விடிவெள்ளி – 30
3009
0
அத்தியாயம் – 30
அன்று இரவும் வியர்வையில் குளித்தபடி உறங்க முடியாமல் இருவரும் தவித்தார்கள். “உஸ்… புஸ்…” என்று ஜீவன் விடும் பெருமூச்சில் வீடே பற்றிக்கொள்ளும்படி தகித்தது. பவித்ராவிற்கு அவனைப் பார்த்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது.
வெகு நேரம் உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தவனின் மேனியை திடீரென்று குளிர்காற்று வருடியது. திரும்பிப் பார்த்தான். பவித்ரா விசிறிக் கொண்டிருந்தாள். சட்டென எழுந்து அமர்ந்து “எதுக்கு இந்த கரிசனம்… உன் வேலையை பார்த்துகிட்டு போ…” என்று கடுப்படித்தான். மாலை அவள் மீது ஏற்பட்ட எரிச்சல் இன்னும் அடங்கவில்லை அவனுக்கு.
“ப்ச்… எதுக்கு இப்ப கத்துறிங்க…? பேசாம கண்ண மூடி தூங்குங்க… பக்கத்து வீட்டுல இருக்கவங்கல்லாம் முழிச்சிடப் போறாங்க…” என்று அதட்டினாள்.
அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். விடிவிளக்கின் வெளிச்சத்தில் நைட்டியில் அழகாகத்தான் இருந்தாள். கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவன் “ஏய்… புலி பசிச்சாலும் புல்லை திங்காதுடி… நீ ஒண்ணும் எனக்கு விசிற வேண்டாம்… போய்டு…” என்றான்.
“இதையே எத்தனை நாளைக்கு சொல்லிவிங்க… மான்கூடத்தான் எவ்வளவு பசிச்சாலும் மட்டன் சிக்கனெல்லாம் சாப்பிடாது… அதுக்கு என்ன செய்ய முடியும்… பேசாம படுத்து தூங்குங்க…” என்றாள் அலட்டிக்காமல்.
அவளுடைய துணுக்கில் அவன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போய் “வாயாடி…” என்று அவனுடைய விசிறியால் அவள் தலையில் தட்டிவிட்டு சிரித்தான். “ஹப்பாடா… வீரனாறு மலையேரிட்டாறு…” என்று அவளும் சிரித்தாள்.
மனம்விட்டு அவள் சிரிப்பதை அவன் அன்றுதான் பார்த்தான். சிரிக்கும் பொழுது அவளுடைய முகத்திலிருந்து பார்வையை விளக்க முடியாமல் தடுமாறினான். எப்படி ஒரே நொடியில் மந்திரம் போட்டது போல் இவள் முகம் இப்படி பொலிவானது…! என்று வியந்தான்.
‘மலர்ந்த அந்த முகத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல்… சிரிக்கும் அந்த கன்னங்களை கைகளில் ஏந்த வேண்டும் போல்… சிவந்த அந்த இதழ்களை… ச்சே… ச்சே…’ என்று தலையை உலுக்கிக் கொண்டான். ஏதேதோ தப்புத்தப்பாக அவனுக்கு தோன்றியது. நெஞ்சு படபடத்தது… நா வரண்டது… வியர்வை அதிகமானது. விருட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தான்.
“எனக்கு ரொம்ப வேர்க்குது… நீ கதவை பூட்டிக்கோ… நான் மாடிக்கு போய் படுத்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாய் தலையணையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு விரைந்தான்.
முழுதாக இரண்டு சிகரெட்டுகளை புகைத்து முடித்துவிட்ட பிறகும் அவனுடைய படபடப்பு குறையவில்லை. அவள் நம் மனைவிதானே…! எதற்காக இப்படி விரண்டு ஓடிவந்தோம் என்பது அவனுக்கேப் புரியவில்லை. அவளை நம் மனம் ஏற்றுக் கொண்டுவிட்டதா…! என்று சிந்தித்தான். ஆமாம் என்பது போலவும் இருந்தது… இல்லை என்பது போலவும் இருந்தது… தெளிவு கிடைக்காத கோபத்தில் “ச்ச…” என்று கையை முறுக்கி காற்றில் குத்தினான்.
ஊருக்கு பயந்துதான் தனிக்குடித்தனம் வந்தோம்… ஆனால் இப்போது அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறதே…! ஒருவேளை இது ஒரே வீட்டில் இருவர் மட்டும் இருப்பதால் ஏற்படுகிற ஈர்ப்போ… அப்படியெல்லாம் கூட ஈர்ப்பு வருமா…! அது எப்படி மனதுக்கு பிடிக்காவிட்டால் பத்துக்கு பத்தடி அறையில் பூட்டி வைத்தால் கூட ஈர்ப்பு வராதே…! பிறகு இது எப்படி…!
‘என்ன கருமத்திற்கு இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டும். முன்பு போல அவள் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை… பேசாமல் அவளோடு ஒழுங்காக வாழ்ந்தால் என்ன…? வாழ்க்கை முழுக்க சந்நியாசியாக இருந்து என்னத்தை சாதிக்கப் போகிறோம்’ என்று அவன் சிந்திக்கும் போதே ‘இவளை கல்யாணம் செய்ததற்கு காலம் முழுக்க சந்நியாசியாகவே இருந்திருக்கலாம்’ என்று முன்பு அவன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
அதைத் தொடர்ந்து புனிதா அவனை நிராகரித்தது… அவன் எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று எதிர்பார்த்தான் என்பது… பவித்ராவிடம் அவன் குறைகளாகக் கண்டது என்று அனைத்தும் நினைவிற்கு வந்தன. இவளை ஏற்றுக் கொண்டுவிட்டால் ‘இதுதான் உன்னுடைய லெவல்… இருக்கறதை வச்சு பொழச்சுக்கோ…’ என்று தன் தாய் சொல்லாமல் சொன்னதை தானும் ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும் என்று நினைத்து பயந்தான். பவித்ராவின் பக்கம் இனி மனதை சரியவிடக் கூடாது என்று உறுதியெடுத்தான்.
###
மொட்டைமாடி வாசம் ஜீவனுக்குப் இரண்டு விதத்தில் வசதியாக இருந்தது. ஒன்று… காற்றுப் பிரச்சனை இல்லை. இரண்டு… பிடிக்காத மனைவியோடு(!) ஒரே அறையில் உறங்கத் தேவையில்லை. எந்த பிரச்சனையிலும் சிக்காமல் நிம்மதியாக உறங்க முடியும்.
அடுத்தடுத்த நாட்களிலும் ஜீவன் மொட்டை மாடியிலேயே உறங்குவதில் பவித்ராவிற்கு உடன்பாடில்லை. மனைவி தனியாக இருப்பாளே என்கிற பொறுப்பில்லாமல் என்ன இது சிறுபிள்ளைத்தனம்… என்று எண்ணியபடி அவளும் மாடியேறி வந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக ஜீவன் குடிப்பதே இல்லை. தம்பியின் காசை எடுக்கக் கூடாது என்கிற முடிவில் இருப்பவனுக்கு எத்தனை நாள் நண்பர்களை எதிர்பார்க்க முடியும். அவங்களிடம் கையேந்துவதற்கு குடிக்காமல் இருப்பதே மேல் என்கிற முடிவில் ஆட்டோ ஸ்டான்ட் பக்கமே போகாமல் இருந்தான்.
“ஆஹா… இங்க சூப்பரா காத்து வருதே… அதான் டெய்லி இங்கேயே தூங்கறிங்களா…?” என்கிறக் குரலைக் கேட்டு கைப்பிடி சுவரில் சாய்ந்து வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்த ஜீவன் திரும்பிப் பார்த்து,
‘இவ எதுக்கு இங்க வர்றா…?’ என்று நினைத்தான். அவள் அவனுக்கருகில் வந்தாள். நிலவொளியும்… குளிர்த் தென்றலும்… அவள் கார்குழலில் குடியிருந்த சிறு மல்லிகைத் துண்டின் மணமும் அந்த சூழ்நிலையை ரம்யமாக்கி… மொட்டை மாடியை சொர்கமாக்கியது.
‘அடிப்பாவி… தூரதூரமா வந்தாலும் விடாம மோகினி மாதிரி துரத்திகிட்டு வர்றாளே…!’
“தூங்கலையா நீ இன்னும்…?” அவன் குரல் கரகரத்தது.
“ம்ஹும்… கீழ பயங்கரமா வேர்க்குது…”
“ம்ம்ம்…”
“தூக்கமே வரல…”
“ம்ம்ம்…”
“நீங்க வேற இல்லையா… போரடிச்சது…”
“ம்ம்ம்…”
“அதான்… என்ன செய்ரிங்கன்னு பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…”
“ம்ம்ம்…” அவனுக்கு பேச்சே வரவில்லை.
“சீக்கிரம் ஒரு ஃபேன் வாங்கணும்…” என்றாள்.
அவன் அவளை முறைத்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது. “நீங்க உங்க காசுல வாங்கித் தாங்க…” என்றாள் சிரித்தபடி.
அவனுடைய மனநிலை அடியோடு மாறிவிட்டது. அவனால் அவளோடு சேர்ந்து சிரிக்க முடியவில்லை. ஒரு காற்றாடிக் கூட வாங்க முடியாத தன் நிலையை நினைத்து மனம் வெதும்பினான்.
“இந்த மாதம் முடிஞ்சா வாடகைக் கொடுக்கணும்… கரண்ட் பில்… மளிகை ஜாமான்னு ஏகப்பட்ட செலவு இருக்கு… என்கிட்ட இருக்க பணம் வாடகைக்குத் தான் சரியா இருக்கும்… மீதிக்கு என்ன செய்யலாம்…?” மெல்லிய குரலில் கேட்டாள்.
அவனிடமிருந்து பதில் வரவில்லை. ஒரு பெண் சொந்தமாக அவனால் அந்த பணத்தை ஈட்ட முடியும் என்று நம்பி சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பது கொஞ்சம் பெருமையாக இருக்கிறது. அவள் முழுக்க முழுக்க அவனை சார்ந்து இருக்கிறாள் என்பது கர்வமாக இருக்கிறது. ஆனால் அவளுடைய நம்பிக்கையை காப்பாற்றும் சக்தி தனக்கு இருக்கிறதா என்பதை நினைக்கையில் கலக்கம் அவன் நெஞ்சை அடைத்தது. என்ன செய்யப் போகிறோம் என்கிற கவலை மேலிட்டது.
இத்தனைநாள் யாருக்கும் வளையாமல் இருந்துவிட்டு, சினிமா… கதைகளில் வருவது போல் ஒரே நாளில் என்னால் கூலி வேலைகூட செய்ய முடியும் என்று நெஞ்சை நிமிர்த்தி அவனால் சொல்ல முடியவில்லை. அந்த அளவு அவனால் இறங்க முடியாது… யாரிடமும் கையேந்தவோ… கைகட்டவோ… அவனால் முடியாது… முதலீடோ அனுபவமோ இல்லாமல் சிறு தொழில் கூட துவங்க முடியாது… சிந்தித்து சிந்தித்து தலைவலி வந்ததுதான் மிச்சம்.
“என்ன யோசிக்கிறிங்க?”
“ம்ஹும்… ஒண்ணும் இல்ல… பணத்தை பத்தி நீ கவலைப் படாத… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…”
“நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை…?” அவள் வாய்வார்த்தையாக சொன்னாள்.
அவனுடைய முகம் பட்டென்று மலர்ந்தது. அவளுடைய நம்பிக்கை அவனுக்கு யானை பலம் கொடுத்தது. தன்னால் எதுவும் முடியும் என்கிற குருட்டு நம்பிக்கை மனதை பலப்படுத்த முகத்தில் சிரிப்பு வந்தது. அவனுடைய எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள்… இனி அவனை ஊக்குவிப்பது போல்தான் பேச வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள்.
“சரி… நேரமாச்சு… நீ போய் படு…”
“இல்ல… நானும் இங்க வந்து படுத்துக்கறேன்… காத்து நல்லா வருது…”
“இங்க மட்டும் திருடன் வரமாட்டானா…?”
“இங்க திருடிட்டு போறதுக்கு என்ன இருக்கு…?”
“அதெல்லாம் நிறைய இருக்கு… நீ உள்ள போய் படு…” அவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து சொன்னான்.
“நீங்க இருக்கும் போது எனக்கென்ன பயம்…?” முதல் நாள் அவன் சொன்ன வார்த்தையை அவனை கிண்டலடிப்பதற்காக அவள் திருப்பிச் சொன்னாள்.
அவனும் அன்றைய நினைவில் “வர்றவன் கத்தி… கன் எதாவது கொண்டு வந்தான்னா என்ன செய்றது? நான் என்ன சூப்பர் மேனா… பறந்து பறந்து அடிக்கறதுக்கு…?” என்றான் சிரிப்புடன்.
அவளும் சிரித்தாள். அவன் மனம் மீண்டும் பழையபடி அவள் சிரிப்பில் மயங்கியது. “ம்ஹும்… இது சரிவராது… நீ முதல்ல கீழ போய் படு… ரெண்டு நாள்ல ஃபேன் வாங்கிடுவோம்…” என்று அவளைக் கட்டாயப்படுத்தி கீழே அனுப்பி வைத்துவிட்டாலும்… கீழே அவள் காற்றில்லாமல் சிரமப்படுவாளே என்று நினைக்கையில் மனம் சங்கடப்பட்டது.
Comments are closed here.