விடிவெள்ளி – 29
2909
2
அத்தியாயம் – 29
பவித்ராவின் எண்ணம் பொய்க்கவில்லை. பிரகாஷ் அனுப்பிய பணத்தை எடுத்து செலவு செய்ய ஜீவனுக்குக் கூசியது. இவ்வளவு நாளும் அவன் தம்பியின் பணத்தைதான் தண்ணியாக செலவு செய்துக் கொண்டிருந்தான். முதலில் எந்தவிதமான தயக்கமும் இல்லை என்றாலும் புனிதாவின் திருமணத்திற்குப் பிறகு உள்ளே ஒரு உறுத்தல் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இதுநாள் வரை அது இன்னதென்று ஆராய்ச்சி செய்து அவன் அறிந்திடாத விஷயத்தை இன்று பவித்ரா பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டாள்.
பவித்ரா சொன்ன வார்த்தைகளைத் திரித்து, ‘பிரகாஷ் உன் தம்பி மட்டும் அல்ல… அவன் உனக்கு துரோகம் செய்த… உன் முன்னாள் காதலியின் கணவனும் கூட… அவனுடைய பணத்தை நீ ருசிக்கிறாய்…!’ என்று உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் அவன் மூளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தது.
நாள் முழுக்க சிந்தனைகளுடன் போராடியபடி ஆட்டோ ஸ்டாண்டில் அமர்ந்திருந்துவிட்டு இரவு நண்பன் வாங்கிக் கொடுத்த சரக்கை அடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். பவித்ரா எடுத்து வைத்த உணவை உண்டுவிட்டு அமைதியாகப் படுத்துப் போதை மயக்கத்தில் நன்றாக உறங்கியவனுக்குப் பாதி இரவில் விழிப்புத்தட்டியது.
வியர்வையில் உடல் கசகசத்தது. எழுந்து அமர்ந்தான். பவித்ரா உறங்காமல் புத்தகத்தைக் கொண்டு விசிறியபடி ஹாலின் மறு கோடியில் படுத்திருந்தாள். வெக்கை தாங்க முடியாமல் அவன் அந்த நேரத்தில் எழுந்து சென்று குளித்துவிட்டு வந்து நேற்று போலவே கதவைத் திறந்து வைத்தான். வெளிக்காற்று உள்ளே வந்ததும் கொஞ்சம் இதமாக இருந்தது.
‘ஃபேன் இல்லாம தாங்காது போலருக்கே…!’ என்று நொந்து கொண்டவன்… “நீ தூங்கவே இல்லையா…?” என்றான்.
“ம்ஹும்… தூங்க முடியல…” என்று பதில் வந்தது.
ஜீவன் பதில் பேசவில்லை. அவனுக்கு என்னவோ போல் இருந்தது. ‘இந்த காலத்தில் காற்றாடி ஒரு அத்யாவசியப் பொருளாகிவிட்டது. அதைக் கூட நம்மால் வாங்க முடியவில்லையே…’ என்கிறக் கழிவிரக்கம் அவனை மௌனியாக்கியது.
###
மணல் கொட்டிப் பரப்பப்பட்டிருந்த சிறு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஊஞ்சல் ஸ்லைட், சீசா விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தன. மைதானத்தின் ஓரங்களில் சீராக வளர்ந்திருந்த மரங்களால் அந்த இடத்திற்கு அழகும் குளுமையும் கூடியது. ஒவ்வொரு மரத்திக்கு அடியிலும் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் சில பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள். சிலர் மைதானத்தை சுற்றி நடை பயிற்சி செய்தார்கள். குழந்தைகள் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஜீவன் வீட்டில் இல்லாத நாட்களில் மாலை நேரத்தில், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சொந்தமான அந்த மைதானத்திற்கு வந்து நடைபயிற்சி செய்துவிட்டு காற்றாட அமர்ந்திருக்கும் பவித்ராவின் கவனத்தை அன்று ஒரு எட்டு வயது சிறுவன் அதிகம் கவர்ந்தான். அவன் வயதை ஒத்த ஐந்தாறு குழந்தைகளுடன் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தவன் யார் கையிலும் பிடிபடாமல் மின்னல் வேகத்தில் அங்குமிங்கும் சுற்றி சுற்றி ஓடி தப்பித்துக் கொண்டிருந்தான். ஓடும் பொழுது அவ்வப்போது “ஆ… ஓ…” என்று சத்தமிட்டு எல்லோர் கவனத்தையும் கவர்வான். யாரிடமாவது பிடிபடுவது போல் பாவலா செய்துவிட்டு திடீரென்று வேகமெடுத்து ஓடி தூரத்தில் சென்று நின்று கொண்டு… மூச்சிரைத்துக் கொண்டே துரத்தியவனை கேலி செய்வான்.
பவித்ராவிற்கு அவன் செய்கைகள் எல்லாம் வேடிக்கையாக இருந்தது. குடுகுடுவென்று அவன் ஓடுவதை பார்க்க ஆசையாக இருந்தது. “சுட்டிப் பயலே…!” என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அந்த சிறுவர்கள் குரூப்பில் இரண்டு பசங்களுக்கு இடையில் அடிதடி தகராறு வந்தது. அவர்கள் இருவரையும் அந்த சுட்டிப் பையன் விலக்கிவிட்டான். ஏதோ கையை ஆட்டி ஆட்டி அவர்கள் இருவரையும் பெரிய மனிதன் போல கண்டித்தான். பிறகு அவர்கள் எல்லோரும் ஓடி பிடித்து விளையாடுவதை நிறுத்திவிட்டு அந்து விளையாட ஆரம்பித்தார்கள்.
இரண்டு குழுவாக பிரிந்து ஒரு குழுவினர் கையில் இருக்கும் பந்து இன்னொரு குழுவினர் கைக்கு போய்விடாதபடி அங்குமிங்கும் தூக்கிப் போட்டு விளையாடினார்கள். பெயர் தெரியாத அந்த விளையாட்டில் அவர்களுக்கு அவ்வளவு உற்சாகம்… அவர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் மீது அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து பாய்ந்து வந்து விழுந்தது. நல்ல வேளை அடி பலமாகப் படவில்லை. இருந்தாலும் பந்து வந்து விழுந்த அதிர்ச்சியில் “ஆ…” என்று கத்திவிட்டாள்.
விளையாடிக் கொண்டிருந்த வாண்டுகள் அத்தனையும் ஒரு நொடி திகைத்து நின்றுவிட்டதுகள். “அந்த பக்கம் நடை பயின்ற ஒரு பெரியவர் “டேய் பசங்களா… இந்த பக்கம் பந்து கிந்தேல்லாம் கொண்டுவரக் கூடாதுன்னு எத்தனை தடவ சொல்றது…? சின்ன புள்ளைங்கல்லாம் விளையாட்ராங்கள்ள… அந்த பக்கம் போய் விளையாடுங்க… ஒடுங்க…” என்று சத்தம் போட்டபடி நடையைத் தொடர்ந்தார்.
‘ஏய்… நீ போய் வாங்கிட்டு வாடா…’ ‘நீ தானேடா தூக்கி போட்ட நீ போ…’ ‘ஏ… அந்த அக்காவ பார்த்தா நல்லவங்காளா இருக்காங்கடா… பயப்படாம போய் வாங்கிட்டு வாடா…’ அப்போ நீயே போய் வாங்கிட்டு வாயேன்…’ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அந்த குழுவின் தலைவனே பொறுப்பை ஏற்றுக் கொண்டு பந்தை வாங்க பவித்ராவை நோக்கி வந்தான்.
“சாரிக்க… பால் தெரியாம வந்து விழுந்துரிச்சு… குடுங்கக்கா…” என்று அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான். இவ்வளவு நேரம் அந்த பையன்களை அதட்டிக் கொண்டிருந்தவன்… மற்றவர்களிடம் பிடிபடாமல் ஓடி தோற்றவர்களை கிண்டலடித்தவன் இப்போது நொடியில் முகத்தை பாவமாக மாற்றிக் கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. அவனை கொஞ்சம் சீண்ட வேண்டும் என்கிற ஆசை வந்தது…
“உன் பேரு என்ன…?” என்றாள்.
“தருண்… பாலை குடுங்கக்கா…”
“பாலை வச்சு எதுக்கு என்ன அடிச்ச?”
“க்கா… நா அடிக்கலக்கா… அந்த ராகுல்தாங்க்கா தூக்கிப் போட்டான்.”
“அப்போ அவனையே வரச் சொல்லு…”
“அவன் வர மாட்டேங்கிராங்கா… பால் வேற அவனோடது இல்லை… என்னோடது…” என்று கவலையாக சொன்னான்.
அவனுடைய கவலையைப் பார்த்து அவளுக்குச் சிரிப்புப் பொங்கியது. அடக்கிக் கொண்டு “நீ என்ன படிக்கிற?” என்றாள்.
“தேர்ட் ஸ்டாண்டர்ட்…”
###
கையில் ஒரு புது சீலிங் காற்றாடியுடன் வீட்டிற்குள் நுழையும் ஜீவனை சிந்தனையுடன் பார்த்தாள் பவித்ரா. ‘பிரகாஷின் பணத்தை எடுத்துவிட்டானா…! இருக்காது… வேறு எப்படி…? கடன் வாங்கியிருப்பானோ…! ஒரு வேலை இப்படி இருந்தால்…!’ அவளுடைய சிந்தனைகள் திசைக்கொரு பக்கமாய் ஓடின.
“என்ன பார்த்துகிட்டே நிக்கற…? இன்னிக்கும் ஃபேன் இல்லாம என்னால முடியாது. அதான் வாங்கிட்டு வந்துட்டேன்… சாயங்காலம் எலக்ட்ரிசியனை வர சொல்லி மாட்ட சொல்லணும்.”
அவனுடைய பேச்சு காதில் விழாதது போல் “கைகால் அலம்பிட்டு வாங்க… சாப்பாடு எடுத்து வைக்கறேன்…” என்று சொல்லிவிட்டு சமையலறைப் பக்கம் சென்றாள்.
ஈர முகத்தை பூவாளையால் துடைத்தபடி ஹாலுக்கு வந்து… துண்டை பவித்ராவிடம் நீட்டிவிட்டு சாப்பிட அமர்ந்தான். காரக் குழம்பும் வெண்டைக்காய் பொரியலும், பருப்புத் துவையலும் வாசனையே நாவில் உமிழ்சுரக்க வைத்தது.
முட்டிக்காலிட்டு அவனுக்கருகில் வெகு அருகில் அமர்ந்து அவள் பரிமாறும் பொழுது ஒரு கணம் அவன் சித்தம் தடுமாறியது. இன்முகத்தோடு நேர்த்தியாக அவள் பரிமாறும் அழகை ரசித்தபடி… எளிமையாக என்றாலும் அமுதமாக ருசித்த உணவை ஒருகை பார்த்தான் ஜீவன்.
சிறிது நேரத்திலேயே காரக் குழம்பும்… காற்றில்லா கொடுமையும் அவன் உடலில் வியர்வை முத்துக்களை உதிக்கச் செய்தன. கைலியும் கையில்லா பனியனும் அல்ட்ரா மார்டன் உடையாகி அவனை ஆணழகனாக காட்டியது. ஒரு நொடி தன்னை மீறி அவனை ரசனையோடு பார்த்தவள் அடுத்த கணமே பார்வையை திருப்பி அருகில் இருந்த டவலை எடுத்து அவனிடம் நீட்டி “துடைச்சுக்கோங்க…” என்றாள்.
திடீரென்று சிவந்துவிட்ட அவள் முகத்தை வியப்புடன் பார்த்தபடி அவளிடமிருந்து டவலை வாங்கி முகத்தைத் துடைத்துக் கொண்டான். அவள் எழுந்து சென்று விசிறியை எடுத்து வந்து விசிறிவிட்டாள். அவளுடைய அந்த கரிசனம் அவனை ஈர்த்தது. சிறிது நேரம் சிலுசிலுவென்று காற்று வாங்கியவன் “போதும் விடு…” என்றான். அவளுக்கு கைவலிக்குமே என்கிறக் கரிசனமோ…!
அவன் சாதத்தில் தயிரை போட்டு குழைத்து பிசையும் பொழுது, “நம்மகிட்டதான் காசு இருக்கே…! எதுக்கு கடன் வாங்கி ஃபேன் வாங்கினிங்க…?” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாள்.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் பொரியலை அவனுடைய தட்டில் வைப்பதில் கவனமாக இருந்தாள். “இன்னும் கொஞ்சம் துவையல் வைக்கட்டுமா…?” அவளுடைய அக்கரையில் அவனுடைய சிந்தனைகள் மழுங்கின. உணவில் கவனம் திரும்பியது.
“ம்ம்ம்… கொஞ்சம் வையேன்… நல்லா இருக்கு…” என்றபடி வாயில் சாதத்தை வைத்தான். “நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலியே…” மீண்டும் நாசுக்காக கேட்டாள்.
“கடன்காரன் எவனும் வீட்டுக்கு வந்துட மாட்டான்… கவலைப்படாத…” என்றான்.
“அப்போ நீங்க கடன் எதுவும் வாங்கலையா…?”
“இப்போ உனக்கு என்ன தெரியனும்?” அவனுடைய குரலில் அழுத்தம் கூடியது. விபரம் எதுவும் தெரிவதற்கு முன் நிலைமையை நாமே சிக்கலாக்கிவிடக் கூடாதென்று நினைத்து பவித்ரா உடனடியாக பின்வாங்கினாள்.
“ஒண்ணும் இல்ல சாப்பிடுங்க. சும்மாதான் கேட்டேன்”
அதற்கு பிறகு அதைப் பற்றி இருவருமே பேசவில்லை. மத்திய உணவு முடிந்த பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான் ஜீவன்.
அவன் வீட்டைவிட்டு வெளியேறியப் பிறகு பவித்ரா கையில் பர்ஸோடு வெளியே வந்து அருகிலிருக்கும் பெட்டிக் கடைக்கு சென்று காயின் பூத்திலிருந்து மாமியாரை அழைத்தாள்.
பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பிறகு “அவருக்கு எவ்வளவுத்த பணம் கொடுத்திங்க…?” என்று போட்டு வாங்க முயன்றாள்.
சிவகாமி இவளுடைய திட்டம் தெரியாமல் “பத்தாயிரம் கேட்டான். குடுத்தேன்…” என்றாள். அதன் பிறகும் பவித்ரா எதையும் காட்டிக் கொள்ளவில்லை. சாந்தமாகவே பேசி போனை வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
###
மாலை எலக்ட்ரிசியன் ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து காற்றாடியை மேலே மாட்டச் செய்தான் ஜீவன். வந்தவன் ஹாலில் வேலை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, பவித்ரா ஜீவனை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று,
“இந்த ஃபேன் வாங்க பணம் ஏது…?” என்று விசாரித்தாள்.
அவளுடைய கேள்வியில் எரிச்சலடைந்தவன் “அது எதுக்கு உனக்கு…?” என்றான்.
“அத்தைகிட்ட பணம் வாங்கினிங்களா…?”
“உனக்கு எப்படி தெரியும்?” அவனுடைய குரலில் மிதமிஞ்சியக் கோபம் தெரிந்தது. கிராஸ் செக் பண்ணியிருக்கிறாள் என்கிற ஆத்திரம்.
“போன் பண்ணினேன்”
“இதை தெரிஞ்சுக்கத்தான் போன் பண்ணினியா? இந்த மாதிரி அதிகப் பிரசிங்குத்தனமான வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். எங்க அம்மாட்டேருந்து நான் பணம் வாங்குவேன்… செலவு பண்ணுவேன்… என்ன வேணா செய்வேன். அதை பத்தி உனக்கென்ன… அனாவசியமா என் விஷயத்துல மூக்க நுழைச்ச… அப்புறம் தெரியாது…” என்று குரலை அடக்கி கடுமையாக பேசினான். அவனுடைய முகபாவம் அவளை பயப்படுத்தியது.
ஆனால் இது பயந்து ஒதுங்க வேண்டியக் கட்டம் அல்ல… எதிர்த்து போராட வேண்டிய நேரம் என்று உணர்ந்து மனதை தைரியப்படுத்திக் கொண்டு பேசினாள்.
“உங்க அம்மாகிட்ட நீங்க பணம் வாங்கிக்கோங்க… செலவு செஞ்சுக்கோங்க… அது எனக்குத் தேவையில்ல… ஆனா அவங்கப் பணம் இந்த வீட்டுக்குள்ள எந்த ரூபத்துலேயும் வரக் கூடாது…”
“ரொம்பப் பேசுன… பல்லப் பேத்துடுவேன்… ஏண்டி வரக் கூடாது…?” என்று சீறினான்.
“அம்மா பணம்… அம்மா பணம்ன்னு குதிக்கிரிங்களே… அது என்ன அவங்க சம்பாதிச்சப் பணமா…? உங்க தம்பி கொடுத்தப் பணம்தானே… அவர் பணத்தை வாங்கி உங்க குடும்பத்துக்கு செலவு செய்ய கூசல உங்களுக்கு. நான் உங்களுக்குத் தானே கழுத்தை நீட்டியிருக்கேன்…? இல்ல அவருக்… ஆ…”
அவள் முடிப்பதற்குள் இவன் விரல்கள் பதிந்து பழுத்துவிட்ட பவித்ராவின் கன்னம் திகுதிகுவென எரிந்தது. கன்னத்தை கையில் தாங்கியிருந்தவளின் கண்கள் கலங்கிவிட்டன.
“என்ன பேசுறோம்ன்னு புரிஞ்சு பேசு… இல்ல தொலைச்சுடுவேன்… என்னடி உனக்கு இப்ப வேணும்…? அந்த ஃபேன் இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தானே…! இப்பவே அதக் கொண்டு போய் அந்த வீட்டுல போட்டுட்டு வர்றேன்… நீ நிம்மதியா இரு… பொண்ணாடி நீ…? ராட்சசி…” என்று உறுமிவிட்டு அறையிலிருந்து வெளியேறி… “டேய் தம்பி… ஃபேனை மாட்ட வேண்டாம் கழட்டிடு…” என்றான் வேலை செய்யும் பையனிடம். சிறிது நேரத்தில் காற்றாடி அட்டைப் பெட்டியில் பழையபடி பேக் செய்யப் பட்டுவிட்டது. அதை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
பவித்ராவிற்கு அவன் அடித்தது கூட வலிக்கவில்லை. அவள் நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறாளே…! அவனை எங்கே அடித்தால் எவ்வளவு வலிக்கும் என்கிற வித்தையை கற்றுக் கொண்டுவிட்டாளே… அந்த மகிழ்ச்சி…!
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Sambadikanum nu epo Dan nenaipano….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
ha ha superrrrrrrr