Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 27

அத்தியாயம் – 27

தினமும் ஓய்வு நேரத்தில் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று அமர்ந்திருப்பாள் பவித்ரா. கூட்டம் அதிகமில்லாத அந்த கோவில் அவளை வெகுவாக அமைதி படுத்தியது. தன்னுடைய வாழ்க்கையை எந்த வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை சிந்திக்க அந்த அமைதி அவளுக்கு பெரிதும் உதவியது.

 

ஜீவனுடன் சேர்ந்து வாழ்வதா வேண்டாமா…? சேர்ந்து வாழ வேண்டும் என்றால் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்…? அவள் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும்…? அல்லது பிரிவுதான் முடிவு என்றால் விவாகரத்திற்கு பிறகு கௌரவமாக வாழ என்ன வழி…? என்று இரண்டு பக்கமும் நிதானமாக சிந்தித்தாள்.

 

‘திருமணத்திற்கு முன் வேறு ஒரு பெண்ணை காதலித்தவன்… மணமான பிறகும் அவள் நினைவில் மனைவியை வெறுத்து ஒதுக்கியிருக்கிறான்’ என்கிற எண்ணம் அவள் மனதை வலிக்கச் செய்தது. அவனை தன் வாழ்விலிருந்து ஒதுக்கிவிட வேண்டும் என்கிற வேகம் பிறந்தது. ஆனால் அறிவு அவனுடைய நிலையில் நின்று சிந்தித்தது. மனதிற்கும் அறிவுக்கும் பெரிய யுத்தம் துவங்கியது. இறுதியில் அறிவுப்பூர்வமான சிந்தனை உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளை தடை செய்தது.

 

தொலைப்பேசியில் மருமகளிடம் பேசிச் சமாதானம் செய்ய முயன்ற சிவகாமி அவளிடம் பேசவே முடியவில்லை என்றதும் மூன்றாவது நாள் நேரில் வந்தாள். குணாவும் பைரவியும் அவளிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்ளவில்லை என்றாலும் ஜீவனின் நடவடிக்கைகளை முகத்தாட்சனை இன்றி கண்டித்துப் பேசினார்கள். பவித்ராவை அனுப்ப முடியாது என்றார்கள். பவித்ராவும் அவர்களை ஆமோதிப்பது போல் அமைதியாக அமர்ந்திருந்தாள். சிவகாமி மருமகளை தனியாக அழைத்துச் சென்று பேசினாள்.

 

“பாரு பவித்ரா… அவன் பண்ணினது தப்புதான். இல்லைன்னு சொல்லல… ஏதோ கோவத்துல செஞ்சுட்டான். இனி அவன் அப்படி நடந்துக்க மாட்டான். அதுக்கு நான் பொறுப்பு… நீ கிளம்பி வாம்மா… ”

 

ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு தொடுவானத்தை வெறித்தபடி அவள் பதில் சொல்லாமல் நின்றாள்.

 

“நீ இப்படி பிடிவாதமா இருந்தால் நஷ்டம் ரெண்டு பேருக்கும்தான் பவித்ரா… நீ என்னை நம்பி வா… உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன்…” சிவகாமி உறுதியாக கூறினாள். அவள் சட்டென திரும்பி மாமியாரை பார்த்தாள்.

 

“உங்க பையனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் நீங்க எதுக்கு முதல்ல கொடிப் பிடிச்சுகிட்டு கிளம்புறிங்க…? அவரே முட்டி மோதி சமாளிச்சு வரட்டும்ன்னு விட வேண்டியதுதானே…?”

 

“அவன் பிரகாஷ் மாதிரி விவரமான ஆள் இல்லம்மா. முணுக்குன்னு கோவம்தான் வருமே தவிர வேற எதுவும் தெரியாது… பாவம்… அப்பாவிப்புள்ள…”

 

“பல் முளைக்காத குழந்தையா…?”

 

அவள் தன் மகனை ஏளனமாக பேசுகிறாள் என்றதும் சிவகாமிக்கு கோபத்தில் முகம் மாறியது.

 

“இருபத்தியெட்டு வயது ஆண்பிள்ளையை அப்பாவிப் பிள்ளைன்னு சொன்னா கேக்கறவங்க சிரிப்பாங்கத்த…”

 

“என்னதான் சொல்ற…? ஒரு தடவ தப்புப் பண்ணிட்டாங்கரதுக்காக அவனை இப்படியே விட்டுடறதா முடிவு பண்ணிட்டியா…?”

 

“நான் வேணும்ன்னு நெனச்சா அவர் தானா என்கிட்ட வருவார்… அவர் இல்லாம இருக்க முடியாதுன்னு எனக்கு தோணிச்சுன்னா நானே அவரை தேடி போவேன்… இது எங்க ரெண்டுப் பேருக்குமான பிரச்சனை. நீங்க உள்ள வராதிங்க…”

 

“அப்போ என் மகனுக்காக நான் பேசக் கூடாதுன்னு சொல்றியா நீ…?”

 

“அத்த ப்ளீஸ்… உங்க மகனுக்காக நீங்க என்ன வேணுன்னாலும் செய்ங்க… நான் தலையிட மாட்டேன். ஆனா எனக்கும் என் கணவனுக்கும் இடையில நீங்க பாலமாவும் இருக்க வேண்டாம்… பள்ளமாவும் இருக்க வேண்டாம்… ஒதுங்கிக்கோங்க…” திட்டவட்டமாக கூறினாள் பவித்ரா. சிவகாமி வாயடைத்துப் போனாள். வந்த காரியத்தை சாதிக்க முடியாமல் தோல்வியுடன் வீடு திரும்பினாள்.

###

பவித்ரா வீட்டைவிட்டு சென்றது ஆரம்பத்தில் ஜீவனை பெரிதாக பாதிக்கவில்லை. இரண்டு நாள் போனால் தானாக வந்துவிடுவாள் என்று நினைத்தான். ஆனால் அவள் வரவில்லை. ‘என்ன இன்னும் வராமல் இருக்கிறாள்…!’ என்று அவன் குழம்பிக் கொண்டிருக்கும் பொழுதே சிவகாமியும் பாட்டியும் வீட்டில் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

 

“உனக்கு பொறுப்பே இல்ல… வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை விரட்டி விட்டுட்ட… வெளியே தலைக்காட்ட முடியல… பார்க்கிறவர்கள் எல்லாம் மருமகள் எங்கன்னுக் கேட்கறாங்க…” போன்ற வசனங்கள் அவனை எரிச்சலடையச் செய்தன.

 

‘ச்சை… இவளோட பெரிய ரோதனையா போச்சு… போயித் தொலஞ்சவ ரெண்டு நாள்ல வந்திருக்கக் கூடாது…? உயிரை எடுக்கறா…’ என்று கடுப்பானான்.

 

அந்த நேரத்தில் தான் சிவகாமி மருமகளை சமாதானம் செய்து அழைத்துவர சென்றிருந்தாள். ‘எப்படியும் அம்மா அந்த பிசாசை அழைத்துக் கொண்டு வந்துவிடும்… இனி பிரச்சனை இல்லை…’ என்று அவன் நிம்மதியாக இருக்கும் பொழுது சிவகாமி தோல்வியுடன் திரும்பி வந்தது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

சமாதானத்திக்கு சென்றும் அவள் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்… ஒருவேளை நிரந்தர பிரிவுக்கு வழிவகுக்கிராளோ என்கிற சந்தேகம் முளைத்தது. உள்ளுக்குள் லேசாக பயம் பரவியது. ஆனால் இயல்பாய் அவனுக்குள் இருக்கும் கர்வம் தலைத்தூக்கி,

 

“ஒன்னும் இல்லாத உனக்கே இவ்வளவு அழுத்தம் இருந்தா…. எனக்கு எவ்வளவு இருக்கணும்…? இருடி… எவ்வளவு நாள் உன்னை உன் அண்ணன் தாங்குவான் என்று பார்க்கிறேன்…’ என்று சவாலாக நினைத்தான்.

 

அவனுடைய சவாலுக்கு பதில்சவால்விட்டு பத்து நாட்கள் கடந்தும் பவித்ரா மாமியார் வீட்டிற்கு திரும்பவில்லை. பாட்டிக்கும் சிவகாமிக்கும் வயிற்றில் புளியை கரைத்தது. எங்கே ஜீவனுடைய வாழ்க்கை இப்படி அந்தரத்திலேயே தொங்கிவிடுமோ என்று பயந்தார்கள்.

 

நாட்கள் கடக்கக்கடக்க உறவினர்களின் பரிகாசம் கலந்த பரிதாபமும்… நண்பர்களின் அக்கறை கலந்த அனுதாபமும் நேரடியாகவே ஜீவனைத் தாக்க ஆரம்பித்தன. அவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான். அவமானமாகவும் உணர்ந்தான். ஒரு நாள் பிரக்காஷும் தொலைப்பேசியில் அண்ணனுக்கு அறிவுரை வழங்கினான். சுற்றி உள்ள அனைவரும் அழுத்தம் கொடுக்க அவன் நெருக்கடிக்கு ஆளானான்.

 

அதோடு பவித்ராவோடு அவன் கழித்த அந்த கடைசி ஒரு வாரம் அவன் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. அவளை முழுமனதோடு மனைவியாக இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்… அவளோடு  ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்பதை அவனும் விரும்பினான். அதனால் தான் தம்பியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டதுபோல் வெளியில் பாவனைச் செய்துக் கொண்டு மனைவியைச் சந்திக்கச் சென்றான்.

###

“இந்தாங்க… ஜூஸ் எடுத்துக்கோங்க…” என்று வீட்டுக்கு வந்த கணவனை தங்களுக்குள் எந்த பிரச்சனையும் நடக்காதது போல் இன்முகம் காட்டி உபசரித்தாள். அவளுடைய நடவடிக்கையில் ஜீவன் அசந்து போனான். ‘இவளுக்கு என்ன அம்னீஷ்யாவா…!’ என்று கூட நக்கலாக நினைத்தான்.

 

அவன் வந்திருந்த நேரம் குணாவும் பைரவியும் அலுவலகம் சென்றிருந்ததால் பவித்ரா மட்டும்தான் வீட்டில் இருந்தாள்.

 

“பாட்டி… அத்தை எல்லாம் நல்லா இருக்காங்களா…?”

“ம்ம்ம்.. உன் அண்ணன் எப்ப வருவாரு…?”

 

“இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்… அண்ணி இப்போ வந்துடுவாங்க…”

 

“ம்ம்ம்… சரி அப்போ நீ கிளம்பு. அவங்க வந்ததும் சொல்லிட்டு கிளம்பலாம்” பிரச்னையை பற்றி பேசாமல் சாதாரணமாகச் சொன்னான்.

 

“எங்க…?” அவள் புரியாதது போல் கேட்டாள்.

 

“வீட்டுக்குத்தான்”

“இல்ல… நான் வரல…” அதுவரை மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பிவிட்டது.

 

“ஏன்… உன் கால்ல விழுந்து கெஞ்சினால் தான் வருவியா…?” எகத்தாளமாகக் கேட்டான்.

 

அவள் இல்லை என்பது போல் குறுக்காக தலையசைத்தாள்.

 

“வேற என்ன…?” அவன் அதட்டலாக கேட்டான்.

 

“எனக்கு அங்க வர பயமா இருக்கு. நீங்க எந்த நேரத்துல எப்படி நடந்துப்பிங்கன்னு தெரியல… என்னால இனி அங்க வர முடியாது” என்றாள் குனிந்த தலை நிமிராமல்.

 

அவனுக்கு பகீர் என்றது. இவளுக்குக் கூட நம்மை பிடிக்கவில்லை  ஒதுங்கிவிட்டாள் என்று அந்த புனிதாவுக்கு தெரிந்தால் எவ்வளவு அசிங்கம் என்று நினைத்து பதைத்தான். அதோடு சுற்றியிருப்பவர்களின் பரிதாபத்தையும் அனுதாபத்தையும் எப்படித் தாங்குவது. வெளியில் அவமானப் படுவதைவிட இவளிடம் கொஞ்சம் இறங்கிப் பேசினால் தவறில்லை என்று நினைத்து,

 

“பழசையே நினச்சுகிட்டு இருக்கக் கூடாது… இனி அதுமாதிரி நடக்காது… கிளம்பு…” என்றான் கொஞ்சம் இறங்கி வந்து.

 

“இல்ல… இனி நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்… வேணுன்னா இங்க அண்ணன் வீட்டுக்கு பக்கத்துல வீடு பாருங்க. நாம கொஞ்ச நாள் தனியா இருக்கலாம். அண்ணன் பக்கத்துல இருக்கதால எனக்கும் பாதுகாப்பா இருக்கும்” மெல்லியக் குரலில் சொன்னாள்.

 

அவனுடைய முகம் மாறியது…. “நான்தான் சொல்றேன்ல்ல… இனி எந்த பிரச்சனையும் இருக்காது. பயப்படாம வா…”

“மன்னிச்சிடுங்க… நான் என் முடிவை சொல்லிட்டேன்”

 

அவனுடைய முகம் கோபத்தில் ஜொலித்தது. “இங்க வந்துட்டா மட்டும் நான் குடிக்க மாட்டேனா…? இங்கபாரு… நானா நினைச்சாத்தான் மாறுவேன். உன் பிடிவாதத்துக்கெல்லாம் நான் ஆட மாட்டேன். ஒழுங்கா கிளம்பி வா… இனி தப்பு நடக்காது” அவன் உறுதியாக கூறினான்.

 

அவள் முடியாது என்று தலையசைத்தாள்.

 

அவன் பற்களை நரநரத்தபடி பேசினான். “அப்போ… பிளான் பண்ணிதான் வந்தியா…? பாட்டியும் அம்மாவும் உன்னை என்னடி பண்ணினாங்க… வயசான காலத்துல அவங்கள தனியா விட்டுட்டு வர சொல்ற? ”

 

“கொஞ்ச நாள் தான்… ஒரு ஆறு மாசம்… எனக்கு மனசு சரியாகர வரைக்கும். ப்ளீஸ்…” அவள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பேசினாள்.

 

“நீ நினைக்கறது நடக்காது. என்னை நம்பினா அங்க வா. இனி நான் ஒழுங்கா இருப்பேன். இல்லன்னா இங்கேயே இரு… நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். அவன் அந்த பக்கம் போனதும் இவள் முகத்தில் ஒரு மெல்லியப் புன்னகை வந்தது…

 

பவித்ராவின் முடிவை கேட்ட பாட்டி அதிர்ந்தார்கள். சிவகாமி ஆத்திரத்தில் கொதித்தாள்.

 

“இங்க இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது தனியாப் போகணும்ன்னு சொல்றாளே…! என் மகனை என்கிட்டேயிருந்து பிரிக்கப் பார்க்கிறாளே…!” என்று புலம்பினாள். பாட்டியும் அமைதியாக இருந்தார்கள். விஷயத்தைக் கேள்விப் பட்ட பிரகாஷ்க்கும் அண்ணன் தனியாகச் செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால் முடிவெடுக்க வேண்டியது ஜீவன்தான் என்று நினைத்து மெளனமாக இருந்தான்.

 

நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. ஒரு மாதம் கழித்தும் பவித்ரா தன் முடிவில் உறுதியாகவே இருந்தாள். ஜீவனும் தன் நிலையிலிருந்து இறங்கவே இல்லை. பாட்டிதான் முதலில் இறங்கி வந்தார்கள். பிரக்காஷிடம் பேசி ஜீவனை தனியாக வைத்துவிடலாம் என்கிற திட்டத்தைச் சொன்னார்கள்.

 

அவனும் அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருந்தால் போதும் என்கிற நோக்கில் சரி என்று சொன்னான். பிறகு இருவரும் சேர்ந்து சிவகாமியிடம் பேசினார்கள். அவள் முடியவே முடியாது என்று மறுத்தாள். ஒரு மகன்தான் வெளிநாட்டில் இருக்கிறான்… இன்னொரு மகனையும் பிரிய முடியாது என்று கூறி அழுதாள்.

 

பாட்டியும் பேரனும் சிவகாமியிடம் மணிக்கணக்கில் பேசி சமாதானம் செய்து, ஜீவனுக்கு தனி வீடுபார்த்து குடித்தனம் வைத்துவிடலாம் என்கிற முடிவை எடுத்தார்கள். அவர்களுடைய முடிவை அறிந்த  ஜீவன் குதித்தான். முடியாது என்று சத்தம் போட்டான். கடைசியில் அவனும் குடும்பத்தாரின் பிடிவாதத்திற்குக் கட்டுப்பட்டுவிட்டான்.




Comments are closed here.

You cannot copy content of this page