உனக்குள் நான்-30
3445
0
அத்தியாயம் – 30
முகத்தில் அடிவாங்கியது போல் சட்டென்று கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்த கலைவாணி அதை வெறித்துப் பார்த்தாள். கோபத்தில் அவள் நாசி விடைத்துக் கண்கள் கலங்கின.
“கலை… என்ன வெளியவே நிக்கிற? உள்ள வா..” – மதிய உணவை முடித்துவிட்டு டிவி திரையில் ஆழ்ந்திருந்த கணவனிடம் தண்ணீர் குடுவையை நீட்டியபடி மேகலை வெளியே வராண்டாவில் நிற்கும் மகளுக்குக் மகளிடம் குரல் கொடுத்தாள். அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
‘என்னாச்சு இவளுக்கு…’ – முதுகு காட்டி நின்ற கலைவாணியை நெருங்கி, அவள் தோள் தொட்டுத் தன் பக்கம் திருப்பியவள் மகளுடைய கண்ணீரைக் கண்டு பதறினாள்.
“ஏய்….! என்னடி ஆச்சு? எதுக்கு அழற?”
தாயின் பதற்றம் மகளின் சலுகையை அதிகமாக்க… அவளுடைய கண்ணீரும் அதிகமானது. “ஐயையோ… என்னடி? எதுக்கு இப்படி அழற? என்னங்க… இங்க வாங்க…”
“என்னன்னு சொல்லு… நல்ல ப்ரோக்ராம் பாத்துட்டு இருக்கைல தொல்லப் பண்ணிக்கிட்டு…”
“அந்த டிவில அப்படி என்னதான் இருக்கோ…! இங்க புள்ள அழுதுகிட்டு நிக்கிறா… என்னன்னு கேக்காம அக்கடான்னு உக்கார்ந்திருக்கீங்களே… எழுந்து இங்க வாங்கங்க…” மகளின் கண்ணீரைத் தாங்க முடியாமல் படபடத்தவள், அந்த வேகத்தைக் கணவனிடம் கோபமாகக் காட்டினாள்.
“அட… எதுக்குடி இப்படி வெட்டித்தனமாக் கத்துற? மனுஷன கொஞ்சநேரம் நிம்மதியா இருக்க விடாம சாமியாடிகிட்…டே… இருப்பா…” – என்று முணுமுணுத்துக் கொண்டே அலட்சியமாக வராண்டா பக்கம் வந்தார்.
“ஆமா… நா வெட்டித்தனமாக் கத்துறேன்னு ரொம்பக் கண்டீங்க… என்ன ஏதுன்னு சொல்லாம இங்க இவ கண்ண கசக்கிகிட்டு நிக்கிறா. அதை என்னான்னு கேளுங்க முதல்ல…”
“என்னது…! பாப்பா அழுவுதா! ஏன்..? என்னாச்சு கண்ணு?”
“அப்பா…” – தொண்டைக் கமற கண்ணீருடன் தந்தையை நெருங்கி அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“என்ன கண்ணு?”
“முகிலன் சார் ஒரு மாசமா ப்ராஜெக்ட் வொர்க் பண்ண லேப்புக்குச் சரியாவே வர்றது இல்லப்பா…”
“வர்றது இல்லையா! ஏன்..? அவர்தானே உங்க கைடுன்னு சொன்ன…”
“அவரோட மாமனாருக்கு உடம்பு சரியில்லையாம். அதனால வேற ஒரு ஸ்டாஃபை அரேஞ் பண்ணிட்டு… இவர் அப்பப்போ தான் வந்து பார்க்கறாரு…”
“சரி… அதான் வேற ஒரு வாத்தியாரு வர்றாருன்னு சொல்றியே. அப்புறம் ஏன் அழுவுற..?”
“ப்ச்… அடுத்த வாரம் டாகுமெண்டேஷன் ஸப்மிட் பண்ணனும்பா. சார் தான் பேப்பர்ஸ் கரெக்ஷன் பார்த்துக் கொடுக்கணும்”
“அவரு போன் நம்பர் இருந்தா கூப்பிட்டு சொல்ல வேண்டியது தானே?”
“அதுக்குதாம்பா அவர் வீட்டுக்குக் கால் பண்ணினேன். அவரோட மனைவி போனை எடுத்துக் கடுகடுன்னு பேசிட்டு டக்குனு கட் பண்ணிட்டாங்கப்பா…” – சொல்லும் பொழுதே அவமானம் தாங்காமல் அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.
“கட் பண்ணிட்டாங்களா! எதுக்கு அந்த அம்மா உன்னோட போனைக் கட் பண்ணினிச்சு..? ” – சற்றுக் கோபமாகவே கேட்டார்.
“என்னங்க நீங்க..? அவதான் சின்னப் புள்ள… ஏதோ உளர்றா… நீங்களும் கெடந்து குதிக்கிறீங்களே…! ஃபோன்ல சிக்னல் கெடைக்கலன்னு அடிக்கடி வெளிய வந்துதான் பேசுறா… லைன் தானா கட் ஆயிருக்கப் போகுது…”
“ஆமா கண்ணு… உன்னோட போன் தான் சிக்னல் இல்லாம கட் ஆயிருக்கும்… அது எப்படிப் பேசிகிட்டு இருக்கும் போது கட் பண்ணுவாங்க… கழுத… இதுக்குப் போயி அழுதுகிட்டு நிக்கிற… கண்ணா தொட…”
“அது இல்லப்பா. அவங்க என்கிட்ட ரொம்ப ஹார்ஷா பேசினாங்க” – சிந்தனையுடன் கூறினாள்.
“நீ தான் எல்லார்கிட்டயும் பல்ல காட்டுவ… அதே மாதிரி எல்லாரும் இருப்பாங்களா? அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு நீதானே சொன்ன? அங்க அவங்களுக்கு என்ன பிரச்சனையோ… நீயா எதையாவது கற்பனைப் பண்ணிக்காதடி” – தாய் மகளுக்கு எடுத்துக் கூறி அவளைத் திருத்தினாள்.
“பாருங்கப்பா அம்மாவ… எப்ப பார்த்தாலும் என்னையே தப்புச் சொல்றத? நான் என்ன எல்லார்கிட்டயுமா பல்லக் காட்டி சிரிக்கிறேன்…” – மீண்டும் கண்களில் டேமை திறந்துவிட்டாள்.
“பார்த்தீங்களா… பார்த்தீங்களா..? நல்லா சிரிக்கச் சிரிக்கப் பேசுவா… பதிலுக்கு நாம ஒண்ணு சொல்லிட்டோம்னா உடனே கண்ண கசக்கிடுவா… எவ்வளவுக்கெவ்வளவு சிரிக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு தொட்டா சிணுங்கியா இருக்கா…” – மகள் எல்லா உணர்ச்சிகளையும் அதிகப்படியாக வெளிக்காட்டக் கூடியவளாக இருக்கிறாளே என்கிற கவலை மேகலாவின் குரலில் தொனித்தது.
“புள்ள மனசு கஷ்டப்படற மாதிரி நீ எதுக்குப் பேசுற? எம் பொண்ணு அழுதா எனக்குத் தாங்க முடியாது. பாத்து நடந்துக்க” என்று மனைவியை அதட்டியவர் “நீ அழுவாத கண்ணு… இனி உன்ன யாரும் எதுவும் சொல்ல முடியாது…” என்று மகளைச் சமாதானம் செய்தார்.
அப்போதும் அவள் முகம் தெளிவடையவில்லை. “இன்னும் என்னம்மா?”
“அப்பா… சார் இன்னிக்குக் கரெக்ஷன் பார்த்துக் கொடுத்தாதான், நான் நாளைக்கு ஒரிஜினல் காப்பி பிரிண்ட் அவுட் எடுத்து பைண்டிங்கு கொடுக்க முடியும்”
“உன்னோட இன்னொரு பொண்ணும் ப்ராஜெக்ட் பண்ணுச்சே… அந்தப் பொண்ணு எப்படி இந்த வேலையெல்லாம் செஞ்சுச்சு?”
“ரேவதியா..? அவ கல்யாண வேலையில பிஸியா இருக்கா. அதோட டெவெலப்பிங்ல அவ நிறைய வொர்க் பண்ணியிருக்கா… அதனால டாகுமெண்டேஷன் நான் தான் முடிக்கணும்”
“அவ்வளவு தானே… டிரஸ் மாத்திக்கிட்டு ரெடியாகு… இப்போவே அண்ணனுக்கு போனை போட்டு வரச் சொல்றேன். ரெண்டு பேரும் அவர் வீட்டுக்குப் போயி சரிபாக்க வேண்டிய பேப்பரையெல்லாம் கொடுத்துட்டு வாங்க. அவர் என்னென்ன தப்புன்னு குறிச்சு வைக்கட்டும். நாம நாளைக்குப் போயி திரும்ப வாங்கிக்கலாம்” என்று மகளின் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கூறியவர் கைப்பேசியை எடுத்து மகனின் எண்ணை அழுத்தினார்.
###
இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு பார்வையை வாசல்பக்கம் திருப்பிய மதுமதி, கலைவாணியைக் கண்டதும் முகம் கடுத்தாள். மனைவியைத் தொடர்ந்து வெளிப்புறம் பார்த்த கார்முகிலன் சட்டென்று முகம் மலர்ந்தான்.
“ஹேய்… கலைவாணி…” என்று உற்சாகத்துடன் கூவியவன், “வாங்க… ப்ளீஸ் கம்” என்று அவளுடன் வந்த இளைஞனையும், “உள்ள வா கலை…” என்று கலைவாணியையும் வரவேற்றான்.
மதுமதியை முகத்துக்கு முகம் முறைத்துப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்த கலைவாணியின் பார்வை, முன்னவளின் இரத்த அழுத்தத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியது.
ஒருவரையொருவர் எரித்துவிடுவது போல் மோதிக்கொள்ளும் பெண்களுடைய பார்வை அந்த வீட்டு எஜமானனின் கண்களிலிருந்து தப்பவில்லை. அவன் புருவம் சுருக்கி மனைவியை ஆராய்ச்சியுடன் பார்த்தான். வந்திருப்பவளைப் பார்வையால் பஸ்பமாக்கும் தீவிரத்தில் இருந்தவளோ கணவனைக் கண்டுகொள்ளவில்லை. உடனே பார்வையைக் கலைவாணியின் பக்கம் திருப்பினான். அவளும் இவனைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.
“சொல்லு கலை… என்ன இவ்வளவு தூரம்?” – அழுத்தமான குரலில் அவளுடைய கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றான்.
“போன் பண்ணினப்ப சார் வீட்டுல இல்லன்னு சொன்னீங்க?” – கார்முகிலனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மதுமதியிடம் கேள்வி கணையை வீசினாள்.
“இல்லன்னு சொன்ன பிறகும் இப்படி… வந்து நிக்கிறீங்க?” – கலைவாணியின் அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி மதுமதியைக் கொதிப்படையச் செய்ய, சற்றும் தயங்காமல் முகத்தைச் சுளித்துக் கொண்டு பதிலடிக் கொடுத்தாள்.
‘நாகரீகம் இல்லாமல் வந்து நிற்கிறீர்களே’ என்று மறைமுகமாகச் சொல்லும் அவளுடைய வார்த்தையை அச்சுப்பிசகாமல் கிரகித்துக் கொண்ட அண்ணன் தங்கை இருவரின் முகமும் கன்றிச் சிவந்தது.
‘வீடு தேடி வந்திருப்பவர்களிடம் எடுத்தெறிந்து பேசுகிறாளே’ என்று பல்லைக் கடித்த கார்முகிலன், “மதி…” என்று மனைவியை அதட்டலாக அழைத்து, “உள்ள போயி வந்திருக்கிறவங்களுக்கு காபி கொண்டு வா…” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
அவள் வெடுக்கென்று திருப்பிக்கொண்டு உள்ளே சென்றதும், கலைவாணியின் பக்கம் திரும்பியவன் “உக்காரு… நீங்களும் உக்காருங்க…” என்றான்.
மாணவி என்கிற முறையில் கலைவாணி தான் அவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும். அவளுடைய அண்ணனுக்கு என்ன அவசியம்..? அவன் முறைப்புடன் தங்கையின் பக்கம் திரும்பி, “குடுக்க வேண்டியதைக் குடுத்துட்டுச் சீக்கிரம் கிளம்பு… நேரமாச்சு…” என்றான் கோபம் குறையாத குரலில்.
“சார் யாரு..? ரொம்ப அவசரப்படறாரு..?” – முகிலன் இலகுவாகவே கேட்டான்.
“அண்ணன் சார்… பேரு கதிரவன்…”
“ம்ஹும்…” – ‘அப்படியா என்கிற தொனியில் ‘ம்ஹும்’ போட்டான்’
“சார்… டாகுமெண்டேஷன் வொர்க்…”
“முதல் உக்காரு… அப்புறம் பேசலாம்…” – என்றபடி உள்ளே சென்றான்.
“உக்காருடா” – தான் சோபாவில் அமர்ந்த பிறகும் நின்று கொண்டிருந்த அண்ணனை நிமிர்ந்து பார்த்துக் கூறினாள்.
“உக்கார்றதா…! ஏன்டி… அந்த லேடி… எதுக்கு இங்க வந்தீங்கன்னு முகத்துல அடிச்ச மாதிரி கேட்டுட்டுப் போகுது… நீ என்னடான்னா இப்படி ரோஷமே இல்லாம உக்கார சொல்ற?” – அடிக் குரலில் சீறினான்.
“ப்ச்… விடுடா… எங்க சாரைப் பார்த்தல்ல… அவர் நமக்குத் தானே சப்போர்ட் பண்ணினார்… ரொம்ப நல்லவர்டா… நீ உக்காரு…” – சாதாரணமாகப் பேசினாள். அந்த நேரம் ராதா காபி ட்ரேயுடன் அங்கு வந்தாள்.
“எடுத்துக்கம்மா… நீங்களும் எடுத்துக்கங்க தம்பி…”
கதிரவன் பதில் சொல்லும் முன் கலைவாணி அவனுக்கும் சேர்த்தே கப்பை ட்ரேயிலிருந்து எடுத்து டீப்பாயில் வைத்தாள். அவளுடைய செய்கையை எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருந்த கதிரவன், ராதா கண்ணிலிருந்து மறைந்ததும் “த்தூ… இதெல்லாம் ஒரு பொழப்பு…” என்றான்.
“ஹேய்…! என்ன இது சின்னப்புள்ளத்தனமா..?”
“இந்த நேரத்துல கூட சினிமா டயலாக்…! உன்னையெல்லாம் திருத்…த…வே முடியாது…”
“ப்ச்… அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா…” – காபியைச் சுவைத்தாள்.
“சகஜமா…! எது..? மூக்கு உடைபடறதா? உனக்கு காபி வேணும்னு என்கிட்டச் சொல்லியிருந்தா… வீட்டுக்குப் போகும் போது நல்ல ஹோட்டல்லயே வாங்கிக் கொடுத்திருப்பேன்ல..? பக்கி… பக்கி… உன்னால எனக்கும் அசிங்கம்…” – வெடுவெடுத்தான். அவள் காலி கோப்பையை டீப்பாயில் வைத்துவிட்டு அவனுக்குப் பதில் கொடுக்க எத்தனிக்கும் பொழுது கார்முகிலன் அங்கு வந்து சேர்ந்தான்.
“சொல்லு கலை… என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்க?”
“டாகுமெண்ட்ஸ் கரெக்க்ஷன் பார்க்கணும் சார்…”
“இளங்கோ பார்த்துட்டதா சொன்னாரே…” – கடமையை மறக்காமல், வேறு ஒரு திறமையான வழிகாட்டியை மாணவிகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் தான், அவன் தன் சொந்த வேலைகளில் மூழ்கியிருந்தான்.
“ஆமாம் சார்… ஆனா… வந்து… நீங்களும்…” – தயக்கத்துடன் கூறினாள்.
அவளுக்கு அந்த விரிவுரையாளரிடம் நம்பிக்கை இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, “சரி… பிரிண்ட் அவுட் எடுத்தாச்சா?” என்றான்.
“இந்த ஃபைல்ல இருக்கு சார்…” – கையிலிருந்த கோப்பை அவனிடம் நீட்டினாள். வாங்கிப் பிரித்துப் பார்த்தான்.
“நாளைக்கு வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன் சார்…”
“எதுக்கு நாளைக்கு..? இப்போவே முடிச்சிடலாம்… வெயிட் பண்ணு…” என்று அவளுக்கு முன்னிலையிலேயே அச்சிடப்பட்ட தாள்களைச் சரிபார்த்துக் கொடுத்தான். கலைவாணிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. வரும்பொழுது இருந்த கோபமும், டென்ஷனும் இப்போது துளியும் இல்லை. ஆனால் முள் மேல் அமர்ந்திருப்பது போல் தவிப்போடு அமர்ந்திருந்தாலும் வேலை முடியும் வரை பொறுப்போடு காத்திருந்து தங்கையை அழைத்துக்கொண்டு சென்ற கதிரவனின் மனதில் மட்டும் கோபம் குறையவே இல்லை.
Comments are closed here.