Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 15

அத்தியாயம் – 15

டொக் டொக் டொக்

“ண்ணாஆ….”

டொக் டொக்…

“ண்ணாஆஆஆ…..”

 

நல்ல இலவம் பஞ்சு மெத்தையில் குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்த ஜானின் முகத்தில், கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒரு சிறு சலனம்.

பக்கத்தில் அரைகுறையாக ஆடைகள் நெகிழ்ந்தபடி படுத்திருந்தவளின் பெயர் நேற்று இரவு சரோஜாவாகவோ, ரீட்டாவாகவோ, மும்தாஜாகவோ இருந்திருக்கலாம். உருண்டு கிடந்த காலி கோப்பைகளும், சிந்திக்கிடந்த பூக்களும் ஜானின் நித்தம் நித்தம் அரங்கேறும் சல்லாப வாழ்க்கையை பறைசாற்றியது.

 

டொக்… டொக்

 

“ஏய் ஏய் ஏ…ய்.. எவன்னு பார்றீ…. ”

 

“…. அட.. போய்யா” என்றபடி ஜானைக் காட்டிலும் அலுத்துக் கொண்டாள் ச.ரீ.மு..

 

இடைவிடாமல் கதவு டொக்கிக் கொண்டே  இருந்தது

 

“எவன்டா அவன் வந்தேன் ஒரே சீவு.. கழுத்து கம்மால போய் விழும்… போய்ரு…”

 

“ண்ணா… நீ மொதல்ல கதவ தொற அப்புறம் சீவலாம்….”

 

புலம்பியபடி எழுந்தவன்  சோடாவின் மிச்சத்தை  எடுத்து மூஞ்சியை கழுவியவன், கீழே கிடந்த லுங்கியை எடுத்து, அதாலேயே மூஞ்சியைத் துடைத்தான். பக்கத்தில் மரக்கட்டைப் போல்  படுத்திருந்த ச.ரீ.மு., வைப் பார்த்தவன்,

“எப்படி கட்ட மாதிரி தூங்குது பாரு எரும” என்று, கோபத்தில் ஒரு உதை விட்டான்… அதற்கெல்லாம் மசியாமல் அவள் தொடர்ந்த தூக்கம்…. அவனை இன்னும் வெறுப்பேற்றியது. கெட்ட வார்த்தைகளை சொல்லிக்கொண்டே, லுங்கியை வாயில் கவ்வியபடி கதவை திறந்தான்…

 

புஜ்ஜி….

 

ஜானின் வலது கரம் போன்றவன். அவசர விஷயமில்லை என்றால் புஜ்ஜி இது மாதிரி எழுப்ப மாட்டான்.

 

“என்னடா…. உள்ள வா”

 

கட்டிலில் கிடந்தவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருவரும் பின்பக்கம் சென்றார்கள்.

 

“என்னடா…”

 

“ண்ணா…. கீவேளுர் கொல கேஸ் ஜாமீன்ல வந்தியே, அதுக்கு இன்னிக்கு லோக்கல் போலீஸ்ல பத்து மணிக்குள்ளாற கையெழுத்து போடப் போகனும் ஞாபகமிருக்கா இப்பமே மணி எட்டறை…”

 

“நாயே இத சொல்லத்தான் எழுப்பி விட்டியா… பத்துக்கு மேல போனா அந்த இன்ஸ்பெக்டர் ஒத்துக்க மாட்டானா! சிங்கம் சூர்யாவா அவரு”

 

“ண்ணா அதுக்கு போய் எழுப்புவனா… எடுத்த எல்லா ஜாமீனுக்கும் நீதான் கையெழுத்து போடனும்னா, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா அலையறதுக்கே உனக்கு நேரஞ்சரியாயிருக்கும்.,

அப்புறம் இதெல்லாம் எப்பூடி” என உள்ளே கண்ணைக் காட்டினான்.

 

“சரீஈஈஈ… அத்தவுடு

வேற என்ன மேட்டரு சொல்லித்தொலடா”

 

“வேல வந்துருக்கு”

 

“வேலயா… யார் மூலமா”

 

“புதுசு”

 

“புதுசா… ஆள் தெரியாம எப்புர்றா”

 

“விசாரிச்சுட்டேன். பட்சி சிக்கல்ல மாட்டீருக்கு.

அதும்போக உன்னப் பத்தி கேள்விப் பட்டுதான் வந்துருக்கானாம்., நீ எத்தினி முடிச்சு, எத்தினி ஜாமீன்ல இருக்கனு கரிக்கிட்டா சொல்றான்னா பாத்துக்கோயேன்”

 

“ம்…. எவ்ளோ பேசின”

 

“பார்ட்டி பாம்பே பார்டி… அதான் இருபது பேசிற்கேன்”

 

“பொறா யாரு”

 

“அத உன்கிட்டதான் சொல்வானாம்… அதான் உன்ன எழுப்ப வந்தேன்… இன்னொன்னு.. இருபது ஜாஸ்திங்கறான் எப்பிடியும்  பதினஞ்சுக்கு மடிவான்னு நினைக்கிறேன். அட்வான்ஸ் ரெண்டு குடுத்துருக்கான். நீ கிளம்பினா போய் எக்ஸ்ட்றா ரெண்ட வாங்கிட்டு, பொறா யாருங்கறத  பத்தியும் கண்டுக்குனு வந்துரலாம். இன்னிக்கே  முடிக்கனுமாம்… நீ அப்பால வந்து குஜிலிகூட படுத்துக்கோனு” சிரித்துக் கொண்டே சொன்னான்.

 

அடிப்பது போல் கையை ஓங்கியபடியே ஜான் கேட்டான் .. “சரி எங்க வரச்சொல்லியிருக்க”

 

“மறைமலைநகர் உஸ்தாது டீக்கடை தாண்டி ஜிலோனு ஒரு ரோடுருக்குமே அங்க., சரியா பதினொன்னுக்கு இருக்கனும். கார்ல  வெயிட் பன்றானாம்… ந்தா… கார் நம்பரு”

 

“சரி… நீ என்ன பன்ற…  நாம வழக்கமா வாடகைக்கு கார் எடுக்கற கம்பனிக்கு போனப் போடு. கார் இங்க வந்ததும் வழக்கம் போல ட்ரைவர போகச் சொல்லிடு… ராஜியவும் மாரியையும் நேரா ஸ்டேஷனுக்கு வர சொல்லு.  எல்லாத்தையும் முடிச்சுட்டு வா! அரை மணி நேரத்ல ரெடியா இருக்கேன்”

 

புஜ்ஜி நகர்ந்ததும், ச.ரீ.மு.,வை எழுப்பு எழுப்பு என எழுப்பி உதைத்ததுக்கும் சேத்து கத்தையாக பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டான். அவளை எழுப்பி விடறதுக்குள்ள ரெண்டு கொலையே பண்ணிரலாம் போல எனத் தனக்குள் புலம்பினான்.

 

போலீஸ் கையெழுத்து வேலை முடித்து, நாலு பேரும் மறைமலை நோக்கி சென்றார்கள்.

 

மாரி சொன்னான், “நேத்துதான் ஜான்  நெனச்சேன்… என்னடா வேல ஒன்னும் வரலையேன்னு… ந்தா வந்துருச்சுல்ல”

 

“மாசத்துக்கு இது மாதிரி ரெண்டு வேட்டை கெடச்சா போதும்… வருசம் முச்சூடும் சொர்க்கத்லையே இருக்கலாம்… என்ன ஜான் சொல்ற என ஒத்து ஊதினான் ராஜி”

 

“என்னடா பெரிய சொர்க்கம். இந்த ஜாமீன் கேஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமா முடியட்டும் இன்னும் கொஞ்சம் பெரிய்ய லெவெல்ல எறங்குவோம். அப்புறம் சொர்க்கத்தையே வெல பேசலாம்” என்றான் ஜான் மிதப்பில்…

 

சரியாக 10. 50. அந்த ஆள் அரவமில்லாத சாலையில் பத்தடியில் வண்டியை நிறுத்தினான் புஜ்ஜி… ஈ காகா இல்லை… உண்மையிலேயே ஜிலோனு இருந்தது சாலை. எந்தக் காரையும் காணோம்.

 

“என்னடா புஜ்ஜி ஒரு காரையும் காணோம்., இந்த எடந்தானே”

 

“ஆமாண்ணா… 11 மணிக்கு ஷார்பா  இருக்கேன்னாரு.  வருவாரு”

 

“நீ எதுக்கும் ஒரு போனை போடு வந்துட்டோம்னு…

நம்பர் இருக்குல்ல”

 

“இருக்குணா ந்தோ பன்றேன்…” என்ற வேளையில் புஜ்ஜி போன் அடித்தது…

 

ந்தா… அந்தாளே பன்றாண்ணா…

“ஹலோ சாரு…

நாங்க வந்துட்டோம்”

“———–”

“இல்ல சார் ஈ காக்கா இல்ல… வாங்க”

 

“———”

 

“என்னது… இனிமே நாங்க இங்க இருக்க வேண்டாமா… நேரா சொர்க்கத்துக்கே போயிரலாமா… என்ன சார் சொல்றீ… டொம்மென்று ஒரு சத்தம். “ங்க”கூட சொல்ல முடியாமல் நால்வரும் பீஸ் பீஸாகினர்….




Comments are closed here.

You cannot copy content of this page