Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 26

அத்தியாயம் – 26

பவித்ராவிற்கு மெல்ல நினைவு திரும்பியது. இமைகளை பிரித்து பார்வையால் அந்த அறையை வட்டமடித்தாள். யாரையும் காணவில்லை. நடந்து முடிந்திருந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.  அவளுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. நடந்ததெல்லாம் கனவோ என்று தோன்றுகிறது. ஆனால் வலிக்கும் உடலில் உள்ள காயங்கள் உண்மைக்குச் சாட்சிச் சொல்லி நின்றன. ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டது மட்டும் கனவாக இருக்குமோ என்று எண்ணினாள்.

 

ஆனால் அவளுடைய பகுத்தறியும் புத்தி அவன் அடித்தது உண்மையெனில் அவர்கள் பேசிக் கொண்டது மட்டும் எப்படிக் கனவாக இருக்க முடியும் என்று கேள்விக் கேட்டது. அப்படியென்றால் எல்லாமே நிஜம்தான்… நூற்றுக்கு நூறு உண்மையேதான்… கடவுளே…! ஒட்டு மொத்தக் குடும்பமும் ஒன்றாகச் சேர்ந்து அவளை எப்படி ஏமாற்றிவிட்டது….! அவள் மனம் வலித்தது. பெற்றவர்கள் இருந்திருந்தால் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்திருக்கக் கூடுமா என்று எண்ணி தன்னிரக்கத்தில் விம்மி அழுதாள்.

 

யாரோ அறைக்குள் நுழையும் அரவரம் கேட்டது. கண்களை துடைத்துக் கொண்டு தலையை திருப்பிப் பார்த்தாள். பாட்டிதான் வந்தார்கள். பவித்ராவின் தன்னிரக்கம் கோபமாக உருமாறியது. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“அம்மாடி… பவித்ரா… இப்ப எப்படிம்மா இருக்கு…?” அன்பாக கேட்டார்கள் பாட்டி.

 

அவள் பதில் சொல்லாமல் அந்த முதிய பெண்மணியை கூர்மையாக பார்த்தள்.

 

“என்னம்மா அப்படி பார்க்கற…? இந்தா இந்த ஜீஸை குடி… காலையிலேருந்து வெறும் வயித்தோட இருக்க… எந்திரி…” அவளுக்கு உண்மையெல்லாம் தெரியும் என்பதை அறியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள் பாட்டி. அவர்கள் போடும் வேஷத்தில் உடம்பெல்லாம் தீப் பிடித்தது போல் எரிந்தது அவளுக்கு.

 

“புனிதாவுக்கும் உங்க மூத்த பேரனுக்கும் என்ன சம்பந்தம்…?”

 

“பு… புனிதாவா…! அவளுக்கும் ஜீவனுக்கும் என்ன சம்பந்தம்…! என்… என்ன சொல்ற நீ…?”

 

“உங்க மகளும் பேரனும்தான் எல்லாத்தையும் சொல்லிட்டாங்களே… இனி நான் என்ன சொல்ல வேண்டியிருக்கு… எல்லாருமா சேர்ந்து என் வாழ்க்கையை நாசமாக்கிட்டிங்களே… உங்களுக்கெல்லாம் மனசே இல்லையா…?” என்று ஆத்திரத்தில் பொரிந்தாள்.

 

“அம்மாடி… நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்லம்மா… ஜீவன் எந்த தப்பும் பண்ணல… அவசரப்படாம நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளும்மா…”

 

“தப்பு பண்ணலையா…! வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க பாட்டி… தம்பி மனைவியை நெனச்சுகிட்டுக் கட்டின மனைவியை வெறுத்து ஒதுக்கின உங்க பேரன் எந்த தப்புமே பண்ணலையா…? இத சொல்ல உங்களுக்கு…” ஏதோ சொல்ல வந்தவள் தன்னை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

“நீ சொல்றதும் சரிதான்… என் பேரன் தப்பேப் பண்ணலன்னு சொல்ல முடியாது… ஆனா எல்லா தவறுக்கும் அவனை மட்டும் பொறுப்பாக்க முடியாது. இந்த குடும்பத்துல இருக்க எல்லோரும் இந்த பிரச்னைக்கு ஒவ்வொரு விதத்துல காரணமா இருந்திருக்கோம். ஆனா இந்த விஷயத்துல எந்த தப்புமே பண்ணாம கஷ்ட்டப்படர ஒரே ஆள் நீ தான். அதனால் நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஜீவன் வாழ்க்கைல என்ன நடந்ததுங்கர விபரம் முழுசா உனக்கு தெரிஞ்சிருக்கணும்.” என்று சொல்லி பேரனுடைய கடந்த காலத்தை தனக்கு தெரிந்தவரையில் விளக்கமாக சொன்னார்கள்.

 

அனைத்தையும் கேட்ட பவித்ராவிற்கு தலை கிறுகிறுத்தது. தன்னோடு அன்பாக பேசி… நட்பாக பழகிய புனிதாவா இப்படி…! எப்பவும் கடுகடுவென்று இருக்கும் ஜீவன் இவ்வளவு ஏமாற்றங்களை சந்தித்தவனா…! தெளிவான பெண்மணியாக தோன்றும் அத்தை எவ்வளவு பெரிய விஷயத்தில் தவறாக முடிவெடுத்து இரண்டு மகன்களின் வாழ்க்கையையும் சிக்கலாக்கியிருக்கிரார்கள்…! போதா குறைக்கு அவனுடைய விருப்பங்களுக்கு எதிர்மறையாக இருக்கும் நம்மை அவனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்களே…! இதற்கெல்லாம் என்னதான் முடிவு..?

 

சிவகாமி மகனுக்கு பாசத்தை கொடுத்து கெடுக்கிறாள் என்றால் பிரகாஷ் பணத்தை கொடுத்துக் கெடுக்கிறான். எதையும் தடுக்காமல் பாட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்… எல்லோரும் அவரவர் பங்கிற்கு அவளுடைய வாழ்க்கையில் பெரியப் பெரிய பள்ளங்களை வெட்டி வைத்திருக்கிறார்கள். அந்த பள்ளங்களையெல்லாம் மேடாக்கி மீண்டு வந்துவிடுவோமா… அல்லது அதற்குள்ளேயே விழுந்து சமாதியாகிவிடுவோமா… என்று கலங்கி தவித்தாள்.

 

சோர்வாக இருந்த மனதும்… காலியாக இருந்த வயிறும் அவளை சிந்திக்க அனுமதிக்கவில்லை. சிரமப்பட்டு எழுந்து சென்று முகம் கழுவிவிட்டு வந்தாள். பாட்டி கட்டாயப்படுத்தி அவளை உணவருந்த சொன்னார்கள். அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். கணவனின் மனதில் தனக்கு இடம் இல்லை என்று தெரிந்தும் நம்பிக்கையுடனும் உரிமை உணர்வுடனும் வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு அவனுடைய மனதில் வேறு ஒரு பெண் வாழ்கிறாள் என்பது தெரிந்ததும் தாங்க முடியாத வேதனை நெஞ்சை அழுத்தியது. இனி அந்த வீட்டில் பச்சைத் தண்ணீர் அருந்தினால் கூட அது விஷமாக மாறி அவளை கொன்றுவிடும்.

 

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். ஆனால் எங்கு போவது…? வேறு எங்கு போக முடியும்… அண்ணன் வீட்டிற்குத் தான் போக வேண்டும். அவன் தானே இந்த மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்தான். அப்படியானால் இந்த திருமணத்தில் உள்ள சிக்கல்களுக்கும் அவன்தான் பொறுப்பு… என்று உறுதியாக முடிவு செய்து உடை மாற்றிக் கொண்டு கையில் ஒரு பர்ஸ்சுடன் ஹாலுக்கு வந்தாள்.

 

“நான் என் அண்ணன் வீட்டுக்கு போறேன்…”

 

“அவசரப்படாத பவித்ரா… சிவகாமி வேற வீட்ல இல்ல… இந்த நேரத்துல நீ போகக் கூடாது. அவ வந்ததும் கலந்துப் பேசி ஒரு முடிவு எடுக்கலாம்…”

 

“இல்ல… இனி என்னால இந்த வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ஏதாவது பேசனுன்னா அங்க வாங்க… பேசிக்கலாம்…” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியேறினாள்.

###

அன்று காலை பவித்ராவுடன் பிரச்சனைச் செய்துவிட்டு வீட்டிலிருந்து  வெளியேறிய ஜீவன் இரவுத்தான் மீண்டும் வீடுத் திரும்பினான். வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு அழைப்புமணியை அடித்தான். கதவைத் திறந்த சிவகாமி லேசான போதையில் இருந்த மகனை சினத்துடன் பார்த்தாள். அதைக் கண்டுக்காமல் உள்ளே நுழைந்து  உடை மாற்றி முகம் கழுவிவிட்டு ஹாலுக்கு வந்தான்.

 

வந்ததிலிருந்து பவித்ரா கண்ணில் படாதது மனதில் நெருடியது. காலைக் கொஞ்சம் அதிகமாகவே அவளிடம் கோபத்தைக்  காட்டிவிட்டோம் என்று அவன் மனசாட்சி உறுத்தியது. ஒரு பெண்ணிடம் இவ்வளவுக் கடுமையாக நடந்துக் கொண்டிருக்கக் கூடாது என்று முதல் முறையாகத் தன்னுடையத் தவறை எண்ணி வருந்தினான். தண்ணீர் குடிக்கப் போவது போல் சமயலறையில் எட்டிப் பார்த்தான். அங்கேயும் அவளை காணவில்லை.

 

சாதாரணமாக போவது போல் மாடிக்கு சென்றான். பாட்டியும் சிவகாமியும் கீழே இருந்ததால் மேலே ஒவ்வொரு அறையாக திறந்துப் பார்த்தான். பிறகு மொட்டை மாடிக்கு சென்றான்.

 

‘எங்க போய்ட்டா…? அடிச்சதுல ஹாஸ்ப்பிட்டல் போறதுமாதிரி ஆயிடுச்சோ… அப்படின்னா அம்மா துணைக்குப் போயிருக்கணுமே… தனியா எங்கப் போயிருப்பா… ஒரு வேளை கீழதான் இருக்காளோ…!’

 

அதற்கு மேல் மாடியில் நிலைக்கொள்ள முடியாமல் கீழே வந்தான். ஏன் இவ்வளவு பரபரக்கிறோம் என்று அவனுக்கே புரியவில்லை. அவள் எங்கே..? என்று குறுகுறுக்கும் கேள்வியை மேலும் கட்டுப்படுத்த முடியாமல் “எங்க அவ…?” என்றான் அலட்சியமாக கேட்பது போல் காட்டிக் கொண்டு.

 

சிவகாமியும் பாட்டியும் ஒரே நேரத்தில் அவனை முறைத்தார்கள். அவன் சங்கடத்துடன் வேறு திசையை பார்த்தான். சிறிது நேரம் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லை. வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் “கேட்டா பதில் சொல்ல மாட்டிங்களா…? ” என்றான் குதர்க்கமாக.

 

“அவ அவளோட அண்ணன் வீட்டுக்கு போய்ட்டா… இனி நீ நிம்மதியா இரு…” பாட்டி வெடுக்கென்று சொன்னார்கள்.

 

பாட்டியின் வார்த்தை ஒரு நொடி அவன் உள்ளத்தை சுருக்கென்று தைத்தது. ஆனால் அடுத்த கணமே அவனுடைய பிறவி குணம் வீறுகொண்டு எழுந்தது.

 

“போயிட்டாளா…? திமிர் பிடிச்ச கழுத… போகப் போறான்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நாலு சாத்து சேர்த்து சாத்தியிருப்பேனே…! சரி ஓகே… இனி அவளுக்கு இந்த வீட்டுல இடமில்ல… அவ வந்தாலும் என்ன கேட்க்காம யாரும் அவள உள்ள விடக்கூடாது…” என்று அதிகாரமாக சொல்லிவிட்டு அவனுடைய அறைக்குச் சென்றான்.

 

‘எவ்வளவு திமிர் இருந்தா… நான் ஏதோ கோவத்துல கை நீட்டினதுக்கு அண்ணன்கிட்ட பஞ்சாயத்துக்கு போவா…? வரட்டும்… இங்கத்தானே வந்தாகணும்… கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாதான் வீட்டுக்குள்ள விடனும்…’ என்று வீம்பாக நினைத்தான். என்னதான் அவன் பவித்ராவை அலட்சியமாக நினைத்தாலும், மனதின் ஓரத்தில் ஒரு முணுமுணுப்பு இருக்கத்தான் செய்தது.

###

பவித்ரா அண்ணன் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டன. மாமியார் வீட்டிலிருந்து புறப்படும் பொழுது இங்கு பெரிதாக தனக்கு அன்பும் அரவணைப்பும் கிடைத்துவிடும் என்கிற எதிர்பார்ப்பு அவளிடம் சுத்தமாக இல்லை. ரோஷம் உந்தித்தள்ள ஒரு வேகத்தில் தான் பிறந்தகத்திற்கு வந்தாள். ஆனால் வந்த இடத்தில் கடவுள் புண்ணியமாக வெறுப்பில் வாட வேண்டிய நிலை வாய்க்கவில்லை.

 

பவித்ராவின் திருமணத்திற்கு பிறகு அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வந்து வீட்டு வேலைகளை செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்த பைரவிக்கு நாத்தனாரின் வரவு வரமாக தோன்றியது. கூடுமானவரை அவளை பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்து பவித்ராவை ஆதரித்தாள்.

 

முதலில் பிரச்சனை என்று வந்து நின்ற தங்கையை கடிந்து கொண்ட குணா அவளுக்கு அறிவுரை கூறினான். ஆனால் பைரவி எப்பொழுதும் போல் சாமர்த்தியமாக கணவனின் எண்ணப்போக்கை மாற்றினாள்.

 

“என்ன பேசுறிங்க நீங்க…? அங்க அவ்வளவு கொடுமை நடந்திருக்கு… அந்த குடிகாரன் இவளை இப்படி போட்டு அடிச்சிருக்கான். அவனோடு எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க முடியும். இதுக்கெல்லாம் ஒரு முடிவு தெரியாம பவித்ராவை அங்க அனுப்பக் கூடாது…” என்று அடித்துப் பேசினாள். குணாவும் ஆமாம் சாமி போட்டுவிட்டு போனான்.

 

நடப்பது எல்லாம் பவித்ராவிற்கு புரிந்தது. ஆனால் அந்த வீட்டில் நிரந்தர அகதியாக வாழ்வதைவிட இந்த வீட்டில் தற்காலிக அடிமையாக வாழ்வது மேல் என்று நினைத்து அமைதியாக இருந்தாள். பகலில் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து இரவில் அலுத்துக் களைத்துப் படுத்தால்… எதிர்காலத்தைப் பற்றியப்  பயம் நித்திரையை நெருங்கவிடாமல் விரட்டியடித்தது.

 

அவள் வந்ததிலிருந்து சிவகாமியும் பாட்டியும் போன் செய்து குணாவிடமும் பைரவியிடமும் பேசிச் சமாதானத்திற்கு வழித் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பவித்ராவை நிரந்தரமாக தங்களின் வீட்டு வேலைக்காரியாக மாற்றும் திட்டத்திலோ என்னவோ… பைரவி அவர்களைக் கண்டித்துக் கறாராக பேசினாள். நாத்தனாரிடம் அவர்களை நேரடியாக பேசவிடாமல் தடையாக நின்றாள்.




Comments are closed here.

You cannot copy content of this page