Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-29

அத்தியாயம் – 29

 

வீரராகவனை அறுவை சிகிச்சை முடிந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து, இன்று தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். கணவனை அழைத்துக் கொண்டு காம்காப்பட்டியிலிருக்கும் தங்களுடைய வீட்டிற்குச் செல்வதாகக் கூறினாள் கௌசல்யா. வீரராகவனும் மனைவி சொல்வது தான் சரியென்றார். உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அங்குத் தனியாக இருக்க வேண்டாம் என்று கூறி, அவர்களைக் கட்டயாப்படுத்தித் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறான் கார்முகிலன்.

 

இப்போதெல்லாம் மதுமதியின் மனம் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூடக் கணவனுடைய அருகாமைக்காக ஏங்கியது. தன் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே அவள் உணர ஆரம்பித்த இந்த மாற்றம்… நாளுக்கு நாள் அவளுக்குள் அதிகமாகிக் கொண்டே சென்றது.

 

சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் பெரிய கோடு வரைந்தது போல்… தந்தையின் உடல் நிலையும்… கணவனுடைய சில நாள் பிரிவும் அவள் மனதை முழுவதும் ஆக்கிரமித்து, பழைய ஏமாற்றங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. தற்போதிருக்கும் பிரச்சனையைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்கக் கூட நேரமில்லாத மதுமதி, தந்தை தங்கப்போகும் அறையில் உள்ள மெத்தையில், சுத்தமான படுக்கை விரிப்பை படரவிட்டு ஓரங்களில் மடக்கிவிட்டாள்.

 

வாசலில் காரின் ஹாரன் ஒலி கேட்டது. ஓடிப் போய்ப் பார்த்தாள். ஓட்டுனர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து காரின் பின்பக்கக் கதவைத் திறந்துவிட்ட கார்முகிலன், கௌசல்யா இறங்கிய பிறகு வீரராகவனைக் கைத்தாங்கலாக காரிலிருந்து இறக்கி வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தான்.

 

“வாங்கப்பா… அம்மா… உள்ள வாங்கம்மா… இப்போ எப்படிப்பா இருக்கு?”

 

கவனமாக அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தவர், மகளுடைய கேள்விக்குச் சிறு புன்னகையுடன் தலையை அசைத்துவிட்டுத் தொடர்ந்து மருமகனோடு சேர்ந்து மெல்ல நடந்தார்.

 

“ட்ராவல் எப்படிம்மா இருந்துச்சு? கஷ்டமா இருந்துச்சா?”

 

“எனக்கு ஒண்ணும் தெரியலம்மா… அப்பாவுக்குத் தான் கஷ்டமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்…”

 

“அப்பாவை விட நீங்க தாம்மா ரொம்ப மெலிஞ்சுட்டீங்க. உள்ள வந்து உக்காருங்க”

 

மதுமதி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, தரைத்தளத்தில் மாமனாருக்காகச் சகல வசதிகளோடும் ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவரைப் படுக்க வைத்த கார்முகிலன், மீண்டும் வெளியே சென்று காரில் இருக்கும் இருந்த பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்தான்.

 

சமையலறையிலிருந்து வெளிப்பட்டு “நல்லா இருக்கீங்களாம்மா? அய்யாவுக்கு உடம்பு பரவால்லையா?” என்று விசாரித்த ராதா, இரண்டு கையிலும் இரண்டு பைகளோடு கார்முகிலன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டுவிட்டு, தன் பங்கிற்கு மீதமிருந்த பைகளை உள்ளே கொண்டு வந்து வைத்தாள்.

 

கார் வந்து வாசலில் நின்றதைக் கவனித்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள் ஒவ்வொருவராக வீரராகவனைப் பார்ப்பதற்காக வந்துவிட வீட்டில் கூட்டம் கூடிவிட்டது. ஓய்வெடுக்கும் மனிதரை வந்திருப்பவர்கள் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களைக் கூடத்திலேயே தடுத்து அமர வைத்து, அவர்களோடு பேசி… அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி… காபி கொடுத்து… அவர்களை மனம் நோகாமல் வந்த வழியே அனுப்பி வைப்பதற்குள் முகிலன் களைத்துப் போய்விட்டான். அப்படியும் ஒன்றிரண்டு பேர் உறங்கிக் கொண்டிருப்பவரின் அறைக்கதவைத் திறந்து எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது, அவனை எரிச்சல் கொள்ளச் செய்தது.

 

‘நாசுக்கா சொல்றதெல்லாம் புரியவே புரியாது…’ – மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டு அவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு அவன் மீண்டும் உள்ளே வரும் வந்தபொழுது கூடத்தில் யாரையும் காணவில்லை. சோபாவில் சரிந்து, தலையைப் பின்னால் சாய்த்து அமர்ந்து கண்களை மூடினான். மெல்லிய கொலுசொலி அவனை நெருங்கி வந்தது.

 

“டைம் ரெண்டு மணியாச்சு… குளிச்சிட்டு வந்தீங்கன்னா சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்…” – மதுமதியின் மெல்லிய குரல் அவன் செவிகளில் தேன் போல் பாய… கண்களை மெதுவாகத் திறந்து மனைவியின் முகம் பார்த்தான்.

 

“ரொம்ப டயர்டா தெரியிறீங்களே…” – மனதிற்கு மிக நெருக்கமான அந்தக் குரல் அவன் இதயத்தை மெலிதாக வருட… அவ்வளவு நேரம் அவன் முகத்திலிருந்த சோர்வும், களைப்பும் மாறி இதழ்கள் புன்னகையில் லேசாக விரிந்தன.

 

“நாற்பத்தஞ்சு நாள்… சமாளிச்சுட்டியா?” – அன்பு வழியும் குரலில் கேட்டான்.

 

“தர்மா தாத்தா இங்க தானே இருந்தாங்க… ஒண்ணும் பிரச்சனை இல்ல…”

 

“பொம்மு எங்க?”

 

“மேல தூங்கறா…”

 

“தனியாவா?”

 

“இல்ல… தர்மா தாத்தாவோட தான் தூங்கறா….”

 

“ஓ… சார் வீட்டுல தான் இருக்காரா?”

 

“லஞ்ச் முடிச்சிட்டு மாத்திரை போட்டுக்கிட்டுப் படுத்தார். நீங்க வந்ததும் எழுப்பச் சொன்னார். நான் தான் எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு எழுப்பல…”

 

“ம்ம்ம்… இப்படி வந்து உக்காரு…” – தனக்கருகில் சுட்டிக் காட்டினான்.

 

அவள் இளம் புன்னகையுடன் கணவனுக்கு அருகில் அமர்ந்த போது, ஹாலில் இருக்கும் குளியலறைக் கதவை டமார் என்று திறந்து கொண்டு வெளியே வந்தாள் கௌசல்யா.

 

“என்னடா முகிலா? ஹாஸ்பிட்டலிலிருந்து வந்து நீ இன்னும் குளிக்கலையா! டைம் ஆயிடுச்சு பாரு. சீக்கிரம் எழுந்து போ… எவ்வளவு நேரம் சாப்பிடாம இருப்ப? மது, அப்பாவுக்குக் கொஞ்சம் கஞ்சி வேணும். ரெடி பண்ணும்மா”

 

“சரிம்மா” – பட்டென்று எழுந்து சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

மின்னல் வேகத்தில் உள்ளே சென்று மறையும் மனைவியின் முதுகை ஏக்கமாகப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடியே எழுந்து மாடிப்படிகளில் ஏறினான் கார்முகிலன்.

###

 

மகள் தயார் செய்து கொடுத்த கஞ்சியைக் கணவனுக்குக் கொடுத்துவிட்டு, தானும் பசியாறினாள் கௌசல்யா. பின் அவர் படுத்திருக்கும் அறையிலேயே, தனக்கும் தரையில் ஒரு படுக்கையை விரித்துக் கட்டையை நீட்டிவிட்டவள், அசதியில் தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

 

குளித்துவிட்டுக் கீழே வந்து உணவு மேஜையில் அமர்ந்த முகிலன் “அக்கா சாப்பிட்டாச்சா?” என்றான்.

 

“அவங்க அப்போவே சாப்பிட்டு முடிச்சு… இப்போ சொர்க்கத்துல இருக்காங்க…” -பரிமாறிக் கொண்டே பேசினாள் மதுமதி.

 

“ஹா… ஹா… அதுக்குள்ள தூங்கிடுச்சா?” என்றபடி ஒரு வாய் எடுத்து வைத்தவன், அவள் உணவருந்தியிருக்க மாட்டாளோ என்கிற சந்தேகத்தில் சட்டென்று நிமிர்ந்து “நீ சாப்பிட்டியா?” என்றான்.

 

“ம்ம்ம்… அப்போவே…”

 

மெலிதாக ஓர் ஏமாற்றம். அந்த உணர்வு கூட நன்றாகத்தான் இருந்தது. “எனக்காக வெயிட் பண்ணியிருக்கலாம்… சரிவிடு… அந்தப் பொரியலை கொஞ்சம் வையி…” என்று மீண்டும் உணவில் கவனமானவன், வஞ்சகமில்லாமல் வெளுத்து வாங்கினான்.

 

அவனுடைய பேச்சையும், அவன் சாப்பிடும் அழகையும் ரசித்துக் கொண்டே பார்த்துப் பார்த்துப் பரிமாரியவளைத் தொலைபேசி அழைத்தது.

 

“சாப்பிட்டுட்டு இருங்க வர்றேன்…” – ஹாலுக்கு வந்து தொலைபேசியை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.

 

“ஹலோ…”

 

“ஹலோ… முகிலன் சார் இருக்காரா? அவரோட போன் ஸ்விட்ச்ட் ஆஃப்ல இருக்கு?” – படபடவென்ற குரல் மதுமதியை எரிச்சல்படுத்தியது.

 

“நீங்க யாரு?”

 

“கலைவாணி”

 

பேசுவது யார் என்று மதுமதிக்குப் புரிந்தது. ஆனாலும் அவள் பேசிய விதத்தில் கோபம் கொண்டிருந்தவள் “எந்த கலைவாணி?” என்றாள் அலட்சியமாக.

 

“சாருக்குத் தெரியும். நீங்க அவர்கிட்ட போனைக் குடுங்க” – துடுக்காகப் பேசினாள்.

 

மதுமதிக்குச் சுள்ளென்று கோபம் உச்சிக்கு ஏறியது. வெகுவாகச் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள் “என்ன விஷயம்னு சொல்லுங்க. நான் அவர்கிட்டச் சொல்லிடறேன்” என்றாள்.

 

“இல்ல… நான் சார்கிட்டயே சொல்லிக்கறேன். நீங்க போனைக் கொஞ்சம் குடுங்க”

 

“அவர் இல்ல…” – போனை டொக்கென்று வைத்துவிட்டாள்.

 

‘பெரிய மகாராணி… இவங்க போன் பண்ணின உடனே நாங்க சாப்பிட்டுட்டு இருக்கறவரை பாதியிலயே எழுந்து வரச் சொல்லணும்… திமிரப் பாரு…!’ – எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டே உணவு கூடத்திற்கு வந்தாள்.

 

“யார் போன்ல..?”

 

“அதெல்லாம் யாரும் இல்ல… நீங்க பேசாம சாப்பிடுங்க” – எரிந்து விழுந்தாள்.

 

சற்று நேரத்திற்கு முன் சிரித்த முகத்துடன் பரிமாறியவள், இப்போது ஏன் இப்படிக் கடுகடுவென்று மாறிவிட்டாள் என்கிற வியப்புடன் மனைவியைப் பார்த்தவன், தோள்களைக் குலுக்கிவிட்டு மீண்டும் உணவில் கவனமானான்.

 

கார்முகிலன் உணவை முடித்த பிறகு உணவு மேசையைச் சுத்தம் செய்துவிட்டுக் கூடத்திற்கு வந்தாள் மதுமதி. முகிலன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன டிவில உட்கார்ந்துட்டீங்க! படுக்கலையா?”

 

“சாப்பிட்ட உடனே படுக்க முடியாது. கொஞ்சநேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டுத் தான் போகணும். நீ இன்னும் கிச்சன்ல என்ன பண்ற? இப்படி வந்து உட்காரு”

 

“அவ்ளோ தான்… வந்துட்டேன்…” – கணவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் இருவரையும் கட்டிப்போட அவர்கள் நேரத்தை மறந்து டிவி திரையில் லயித்திருந்தார்கள். ஒரு மணிநேரம் கழிந்திருக்கும். வாசலில் இருசக்கர வாகனம் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. ‘யார் இந்த நேரத்துல…’ என்று அலுப்புடன் திரும்பிய மதுமதியின் முகம் வண்டியிலிருந்து இறங்கியவர்களைக் கண்டதும் கோபத்தில் தகித்தது.




Comments are closed here.

You cannot copy content of this page