணுங்களா ரெண்டு பேர வரச் சொல்லுங்க… சீக்கிரம்…”
“சரி மேடம்…” – ஓட்டமும் நடையுமாக மேரி அங்கிருந்து நகர, அவளுடைய கவனம் மீண்டும் தாயிடம் சென்றது.
கௌசல்யாவின் இணைந்த கரங்கள் நடுக்கத்துடன் இறைவனை வணங்கிக் கொண்டிருக்க… இதழ்கள் இடைவிடாமல் மகாலக்ஷ்மியிடம் மாங்கல்ய வரம் கேட்டு முணுமுணுத்துக் கொண்டிருக்க… கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்து கொண்டே இருந்தது. கணவனைப் பற்றிய நம்பிக்கையான வார்த்தை எதுவும் கிடைக்காமல் நீர் மேல் குமிழி போல உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பரிதாபமாக அமர்ந்திருக்கும் தாயைப் பார்க்கும் பொழுது மதுமதியின் வயிற்றைப் பிசைந்தது.
“ம்மா… அழாதீங்கம்மா… அப்பாக்கு ஒண்ணும் ஆகாது… தைரியமா இருங்கம்மா… ப்ளீஸ்…” தன் மனக்கலக்கத்தை மறைத்துக் கொண்டு, தாயின் தோள் தொட்டு அழுத்தி தைரியம் சொன்னாள்.
மகளின் குரலோ, ஸ்பரிசமோ கௌசல்யாவை எட்டவில்லை. கணவனைப் பற்றிய கவலையில் ஆழ்கடலில் மூழ்கிக் கொண்டிருந்த அவள் மனம் இறைவனின் பாதங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டு கதறியது.
‘சாமி… என் புருஷனைக் காப்பாத்திக் கொடுத்துடுப்பா… கடவுளே… முருகா… கைவிட்டுடாதப்பா… காப்பாத்திடு… காப்பாத்திடு… காப்பாத்திடு…’
நொடி பொழுதும் தடைபடாமல் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாலும், தைரியம் என்பது துளியும் இல்லாமல் நடுங்கியபடி அமர்ந்திருக்கும் தாயின் நிலை மதுமதியை மேலும் அச்சுறுத்தியது. அவள் பீதியோடு நின்று கொண்டிருந்த போது, மேரி அனுப்பிய இரண்டு பெண்களும் மதுமதியை நெருங்கி “மேடம்… மேரியக்கா அனுப்பினாங்க…” என்றார்கள்.
தன் தந்தையின் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக வேலை செய்யும் பெண்கள் தான் என்பதால் நம்பி குழந்தையை அவர்களிடம் கொடுத்து “விளையாட்டுக் காட்டி பத்திரமா பார்த்துக்கோங்க… கீழ தூக்கிட்டுப் போக வேண்டாம்… இந்த ஃப்ளோர்லேயே வச்சுக்கோங்க…” என்றாள் அவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் குழந்தையின் மீது அக்கறையாக.
“சரி மேடம்…” அவர்கள் யாழினியுடன் அங்கிருந்து நகர்ந்த நேரம் மீண்டும் மேரி கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் அங்கு வந்தாள்.
“இந்தாங்க மேடம் இத கொஞ்சம் குடிங்க…”
“இல்ல வேண்டாம் மேரி… பெரியப்பா… உங்களுக்கு…” வீரராகவனை மருத்துவமனைக்குக் கொண்டு வர உதவிய ஏகாம்பரத்திடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்மா… அம்மாவுக்குக் குடு…”
“ம்மா… தண்ணி கொஞ்சம் குடிங்கம்மா…” – தலையைக் குறுக்காக ஆட்டி மகளுக்கு மறுப்பு சொன்ன கெளசல்யாவிடம் ஒரு பிடிவாதம் தெரிந்தது. கணவனுக்கு ஆபத்தில்லை என்று தெரியும் வரை அவள் அந்த இடத்திலிருந்து அசையவும் மாட்டாள்… பச்சைத் தண்ணீர் கூடப் பருகவும் மாட்டாள்…
மதுமதி தாயின் பிடிவாதத்துடன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, டாக்டர் புருஷோத்தமன் அங்கு வந்து சேர்ந்தார்.
“அங்…கி…ள்…”
தலையைப் பிடித்துக்கொண்டு குனிந்து அமர்ந்திருந்த கௌசல்யா மகளின் நெகிழ்ந்த குரலில் நிமிர்ந்து பார்த்தாள். புருஷோத்தமனைக் கண்டதும் சட்டென்று எழுந்து, “அவரை உள்ள கூட்டிட்டுப் போயி ரொம்ப நேரம் ஆச்சு… என்னன்னு பாருங்களேன்… அவரை… எப்படியாவது… காப்பாத்திடுங்க…” என்று கெஞ்சுதலாகப் புலம்பியவள் சட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு, “உங்களைக் கெஞ்சிக் கேக்கறேன்… அவரை எப்…படியாவது…” என்று யாசிக்கும் பார்வையுடன் தொண்டைக் கரகரக்க கண்களில் கண்ணீருடன் மேலே பேசமுடியாமல் திணறினாள்.
கௌசல்யாவின் அந்தச் செயலில் சங்கடப்பட்ட புருஷோத்தமன் “டாக்டர்க்கு ஒண்ணும் ஆகாது… கவலைப்படாதீங்க… அமைதியா இருங்க ப்ளீஸ்…” என்றார்.
அவருடைய வார்த்தைகள் அவளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கவில்லை… சொல்ல முடியாத உணர்வலைகள் மனதில் முட்டிமோத ஒருவித தவிப்புடன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள். தாயின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மதுமதியின் கண்கள் கலங்கின.
“நீயே பயந்தா எப்படி மது..? அம்மாவுக்கு நீதானே தைரியம் சொல்லணும்”
ஏற்கனவே பயத்திலிருக்கும் தாயைத் தன்னுடைய கண்ணீர் மேலும் கலவரப்படுத்திவிடக் கூடாது என்கிற பிடிவாதத்தில் வெகுவாய் போராடி தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்ட மதுமதி, “நான் பயப்படமாட்டேன் அங்கிள்… அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது…” என்றாள் மெல்லிய குரலில் ஆனால் உறுதியாக.
அவளுடைய நம்பிக்கை அவருக்குச் சற்று நிம்மதியைக் கொடுக்க, அவள் தோளில் தட்டிக் கொடுத்து “அங்கிள் மேல தான் இருப்பேன்… அவசரம்னா கூப்பிடு…” என்று கூறிவிட்டுத் தனக்காகக் காத்திருக்கும் நோயாளிகளை மேலும் காக்க வைக்க விரும்பாமல், அரைமனதுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
###
மனம் பதற்றத்தின் பிடியில் சிக்கியிருக்க… பாறை போல் இறுகிய முகத்துடன் வேகநடை போட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான் கார்முகிலன். ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் எழுந்து வீரராகவனைப் பற்றிச் சொல்ல வாய்த் திறக்கும் முன் “முகிலா…” என்னும் குரல் அவன் செவியில் பாய, குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தான். கையில் யாழினியைச் சுமந்து கொண்டு தர்மராஜ் அவனை நோக்கி வந்தார்.
“அத்தானுக்கு இப்ப எப்படி சார் இருக்கு? எங்க இருக்காரு?” – பரபரப்புடன் கேட்டுக் கொண்டே அவரை நெருங்கினான்.
“மேல ஐ-சி-யுல தான் இருக்காரு… வா…” – இருவரும் லிஃட்டை நோக்கி நடந்தார்கள்.
“என்ன சார் ஆச்சு? திடீர்னு எப்படி? டாக்டரைப் பார்த்தீங்களா? என்ன சொன்னார்?” – அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தர்மராஜோடு லிஃப்ட்டிற்குள் நுழைந்தவனுக்கு, அவருடைய பதிலைக் கேட்கும் பொறுமை கூட இல்லை. “நான் இன்னும் டாக்டரைப் பார்க்க…ல…டா…” என்று அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போதே, மேல்தளத்தை அடைந்துவிட்ட லிஃப்டிலிருந்து வெளியேறி வேகமாக நடந்து அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் சென்றான்.
தூரத்தில் சோர்ந்த முகத்துடன் ஓய்ந்து போய் அமர்ந்திருக்கும் தமக்கையைப் பார்க்கும் பொழுது யாரோ அவன் இதயத்தை ஊசி கொண்டு துளைப்பது போல் வலித்தது. ‘இத்தனை வருஷம் கழிச்சு இப்பத்தான் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சாங்க… அதுக்குள்ள… ச்ச…’ – ஒரு நொடி தயக்கத்துடன் நின்றவனின் கை முஷ்டி இறுகி உடல் விறைத்தது.
அதற்குள் அவனை நெருங்கிவிட்ட தர்மராஜ் “என்னடா..?” என்றார் குழப்பத்துடன். தலையை உலுக்கிக்கொண்டு முன்பைவிட இன்னும் வேகமாக அக்காவை நோக்கிச் சென்றான்.
பெற்றோரின் உயிர் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களைத் தாங்கமுடியாமல்… போர்களத்தில் சிக்கிக் கொண்ட சிறுமி போல் தனிமையில் தவித்துக் கொண்டிருந்த மதுமதிக்கு, கணவனைக் கண்டதும் மனதில் ஓர் இதம் பரவியது. அதுவரை அவளுக்குள் அடங்கிக்கிடந்த உணர்வுகளெல்லாம் சலுகையோடு கட்டவிழ்த்துக் கொள்ள, அவள் கண்களில் குளம் கட்டிய கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
கார்முகிலனோ ஆதரவு தேடி தன் முகம் பார்த்து ஏங்கி நிற்கும் மனைவியைக் கவனிக்காமல் தெம்பிழந்து… சோர்ந்து அமர்ந்திருக்கும் அக்காவை தேற்றும் நோக்கில் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து ஆதரவாக அவளின் கையைப் பற்றினான்.
யார் வருகிறார்கள் போகிறார்கள் என்கிற சிந்தனையில்லாமல் கணவனின் நினைவுகளோடு உழன்று கொண்டிருந்த கௌசல்யா, தம்பியின் ஸ்பரிசத்தை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்து பார்த்த நொடி “அக்கா…” என்றான் பாசம் நிறைந்த குரலில்.
“முகிலா… வந்துட்டியாடா… அத்தானுக்கு நெஞ்சுவலிடா தம்பி… உள்ள கொண்டு போனவங்க யாருமே இன்னும் வெளியே வரவே இல்லையேடா… பயமா இருக்குடா முகிலா…” – தம்பியைக் கண்டதும் கௌசல்யாவின் கண்ணீர் அதிகமானது.
“ஒண்ணும் ஆகாதுக்கா… எதுக்கு அழற? கண்ண தொடச்சுக்கோ முதல்ல…” – தமக்கையின் கண்களைத் துடைத்துவிட்டான்.
“அவர் பாவம்டா முகிலா… அப்பாவி மனுஷன்… பாடாய்ப்படுத்தி எடுத்துட்டேன்… முகத்தக் கூடப் பார்க்காம… வருஷக்கணக்குல பேசாம… தனிமைபடுத்தித் துடிக்க வச்சுட்டேன்டா முகிலா… பெரிய பாவம் பண்ணிட்டேன்” – உணர்ச்சிவசப்பட்டுத் தலையில் அடித்துக் கொண்டாள்.
“அம்மா… அம்மா…” என்று மதுமதி பதற “அக்கா… என்னக்கா… நீ! எதுக்கு இப்படிப் பயந்து சாவுற?” என்கிற அதட்டலுடன் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.
“அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதுடா முகிலா… வாழ்க்கையில ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு… அவரு இல்லாம என்னால… முடியாது… முகிலா… என்னால நினைக்கவே முடியலடா… அத்தானை எப்படியாவது காப்பாத்த சொல்லுடா தம்பி…” – அவன் சட்டை காலரைப் பிடித்துக் கொண்டு அழுது மாய்ந்தாள்.
காதல் ஒரு பக்கம் இருக்கிறது என்றாலும்… கணவனை அளவுக்கு அதிகமாகத் தண்டித்துவிட்ட குற்ற உணர்ச்சி தான் அக்காவின் இந்தப் பரிதவிப்பிற்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்ட கார்முகிலனின் மனம் வேதனையில் சுருண்டது. அவர்களுடைய வாழ்க்கை பல ஆண்டுகாலம் கருகிப் போனதற்கு முக்கியக் காரணம் தான் தான் என்கிற குற்ற உணர்ச்சி அவன் மனதை அறுத்தது.
உடன் பிறந்தவளுக்குத் தைரியம் சொல்ல கூட மனவலுவின்றி… உள்ளம் வரண்டு வார்த்தைகளுக்குப் பஞ்சமாகி அவன் மௌனித்து விட்ட நேரம் ஐசியுவிலிருந்து மருத்துவர் வெளிப்பட்டார்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Krishna Kumari says:
Nice story