விடிவெள்ளி – 28
3142
1
அத்தியாயம் – 28
குணா வீட்டிற்கு அருகிலேயே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒற்றைப் படுக்கையறைக் கொண்ட சிறிய வீட்டை மாதம் ஐயாயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். பால் காய்ச்சும் விழா இன்று காலை இனிதே முடிந்துவிட குணாவும் பைரவியும் அலுவலகத்திற்கு புறப்பட்டுவிட்டார்கள்.
பாட்டியும் சிவகாமியும் கூட “பால் காய்ச்சின வீடு… ரெண்டு பேரும் இன்னிக்கு வெளியே எங்கேயும் போகாம வீட்டுலேயே இருங்க… மதியம் ஏதாவது இனிப்போட சமையல் செஞ்சு சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
வீடு அமைதியாக இருந்தது. சமையல் செய்வதற்குத் தேவையான பாத்திரங்களைத் தவிர வீட்டில் எந்த சாமானும் இல்லை. மின்விசிறி… அமர்வதற்கு நாற்காலி என்று எதுவும் இல்லை. மகன் சிரமப்படக் கூடாது என்று நினைத்து அத்யாவசிய பொருட்களை வாங்கிப் போட சிவகாமி எவ்வளவோ முயன்றும் பவித்ரா உறுதியாகவும் கடுமையாகவும் மறுத்தாள்.
“எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் நாங்கள் சம்பாதித்து வாங்கியதாகத்தான் இருக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் எங்களுடைய வாழ்க்கையில் குறுக்கே வராதீர்கள்…” என்று முகத்தில் அறைந்தது போல் பேசிவிட்டாள். வாழ்த்துச் சொல்ல கைபேசியில் அழைத்த பிரகாஷிடமும் இனி தன்னுடைய கணவனுக்குத் தேவையில்லாமல் பணம் கொடுத்து அவனைக் கெடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டாள்.
வீடு பார்ப்பது… வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது… என்று எதிலும் ஜீவன் தலையிடவில்லை. யாருக்கோ வந்த விருந்து என்று பவித்ரா போன் செய்து அழைத்ததால் பால் காய்ச்ச வந்திருந்தான். திருமணத்திற்கு அவளுடைய அண்ணன் போட்ட சொற்ப நகையில் ஒன்றை விற்றுத்தான் வீட்டிற்கு முன்தொகை கொடுத்து சாமன்களையும் பவித்ரா வாங்கியிருந்தாள் என்றாலும்,
“சிங்கிள் பெட் ரூம் வீடு உங்களுக்கு ஓகேவா…? நீங்க ஒரு முறை வீட்டை பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்றிங்களா…? வாடகை இவ்வளவு நம்மால் கொடுக்க முடியுமா…? வீட்டுக்கு இந்த சாமானை வாங்கட்டுமா…?” என்று ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் அவனை அந்த வீட்டின் தலைவனாக உணர வைத்தாள்.
தம்பி சம்பாதித்த பணத்தில் கட்டிய அந்த பெரிய வீட்டின் ஆடம்பரமும் செழுமையும் ஜீவனை ஆரம்பத்தில் மகிழ்வித்தாலும்… புனிதா பிரகாஷின் மனைவியான பிறகு அவனால் அந்த வீட்டில் முழுமையாக ஒட்ட முடிந்ததில்லை. வீட்டிற்குள் நுழையும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு நெருடலும் அழுத்தமும் அவனை எரிச்சலடையச் செய்யும். அதனால் தான் அவன் அந்த வீட்டில் பெரும்பாலும் கோபமாகவே இருப்பான்.
எடுத்ததெற்கெல்லாம் கோபம்… எல்லோரிடமும் பகை… என்று மேலோட்டமாக வாழ்ந்துக் கொண்டிருந்தவனின் அடிமனதில், ‘தன்னிடம் எதுவுமே இல்லை… எல்லாமே தன் தம்பியுடையதுதான்… அதிலும் அவன் இப்போது புனிதாவின் கணவன்… அவனுடைய சொத்தில் நாம் ஒட்டிக் கொண்டு வாழ்கிறோம்…. அவனிடம் எப்பொழுதுமே கையேந்தும் பரிதாப நிலையில் நாம் இருக்கிறோம்’ என்கிற தாழ்வு மனப்பான்மை இருந்து அவனை ஆட்டிப் படைத்ததை யாருமே அறியவில்லை. ஜீவன் உட்பட…
புனிதாவை ஜீவன் காதலித்தான் என்கிற செய்தி தெரிந்த பிறகு அவளுக்கு சொந்தமான வீட்டில் இனி இருக்க முடியாது என்று நினைத்து பவித்ரா வெளியேறியது, எதிர்பாராத விதமாக ஜீவனுக்கும் பெரிய விடுதலையாக இருந்தது. எந்த வசதியுமே இல்லாமல் எளிமையாக இருந்தாலும் புது வீட்டில் இது என்னுடைய இடம் என்கிற ஒரு உரிமை உணர்வு ஏற்படுவதை ஆச்சர்யமாக உணர்ந்தான்.
முன்பு ஏன் இதுபோல் லேசான மனதுடன் நம்மால் இருக்க முடியவில்லை என்பதையெல்லாம் ஜீவன் யோசிக்கவில்லை. முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் கோபம் சுள்ளென்று வரும்… கத்திக் கொண்டிருப்பான்… இப்போது கோபம் வரவில்லை… ஒரு மாதிரி மனதுக்கு நன்றாக இருக்கிறது… விசிலடிக்க வேண்டும் போல் இருக்கிறது… சமையலறை… சிறு ஹால்… குளியலறை வசதியுடன் கூடிய படுக்கையறை… சின்ன பால்கனி… என்று இருந்த அந்த குட்டி வீட்டை மீண்டும் மீண்டும் லேசாக விசிலடித்தபடி சுற்றி வந்தான். அதற்கு மேல் அவனுக்கு யோசிக்கத் தோன்றவில்லை.
“வீடு நல்லா இருக்கா…?” பவித்ரா கேட்டாள்.
“ம்ம்ம்…. அழகா இருக்கு…”
“சின்னதா இருக்கே… உங்களுக்கு பிடிக்காதோன்னு நினச்சேன்…”
“நம்ம ரெண்டு பேருக்கு இதைவிட பெரிய வீடு எதுக்கு…” என்று புன்னகைத்தான்.
அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. முதல் நாளே தகராறு செய்யாமல் அவன் அனுசரணையாக இருப்பது நிம்மதியாக இருந்தது.
“மதியம் என்ன சமைக்கட்டும்…?”
“உனக்கு என்ன பிடிக்குதோ செய்…”
அந்த வீட்டின் அழகும் அம்சமும் அவனுடைய கோபத்தையும்… மூர்க்கத்தையும் பாதியாக குறைத்துவிட்டதால் நல்ல மனநிலையில் இருந்தான். பவித்ராவிற்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. ‘திருமணம் ஆனதிலிருந்து ஒரு நாள் கூட இவன் இப்படி இனிமையாக பேசியதில்லையே…! எல்லாம் இந்த வீட்டின் ராசி…’ எட்ன்று நினைத்தபடி,
“சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல், ஸ்வீட்க்கு கொஞ்சம் பாயசம் செய்யட்டுமா…?” அவனுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.
“ம்ம்ம்… செய்…” என்றான் அவன் புன்னகையுடன்.
அவள் சமையலில் மும்மரமாகிவிட இவன் பக்கத்துப் பெட்டிக் கடைக்குச் சென்று குமுதம், ஆனந்த விகடன் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து படித்தான். இவன் புத்தகங்களை புரட்டி முடிக்கவும் அவள் சமையலை முடிக்கவும் சரியாக இருந்தது. இருவரும் சேர்ந்து உணவருந்தினார்கள். உணவுக்குப் பின் முதல் முறையாக இருவரும் சற்று நேரம் பொதுப்படையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மாலை காற்று வாங்க மொட்டை மாடிக்குச் சென்றார்கள். “ஹும்… நல்லா காத்து வருது… செடியெல்லாம் கூட வச்சிருகாங்களே…!” மொட்டை மாடி தோட்டத்தை ஜீவன் ஆசையாக பார்த்தான்.
“எங்க வீட்டுல கூட இப்படித்தான் இருக்கும்…”
“ஓ… உங்க அண்ணிக்கு செடி வளர்க்கவெல்லாம் நேரம் இருக்கா…? பரவால்லையே…!”
“ம்ஹும்… இங்க இல்ல… அம்மா இருந்தபோ… அந்த வீட்டுல நிறைய செடி இருக்கும்… சனி ஞாயிறு சாயங்காலம் மொட்டை மாடிலதான் நிறைய நேரம் இருப்போம்… சில சமையம் அண்ணன் கூட அண்ணியை கூட்டிட்டுவருவாறு… ரொம்ப நல்லா இருக்கும்…” முகத்தில் புன்னகையுடன் சொன்னாள்.
அப்போதுதான் பவித்ராவின் பெற்றோரைப் பற்றிக் கேட்டான் ஜீவன். அவன் தன்னைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியது அவளுக்கு பிடித்திருந்தது. மலர்ந்த முகத்துடன் தன் பெற்றோரைப் பற்றிய நல்ல விஷயங்களைச் சொன்னவள் அவர்களுடைய இழப்பைச் சொல்லும் பொழுது துக்கத்தை குரலிலோ முகத்திலோ சிறிதும் காட்டாமல் மூன்றாம் நபர் போல் இயல்பாகச் சொன்னாள்.
அவளுடைய அந்த முகபாவம் அவனை வியக்க வைத்தது. ஒரு பெண்ணாக இளம் வயதில் பெற்றோரை அடுத்தடுத்துப் பறிகொடுத்துவிட்டு வாழ்வது என்பது எவ்வளவுக் கொடுமை…! அதை எப்படி இவள் இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொண்டு வாழ்கிறாள்…! என்னமாதிரிப் பெண் இவள்…! என்று ஆச்சர்யப்பட்டாலும் தன்னைவிட அவளுடைய கடந்தகாலம் மோசமானது தான்… என்று உணர்ந்து அவளுக்காக மனதிற்குள் வருந்தினான்.
பகலில் ஒருவிதப் புதிய அனுபவத்தைக் கொடுத்த அந்த வீடு இரவில் வேறொரு அனுபவத்தைக் கொடுத்தது. மின்விசிறி இல்லாமல் கொட்டும் வியர்வையில் அவர்களால் அன்று உறங்க முடியவில்லை. கையில் புத்தகத்தை வைத்து விசிறிக் கொண்டு ஹாலில் ஆளுக்கொரு மூலையில் படுத்திருந்தார்கள்.
“ச்ச… என்ன இப்படி வேர்க்குது… நாளைக்கு முதல் வேலையாப் போய் ஒரு ஃபேன் வாங்கிட்டு வந்து மாட்டனும்…” என்றபடி எழுந்து கதவைத் திறந்து வைத்தான் ஜீவன்.
வீட்டுக்கு தேவையான பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான் என்பதை மனதில் குறித்துக் கொண்டு “நைட்ல எதுக்கு கதவைத் திறந்து வைக்கிறிங்க… ஜன்னலை மட்டும் திறந்து வச்சாப் போதும்… போன மாசம்தான் பக்கத்து தெருல ஒரு வீட்டுக்குள்ள திருடன் நுழைஞ்சுட்டதா அண்ணி சொன்னாங்க…” பவித்ரா எச்சரிக்கையுடன் சொன்னாள்.
“நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு அவன் எதை திருடிட்டு போய்டப் போறான் விடு… பாவம் வந்தாலும் ஏமாந்துத் தான் போவான்…”
“இங்க எதுவும் இல்லன்னு அவனுக்குத் தெரியுமா…? கத்தி… கன் எதுவும் வச்சிருந்தான்னா என்ன செய்றது”
“அட… அறிவப்பார்ரா…!!!” என்று வியப்பது போல் பாவனை செய்து அவளைக் கிண்டலடித்தான்.
அவளுக்கு சிரிப்பு வந்தது… சிரித்துவிட்டாள். விடிவிளக்கின் வெளிச்சத்தில் மின்னும் பச்சரிசி பல்வரிசை அழகாகத் தெரிந்தது.
“சிரிக்காத… ஏதோ வைரம் கொட்டிக் கிடக்குன்னு நெனச்சு ரோட்லப் போற திருடன் இங்க வந்துடப் போறான்…” அவன் தன்னை அறியாமல் அவளைப் புகழ்ந்தான்.
புதிதாக இருந்த அவனுடைய பேச்சிற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் எழுந்து கதவை மூடச் சென்றாள் பவித்ரா.
“ஏய்… எங்கப் போற?”
“கதவை மூடப் போறேன்…”
“காத்தே வராம மூச்சு முட்டிச் சாகறதுக்கு, திருடன் கையாள அடிபட்டுச் சாகறது எவ்வளவோ மேல்… பேசாம வந்துப் படு…” என்றான்.
“விளையாடாதிங்க… நைட்ல கதவை திறந்து வைக்க முடியாது… நான் போய் மூடிட்டு வர்றேன்…”
“ப்ச்… நான் இருக்கும் போது உனக்கு என்ன பயம்… வந்து படுன்னு சொல்றேன்ல்ல…” என்று கடிந்து கொண்டான். ஆனால் அவனுடையக் குரலில் கோபமோ எரிச்சலோ சிறிதும் இல்லை.
இதைவிட சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபத்தில் கண்மண் தெரியாமல் அருகிலுருப்போரை வார்தைகளால் குதறுபவன்… இன்று காற்றில்லாமல் உடல் வியர்வையில் வருந்தும் பொழுதும் கேலியும் கிண்டலுமாகப் பேசுகிறானே என்று நினைத்து ஆச்சர்யப்பட்டபடி வந்து படுத்தாள். ஆனால் கதவு திறந்திருப்பதால் அவளால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
###
காலை எழுந்ததும் ஜீவன் எப்பொழுதும் போல் வெளியே செல்ல தயாரானான்.
“இந்தாங்க… இதுல த்ரீ தௌசண்ட் பணம் இருக்கு. நைட் ஃபேன் வாங்கனும்ன்னு சொன்னிங்களே…” பவித்ரா கணவனிடம் ரூபாய் நோட்டுகளை நீட்டினாள்.
அவன் புருவம் சுருக்கி “இதை எதுக்கு என்கிட்ட கொடுக்கற?” என்றான்.
“ஃபேன் வாங்க…”
அவனாக கேட்காமல் சிவகாமிக் கூட அவனிடம் பணத்தை நீட்டிவிட முடியாது. சம்பாதிக்காத குறுகுறுப்பு அவனை பொங்கியெழச் செய்யும். இதில் பவித்ரா நீட்டினால் சும்மாவா இருப்பான்…?
“என்கிட்ட பணம் இருக்கு…” இறுகிய முகத்துடன் சொன்னான்.
அவனுடைய முகமாற்றத்தைக் கண்டு அவள் அஞ்சிவிடவில்லை. இதற்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். அதனால் அச்சம் துறந்து,
“இது நம்ம பணம்…” என்றாள் அழுத்தமாக.
“அப்போ என்கிட்ட இருக்கது யார் பணம்…? ஊரான் வீட்டுப் பணமா…?”
“அது உங்க தம்பியின் பணம்…”
அவனுடைய முகம் கருத்துவிட்டது. இருந்தாலும் இழுத்துப் பிடித்தப் பொறுமையுடன் “அவன் என் தம்பி…” என்றான் அழுத்தமாக.
“அவர் உங்களுக்கு தம்பி மட்டும் இல்ல… புனிதாவுக்கு கணவனும் கூட…”
அவள் தெரிந்து பேசுகிறாளா… அல்லது எதார்த்தமாகப் பேசுகிறாளா என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யும் மனநிலை அவனுக்கு அப்போது இல்லை. அவள் சொல்லிக் காட்டிய விஷயம் குறிதவறாமல் அவன் மனதை பதம் பார்த்துவிட அவனுடைய முகம் பயங்கரமாக மாறியது.
‘குறி தவறவில்லை…’ என்று பவித்ரா மனதிற்குள் சபாஷ்ப் போட்டுக் கொண்டாலும்… அவனுடைய கோபம் அளவு மீறிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில், “அவருக்கும் குடும்பம் இருக்குல்ல… இனி நாம அவர்கிட்ட எதையும் எதிர்ப்பார்த்து நிக்கக் கூடாது. நம்ம வாழ்க்கையை நாமதான் பார்த்துக்கணும்…” என்று மென்மையாக சொன்னாள்.
அவனுடை கோப முகம் மாறவில்லை… அதே சமயம் அவன் அவளுடைய பேச்சிற்கு பதில் பேச்சும் பேசவில்லை. மனைவியின் கையிலிருந்த பணத்தை ஒரு முறைப் பார்த்துவிட்டு அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். பிறகு அமைதியாக வீட்டிலிருந்து வெளியேறினான்.
இப்போது அவன் என்ன நினைக்கிறான் என்று அவளால் துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றாலும் இனி அவன் பிரகாஷின் பணத்தைத் தொட மாட்டான் என்பதை மட்டும் அவள் உறுதியாக நம்பினாள்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Sabash!!!!