Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-27

அத்தியாயம் – 27

மருத்துவர் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறிய நொடி அனைவருடைய பார்வையும் ‘என்ன சொல்லப் போகிறாரோ…’ என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்புடன் அவர் மீது படிந்தது. பதட்டத்துடன் எழுந்து நின்ற அக்காவின் முகத்தை, நிமிர்ந்து பார்க்கும் துணிவின்றி வேகமாக மருத்துவரிடம் நெருங்கினான் கார்முகிலன்.

“என்னாச்சு டாக்டர்? அத்தானுக்கு இப்போ…” இறுக்கமான குரலில் அவன் கேள்வியை முடிப்பதற்குள் “உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல…” என்றார் மருத்துவர்.

“அப்ப்ப்ப்பா… சா…மி…!!!” – வாய்விட்டுச் சத்தமாகக் கடவுளை நன்றியோடு அழைத்த கௌசல்யா ஊசலாடிக் கொண்டிருந்த தன் உயிரை மீட்டெடுத்து விட்ட பெரிய ஆசுவாசத்துடன் சேரில் அமர்ந்தாள். அங்கிருந்த அனைவருமே ஒரு நிமிடம் அவகாசம் எடுத்து அந்த நிம்மதியைச் சுவாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, “மைல்ட் அட்டாக் தான். ஆனா சரியான நேரத்துல முதற்கட்ட ட்ரீட்மென்ட் கொடுத்துட்டதுனால ஆபத்து இல்ல…” என்றார் மருத்துவர்.

‘மைல்ட் அட்டாக்…’ என்றதும் மீண்டும் பதற்றத்துடன் நிமிர்ந்து அமர்ந்த தாயின் தோளில் கை வைத்து “அதான் பயப்பட ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களேம்மா…” என்றாள் மதுமதி.

“அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆஞ்சியோ பண்ண முயற்சி செய்வோம்…”

“ஓகே டாக்டர்… இப்போ அத்தானைப் பார்க்கலாமா?”

“பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாம யாராவது ஒருத்தர் மட்டும் போய்ப் பார்த்துட்டு வாங்க…”

“தேங்க் யு டாக்டர்…” – கார்முகிலன் மனதார நன்றி கூற, அவர் மெல்லிய புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

###

கௌசல்யா ஐசியு-வின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும் பொழுது ஈஸிஜியும், ஆக்சிஜனும் பொருத்தப்பட்டுக் கண்மூடி கட்டிலில் படுத்திருந்தார் வீரராகவன். மருத்துவ உபகரணங்களை நீக்கிவிட்டால் அந்தக் கட்டான தேகம் கொண்ட மனிதருக்கு மாரடைப்பு என்று சத்தியம் செய்து சொன்னால் கூட யாராலும் நம்ப முடியாது.

உடல் முழுக்கப் பரவியிருக்கும் வயர்களோடு, நோயாளிகளுக்கான உடையணிந்து உறக்கத்திலிருக்கும் கணவனைக் கண்டதும் கௌசல்யாவின் மனதைப் பிசைந்தது. சத்தமில்லாமல் கட்டிலை நெருங்கி மெல்ல அவர் கரத்தைத் தொட்டுப் பார்த்தாள். அன்று காலை குளிக்க செல்வதற்கு முன் வெட்டப்பட்ட சுத்தமான நகங்களும், அழகான நீண்ட விரல்களும் அவள் உயிரைத் தீண்ட கணவனின் கரத்தை எடுத்துத் தன் கண்களில் பதித்துக் கொண்டு கண்ணீர்விட்டாள்.

‘மன்னிச்சிடுங்க… மன்னிச்சிடுங்க…’ என்று அவள் உள்ளம் அழுதது. அவரிடம் அசைவே இல்லை.

“மேடம்…” அவசர சிகிச்சைப் பிரிவில் வேலை செய்யும் செவிலிய பெண் நேரமாகிவிட்டது என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கௌசல்யா “கண் விழிக்கவே இல்லையே..!’ என்றாள் சந்தேகத்துடன்.

“தூங்கறாங்க மேடம்… மூணு மணிநேரத்துல முழிச்சிடுவாங்க…”

‘இன்னும் கொஞ்ச நேரம் இருக்க விடேன்…’ – கௌசல்யாவின் பார்வை கெஞ்சியது.

“டாக்டர் வர்ற நேரம் ஆயிடுச்சு மேடம்…” என்று நர்ஸ் வாய்விட்டே கெஞ்சியதால், வேறு வழியில்லாமல் கணவனைப் பார்வையால் வருடிவிட்டு… மனமே இல்லாமல் அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“அப்பாவ பார்த்தீங்களாம்மா..? எப்படி இருக்காங்க? உங்களைப் பார்த்தாங்களா?”

‘இல்லை…’ என்று தலையசைத்தவள் “தூங்கறாரும்மா” என்று பதில் கொடுத்தாள்.

“எப்போ எழுந்திரிப்பாராம்?”

“மூணு மணிநேரம் ஆகுமாம்…”

“சரிக்கா… அப்போ நீ வீட்டுக்குப் போயி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு, டிரஸ் மாத்திக்கிட்டு வா…” – கார்முகிலன் கூறினான்.

“இல்ல… இல்ல… முதல்ல அவர் கண் விழிக்கட்டும்…” – கௌசல்யா அவசரமாக மறுத்தாள்.

“அத்தான் எந்திரிக்க இன்னும் மூணு மணிநேரம் இருக்கு. அவர் எழுந்துட்டா நீ பக்கத்துலயே இருக்க வேண்டியிருக்கும். அதனால் இப்போவே போயி டிரஸ் மாத்திக்கிட்டு அத்தானுக்கும் எதாவது வேணும்னா எடுத்துட்டு வந்துடு. அதுவரைக்கும் நானும் மதியும் இங்கேயே இருக்கோம்…” என்று தமக்கையிடம் கூறிவிட்டு, தர்மராஜின் பக்கம் பார்வையைத் திருப்பியவன் “சார்… நீங்க காரை எடுங்க…” என்றான்.

“சரிடா…”

“மாமா… நீங்களும் கெளம்புங்க… இனி ஒண்ணும் பிரச்சனை இருக்காது. நான் பார்த்துக்கறேன்” – ஏகாம்பரத்திடம் கூறினான்.

“சரிப்பா… ஏதாவது உதவி வேணும்னா போன் பண்ணு…”

“கண்டிப்பா மாமா… ரொம்ப தேங்க்ஸ்…”

“இருக்கட்டும்ப்பா…”

கணவனின் முகத்தைப் பார்த்துவிட்ட தெம்பிலும், அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்ற நிம்மதியிலும் ஓரளவு அமைதியடைந்திருந்த கௌசல்யாவின் கவனம், இப்போது பேத்தியின் பக்கம் திரும்பியது.

“யாழிய நான் தூக்கிட்டுப் போறேன்… வீட்ல ராதாவைப் பார்த்துக்கச் சொல்றேன். ஹாப்பிட்டல்ல ரொம்ப நேரம் வச்சிருக்க வேண்டாம்…” – மகளிடமிருந்து பேத்தியையும், அவளுடைய வீட்டு சாவியையும் வாங்கிக்கொண்டு படிக்கட்டில் இறங்கிய கௌசல்யாவை, தர்மராஜும் ஏகாம்பரமும் தொடர்ந்தார்கள்.

இப்போது அந்த வெயிட்டிங் ஹாலில் கார்முகிலனையும் மதுமதியையும் தவிர வேறு யாரும் இல்லை. அவள் பார்வை அவனைத் தேடி, அவன் நிற்கும் திசையை நோக்கி ஓடியது. அவனோ அந்த வராண்டாவின் ஓரத்தில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

தந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்த பின்னும் மதுமதிக்கு அமைதி கிட்டவில்லை. கணவனின் பார்வை தன்பக்கம் திரும்பவே இல்லை என்கிற குறை அவள் மனதைக் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

‘அம்மாவுக்கு அவ்வளவு ஆறுதல் சொன்னவன்… நம்மகிட்ட என்னன்னு கூட கேக்காம இப்படி ஓரமா போயி நிக்கிறானே…! நமக்கு மட்டும் கவலை இல்லையா..? ‘ – மனம் சுணங்கியது.

மனைவி தன்னிடம் இப்படி ஓர் எதிர்பார்ப்பை வைத்திருப்பாள் என்று எண்ணிக்கூடப் பார்த்திராத முகிலன், அக்காவிற்கும் அத்தானுக்கும் தான் எவ்வளவு பெரிய அநீதியை இழைத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியே வராமல் பழைய சம்பவங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

இவருடைய எண்ணங்களும், சிந்தனைகளும் வெவ்வேறு திகைநோக்கி பயணிக்க, நேரம் வேகமாய் கரைந்தது. புறப்பட்ட இரண்டு மணிநேரத்தில் மீண்டும் மருத்துவமனையில் வந்து நின்றாள் கௌசல்யா.

“மது… மாமாவக் கூட்டிட்டு நீ வீட்டுக்குப் போ… யாழிய அங்க ராதாகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்… குழந்த அழுதாலும் அழுவா…”

“நீங்க எப்படிம்மா தனியா இருப்பீங்க..? இவர் இங்கேயே இருக்கட்டும். நான் மட்டும் போயிக்கறேன்… அதான் அப்பாவோட கார் இருக்கே…”

“அதெல்லாம் வேண்டாம் மது… நீ காரை எடுக்க வேண்டாம்… நமக்கே நேரம் சரியில்ல… எதுக்கு வம்பு..? முகிலா நீ மதுவ கூட்டிட்டுப் போயி வீட்டுல விட்டுட்டு வாப்பா…”

“வரும் போது நான் தானேமா டிரைவ் பண்ணினேன்… இப்போ மட்டும் என்ன பயம்… நான் போயிக்குவேன்… நீங்க இங்க தனியா இருக்க வேண்டாம்”

“என்ன தனியா இருக்கறது..? அதான் நான் இருக்கேன்ல. பார்த்துக்க மாட்டேனா? முகிலா… நீயும் கெளம்புடா… அம்மா மது… உன் புருஷன் இங்க வந்து சேர்ற வரைக்கும் உங்க அம்மாவைத் தனியா விட்டுட்டு, நான் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர மாட்டேன். நீ தைரியமா வீடு போயி சேறு…” – தர்மராஜின் அதட்டலான அக்கறையில் மதுமதியின் இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்றியது.

“சரி தாத்தா… நான் வர்றேன்…”

“ம்ம்ம்… ம்ம்ம்…” – என்று தர்மராஜ் தலையாட்டினார்.

“கிளம்புறேம்மா…”

“நைட் நீ வர வேண்டாம். வீட்லயே இருந்துட்டுக் காலையில வந்தா போதும். உனக்குத் துணைக்கு ராதாவை இருக்கச் சொல்லியிருக்கேன். முகிலனை மட்டும் அனுப்பு… பாத்துப் பத்திரமா போகணும்…” – என்று கூறி இளையவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் கௌசல்யா.

###

“இட்லி, சட்னியை எடுத்து ‘ஹாட் பாக்ஸ்’ல பேக் பண்ணிடுங்க ராதாம்மா… அவர் ஹாஸ்பிட்டலுக்குப் போகும் போது கொடுத்தனுப்பிடலாம்”

“சார் இங்கேயே சாப்பிட்டுட்டுத் தானேம்மா கிளம்புவாங்க? அம்மாவுக்கு மட்டும் எடுத்து வச்சா போதும்ல?”

“தர்மா தாத்தாவும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காங்க… ரெண்டு பேருக்கும் எடுத்து வைங்க” என்று சொல்லிவிட்டு மதுமதி ஹாலுக்கு வரும் பொழுது… அவள் மனம் பெரும் பாரத்தைச் சுமந்து கொண்டிருப்பது போல் கனத்தது.

மலை போல் வந்த பிரச்சனை பனி போல் விலகிவிட்டாலும், அவளுடைய மனப்பாரம் குறையவே இல்லை. காரணம்… அவளுக்குள் புதிதாகப் புற்றீசல் போல் கிளம்பி, மனதை அரித்துக் கொண்டிருக்கும் கணவனின் மீதான எதிர்பார்ப்புக்கள் தான்.

இன்று மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து கார்முகிலன் அவள் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சரி அப்போது தான் படபடப்பாக இருந்தான் என்றால் வீரராகவனுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்த பிறகும் அவளைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல், தனியாக காரில் வரும் பொழுதும் சரி… வீட்டிற்கு வந்த பிறகும் சரி… அவளிடம் அதிகப்படியாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஏனோ அவள் மனம் எப்பொழுதும் போல் விட்டேற்றியாக இருக்க முடியாமல் வெகுவாய்ப் புண்பட்டது. வருத்தத்துடன் சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள்.

மாடியிலிருந்து கைப்பேசி ஒலிக்கும் சத்தம் மெலிதாகக் கேட்டது. எழுந்து வேகமாகப் படியேறி படுக்கையறைக்குச் சென்று கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். குணாவின் எண் திரையில் ஒளிர்ந்தது.

“சொல்லுங்கண்ணா…”

“என்னம்மா ரொம்ப நேரமா போன் பண்ணிக்கிட்டே இருக்கேன். நீ எடுக்கவே இல்ல? எங்க போய்ட்ட?”

“அப்பாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போய்டுச்சுண்ணா. ஹாஸ்பிட்டல் போயிட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்”

“உடம்பு சரியில்லையா! என்னம்மா ஆச்சு திடீர்னு!” – உண்மையான பதட்டத்துடன் கேட்டான். அவனுடைய பேச்சில் கவனமாக இருந்த மதுமதி குளியலறையின் கதவு திறக்கப்பட்டதைக் கவனிக்கவில்லை.

“ப்ச்… நல்லாதான்ணா… உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. பலாப்பழம் கூட சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க… ஒரே நிமிஷத்துல ‘சடனா’ நெஞ்சப் புடிச்சுகிட்டுத் திணற ஆரம்பிச்சுட்டாங்க… ரொம்பப் பயந்து போயிட்டேன்ணா. இப்போ நினைச்சாக் கூட… கடவுளே…” – குரல் தழுதழுக்கப் பேசும் மனைவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அச்சுப் பிசகாமல், குளியலறையிலிருந்து வெளியே வந்த கார்முகிலனுக்குக் காதில் விழுந்தது.

அமைதியாக அறையிலிருந்து வெளியேறினான். அவன் மனதில் சின்னதாக ஓர் உறுத்தல்… ‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு ஒரு வார்த்தை நமக்கு போன் பண்ணி சொல்லணும்னு தோணல… ஆனா… வீட்டுக்கு வந்ததும் வராததுமா அந்த குணாவுக்கு போன் பண்ணி புலம்பத் தோணுது. அதுவும் அழுகையில தொண்டை அடைக்கிற அளவுக்கு…’ – உரிமை உணர்வெனும் சிறு தீப்பொறி உள்ளே விழுந்து அவன் மனதைச் சுட்டுக் காயப்படுத்தியது. ஆனால் வலியை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலை. பல்லைக் கடித்துச் சகித்துக் கொண்டான்.

இன்றைய நிலையில் தன் சொந்தப் பிரச்னையை விட அத்தானின் உடல் நிலையும், அக்காவின் மன அமைதியும் தான் முக்கியம் என்று தோன்றியது. முரட்டுப் பிடிவாதத்துடன் தன் உணர்வுகளை மனதின் கீழடுக்கிற்குத் தள்ளிவிட்டுச் சிந்தனையைத் திசைத் திருப்பியவன், தேனிக்குக் கிளம்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தான்.

“சரிண்ணா… நான் அப்புறம் பேசுறேன்… வச்சிடறேன்…” – குணாவிடம் பேசி முடித்துவிட்டு கைப்பேசி இணைப்பைத் துண்டித்தபடி அறையிலிருந்து வெளியேறினாள் மதுமதி.

தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் படியிறங்கிச் செல்லும் மனைவியின் முதுகை வெறித்துப் பார்த்த முகிலன் நீண்ட அனல் மூச்சை வெளியேற்றிவிட்டு மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானான்.




Comments are closed here.

You cannot copy content of this page