குற்றப்பரிகாரம் – 20
1364
0
அத்தியாயம் – 20
இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் கொண்டுவந்து கொட்டினார் போல், அந்த இடம் ஜொலித்தது. ஒன்றல்ல இரண்டல்ல இருநூறு ஏக்கருக்குமேல் ஆக்ரமித்து பந்தல் போடப்பட்டு இருந்தன. ‘மக்களுக்காகவே என் ரத்தத்தை சிந்துவேன்’ என்று மேடைதோறும் முழங்கும் அந்த அரசியல் பிரபலத்தின் ஒரே மகளுக்கான திருமண வைபவம் நடந்து முடிந்திருந்தது. அந்தத் திருமணம் பற்றி கூறத் தொடங்கினால், அடுத்த விஷயத்தைத் தொட முன்னூறு பக்கங்களாகும். அது வேண்டாம்… ஆகையால், நமக்குத் தேவையான அந்த ஐந்து நபர்களை பார்ப்போம்…
“என்ன ரெட்டிகாரு… கல்யாணத்தை பாத்தீங்களா! சும்மா அதிருதுல்ல” ரெட்டியின் தோள் மீது கை போட்டபடி கேட்டார் போலீஸ் துறையில் உயர்பதவி வகித்த அந்த முன்னாள் அதிகாரி சுலைமான்..
“அட நீங்க வேற
ரெட்டி என்ன யோசிச்சுட்டு இருக்கார்னு தெரியுமா? இதைவிட அவர் மகளுக்கு ஓஹோனு செஞ்சு அடுத்த தேர்தல்ல எப்படியாவது எம்.பிக்கு சீட் வாங்கிடனும்னு தான்… என்ன ரெட்டி நான் சொல்றது சரிதானே” -இது அரசின் ஆஸ்தான கட்டிட ஒபந்ததாரர் மாணிக்கம்..
“மாணிக்கம் சொன்னதை நான் முன் மொழிகிறேன்”என மொழிந்தார் அந்த எம்எல்ஏ அறிவுக் களஞ்சியம்…
“யோவ்… அறிவு முன்மொழியிறது பின் பொழியிறதெல்லாம் உன்னோட அரசியல் மேடைப் பேச்சோட வச்சுக்கோ…. கல்யாணம் அட்டெண்ட் பண்ணியாச்சு… அவ்ளோதானா ஊரப் பாக்க போக வேண்டியதுதானா? உங்க தொகுதி எம்பிதானே கல்யாணம் பன்றாரு! என்ன சொல்லிவிட்டாரு — இது முன்னாள் சார்பதிவாளர் ரஹீம்…
ரெட்டி…
சுலைமான்…
மாணிக்கம்….
அறிவு…
ரஹீம்…
தனித்தனியா இவர்களைப் பற்றி சொல்வதை விட ஒட்டு மொத்தமாக ஒரே வார்த்தையில் சொன்னால்…
அடுத்தவன் வயிற்றில் அடித்து கோடி கோடியாய் சேர்த்து வைத்திருக்கும் இந்நியப் புற்று நோய்களில் சில…
“ஏய்யா, அப்டிலாம் எங்க தொகுதி எம்பி உங்களை விட்டுருவாரா…
இல்ல நாமதான் வாய் மூடிட்டு வந்துருவோமா.
ந்தா… வரும் பாருங்க
ஸ்பெஷல் காரு”
சொல்ல சொல்லவே அந்த உயர்ரக கார் அவர்களின் அருகே வந்து நின்றது. அதிலிருந்து பவயமாக ட்ரைவர் இறங்கினான்…
“சார்.. எம்பி இந்த காரை உங்ககிட்ட விடச் சொன்னார். ஹோட்டல் மாண்டல்யாவிற்கு போனதும் ரிசப்ஷன்ல உங்களை ரிசீவ் செய்ய அங்க ஆள் ரெடியா இருப்பாங்க… இங்கருந்து அரைமணி நேரம்தான் ஆகும்” என சொல்லிய படியே திரும்பப் போனவனை சுலைமானின் குரல் தடுத்தது….
“நில்லு மேன்… எவ்ளோ நேரம் ஆகும்னு எங்களுக்கு தெரியும் மேன்… என்னவோ முன்னபின்ன வராத மாதிரி சொல்ற…ஏன், சார் எங்களை ட்ராப் பண்ண மாட்டீங்களோ?” என்று தனக்கே உள்ள தோரணையோடு கேட்டார்…
“இல்ல சார் வந்து….”
“யோவ் என்னய்யா வந்து போயி… அதான் அவர் கேக்றார்ல… எங்கள ட்ராப் பண்ணிட்டு போக முடியுமா முடியாதா? இல்ல நான் எம்பிக்கு போன் போடவா…” அரசியல் புத்தியைக் காட்டினார் அறிவு.
“சார் சார் வேண்டாம் சார். அப்புறம் வேலையே போய்டும்… உக்காருங்க நானே ட்ராப் பன்றேன்…”
என்னவோ சாதித்துவிட்டது போல் அனைவரும் அமர்ந்தனர்.
“என்னய்யா ஆறு பேர் உக்காந்தா கூட வசதியா இருக்கு… என்ன கார் இது… கழுத ஊருக்கு போனதும் ஒன்ன வாங்கிப் போட்ரனும்”
“சேத்த சொத்து பத்தாதாய்யா”
“ஏன் நீங்க சேக்கலையா”
ஒருவருக்கொருவர் ட்ரைவர் இருப்பதையும் மறந்து கிண்டலும் கேலியுமாய் வர, அரைமணியில் மாண்டல்யா ஹோட்டல்.
ஹோட்டலில் இறங்க இறங்கவே… அந்த இளைஞன் அவர்களை வரவேற்று காதோடு கிசு கிசுத்தான்…
“வாங்க சார்., ஹோட்டல் டெரஸ்ல ட்ரிங்ஸ் ஏற்பாடு பண்ணிருக்கு.
அது முடிஞ்சதும் ஆளுக்கொரு ரூம் ரிசர்வ் பண்ணியிருக்கு, மத்ததெல்லாம் டையத்துக்கு நடக்கும்” என்று… அந்த மத்ததெல்லாம் என்பதை அழுத்திச் சொன்னான்…
உச்சி மண்டையில் ஆசைகள் உறைக்க…
நாயைப் போல் அவன் பின்னாலேயே டெரஸ்ஸை அடைந்தார்கள்…. அங்கே காத்திருந்தவன் அவர்கள் உள் நுழைந்ததும் கதவை தாழிட்டான்…
என்ன நடக்கிறது என சுதாரிக்கும் முன்…. மயக்கமடைந்தார்கள்.
விழிக்கையில் சினிமாவில் வருவது போல உள்ளாடைத் தவிர்த்து மற்றதெல்லாம் உருவப்பட்டிருந்தன.
கைகள் கட்டப்பட்டு, வாயில் ப்ளாஸ்த்ரி…
போலீஸ் அதிகாரி மட்டும் தெரிந்து கொண்டார். ஒரே நேரத்தில் மயக்கமடைய வைக்கவும், அவற்றை ஒரே நேரத்தில் தெளியும் மருந்தும் சுவாசிக்கப்பட வைத்திருக்கிறது என்று….
அருகில் இரண்டு பேர்…
நின்று கொண்டிருந்தனர். முகத்தில் சிறு சலனமில்லை. எதிரில் ஒருவன் லேப்டாப்பை மடியில் வைத்தபடி பேச ஆரம்பித்தான்…
“இங்க பாருங்க… எங்களை என்ன பண்ணப்போறங்கற மாதிரியான, சினிமா வசனம்லாம் வேண்டாம்… நேர விஷயத்திற்கு வரேன்…. உங்களைப் பற்றிய சொத்து விஷயம்… நீங்க யாருக்கெல்லாம் பினாமி… உங்களுக்கு யாரெல்லாம் பினாமி, என்பது உட்பட கிட்டத்தட்ட எல்லா விஷயமும்… எனக்குத் தெரியும். அதை முதல்ல மனசுல வச்சுக்கங்க…. தேவையில்லாம நேரத்தைக் கடத்த வேணாம்…பத்தே நிமிஷந்தான்… உங்க கணக்குல இருந்து ஆளுக்கு இருநூறு கோடி நான் சொல்ற நம்பருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணனும் அவ்ளோதான்… இந்த சின்ன வேலைக்கு உங்களுக்கு கூலி உங்க உயிர்… தொடங்கலாமா”
முடியாது என்பது போல தலையாட்டினார் அறிவுக்களஞ்சியம்…
ர்ர்ர்ரப்.,.. ஒரே அடி. நின்றிருந்த ஒருவன் கட்டையால் அடிக்கவும் போல பொலபொலவென ரத்தம் கொட்டியது அறிவுக்கு…
“ச்சு… ச்சு… எம்எல்யே சார்… உங்ககிட்ட மாட்டின அப்பிராணிகளை அடிச்சுதான் உங்களுக்கு பழக்கம்…. இப்போ நீங்க வாங்கறீங்களே… இதுக்கப்புறம் எதாவது தலை ஆடியது… அப்புறம் உங்க தொகுதில இடைத் தேர்தல்தான்…. எனக்கு 200 கோடி கம்மியாகும்னு நினைக்காதீங்க… இவங்களுக்கு ஆளுக்கு அம்பத ஏத்தி இருநூத்தி அம்பதாக்கிடுவேன்…. நான் சொல்றது அறிவுக்கு மட்டுமில்ல உங்க எல்லாருக்கும் சேத்துத்தான்”
அம்பது ஏறும்னு சொன்ன உடனே எல்லாரும் அறிவினை க்ரோதமாக பார்த்தார்கள்….
எட்டு நிமிடம் முப்பத்தி ஏழு செகன்ட்… வேலை முடிந்தது. அதே நேரம்…
கூமாம்பட்டி காவல் நிலையத்தின் போன் மணி அடித்தது. அரை தூக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் எடுத்து “ஹாலோஓஓ” என்றார்.
“ஹலோ… நான்தான் நான் பேசறேன்”
“நான்தான்னா யாருய்யா”
“ஹலோ… நான்தான் நான் பேசறேன். சென்னைல இருக்கிற உங்க ஏஎஸ்பி., தீபக் கிட்ட சொல்லுங்க… அஞ்சுபேர் காத்துல கறைஞ்சுட்டாங்கன்னு”
டொக்…. போன் கட்.
ஏதோ விபரீதம் என உணர்ந்த கான்ஸ்., தனது எஸ்ஐக்கு ரிங்கினார்.
Comments are closed here.