Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-28

அத்தியாயம் – 28

 

தேனியில் உள்ள தன்னுடைய சொந்த மருத்துவமனையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு, மதுரை கேகே நகரில் உள்ள ஓர் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த வீரராகவனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருந்தது. இப்போது அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

 

கௌசல்யாவும், கார்முகிலனும் வீரராகவனுக்குத் துணையாக மதுரையிலேயே தங்கியிருந்தார்கள். மதுமதியும் தர்மராஜும் லஷ்மிபுரத்தில் இருந்தாலும்… அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று ராகவனைப் பார்த்துவிட்டு வந்தார்கள். கார்முகிலனும் அவ்வப்போது கல்லூரியையும், வீட்டையும் வந்து எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வான். அப்படித்தான் இன்றும் வீட்டிற்கு வந்திருந்தான்.

 

காலை எட்டு மணியிருக்கும்… அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த மதுமதி சிவந்த விழிகளும், சோர்ந்த முகமுமாக நின்ற கணவனைக் கண்டு ஒரு நொடி திகைத்தாள். அவளை ஒதுக்கிவிட்டு அவன் உள்ளே நுழைந்ததும் நிதானத்திற்கு வந்தவள் அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

“என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க..? போன் கூடப் பண்ணல…! அப்பாவுக்கு எப்படி இருக்கு?” – பதட்டத்துடன் கேட்டாள்.

 

“ஒண்ணும் பிரச்சனை இல்ல… நல்லா இருக்காரு… நைட் தான் ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணினாங்க. எனக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு. ஃப்ரண்ட் ஒருத்தனை ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொல்லியிருந்தேன். அவன் காலையிலேயே வந்துட்டான். அக்காவுக்கு உதவிக்கு அவனை இருக்கச் சொல்லிட்டு நான் கிளம்பிட்டேன்” – கையிலிருந்த பையைத் தரையில் வைத்தபடி பதில் சொன்னான்.

 

“அப்பாடி… நீங்க திடீர்னு வந்து நின்னதும் நான் பயந்தே போயிட்டேன்…” – நிம்மதியாக மூச்சுவிட்டவள், “அம்மா நல்லா இருக்காங்களா?” என்றாள் தொடர்ந்து.

 

“ம்ம்ம்…” – பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ், கைப்பேசி போன்றவற்றை எடுத்து டீப்பாயில் வைத்தவன் கடிகாரத்தையும், பெல்ட்டையும் கழட்டினான்.

 

“ஏன் டல்லா இருக்கீங்க? கண்ணெல்லாம் வேற சிவந்திருக்கு?” – அக்கறையாகக் கேட்டாள்.

 

“நைட் சரியான தூக்கம் இல்ல… பொம்மு குட்டி எங்க? நல்லா இருக்காளா?” – அவளுடைய அக்கறையை அவன் உணர்ந்ததாகவே தெரியவில்லை. மதுமதிக்கு ஏமாற்றமாக இருந்தது.

 

“ம்ம்ம்… நல்லா இருக்கா. பின்னாடி தோட்டத்துல ராதாம்மா கூட விளையாடிக்கிட்டு இருக்கா. தூக்கிட்டு வரவா?”

 

“இல்லல்ல… வேண்டாம்… முதல்ல குளிச்சுட்டு வந்துடறேன். இந்த பேக்ல அழுக்கு டிரஸ் இருக்கு… வாஷர்ல போட்டுடு…” – மாடிப்படிகளில் ஏறினான். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவளைப் பார்க்கின்றவன் அவளுடைய நலனை விசாரிக்கவில்லை… அவளின் மனம் சிணுங்கியது.

 

இரவெல்லாம் கண் விழித்ததோடு… காலையிலேயே வண்டி ஓட்டிக்கொண்டு வந்த அசதியோடு, பசியும் சேர்ந்துகொள்ள அவனால் நின்று பேச முடியவில்லை. அதோடு கல்லூரியிலும் முடிக்க வேண்டிய பாடத்திட்டம் முடிக்கப்படாமல் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஒத்துக்கொண்ட ப்ராஜெக்ட் வேலைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்த எண்ணங்கள் எல்லாம் அவன் மனதை அழுத்திக் கொண்டிருப்பதால் மனைவியின் மனவோட்டத்தைப் பற்றிச் சிந்திக்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.

 

குளித்துவிட்டு வந்த முகிலன், மனைவி பரிமாறிய காலை உணவை அவசர அவசரமாக உண்டு முடித்தான். “ப்பா… ப்பா…” என்று தன்னிடம் ஒட்டிக்கொள்ளும் குழந்தையை, “அட..ட..டடே… வாங்க… வாங்க… வாங்க…” என்று தூக்கி உச்சி முகர்ந்துவிட்டு, “பொம்மு குட்டி… என்ன பண்ணினீங்க? அப்பாவைத் தேடினீங்களா..?” என்று கொஞ்சினான். பிறகு மகளை மனைவியிடம் கொடுத்துவிட்டு, ‘லேப் டாப்’பைத் திறந்து வங்கிகளுக்குக் கட்ட வேண்டிய கடன் தவணைகளை இணையத்தளத்தின் மூலம் பட்டுவாடா செய்தான். கைப்பேசியில் யாருக்கோ அழைத்து அலுவல் தொடர்பாகப் பேசிவிட்டு மாடிக்குச் சென்றான்.

 

வெளியே செல்லத் தயாராகிக் கையில் சில புத்தகங்களுடன் கீழே இறங்கி வரும் கணவனை ஆச்சர்யமாகப் பார்த்த மதுமதி, “எங்க கிளம்பிட்டீங்க? தூங்கலையா?” என்றாள்.

 

“ஹா… தூங்கறதா! லைப்ரரில புக்ஸ் ரிட்டன் பண்ண வேண்டியிருக்கு. காலேஜ்ல கூட கொஞ்சம் வேலை இருக்கு. ஸ்டூடண்ட்ஸ லேப்புக்கு வரச் சொல்லியிருக்கேன். அவங்களுக்குக் கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கணும். வர்றதுக்கு லேட் ஆகும்…”

 

“அப்போ லஞ்ச்?”

 

“வெளியே பார்த்துக்கறேன்”

 

“ஒரே நாள்ல இவ்வளவு வேலையையும் வச்சுக்கணுமா?”

 

“வேற வழி..? கிடைக்கற நேரத்துல எல்லாத்தையும் முடிச்சாகணும். சாயங்காலம் சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பணும். அக்காவுக்கும் எனக்கும் ஒரு பேக்ல ரெண்டு செட் டிரஸ் எடுத்து வை… வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் வெளியே நடந்தான்.

 

சோர்வோடு வீட்டுக்கு வந்தவன் சிறிதுநேரம் படுத்து ஓய்வெடுக்கக் கூட நினைக்காமல், பார்க்க வேண்டிய முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு ஓடத் துடிக்கிறான். அவனுக்கும் அக்கா தான் என்றாலும், தன்னுடைய பெற்றோர் மீது அவன் கொண்டுள்ள அப்பழுக்கில்லாத பாசம் தான் இந்தத் துடிப்பிற்குக் காரணம் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் மனம் சமாதானமாகாமல் முரண்டியது.

 

முன்பெல்லாம் அவள் ஒரு பார்வைப் பார்க்க மாட்டாளா என்று சாதகப்பட்சியாக மனைவியின் முகம் பார்த்து ஏங்கி நிற்கும் அதே முகிலன், இன்று அவளிடம் நலம் விசாரிக்கக் கூடத் தோன்றாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழல்கிறானே…! என்ன தான் அவனிடம் எதிர்பாப்பை வைத்துக் கொள்ளக்கூடாது என்று அவள் மனதை இறுக்கிப் பிடித்தாலும் வலிக்கத்தான் செய்தது.

 

‘வந்ததிலிருந்து ஒரே ஒரு நிமிஷம் என் கூட உட்கார்ந்து பேச நேரம் இல்ல… ஆசையா ஒரு வார்த்தைப் பேசணும்னு தோணல… பேச வேண்டாம்… சின்னச் சிரிப்பு..? ம்ஹும்… அதுக்குக் கூட ஐயாவுக்குப் பஞ்சம் வந்துடுச்சு…’ – அவளுக்கு அழுகை வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

கல்லூரிக்குச் சென்ற கார்முகிலன் மாலை மூன்று மணிக்குத் திரும்பி வந்தான். திட்டமிட்டபடி வேலைகளை முடிக்க முடியாததால் வரும் பொழுதே முகம் கடுகடுவென்று இருந்தது. கையில் கொண்டு வந்த புத்தகங்களை மனைவியிடம் நீட்டி, “இத ஹாஸ்பிட்டல் கொண்டு போற பேக்ல வச்சுடு” என்று கூறியபடி மாடிப்படிகளில் ஏறினான்.

 

‘முகம் கொடுத்துக் கூடப் பேசாமல் இப்படி வேலைகளை மட்டும் ஏவிக் கொண்டிருக்கிறானே… நான் என்ன வேலைக்காரியா…’ – கணவனின் முதுகை வெறித்துப் பார்த்தவள் “ஹும்…” என்று தலையைச் சிலுப்பிக் கொண்டு புகைச்சலுடன் உள்ளே சென்றாள்.

 

மாடிக்குச் சென்ற முகிலன் படுக்கையறைக்குள் நுழைவதற்கு முன் தயங்கி நின்று, கீழே பார்த்துக் குரல் கொடுத்தான்.

 

“மதி…”

 

“என்ன?” – எரிச்சலுடன் கேட்டாள்.

 

“மேல வா…” – மீண்டும் கட்டளை.

 

அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. ‘நீ கூப்பிட்ட உடனே… நான் ஓடி வரணுமோ… போடா… வர முடியாது…’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

 

ஆனாலும் மனம் கேட்காமல் மேலே சென்றாள். தலையணையை முதுகிற்கு அணைவாகக் கொடுத்துக் கட்டிலின் தலைப்பில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த முகிலனின் புருவங்கள் முடிச்சிட்டிருந்தன. அதைப் பற்றி அவளுக்கென்ன வந்தது.

 

“எதுக்குக் கூப்பிட்டீங்க?” – இறுகிய குரலில் கேட்டாள்.

 

கண்களைத் திறந்து மனைவியின் முகத்தைப் பார்த்தான். சிடுசிடுவென்று தான் இருந்தது. ஆனாலும் அந்த முகத்தைப் பார்க்கும் பொழுது மனம். இறுக்கம் தளர்ந்து மெல்ல மெல்ல அமைதியடைந்தது.

 

‘இங்கே வா…’ என்பது போல் தலையசைத்தான். அவனுடைய பார்வைக்குக் கட்டுப்பட்டு அவள் கட்டிலை நெருங்கினாள். விழியோடு விழி கலக்கும் அந்தப் பார்வை அவளுடைய கோபத்தையும் கொஞ்சம் தனித்தது.

 

“உக்கார்…”

 

பதில் கேள்வி கேட்காமல் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது போல் அமர்ந்தாள். அடுத்த நொடி சட்டென்று எழுந்து, அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான்.

 

“தலை வலியா?” – மென்மையாகக் கேட்டாள்.

 

“இல்ல…”

 

“அப்புறம்..?” – தலைவலி வந்தால் தானே அவளுடைய மடியைத் தேடுவான். இப்போது என்ன திடீரென்று…! குழந்தை போல் படுத்திருப்பவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

 

“ரொம்ப நாள் ஆச்சு… கொஞ்சநேரம் படுத்துக்கறேன்…” – பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் கண்கள் சொருகியது. சுட்டெரிக்கும் பாலைவனத்தில் சுற்றிக் கொண்டிருந்தவனுக்குக் குளிர் சோலையில் இடம் கிடைத்துவிட்டது போல் மனைவியின் மடியில் சுகமாக துயில் கொண்டான்.

 

அவ்வளவு நேரம் ஏமாற்றத்திலும், கோபத்திலும் கொதித்துக் கொண்டிருந்த மதுமதியின் மனம் நொடியில் குளிர்ந்துவிட்டது. அவன் மனம் தன்னைத் தேடுகிறது என்கின்ற உண்மை அவளைப் பூரிப்படையச் செய்தது. முகத்தில் புன்னகையுடன் அவன் முடியைக் கோதுவதும், மீசையை மெல்ல இழுப்பதும், முகத்தில் விரல்களால் கோலமிடுவதுமாக நேரம் போவது தெரியாமல் அவள் விளையாடிக் கொண்டிருக்க… அவன் எங்கோ சொர்க்கத்தில் இருப்பது போல் தன்னை மறந்து உறங்கினான்.

 

‘கர்ர்ர்ர்ர்…’ கைப்பேசி சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தாள். நான்கு மணிக்கு ஒலிக்கும்படி ‘செட்’ செய்திருந்த அலாரம் தான் சத்தமிட்டது. தொடுதிரை பொத்தனை அழுத்தி சத்தத்தை நிறுத்தினாள்.

 

மெல்லிய முனகலுடன் புரண்டு படுத்தவன்… செக்கச் செவேலென்று சிவந்திருக்கும் கண்களைச் சிரமப்பட்டுப் பிரித்து… உடலை முறுக்கி சோம்பல் முறித்துவிட்டு, பெரிய கொட்டாவியுடன் எழுந்து அமர்ந்தான். தன்னுடைய சிரமங்களைப் பொருட்படுத்தாமல் ஒற்றையாளாகக் கிடந்து அல்லாடுபவனைப் பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது.

 

“மதியம் சாப்டீங்களா?”

 

“ம்ம்ம்… கேண்டீன்ல…” என்றபடி எழுந்து குளியலறைக்குள் சென்றவன், குட்டிக் குளியல் போட்டுப் புத்துணர்வு பெற்று வெளியே வந்தான். அதன் பிறகு மீண்டும் அவனைப் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அவசர அவசரமாக உடை மாற்றினான். மதுமதி கொண்டு வந்து கொடுத்த பாலை அருந்தினான். அவள் தயாராக எடுத்து வைத்திருந்த பையையும், கார் சாவியையும் கையில் எடுத்துக்கொண்டு காலணியை அணிந்து கொண்டு மதுரைக்குப் புறப்பட்டுவிட்டான்.

 

“டாட்டா குட்டி…” – மனைவியின் இடுப்பில் அமர்ந்திருக்கும் மகளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்து குழந்தையைச் சிணுங்க வைத்துவிட்டு, கையிலிருந்த பையைக் காரின் பின் இருக்கையில் போட்டான்.

 

“பாத்துக்கோ… வர்றேன்…” என்று மனைவியிடம் கண்களால் விடைபெற்றவன், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும் கார் மெல்ல நகர்ந்து பின் வேகமெடுத்தது.




Comments are closed here.

You cannot copy content of this page