உனக்குள் நான்-31
3354
0
அத்தியாயம் – 31
“கதையடிச்சு முடிச்சாச்சா?” – கலைவாணியையும் கதிரவனையும் அனுப்பி வைத்துவிட்டுச் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என்று படுக்கையறைக்குள் நுழைந்த கார்முகிலனைச் சீற்றத்துடன் வரவேற்றாள் மதுமதி.
“கதையடிச்சேனா…! ”
“உடம்பு எவ்வளவு டயர்டா இருக்குன்னு கண்ணுலேயே தெரியுது… அப்படியிருந்தும்… வந்தவங்கள உடனே பேசி அனுப்பாம வளவளத்துக்கிட்டு இருந்தா வேற என்ன சொல்லுவாங்க?”
“அனுப்பியிருக்கலாம்… ஆனா அதுக்கு நீ அவங்ககிட்ட ஒழுங்கா பேசியிருக்கணும். பேசுனியா? ஏதோ எதிரிகிட்டப் பேசுற மாதிரில்ல பேசின…”
“வந்தவங்க… வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போயிருந்தா நானும் அநாவசியமா பேசியிருக்க மாட்டேன். தேவையில்லாம என்கிட்ட திமிரா பேசினா அப்படித்தான் வாங்கிக் கட்டிக்கணும்…” அழுத்தம் திருத்தமாகக் கூறினாள்.
ஒரு நொடி அமைதியானவன் “நான் சாப்பிட்டுட்டு இருக்கும்போது போன் பண்ணினது யாரு?” என்றான் துளைக்கும் பார்வையோடு.
“கலைவாணி தான் பண்ணினா… அதுக்கு என்ன இப்போ?” – எகிறினாள்.
“எதுக்கு நான் வீட்டுல இல்லன்னு சொன்ன?” – அமைதியாக அதே கூர்மையான பார்வையோடு கேட்டான்.
அவளைக் குற்றவாளியாக்கும் அந்தப் பார்வை தாங்கமுடியாத மதுமதி கோபத்தில் தன் வசமிழந்து, கூர்முனை கொண்ட வார்த்தை அம்புகளால் அவன் இதயத்தைச் சல்லடையாக்கினாள்.
“பின்ன… அவங்கள வெத்தல பாக்கு வச்சு வரவேற்கணுமோ…! நீங்க சொன்னீங்கன்னு ஒரு தடவ அந்த நீலவேணியை வீட்டுக்குள்ள விட்டுட்டுப் போதும் போதும்கிற அளவுக்குப் பட்டுட்டேன்… இப்போ… மறுபடியும் என்ன டார்ச்சர் பண்ண அடுத்த இன்னிங்ஸ்க்கு இந்த கலைவாணிய ரெடி பண்றீங்களா?”
‘உன்ன டார்ச்சர் பண்ண… கலைவாணிய… நான் ரெடி பண்றேனா…!!’ – உள்ளே வலித்தது. ‘பட்பட்டென்று துப்பாக்கித் தோட்டாக்களைப் போல் பாய்ந்து வந்து தன்னைத் தாக்கும் மனைவியின் அநியாயமான வார்த்தையடிகளை ஜீரணிக்க முடியாமல் உடல் இறுகியவன்… ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு கண்களை மூடித் திறந்து… ஆழமாக மூச்செடுத்துத் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று தோற்று… கன்றிச் சிவந்துவிட்ட முகத்துடன் சட்டென்று திரும்பி வெளியேறினான்.
“எங்க போறீங்க… நில்… நில்லுங்க… ப்ச்… சொல்றேன்ல…” – அவள் தடுக்கத் தடுக்க வேகமாகத் தடதடவென்று படிகளில் இறங்கி வாயில் கதவை நோக்கி நடந்தான். மாடிப்படி வரை அவனைத் தொடர்ந்து சென்ற மதுமதியால் கீழே செல்ல முடியவில்லை. அங்குப் பெற்றோர் இருப்பார்களே… அவர்களுக்கு முன் ஏதேனும் ரசாபாசமாகிவிட்டால்…! ஆனாலும் கோபத்தோடு வெளியே போகும் கணவனைத் தடுக்க வேண்டுமே…! தவிப்புடன் மீண்டும் அறைக்குள் நுழைந்து பால்கனிக்கு ஓடி வாசலை எட்டிப்பார்த்தாள்.
பெரிய உறுமலுடன் கார்முகிலனின் ‘பல்சர்’ மதில் சுவர் கேட்டைத் தாண்டி சென்றது. ‘போகிறானே…!’ மாதக்கணக்கில் வெளியே இருந்துவிட்டு அலுத்துக் கலைத்து வீடு வந்தவனை, சற்றுநேரம் படுக்க விடாமல் துரத்தியடித்து விட்டோமே என்கிற குற்ற உணர்வில் மதுமதியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
முன்பு அவன் செய்தது குற்றம் தான்… பெரிய குற்றம்… அதற்காக மன்னிப்புக் கேட்டு நிராயுதபாணியாய் நிற்பவனை, அவளுக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் கட்டி வைத்து அடித்து ரணமாக்குவது எந்த வகையில் நியாமாகும்..?
அவனும் என்னதான் செய்வான்… தன்னை நிரூபிப்பதற்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து தான் போகிறான். இதோ… அவளுடைய அநியாயமான பேச்சுக்களுக்குப் பதில் பேசாமல் கன்றிய முகத்துடன் வெளியேறுகிறானே. இது கூட மாற்றம் தானே? பழைய முகிலனிடம் இந்த அமைதியை அவள் எதிர்பார்க்க முடியுமா? தன்னுடைய இயல்பைத் தொலைத்துவிட்டு யாருக்காக அவன் வளைந்து கொடுக்கிறான். அவளுக்காகத்தானே? அதைக் கொஞ்சம் கூட உணராமல் நினைக்கும் போதெல்லாம் பழைய பிரச்னையை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்டால் அவனால் எத்தனை நாள்தான் தாங்க முடியும்..?
###
தலையணையை முதுகுக்கு அணைவாகக் கொடுத்துக் கட்டிலில் கால்நீட்டி சாய்ந்து அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான் கார்முகிலன். அதே அறையில் உள்ள குளியலறையில் குழந்தையைக் குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி… அவளுடைய கைப்பேசி அடித்தது. முகிலன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.
“யாருன்னு பாருங்க…” – அவள் கணவனைப் பணித்தாள்.
டீப்பாயின் மீதிருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். புதிய எண்… பொத்தானை அழுத்தி காதில் வைத்து “ஹலோ…” என்றான்
ஒரு நொடி தயக்கத்திற்குப் பிறகு ” மதுகிட்டப் பேசணும்” என்றது ஓர் ஆண் குரல்.
“நீங்க யாரு?”
“குணா…”
இப்போது முகிலனிடம் ஒரு நொடி தயக்கம் வந்தது. “மதி வேலையா இருக்கா… என்ன விஷயம்..?” சாதாரணமாகவே கேட்டான். மறுபக்கத்திலிருந்து பதிலில்லை. ஓரிரு நொடிகள் தாமதித்தவன் மீண்டும் “ஹலோ…” என்றான்.
“மதுகிட்டத் தான் பேசணும்… எப்போ பேசலாம்?” என்கிற குணாவின் குரலில் கார்முகிலனின் முகம் இறுகியது.
“யாரு போன்ல..?” – மதுமதி குளியலறையிலிருந்து கேட்டாள்.
முகிலனின் பார்வை மனைவியின் பக்கம் திரும்பியது. “பப்பு… ப்பு… ங்கூ…” என்று ஏதோ பேசியபடி… கொழுக் மொழுக்கென்று உடல் முழுக்க சோப்பு நுரையைப் பூசிக்கொண்டு குமிழிகளைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் மகளைக் கையில் பிடித்தபடி, கணவனைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.
மகளின் பேச்சிலும் அழகிலும் சற்று இறுக்கம் தளர்ந்தவன், மதுமதியால் போனை கையில் வாங்கிப் பேசமுடியாது என்பதை உணர்ந்து ஸ்பீக்கரை ஆன் செய்து அவளிடம் கொண்டு சென்று “பேசு…” என்றான்.
“ஹலோ…”
“மது… குணா பேசுறேன்…”
“சொல்லுங்கண்ணா… நல்லா இருக்கீங்களா..?”
“கங்கிராட்ஸ்…” – மகிழ்ச்சியில் துள்ளியது அவன் குரல்.
“கங்கிராட்ஸா…! எதுக்கு..?” அவனுடைய மகிழ்ச்சியான குரலிலேயே இவளும் மகிழ்ந்து புன்னகையுடன் கேட்டாள்.
“உனக்கு என் கம்பெனியிலேயே வேலை கன்ஃபார்ம் ஆயிடுச்சு… வீக்லி ஃபைவ் டேஸ் வொர்க்… ஃபார்ட்டி தௌசண்ட் சாலரி… ஜஸ்ட் ஃபார்மலா ஒரு இண்டர்வியு இருக்கும்… நீ எப்போ வர்றேன்னு சொல்லு… நான் இங்க பேசிடுறேன்…” படபடத்தான். அவன் பேசப் பேச கைப்பேசியைப் பிடித்துக் கொண்டிருந்த கார்முகிலனின் கை நடுங்க ஆரம்பித்தது.
“என்னண்ணா சொல்றீங்க? என்னால நம்பவே முடியல…” – மதுமதி குழப்பமாகக் கேட்டாள்.
“நம்பு மது… இந்த அண்ணனை நம்பினோர் கைவிடப் படார்…” – பெருமையாக வசனம் பேசினான்.
அவளுக்குச் சங்கடமாக இருந்தது. ‘ஐயோ…! இவங்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது!’ அவளுக்கு விளங்கவில்லை. தனக்காக இவ்வளவு தூரம் முயன்று செயல்பட்டிருப்பவனிடம் முகத்திலடித்தது போல் ‘இப்போதைக்கு நான் வேலைக்குப் போவதாக இல்லை…’ என்று கூற முடியாமல் “அண்ணா… நான் கொஞ்சம் வேலையா இருக்கேன். உங்களுக்குத் திரும்பக் கூப்பிடறேன்ணா…” என்று கூறி பேச்சைக் கத்தரித்தாள்.
“ஒண்ணும் அவசரம் இல்லம்மா… நீ அங்க முடிக்க வேண்டிய வேலையெல்லாம் முடிச்சிட்டு ஒரு பத்து பதினஞ்சு நாள் கழிச்சு வேணுன்னாலும் கிளம்பி வா… பிரச்சனை இல்ல…” – என்று கூறிவிட்டு கைப்பேசியை அணைத்தவனுக்கு உற்சாகமிகுதியில் மதுமதியின் தயக்கம் கருத்தில் பதியவே இல்லை.
அவர்களுடைய உரையாடல் முடிந்ததும் கைப்பேசியை இருந்த இடத்திலேயே வைத்த முகிலனின் மனதை ஒருவித இறுக்கம் கவ்வி பிடித்திருந்தது. புகைபிடிக்க வேண்டும் போலிருந்தது. எட்டு கட்டளைப் பட்டியல் அவனைத் தடுத்தது. ஒரு டீஷர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டுவிட்டான்.
முன்பெல்லாம் வேலை முடிந்ததும் மனையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலோடு வீட்டிற்குப் பறந்து வருகிறவனை, இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் கூட வீட்டில் தங்கவிடாமல் சூழ்நிலை விரட்டியடிக்கிறது.
###
மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு, அதன் மீதே சாய்ந்தமர்ந்தான் கார்முகிலன். உச்சிவெயில் நேரம் என்பதால் அந்தப் பரந்த மைதானத்தில் காக்கை, குருவியைக் கூடக் காணமுடியவில்லை. அவன் எதிர்பார்த்து வந்த தனிமை தான்… ஆனால் அந்தத் தனிமை அவன் மனதை அமைதிப்படுத்தவில்லை. மாறாக அழுத்தத்தைக் கொடுத்தது.
‘மதி ஏன் இப்படிப் பண்ணினா…! என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலியே… அவ்வளவு அலட்சியமா!’ – மீண்டும் மீண்டும் மனம் மனைவியையே சுற்றி வந்து கொண்டிருந்தது.
படித்த பெண் தாலி கட்டிக் கொண்ட பாவத்திற்காகத் தன் திறமைகளையெல்லாம் முடக்கிக்கொண்டு, வீட்டிலேயே இருந்து கணவனுக்குச் சேவகம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவன் குறுகிய மனம் படைத்தவன் அல்ல என்றாலும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தையைத் தவிக்க விட்டுவிட்டுத் தன்னுடைய ‘கெரியர்’ தான் முக்கியம் என்று நினைக்கும் மனைவியைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தும் மனப்பக்குவம் கொண்டவனும் அல்ல. குறைந்தபட்சம் மூன்று வயது முடியும் வரை தாயின் அரவணைப்புத் தன் குழந்தைக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்ற சராசரி தந்தை தான் அவன்.
தன்னுடைய எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் அவன் யாரிடம் கூற முடியும். அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவி தான் அவனைச் சிறிதும் சட்டைப் பண்ணாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டாளே…! அதுவும் எப்பேர்பட்ட முடிவு… அவனையும் குடும்பத்தையும் பிரிந்து தனியாக பெங்களூருக்குச் செல்லுமளவிற்குப் பெரிய முடிவு…
வேலைக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்தவள் அந்த வேலையை தேனியிலேயே தேடிக் கொண்டிருந்திருக்கக் கூடாதா? வேற்று மாநிலத்திற்குத்தான் செல்ல வேண்டுமா? ஏன் இந்த விலகல்..? அவனை முழுவதுமாகவே வெறுத்துவிட்டாளோ! – உள்ளே முணுக்கென்று வலித்தது.
மனைவி குத்திக் காட்டிக்கொண்டே இருந்தாலும் அவனுக்கருகில் அவள் இருந்தாலே போதுமே… அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே அவனுக்கு எவ்வளவு பெரிய நிம்மதியைக் கொடுக்கும்! இனி அந்தப் பாக்கியம் தனக்கில்லாமல் போய்விடுமோ என்கிற தவிப்பு, அவன் மனதில் மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருந்த மென்மையான காதல் பூவைக் கடுமையாகக் கசக்கியெறிந்தது.
‘நீ வேலைக்குப் போயி கிழிச்சது இருக்கட்டும்… முதல்ல குழந்தையைப் பாரு…’ – என்று கூறி அவளை அடக்கிவிடலாம். ஆனால் முடியுமா? இன்றைய நிலையில் அப்படி நினைத்ததைப் பேசும் துணிவு அவனுக்கு இருக்கிறதா? இல்லையே…! மனதளவில் அவனிடமிருந்து விலகியதால் தானே அவள் வெளியூருக்குச் செல்லும் முடிவையே எடுத்திருக்கிறாள். இன்னும் அவளைக் கட்டுப்படுத்த முயன்றால் அந்த விலகல் அதிகமாகி விடாதா! – அவன் மனதில் பயம் படர்ந்தது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அடிபட்டு வளர்ந்த முகிலனுக்குப் பயம் கூட வருமா? வந்தது… மனைவியின் காதலை யாசித்துக் கொண்டிருந்த அந்தக் கோழை அது கடைசிவரை கிடைக்காமலே போய்விடுமோ என்கிற எண்ணத்தில் அதீத அச்சம் கொண்டான்.
Comments are closed here.